உலகச் செய்திகள்

மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது 

ஆப்கானின் பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடவை தலிபான்களின் வசம்

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர் காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு

தென்னாபிரிக்காவில் வன்முறை; உயிரிழந்தோர் 72 ஆக அதிகரிப்பு

கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராக கியூபாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வரலாறு காணாத மழை; வெள்ளத்தினால் 70 பேர் உயிரிழப்பு


மியன்மாரின் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலை தருகிறது 

அமெரிக்கா

மியன்மாரில் நிலவும் கொந்தளிப்பான சூழல் மிகுந்த கவலையளிப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken), ஆசியான் அமைப்பிடம் வலியுறுத்தினார்.

நியாயமற்ற முறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யவும் அவர் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் கூறினார்.

மியன்மாருக்காக வகுக்கப்பட்ட 5 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு பிளிங்கன் வலியுறுத்தியதாகவும் அவர் சொன்னார். பெப்பரவரியில், மியன்மார் இராணுவம் அங்கிருந்த அரசாங்கத்தைக் கவிழ்த்தது.

முன்னைய அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 

ஆப்கானின் பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடவை தலிபான்களின் வசம்

தொடர்ந்து வேகமாக முன்னேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்றுவரும் நிலையில், அங்கு வேகமாக முன்னேறி வரும் தலிபான்கள் பாகிஸ்தானுடனான மூலோபாயம் மிக்க எல்லைக் கடவையை கைப்பற்றியுள்ளனர்.

எனினும் அந்த ஆயுதக் குழு பின்வாங்கியதாகவும் அரச படை மீண்டும் அங்கு தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சு பின்னர் அறிவித்திருந்தது.

ஆனால் ஆப்கானுடனான எல்லைக் கடவையின் தமது பக்கத்தை மூடிவிட்டதாக பாகிஸ்தான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

'சாமனில் பாகிஸ்தானுடனான ஆப்கான் எல்லையில் தலிபான்கள் நிலைகொண்டிருப்பதை காண முடிகிறது. ஆப்கான் எல்லைப் பக்கம் எந்த ஆப்கான் (அரச) படைகளையும் காணமுடிவதில்லை' என்று உள்ளூர் நிர்வாக அதிகாரி ஆரிப் ககார், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

சாமன்-ஸ்பின் பொல்தக் எல்லை ஊடாக மக்கள் அல்லது பொருட்கள் நுழைவதற்கு தற்போது பாகிஸ்தான் அனுமதி மறுத்திருப்பதாக ககார் உறுதி செய்தார். இந்த எல்லைக் கடவையானது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரதான இரு எல்லைக் கடவைகளில் ஒன்றாகும்.

ஸ்பின் பொல்தக் பக்கம் ஆப்கான் அரசினுடைய தேசியக் கொடிக்கு பதில் தலிபான்களின் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டிருப்பதை உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கானில் எல்லைகளை கைப்பற்றுவதன் தொடர்ச்சியாகவே ஸ்பின் பொல்தக் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மைய வாரங்களில் உலர் துறைமுகங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன. இது ஆப்கான் அரசுக்கு பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் கந்தஹார் மாகாணத்தில் அரச படை மற்றும் தலிபான்களுக்கு இடையே உக்கிர மோதல் இடம்பெற்று வருகிறது. மாகாண தலைநகர் வீழ்வதை தவிர்க்க அரச படை குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தலிபான்கள் தலைநகரை நோக்கி நெருங்கி வருகின்றனர்.

இதனிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டி வியாபாரிகள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து தலிபான் பேச்சாளர் சுபைஹுல்லா முஜாஹித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனினும் அந்தப் பகுதி தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக ஆப்கான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

'எல்லை பகுதிக்கு அருகில் தீவிரவாத தலிபான்களின் சிறு நடமாட்டம் உள்ளது. பாதுகாப்பு படையினர் தாக்குதல்களை முறியடித்தனர்' என்று உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் ஆரியன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருக்கும் குடிமக்கள் அரசின் கூற்றை மறுத்துள்ளனர்.

'இன்று காலை நான் எனது கடைக்கு சென்றபோது தலிபான்களை எல்லா இடத்திலும் பார்த்தேன். அவர்கள் சந்தையில், பொலிஸ் தலைமையகத்தில் மற்றும் சுங்க எல்லை பகுதிகளில் இருந்தனர். அருகில் சண்டை இடம்பெறும் சத்தத்தையும் என்னால் கேட்க முடிந்தது' என்று ராஸ் முஹமது என்ற கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து முழுமையாக வெளியேற சில வாரங்களே இருக்கும் நிலையில் தலிபான்கள் ஆப்கானில் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அரச படை தற்போது குறிப்பிடத்தக்க மாகாண தலைநகரங்களையே தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு வான் வழியாகவே விநியோகங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் தலிபான்களின் முன்னேற்றத்தை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் ஆப்கானில் இருந்து குறைந்தது 347 அகதிகள் அண்டை நாடான திஜிகிஸ்தானில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.  

தமது உயிரை காக்க அகதிகள் தலிபான்களிடம் இருந்து தப்பி வருவதாக தஜிகிஸ்தான் எல்லை காவல் படையை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு எல்லையை கடக்கும்போதும் இரு குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

தலிபான்கள் கடந்த ஜூனில் தஜிகிஸ்தானுடனான பிரதான எல்லைக் கடவையான ஷிர் கான் பன்தார் கடவையை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர் காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை

பிரிட்டிஷ் பிரதமர்

காற்பந்து வீரர்களைக் குறி வைத்து இணையத்தில் பதிவுசெய்யப்படும் இனவாதக் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தப்போவதாகப் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இனவாதம் ஒரு பிரச்சினையாக இருந்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.

இனவாதக் கருத்துகளைப் பதிவு செய்வோர், குற்றம் நிரூபிக்கப்பட்டால், காற்பந்து விளையாட்டுகளை பார்வையிட தடை விதிக்கப்படலாம்.

அவற்றை நீக்கத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அதன் அனைத்துலக வருவாயில் 10 ஆண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம்.

அந்த நடவடிக்கைகள் குறித்து ஜான்சன் நாடாளுமன்றத்தில் பகிர்ந்துகொண்டார்.   நன்றி தினகரன் 
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு

நேபாளத்தின் ஏற்கனவே 3 தடவைகள் பிரதமராக பதவியேற்ற 75 வயதான ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, கே.பி.ஷர்மா ஒலி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் இரு தலைவர்களுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றம் பிரதமரினால் கலைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நேபாள உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்தை 7 நாட்களுக்குள் கூட்டவும் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்றிரவு நேபாள குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி ஷேர் பகதூர் தியூபாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

எனினும் தியூபாவின் நியமனத்தை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலி, விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 
தென்னாபிரிக்காவில் வன்முறை; உயிரிழந்தோர் 72 ஆக அதிகரிப்பு

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜகப் சூமா கைது செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

இதில் செவடோ நகரில் கடை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளையின்போது 10 பேர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லபட்டவர்களுள் அடங்குகின்றனர்.

டர்பன் நகரில் தரைத்தளத்தில் இருக்கும் கடைகள் சூறையாடப்பட்ட நிலையில் அந்தக் கட்டடம் தீப்பற்றியதால் அந்தக் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து குழந்தை ஒன்று வீசி எறியப்படும் காட்சி ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் தொடக்கம் இந்த பதற்ற சூழல் நீடித்து வரும் நிலையில் பொலிஸாருக்கு உதவியாக தற்போது இராணுவமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

கலகத்தை தூண்டிய 12 பேர் அடையாளர் காணப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 1,234 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தென்னாபிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு முடிவுக்கு வருவதற்கு முந்திய 1990ளுக்கு பின்னர் நாட்டில் இடம்பெறும் மோசமான வன்முறைகளில் ஒன்று என்று இதனை அந்நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். பிரதான நகரங்களில் தீவைப்புகள் இடம்பெற்றிருப்பதோடு நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு வர்த்தகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் சூறையாடப்பட்டுள்ளன.

சூறையாடல்கள் தொடர்ந்தால் ஆபத்தான பகுதிகளில் மிக விரைவில் அடிப்படை பொருட்கள் தீர்ந்துவிடும் என்று எச்சரித்திருக்கும் அமைச்சர்கள், அவசர நிலையை பிரகடனம் செய்வதற்கான வாய்ப்பை மறுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜகப் சூமா தமது பதவிக் காலத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக தவறியதை அடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கடந்த மாதம் குற்றங்காணப்பட்டார்.

தம் மீதான ஊழல் குற்றச்சாட்டை மறுக்கும் சூமாவுக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பொலிஸாரிடம் கடந்த வாரம் சரணடைந்தார்.

நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தம் மீதான தண்டனை திரும்பப் பெறப்படும் அல்லது குறைக்கப்படும் என்று அவர் நம்பியுள்ளார்.

இந்நிலையில் போலி செய்திகளை வெளியிடும் இணையப் பக்கம் ஒன்றே பதற்றத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படுவதோடு சூமாவின் மகள் டுடுசில் சூமா வெளியிட்ட ட்விட் பதிவை ஆராய்ந்து வருவதாக ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

நிறப்பாகுபாடு முடிவுக்கு வந்து 27 ஆண்டுகள் கடந்த நிலையில் நாட்டில் ஏற்றத்தாழ்வு அதிகரித்திருக்கும் சூழலிலேயே சூமா கைது செய்யப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

கொரோனா தொற்றுக்கு எதிரான முடக்கநிலையும் தென்னாபிரிக்காவில் வறுமையை மேலும் அதிகரித்துள்ளது. அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 32.6 வீதமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பின்னேரம் வரையில் 200க்கும் அதிகமான பேரங்காடிகள் சூறையாடப்பட்டிருப்பதாக புளும்பேர்க் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. நன்றி தினகரன் 
கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராக கியூபாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்

கரீபிய வட்டாரத்தில் உள்ள, இரண்டு சிறிய நாடுகளில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.

முதல் நாடான கியூபாவில் (Cuba), கம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிராகப் பல்லாண்டுகளில் இல்லாத ஆகப் பெரிய போராட்டங்கள் வீதிகளில் நடந்து வருகின்றன.

30 ஆண்டுகளில் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியைக் கியூபா எதிர்நோக்குகிறது.

அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடை, உணவு, மருந்து பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கு இடையே அங்கு கிருமிப்பரவலும் மோசமாகி வருகிறது.

அதை அடுத்து, (கடந்த 11ம் திகதி) அங்கு மொத்தம் 40 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஏழை நாடான ஹெயிட்டியில் (Haiti), சென்ற வாரம், ஜனாததிபதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கும் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

கியூபாவுக்கும், ஹெய்ட்டிக்கும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராயிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 

ஜெர்மனி, பெல்ஜியத்தில் வரலாறு காணாத மழை; வெள்ளத்தினால் 70 பேர் உயிரிழப்பு

ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் வரலாறு காணாத கடும் மழையை அடுத்து ஆறுகள் பெருக்கெடுத்ததில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்திருப்பதோடு ஜெர்மனியின் ஒரு பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 1,300 பேர் காணாமல்போன நிலையில் உள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவை தாக்கி இருக்கும் இந்த வெள்ளம் காரணமாக பாரிய மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வேகமாக நகரும் கட்டுக்கடங்காத வெள்ள நீர் மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியின் சிறு நகர்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழைந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து மக்கள் நிர்க்கதியாகினர். இதில் 58 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தவிர, பெல்ஜியத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். லக்சம்பேர்க் மற்றும் நெதர்லாந்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஜெர்மனியில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ரினலான்ட்-பலடின்டே பிராந்தியத்தில் 1,300 பேர் வரை காணமல்போயிருப்பதாக அந்த பிராந்திய உள்ளூர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

'சில பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் இவ்வளவு மழை பெய்ததை நாம் பார்த்ததில்லை' என்று ஜெர்மனி காலநிலைச் சேவையின் பேச்சாளர் அன்ட்ரீஸ் பிரிட்ரிச் சி.என்.என் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார். 'சில பகுதிகளில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மழை பெய்தது வெள்ளத்தை ஏற்படுத்தி இருப்பதோடு துரதிருஷ்டவசமாக சில கட்டடங்களும் இடிந்துள்ளன' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரினலான்ட்-பலடின்டேவுடன் வடக்கு ரினே-வெஸ்ட்பலியா மற்றும் சார்லான்ட் பிராந்தியங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரிட்ரிச் தெரிவித்தார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை காலை வரை கட்டுக்கடங்காத இந்த கனத்த மழை மேற்கு ஜெர்மனியில் பொழிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்திருந்தது.

நிர்க்கதியான குடிமக்களுக்கு உதவ பொலிஸ் ஹெலிகொப்டர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மீட்பு உதவியை எதிர்பார்த்து பலரும் கூரைக்கு மேல் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து இணைப்புகள் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் மேற்கு ஜெர்மனியில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

பெல்ஜியத்தின் வெர்விர் நகர வீதியில் வேகமாக ஓடும் வெள்ள நீரில் கார்கள் அடித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இணைதளத்தில் வெளியாகியுள்ளன. பெல்ஜியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகர்ப்புற பகுதியான லீகேவில் இருந்து மக்களை வெளியேறும்படி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளியேற முடியாதவர்கள் உயர்ந்த இடங்களில் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் உயிரிழப்புகள் பதிவாகாதபோதும் மியுஸ் நதியை அண்டிய சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.   நன்றி தினகரன் No comments: