நாடி வருகிறது ஆடி மாதம் !


மகாதேவ ஐயர் ஜெ
யராமசர்மா     மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                              

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     பனிரெண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களை சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகி விட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  - மனத்தில் எழுகின்ற ஒருவித மயக்கம் என்றே எண்ண வேண்டி


இருக்கிறது. எல்லா மாதங்
 களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன.மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட் டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம் .ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியைசித்திரையைதையைவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம்.இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகி விட்ட நிலையில் மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக் கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது ! வருகின்ற ஆடியை விட்டு விட்டு விலகத்தான் எங்களால் முடியுமா முடியவே முடியாது ! நாடிவரும் ஆடி பற்றி பார்ப்போமா வாருங்கள் !

    ஆடி என்றவுடன் - ஆடிச்செவ்வாய்ஆடி வெள்ளிஆடிப்பூரம்ஆடிக்கார்த்திகைஆடித்தபசுஆடிப்பெருக்குஆடி அமாவாசைஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும்.அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா ?

 


 
மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. ஆண்டாளின் திருப்பாவையும் மணி வாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகிறது. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதுதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய் புரட்டாசி விளங்குகிறது.ஆடி,புரட்டாசிமார்கழி இறைவழிபாட்டுக்குரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றன அல்லவா என்று வினா எழுகிறதல்லவா ஆடிபுரட்டாசி மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான - வீடு குடுபுகுதல்திருமணம்திருமண நிச்சயார்த்தம்காது குத்தல்எதையும் செய்வதில்லை. காரணம் - இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள்.மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங் களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

  சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள்.கடக


ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம்.ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் - தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தை பித்ருக்குகளுக்கு வழி பாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

  மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.ஆடி தொடங்கி மார்கழி


வரையான ஆறுமாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடிவரையான ஆறு மாதங்க
 ளும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும்.வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும்.தெற்கு நோக்கி சூரியன் பயணிக்கும் பொழுது வெம்பம் தணிந்து - காற்றுமழைபனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக்காலம் தேவர்களுக்கு இராக்கால மாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்கால தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி இரவின் தொடக்கம். மார்கழி விடியலின் தொடக்கம்.

ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின்


அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் - ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால்த்தானோ
  என்று எண்ணிட  வைக்கிறது.

  அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால்வேப்பிலைமஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும் அம்மனுக்கு வைத்து வழிபடுவது கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

  ஆடி மாதத்தை கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும்


நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.
 அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய் கருதி போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

  ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள்.சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக்கயிற்றை மாற்றுவதும்அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

  பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவ ணி


மாதத்துக்குரியதாய் இருந்தாலும் 
பெரும்பாலன சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த்திருவிழாதெப்பத்திருவிழா தீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா ?  சின்னக் கோவில்கள்பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடை பெறுவதும் நோக்கத்தக்கது.

  ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் , தையில் வருகின்ற அமாவாசையும் , கடலில் நீராட உகந்த தினங்களாகும்.தஷிணாயன புண்ணிய காலம் உத்தராயன புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

 இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி


மாதத்தில்த்தான்.சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்த்தான் அவதரிக்கின்றார்.சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்த்தான் என்பதும் அகமிருத்த வேண்
டிய கருத்தெனலாம்.

தையினை பொங்கல் திருநாளாய்அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்த்தான். " ஆடிப்பட்டம் தேடி விதை " என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்த்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

  ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு " ஆடிச்செவ்வாய் தேடிக்குளி - அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி " என்னும் முதுமொழியும் பழக்கத்தில் இருக்கிறது.

ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம்என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்த்திரம் என்று சொன்னாலும் - இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் - பத்தாவது மாதமான சித்தியிரையில் பிரசவம் நடக்கும். சித்தியிரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு


நல்லதல்ல என்னும் கருத்து சாதரணமாக சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் காலநிலை காரணமாக பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா
?

 ஆடி என்றவுடன் ஆடிவேல் விழா அகத்தினில் அமர்ந்து விடும் !  எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரரும்  கட்டாயம் வந்து நிற்பார்.தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டுவருவதும் நாடிவரும் ஆடி அல்லவா !

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

நாடிவரும் ஆடி அமங்கல மான மாதம் அல்ல ! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனை போற்றிக் கொண்டாடி , தோழர்களுடன் பாடி மகிழுவோம் வாருங்கள்.


No comments: