எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 50 தொண்டமான் வாரிசு பட்டத்தை துறந்த வழித்தோன்றல்கள் ! கி.ரா.வின் கரிசல் மண்ணில் பெற்ற அனுபவம் !! முருகபூபதினது எழுத்தும் வாழ்க்கையும் என்ற இந்தத் தொடர், கடந்த 2020 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் எனது பிறந்த ( 13 ஆம் திகதி ) தினத்தின்போது தொடங்கியது.

வாராந்தம் இதனை எழுதிவருகின்றேன். வருடத்தில் 52 வாரங்கள். அதனால்,  இந்த அங்கம் 52 ஆவதாக வந்திருக்கவேண்டியது.

இடையில் என்ன சிக்கல் வந்தது என்பது தெரியவில்லை. நாட்களும் உருண்டோடிவிட்டன.  இம்மாதம்  13 ஆம் திகதி அதிகாலையே  என்னை துயில் எழுப்பிய வெளிநாட்டு நண்பர்கள் – உறவினர்கள்  தொடக்கிவைத்த வாழ்த்து அலைப்பறை ஓய்வதற்கு இரண்டு நாட்கள் சென்றன.

அதற்கு முன்னர் இலக்கிய நண்பர்கள்  மெல்பனிலிருந்து நடேசனும் கன்பராவிலிருந்து பிரம்மேந்திரனும் இணைந்து நடத்திய  “நம்மவர் பேசுகிறார்  “ அரங்கிலும் என்னை இழுத்துவிட்டு வேடிக்கை காண்பித்தார்கள்.

அந்த அரங்கில் இணைந்து வாழ்த்தியவர்களுக்கும் நேரிலும்
தொலைபேசி – மின்னஞ்சல் வாயிலாகவும், எனது மனைவி மாலதியின் முகநூல் கணக்கின் ஊடாகவும் உலகெங்குமிருந்தும் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த ஐம்பதாவது அங்கத்திற்குள் வருகின்றேன்.

நம்மவர் பேசுகிறார் அரங்கில் எனது நீண்ட கால நண்பரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் தற்பொழுது யாழ். ஈழநாடு பத்திரிகை மற்றும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் நிருவாக இயக்குநருமான குகநாதன் உரையாற்றுகையில் என்னை ஒரு பத்திரிகையாளனாகவே நிலைநிறுத்திப்பார்த்தார்.  அத்துடன் இலக்கியவாதியாக மல்லிகையில் சிறுகதை எழுத ஆரம்பித்து,    அதே காலப்பகுதியில் பத்திரிகையாளனாகவும்  பயணித்த கதையையும் அவர் சொன்னார்.

இரண்டு தோணிகளில் பயணித்தால் என்னவாகும் என்பது தெரிந்ததுதான்.  அதனால், இரண்டு தோணிகளையும்  ஒன்றாக பிணைத்துத்தான் நான் எனது எழுத்துலகப்பயணத்தை தொடருகின்றேன்.


அதனால் கவிழ்ந்துவிடவில்லை.  இலக்கியத்தின் ஊடாக இதழியலையும், இதழியல் ஊடாக இலக்கியத்தையும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவனாகவே இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.

இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கிய 1970 காலப்பகுதியில் எங்கள் ஊருக்கு வரும் நண்பர் பத்மநாப அய்யர்,  எனக்கு பல தமிழக எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.

அதில் ஒரு தொகுப்பு சென்னை வாசகர் வட்டம் 1968 இல் வெளியிட்ட அறுசுவை.

அதில் இடம்பெற்ற ஆறு குறுநாவல்களும் எனக்கு இலக்கியத்தின் ஊடாக மக்களின் வாழ்வியல் அம்சங்களை புலப்படுத்தின.

இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், சார்வாகன்,                             ம. இராஜாராம், கி. ராஜநாராயணன், ஆகியேராது எழுத்துக்களை அப்போதுதான் அதில் முதல் முதலில் படித்தேன்.

வாசகர் வட்டத்தின் வெளியீடுகளான அக்கரை இலக்கியம்,


நடந்தாய் வாழி காவேரி, சாயாவனம், அம்மா வந்தாள் , புனலும் மணலும்,  பள்ளிகொண்ட புரம், புத்ரா, அண்டைவீட்டார், அபிதா, வேள்வித்தீ முதலான படைப்புகளையும் நண்பர் மேமன்கவியிடம் பெற்று  படித்தேன். 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய  சிறந்த நூல்களை வெளியிட்ட பதிப்பகம்தான் சென்னை வாசகர் வட்டம்.

கவர்ச்சிகரமான அட்டையின்றி, எளிமையான முகப்புத் தோற்றத்துடன்,  தரமான தாளில் நேர்த்தியாக அச்சிடப்பட்ட பல அருமையான நூல்களை வாசகர் வட்டம் வெளியிட்டு வந்தது. ஆண்டுக்கு நான்கு புதிய நூல்கள் இந்த வட்டத்திலிருந்து வரவாகிக்கொண்டிருந்தது.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி  தமிழில் முதலாவது பெண் பதிப்பாளர் என்ற பெருமையும் பெற்றவர்.

அவர் ஓவியர் மூலம் வடிவமைத்த அட்டைப்படம் அனைத்து


வாசகர் வட்டத்தின் வெளியீடுகளிலும் இடம்பெற்றது.  எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுவுப் பதிப்பகத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,  அதே சாயலில் எமது வெளியீடுகளையும் வெளிக்கொணர்வதற்கு செயலாளர் பிரேம்ஜி விரும்பினார். அவரது விருப்பத்தை எழுத்தாளர் ஐ. சாந்தன் நிறைவேற்றினார்.

மேமன் கவியின் யுகராகங்கள்,  காவலூர் ராஜதுரையின் ஒருவகை உறவு,  செ. யோகநாதனின்  காவியத்தின் மறுபக்கம் முதலானவற்றை  சாந்தனின் முகப்போவியத்துடன் – ( அதனை கோட்டுச்சித்திரம்  எனவும் அழைக்கலாம்  ) வெளியிட்டோம்.

சென்னை வாசகர் வட்டத்தின் அறுசுவையில் இடம்பெற்ற  கி.ரா.வின் கிடை குறுநாவலை படித்துவிட்டு,  1984 இல் தமிழகம் சென்றபோது,  திருநெல்வெலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு


சமீபமாக இருக்கும் இடைசெவல் கிராமத்துக்கும் செல்லவேண்டும் என்று மனதில் தீர்மானித்துக்கொண்டேன்.

சென்னையில் ஜெயகாந்தனை சந்திப்பதில் அப்போது எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. இத்தனைக்கும் அவரது பல சிறுகதைகளையும் நாவல்களையும் திரைப்படங்களையும் பார்த்திருந்தாலும்,  எனக்கு கி.ரா. அவர்களைத்தான் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மனதில் நீண்டகாலமாக குடியிருந்தது.

திருநெல்வேலியில் பெருமாள்புரத்தில் ரகுநாதன் – ரஞ்சிதம் தம்பதியரின் மூத்த மகன் ரீந்திரன் அவரது மனைவியான எனது அண்ணி மாலதி  ஆகியோரை சந்தித்தேன்.

திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளரான மாலதி எம். ஏ. பட்டதாரி. அவர் 1978 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது  எண்ணக்கோடுகள் என்ற கவிதை நூலை தந்தார். அது கவியரசு கண்ணதாசனின்  அணிந்துரையுடன் வந்திருந்தது.

 “ என்ன அண்ணி,  மாமா ரகுநாதனும் கவிஞர்தான். திருச்சிற்றம்பல கவிராயர் என்ற பெயரிலும் அவர் கவிதைகள்


எழுதியிருக்கிறார்.

உங்களை தனது மருமகளாக தெரிவுசெய்த அவரிடம் அணிந்துரை பெறாமல், கண்ணதாசனிடம் பெற்றிருக்கிறீர்களே..?  “ எனக்கேட்டேன்.

 “ மாமனாருக்கு புதுக்கவிதையில் உடன்பாடு இல்லை.  அவர் அதனை கடுமையாக விமர்சித்தவர். அப்படி இருக்கையில் நான் அவரிடம் எப்படி அணிந்துரை பெறமுடியும்  “ என்றார்.

குடும்பங்களுக்குள்ளும் இலக்கியத்தில் பிரிவினை இருக்கிறது என்பதையும் அப்போது கற்றுக்கொண்டேன்.  மாலதி – ரீந்திரன் தம்பதியரின் ஏக புதல்வன் செல்வன் அஜய் கண்ணாவுக்கு அப்போது எட்டுவயது. அவனும் கன்னா பின்னா என்று புதுக்கவிதை சொன்னான்.  ஆனால், அவனது மழலைக்குரலை தாத்தா ரகுநாதன் ரசிப்பதாக பாட்டி ரஞ்சிதம் சொன்னார்கள்.

 அடுத்து நான் இடைசெவலுக்கு செல்லவேண்டும் என்றேன்.


அதற்கான காரணத்தையும் மாலதியிடம் சொன்னபோது,  அவர் மாமியார் ரஞ்சிதம் அவர்களிடம் சொல்லி என்னை திருநெல்வேலியில் பஸ் ஏற்றிவிடச்சொன்னார்.

எழுத்தாளர்களை தேடித் தேடிச்செல்லும் எனது செயல் அவர்களுக்கு அதிசயமாகப்பட்டது.   “ நீங்களும் அவரைப்போல எழுத்தாளர் கூட்டத்தோடு அலையிறவரா தம்பி..? இடைசெவலில் எப்படி நீங்கள் தேடிச்செல்லும் எழுத்தாளரை கண்டுபிடிக்கப்போறீங்க…?   “ எனக்கேட்டார்.

 “ அம்மா… வாயிருந்தால் வங்காளமே போகலாம்தானே..? என்னை பஸ் ஏற்றிவிடுங்கள். அங்கே சென்று கி.ரா. அவர்களை தேடிக்கண்டுபிடித்து பேசிவிட்டு, அங்கிருந்தே சாத்தூரில் ஆண்டபெருமாள் மச்சானிடம் செல்கிறேன் “  என்று சொன்னேன். 

திருநெல்வேலிக்கு ரஞ்சிதம் அம்மா அழைத்துச்சென்றார்கள். அங்கே எமது தாத்தா பாஸ்கரத் தொண்டமானின் பெயரில் அமைந்த  வீதியிலிருந்த அந்த வீட்டில் மாலதியின் அக்கா விஜயா அண்ணி வசித்தார்கள்.  விஜயா அண்ணி திருமணம் முடித்தது எனது அப்பாவின் அண்ணன் சுப்பையா தொண்டமானின் மகன் ஞானதேசிகனை.  அந்த அண்ணன் இளம்வயதிலே மறைந்துவிட்டபின்னர், விஜயா அண்ணி தனிமரமானார்.

அந்த அண்ணியை தாயின் உருவத்தில் கண்டேன்.  பாசத்துடன் என்னை வரவேற்று உபசரித்தார். அவரது கனிவான வார்த்தைகளும் பேசும் முறையும் என்னை நெகிழச்செய்தன. பின்னாளில் 1990 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் அங்கே சென்றவேளையிலும் எம்மை திருச்செந்தூர் தேவஸ்தானத்திற்கெல்லாம் அழைத்துச்சென்றார்.  அங்குதான் எமது பெரியப்பா                                 ( அப்பாவின் அண்ணன் சுப்பையா தொண்டமான் ) கணக்காளராக பணியாற்றினார்.

எமது அப்பாவின் குடும்பத்தினருக்கு அந்த தேவஸ்தானத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. பாஞ்சாலம் குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கி வழிபட்ட ஆலயம். சூரனுடன் முருகன் போரிட்ட இடம் என்று ஐதீகத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

பஞ்சாலம் குறிச்சியை  அடுத்து  புதுக்கோட்டையை ஆண்ட இராஜா விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (Vijaya Raghunatha Tondaiman) (1759 –1807) விஜயரகுநாத தொண்டமான் என அறியப்படும் இவர் புதுக்கோட்டையை 1789 முதல் 1807 பெப்ரவரி முதல்தேதி வரை ஆண்ட மன்னர் ஆவார்.  என்று தமிழ் விக்கிபீடியா சொல்கிறது.

இந்தப்பரம்பரையில் வந்தவர்கள் எனது அப்பாவின் மூதாதையர்கள்.   அப்பாவின் தாய் மாமனார் பாஸ்கரத்தொண்டமான்  ( கலெக்டர் ) காங்கிரஸ் அபிமானி. ஆனால், அவரது தம்பி சிதம்பர ரகுநாதன் இடதுசாரி.

அதனால் இவர் தனக்குப்பின்னால் தொண்டமான் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளவில்லை. எனது அப்பாவும் அந்த பட்டத்தை துறந்துவிட்டு, இலங்கைக்கு படகேறி வந்துவிட்டார்.

இந்தச்செய்திகளை மதுரையில் இருந்த அப்பாவின் உடன்பிறந்த தங்கை சொல்லியிருந்தார்.  சாத்தூரில் மச்சான் ஆண்டபெருமாள் என்னை ஒரு தாத்தாவிடம் அழைத்துச்சென்றார்.

அவருடை பெயர் வண்ணமுத்து தொண்டமான்.  அவர்சொன்ன செய்திகளை அடுத்த வாரம் எழுதுகின்றேன்.

எனது அப்பாவும் எழுத்தாளர் ரகுநாதனும் தொண்டமான் பட்டத்துடன் வலம் வரவில்லை என்ற மனக்குறையை அங்கிருந்த உறவினர்களிடம் காணமுடிந்தது.

விஜயரகுநாத தொண்டமானின் வரலாற்றிலிருந்த கறைபடிந்த செய்திகள் இருந்தமையால் சிலவேளை அந்தப்  பட்டத்தை அவர்கள் சுமக்கத் தயாராக இல்லாதிருந்திருக்கவேண்டும்.

அந்தக்கதையை  வாசகர்கள் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றிலிருந்தும் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய கனல்தெறிக்கும் வசனங்களிலிருந்தும் தெரிந்துகொள்ளமுடியும்.

திருநேல்வேலியில் ரஞ்சிதம் ரகுநாதன் என்னை கோவில்பட்டிக்குச்செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறை கடந்து செல்கிறது.

இடைசெவலில் கி.ரா.வின் வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. அவரது ஒரே ஒரு கதையை மாத்திரம் படித்துவிட்டு அவருடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் திடுதிப்பென்று நான் தேடிச்சென்ற காலத்தில்தான் அவருக்கு 60 வயது. அது அவரது மணிவிழாக்காலம்.

அவர் பற்றி, 1984 இல் அவரைச்சந்தித்த பின்னர்  அவர் மறைந்த இந்த 2021 ஆம் ஆண்டு வரையில் பல பதிவுகள் எழுதிவிட்டேன்.  அதனால்  இங்கு விரிவஞ்சி தவிர்க்கின்றேன்.

அவரை முதல் முதல் சந்திக்கச்சென்றபோது,  கதவு தட்டும் ஓசைகேட்டு வந்து உள்ளே அழைத்த கி.ரா.வின் துணைவியார் கணவதி அம்மையாரும் தொடர்ந்தும் இலக்கியப் பதிவுகளில் இடம்பெற்றுவருபவர்.  கி.ரா.வுக்கு முன்பே விடைபெற்றுவிட்டவர்.

அன்று அவர் சுடச்சுடத் தந்த வாழைக்காய் பஜ்ஜியும் காப்பியின் சுவையும் நெஞ்சத்தில் நிலைத்திருப்பது.

கி.ரா. வைத்தேடி இலக்கியவாதிகள், மாணவர்கள், எழுத்தாளர்கள் , கலைஞர்கள், சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள் அடிக்கடி செல்லும் காலம் உருவாகிய காலப்பகுதியில்  நான் அவரைத் தேடிச்  சென்று பார்த்தமைக்கு அவரது கிடை குறுநாவல் என்னிடத்தில் ஏற்படுத்திய தாக்கம்தான்  முக்கிய காரணம்.

அவரை அன்று சந்தித்துவிட்டு வந்து நான் எழுதிய அவர் பற்றிய முதலாவது ஆக்கம் வீரகேசரி வாரவெளியீட்டில்                        27-05-1984 ஆம் திகதி வெளிவந்தது. இன்றும் அதன் நறுக்கு என்வசம் இருக்கிறது.

அதன்பிரதியை அப்போதே அவருக்கு தபாலிலும் அனுப்பியிருந்தேன்.

அன்று அவர் எனக்குத்தந்த அவரது கறுப்பு வெள்ளை சிறிய படத்துடன் அக்கட்டுரை வெளிவந்தது.

அக்கட்டுரையை இவ்வாறு தொடங்கியிருந்தேன்:

 “ பெரும் புகழ்பெற்ற பின்னரும் கிராமத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தவர் வி. ச. காண்டேகர். அதுபோலவே தகழி சிவசங்கரன் பிள்ளை கேரளத்தில் கிராமத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர். அவர்களைப்போல கிராமத்திலே வாழும் ராஜநாராயணனுக்கு நகரத்தின் ஆரவாரங்களில் நாட்டம் இல்லை.  “ கிராமியம்  “என்பதில்தான் ஆர்வம் அதிகம். அவரது எழுத்தோவியங்கள் எல்லாம் இவ்வுண்மையை புலப்படுத்துகின்றன. வட்டார வழக்குச்சொல்லகராதியோ இதனை முற்று முழுக்க மெய்ப்பிக்கிறது. இந்த அகராதியை ஒரு முறை படித்த பின்னர் நாமும் ஏன்  “சுத்தப்பட்டிக்காட்டானாக இருந்திருக்கக் கூடாது  “ என்று ஓர் ஆதங்கம் உண்டாகிறது.  “ இப்படி எழுதுகிறார் கவிஞர் மீரா.

இவ்வாறு தொடங்கப்பட்ட அக்கட்டுரையில் கி.ரா.வுடன் எமது பேராசிரியர் நண்பர் எம். ஏ. நுஃமானுக்கும் அவருக்குமிடையே இருந்த கடிதத் தொடர்புகள், இலக்கிய நண்பர் அலை யேசுராசா உட்பட சில இலக்கியவாதிகள் ( பத்மநாப அய்யர் – குலசிங்கம் ) தன்னை எதிர்பாராதவகையில்  சந்தித்த தகவல்கள், மு. தளையசிங்கம் பற்றி அங்கே வெளியான இதயஒலி என்ற இதழில் அவர் எழுதிய கட்டுரை பற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளேன்.

அவ்வேளையில் கி.ரா.வுக்கு மணிவிழா நடத்துவதற்கு இலக்கிய நண்பர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டபோது,                      “ விழாக்களை நடத்துவதைவிட உருப்படியாக ஏதும் செய்தால் அது தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பணியாக இருக்கும் என்று கருதுகிறார் கி.ரா.  “ என்று அக்கட்டுரையை நிறைவுசெய்தபோது,  அவரது மணிவிழாக்காலத்தில் அவருடைய நான்கு புதிய நூல்கள் வெளிவரும் தகவலையும் பதிவுசெய்திருந்தேன்.

நான்  முதல் முதலில் படித்த கி.ரா.வின் கிடை, என்னை அவரது கிராமத்தை தேடி ஓடவைத்தது. அந்த கிடை குறுநாவலுடன் மேலும் பன்னிரண்டு சிறுகதைகளுடனும் அன்னம் வெளியீடாக  ஒரு தொகுப்பு அவ்வேளையில் வந்திருந்தது. கிடை பின்னர் பல பதிப்புகளை கண்டுவிட்டது.

மறைந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி அவரது ஆத்ம நண்பர். அழகிரிசாமி எங்கள் ஊர் பாரதிவிழாவுக்கும் வந்திருக்கிறார் என்றும்  சொன்னேன்.

அவரது அந்த சின்னஞ்சிறிய இல்லத்தில் முன் அறையில் இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பெரிய உருவப்படம் காட்சியளித்தது.

அவர்பற்றியும் அன்னப்பறவை என்ற நூலை கி.ரா. எழுதியிருக்கிறார். தனது பிஞ்சுகள் குழந்தை இலக்கிய நூலை தனது கையொப்பம் இட்டுத்தந்தார்.

     அதனைத்தரும்போது,  “ உங்களுக்கு எத்தனை குழந்தைகள்..?  “ எனக்கேட்டார்.

 “ இரண்டு பெண்குழந்தைகள்  “  என்றேன்.  அப்போது எனக்கு இரண்டு  பெண் குழந்தைகள்தான். பெயரையும் கேட்டறிந்தார்.

 “ தனக்கு இரண்டும் ஆண்பிள்ளைகள்  “ எனச்சொல்லிவிட்டு மனைவி கணவதி அம்மாவை பார்த்து கண்ணைச் சிமிட்டினார் குறும்புத்தனமும் குசும்புத்தனமும் மிக்க கி.ரா. அவருடைய பேச்சில் இவையும் இழையோடும்.

பள்ளி சென்று முறையாக கற்காத அவரது இலக்கிய நூல்கள் அக்காலப்பகுதியிலேயே பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாகத்  திகழ்ந்தன.

அவரது மறைவுச்செய்தியை   கடந்த மே மாதம் 17 ஆம் திகதி அறிந்தபோது,  வீட்டுக்குள் முடங்கியிருந்து அவரையே நினைத்து மனதில் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

அவர் சம்பந்தப்பட்ட இணையவழி காணொளி நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டேன்.

அன்று 1984 ஆம் ஆண்டு, அவர் என்னை வழியனுப்ப இடைசெவல் வீதியோர பஸ் தரிப்பிடம் வரையில் வந்தபோது,      “ தம்பி… இனிமேல் எந்தவொரு எழுத்தாளனையும் தேடிச்செல்லும்போது முன்னறிவித்தல் இன்றி புறப்படவேண்டாம். கடல் கடந்து என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்.  சிலவேளை இன்று நான் வீட்டில் இல்லையென்றால் மிகுந்த ஏமாற்றத்துடன் அல்லவா திரும்பிச்சென்றிருப்பீர்கள்.  “ என்றார்.

அதற்கு நான்,  “ இல்லை அய்யா… உங்கள் கரிசல் மண்ணின் வாசத்தை சுமந்துகொண்டு திரும்பியிருப்பேன்.  “ என்றதும் மார்போடு அணைத்து விடை கொடுத்தார்.

தற்போது  பசுமையான நினைவுகளை தந்துவிட்டு, நிரந்தரமாகவே விடைபெற்றுவிட்டார்.

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: