காலமும் கணங்களும் : ஜூலை 15 எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் பிறந்த தினம் ! வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவை வானலையில் பரவச்செய்த கவிஞன் ! ! முருகபூபதில்லிகை  இதழ் ஊடாக அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா  இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய தென்னிலங்கை திக்குவல்லை யை ஒரு கணம் நினைத்தவுடன் அடுத்தடுத்து பல படைப்பாளிகளின்  பெயர்கள்தான்  எமது  நினைவுக்கு வரும்.  

இவர்களில் முதன்மையானவர் எம். எச். எம்.  ஷம்ஸ்.

மல்லிகை எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர்  திக்குவல்லை கமால், எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ஷம்ஸ். எனது இலக்கியப் பிரவேசத்தையடுத்து, திக்குவல்லையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் பூ என்ற புதுக்கவிதைத் தொகுதியை அச்சிடுவதற்காக கமால்,  நீர்கொழும்புக்கு வந்தார். அவருடன் வந்தவர் ஷம்ஸ்.

இது நிகழ்ந்து  நான்கு தசாப்தங்கள்   கடந்திருக்கலாம்.

அப்பொழுது எனது அக்கா, பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிள்ளை இன்றோ நாளையோ பிறக்கவிருக்கும் பரபரப்பான சூழ்நிலை வீட்டிலே.

கமாலையும் ஷம்ஸையும்  எமது மாமா மயில்வாகனன் அவர்களின் சாந்தி அச்சகத்தில் இரவு தங்க வைத்தேன். நானும் அவர்களுடன் தரையில் பாய் விரித்து உறங்கினேன். இந்த அச்சகத்திலிருந்து 1966 ஆம் ஆண்டில் அண்ணி என்ற இலக்கிய இதழும் வெளியானது. எனது முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள், எழுத்தாளர் ஐ. சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே கதைத்தொகுதி மற்றும் புத்தளம் கவிஞர் தில்லையடிச்செல்வனின் விடிவெள்ளி , கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழ் என்பனவும் வெளியாகியிருக்கின்றன.

அன்று இரவு நாம் எங்கே உறங்கினோம்?

விடிவிடிய இலக்கியச் சமாதான்.

ஷம்ஸ் பலதரப்பட்ட இலக்கியப் புதினங்களையும்  மிகுந்த


நகைச்சுவை உணர்வோடு சொல்லிச் சொல்லி எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

நஸ்ருல் இஸ்லாம்என்ற இலக்கியமேதையை ஷம்ஸிடமிருந்தே கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மறுநாள் மதியம் ஷம்ஸுடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்றவரும் - எனது பாடசாலை ஆசிரியருமான ரஸாக் மாஸ்டர், எங்கள் மூவரையும் தமது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

நீர்கொழும்பு கடற்கரைவீதியில் அம்மன் கோயிலுக்கு சமீபமாக எழுந்திருக்கும் பிரபலமான டொலர் ஸ்ரூடியோவின் ஸ்தாபகர் இந்த ரஸாக் மாஸ்டர் என்ற  ஒளிப்படக் கலைஞர்.

இப்பொழுது அவரும் இல்லை. ஷம்ஸ் மேல் உலகம் புறப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பு அவரும் போய்விட்டார். எனினும் இன்றும் அவர் நினைவாக நீர்கொழும்பில் டொலர் ஸ்ரூடியோ.

அந்தக்கட்டிடம் அமைந்த இடத்தில் இருந்த சிறிய வீட்டில்தான் எமக்கு மதிய விருந்து.

ஷம்ஸிடம் வெறும் நையாண்டி நக்கல்  , அங்கத நகைச்சுவை இருக்காது. ஆழமான விமர்சனப்பார்வையும்  இருக்கும். கண்டனங்கள் தெரிவிக்கப்படும்.

ஷம்ஸின் இந்த குணநலன்களினால் இலக்கிய உலகில் சர்ச்சைக்குரியவராகவும் விளங்கினார். நான் அங்கம் வகித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் இவரிடம் கண்டன விமர்சனங்கள் இருக்கத்தான் செய்தன.

ஆனால், என்னுடன் மிகுந்த சகோதர வாஞ்சையுடன் பழகினார். எனது நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேச மொழிவழக்கு கதைகளை  பாராட்டினார்.

மல்லிகை ஜீவாவுடன் கருத்து ரீதியாக சில முரண்பாடுகள் அவரிடம் இருந்தபோதிலும் - திக்குவல்லை - அநுராதபுரம், நீர்கொழும்பு பிரதேச மலர்களை மல்லிகை வெளியிட்டமைக்காக அவர் என்னிடம் மனம் திறந்து ஜீவாவுக்கு புகழாரம் சூட்டியதையும் மறக்க முடியாது.

ஈழத்து தமிழ் இலக்கியம் என்றால் அது யாழ்ப்பாணம்,


மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்றுதான் வரையறுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்தான் நீர்கொழும்பிலிருந்து நானும் அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவஹர்ஷாவும், திக்குவல்லையிலிருந்து கமால்,  மற்றும் நீள்கரைநம்பியும், சிலாபத்திலிருந்து எஸ்.எம்.ஜே.பைஸ்தீனும், புத்தளத்திலிருந்து ஜவாத் மரைக்காரும் மினுவாங்கொடையிலிருந்து மு.பஷீரும், நிலாமும் எழுதிக் கொண்டிருந்தோம்.

இதற்கு மல்லிகை வித்திட்டதனால் ஜீவாவுடன் கருத்து முரண்பாடுகள் கொண்டிருந்த போதிலும் ஷம்ஸிற்கு  அவரிடத்தில் அபிமானமிருந்ததை அறிவேன்.

பின்னாளில் ஷம்ஸும், ஏ.இக்பாலும், எம்.எஸ்.எம். இக்பாலும் கூட்டுச் சேர்ந்து ஒரு நூலை வெளியிட வேண்டிய நிலைமை தோன்றியது.

எச்.எம்.பி.மொஹிதீன்,  அறிஞர் அஸீஸ் நினைவுகள் நூலை எழுதியதன் விளைவே இந்தக் கூட்டணி.

எச்.எம்.பி.யின் நூலுக்கு விமர்சனம் எழுத முனைந்த இந்தக் கூட்டணி, இ.மு.எ.ச.வைச் சார்ந்த சிலரையும் கண்டித்து நீண்ட முன்னுரையுடன் அந்த நூலை வெளியிட்டது.

அந்த நூலினால் மிகவும் காயப்பட்டவர் எஸ்.பொ.

கமால்தீன், ஜீவா, இளங்கீரன், பிரேம்ஜி, கைலாசபதி முதலானோர் சும்மா இருந்தாலும்,  எஸ்.பொ. சும்மா இருக்கும் பேர்வழி அல்ல. அவர் இலக்கிய உலகில் கலகக்காரன் அல்லவா..?!

சிலவாரங்களில் இஸ்லாமும் தமிழும்  என்ற நூலை எழுதி வெளியிட்டார் எஸ்.பொ.

சிறிது காலம் இந்த விவகாரம் இலக்கிய உலகில் சிறிது சூடு பிடித்திருந்தது என்னவோ உண்மைதான்.

காலம் தரித்து நிற்பதில்லை. சிந்தனைகளிலும் மாற்றங்கள் எற்படுவது இயல்பு.

ஷம்ஸ்மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த வேளையிலும் திக்குவல்லையில் நடந்த அவரது கிராமத்துக் கனவுகள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு மல்லிகை ஜீவா சென்று கலந்து கொண்டதை அறிந்தபோதும் இந்த ஆரோக்கிய நிகழ்வுகளை அவுஸ்திரேலியாவிலிருந்து நெஞ்சு பூரிக்க ரசித்தேன்.

பின்னர் ஏ. இக்பாலின் படைப்புகள் மல்லிகையில் வெளியானது குறித்தும் ஆனந்தம் கொண்டேன்.

கிராமத்துக்கனவுகள் நாவலுக்கு தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

இந்த ஆரோக்கியமான சூழலையே அந்நிய நாட்டிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

ஷம்ஸ் எனது நீண்டகால இலக்கியத் தோழன்.

எப்படி மச்சான்”  என்று விளித்து, தோளில் தட்டி அணைத்து சிரிக்கச் சிரிக்க பேசும் இலக்கிய நெஞ்சம்.

தேசிய ஒருமைப்பாட்டில் திடமான நம்பிக்கை கொண்ட இலக்கியவாதி. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான ஆசிரியர் குரலில் நான் பணியாற்றிய பொழுது பல மொழிபெயர்ப்புகளுக்கு பக்கபலமாக துணை நின்றவர்.

அங்கும்  அவருக்கு கருத்து முரண்பாடுகள் தோன்றின. ஆனால் என்னுடன் அவருக்கிருந்த இலக்கிய நேசிப்பு நெருக்கம் எள்ளளவும் குறையவே இல்லை.

1997 ஆம் ஆண்டு இறுதியில் நான் தாயகம் வந்திருந்த பொழுது ஷம்ஸ் தினகரனில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

தினகரன் அலுவலகத்தில் என்னுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

தினகரனுக்குத்தான் என்னை பேட்டி காண்கின்றார்என்றுதான் எதிர்பார்த்தேன்.

1998 ஜனவரியில் நான் அவுஸ்திரேலியா திரும்பிவிட்டேன்.

இங்குள்ள ஒரு சிங்கள  நண்பர் எனக்கு தொலைபேசி மூலம் சொன்ன தகவல் இன்ப அதிர்ச்சியைத் தந்தது.

1998 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதிய சிலுமின இதழில் பாலம் என்ற பகுதியில் என்னைப்பற்றிய விரிவான கட்டுரை சிங்களத்தில் எனது வர்ணப்படத்துடன் வெளியாகியிருப்பதாக அந்த நண்பர் தெரிவித்தார்.

பின்பு அந்தப் பத்திரிகையை எடுத்துப்பார்த்தேன். தெனகம ஸ்ரீவர்தன என்ற சகோதர பத்திரிகையாளருடன் இணைந்து ஷம்ஸ் அந்த ஆக்கத்தை எழுதியிருந்தார்.

அதன் பின்பு வெளியான சிலுமின இதழ் ஒன்றில் எனது மனப்புண்கள்  சிறுகதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்.

இன ஒற்றுமையை வலியுறுத்தும் அச்சிறுகதை, அதற்கு முன்பு எந்தவொரு தமிழ் பத்திரிகையிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனது சமாந்தரங்கள் தொகுதியில் இடம்பெற்ற மனப்புண்கள்கதையை அந்நூலை வெளியிட்ட சென்னை தமிழ்ப்புத்தகாலயம் - அகிலன் கண்ணன் இத்தொகுப்பின் மகுடக்கதையென்று பாராட்டியிருந்தார்.

செங்கை ஆழியான் மல்லிகையில் அக்கதையை வெகுவாக விதந்து சொல்லி குறிப்பிடத்தக்க கதையென்று விமர்சித்திருந்தார்.

சிங்கள மக்களுக்கு இனம் காட்டப்படவேண்டிய தமிழ் படைப்பு என்ற எண்ணம் ஷம்ஸுக்கு தோன்றியிருக்க வேண்டும்.

இன ஒற்றுமைக்கும் சமாதான சகவாழ்வுக்கும்   இலக்கியப் பாலம் அமைத்தார் நண்பர் ஷம்ஸ்.

அதனால் அவரது பேனா எழுதிய பாடல் வரிகள்தான் இவை:

வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே - உந்தன்
வரவைக் காணவில்லை வெண்புறாவே
நெல்லில் மணி பொறுக்கும் வெண்புறாவே - இன்னும்
நேரம் வரவில்லையோ வெண்புறாவே

சந்திரிக்கா குமாரணதுங்க பதவிக்கு வந்தபோது உள்நாட்டு யுத்தம் அவருக்கும் பெரும் சவாலாக விளங்கியது.  ஊடகங்களில் ஒளி – ஒலிபரப்புவதற்கு பாடல் ஒன்று தேவைப்பட்டது.

இதனை இயற்றித்தந்தவர் கவிஞர் ஷம்ஸ். இந்தப்பாடல்  தினமும்   தொலைக்காட்சி ஊடகங்களில் காட்சிகளுடன் ஒளிபரப்பானது.  பின்னாளில்  வெவ்வேறு காலப்பகுதியில்  அக்காட்சிகளிலும் மாற்றங்கள் நேர்ந்தன.

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ. ஏ. லத்தீஃப் சிறிது காலம் நடத்திய இன்ஸான் என்ற  இதழில்  எழுதியவர்களில் ஷம்ஸ் முக்கியமானவர்.  முஸ்லிம் சமுதாயத்தில் முற்போக்கான எண்ணங்களை விதைத்த இவ்விதழில்

அவர் சில புனைபெயர்களிலும் எழுதினார். பாஹிரா, அபூபாஹிம், இப்னு ஹாமீம் என்பன தற்போது எனது நினைவில் நிற்கும் அவருடைய  புனைபெயர்கள்.

கவிதைத் துறையிலும் மிளிர்ந்திருக்கும் ஷம்ஸ், மரபுக்கவிதை, படிமக்கவிதை, ஹைக்கூ கவிதை முதலான துறைகளிலும் பிரகாசித்தார்.

இவரும் கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தியைப்போன்று பல குறும்புத்தனமான அதேசமயம் சிந்தனனக்கு விருந்து படைக்கும் குறும்பாக்கள் எழுதியிருப்பவர்.

அதில் ஒன்று:

 

 ஆறுதரம் சென்றவராம் மக்கா

ஹாஜி வரவேற்பு மிகப் பக்கா

காரில் அவர் வந்திறங்கக் 

கந்தலுடைப் பெண் வழியில் 

பார்த்துவிட்டாள் 

ஆம்,  அவரின் அக்கா

நான் எங்கள் ஊரில்  அல் – ஹிலால் மகா வித்தியாலயத்தில் படிக்கின்ற  காலத்தில்,   “ மக்காவுக்குச்  சென்று புண்ணியம் தேடுவதை மேலானதுதான்  ஒரு  ஏழைக்குமர் பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்து வாழ்வளிப்பது   “ என்று எனது ஆசான்கள் சொல்லி அறிந்திருக்கின்றேன்.

நண்பர் ஷம்ஸின் இக்கவிதை,  பெற்ற தாயை பட்டினிபோட்டுவிட்டு மகன் கோயில் கும்பாபிஷேகம் செய்யும் செயலுக்கும் ஒப்பானது !

ஷம்ஸ், இலக்கிய ஈடுபாட்டுடன், தான் வாழ்ந்த பிரதேசங்களில் களிகம்பு, கவாலி, றபான் முதலான முஸ்லிம் மக்களின் பாரம்பரிய கலைகளுக்கும் புத்துயிர்ப்பு வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது.

ஷம்ஸ் அவர்களை நினவுகூர்ந்து இணையவழி அரங்கு  அவரது பிறந்த தினத்தின்போது, ( 15 ஆம் திகதி  ) நடந்தது.  எனது  காணொளி பதிவு ஒளிபரப்பானது.

பல இலக்கியவாதிகள் ஷம்ஸின் ஆளுமைப்பண்புகளை பற்றியும்  அவரது ஊடகத்துறை, மொழிபெயர்ப்பு பணிகள், மற்றும்  படைப்பாற்றல் குறித்து இவ்வரங்கில் உரையாற்றினர்.

---0---

letchumananm@gmail.com 

No comments: