இளைய குரு ( யோகன் - கன்பரா )


அடிக்கொரு தடவை மறுகட்டமைப்பு செய்வது என்ற பெயரில், உயர் மட்ட நிர்வாகங்களில் மாற்றம் செய்வது, கிளைகளுக்கும், பிரிவுகளுக்கும்  பெயர் மாற்றம் என்று மட்டுமில்லாது வேலையாட்களை இடமாற்றுவது அல்லது குறைப்பது என்பது  அரச திணைக்களங்களில் சகஜம்தான். இது கடந்த ஐந்து வருடங்களில் மூன்று தடவைகளுக்கு மேல் நிகழ்ந்து விட்டதால் எனக்கு  நான் வேலை செய்யும் கிளையின் பெயரே இப்போது மறந்து போய் விட்டது.
இம்முறை வந்த மறுகட்டமைப்பு எங்கள் பிரிவுக்கு, குறிப்பாக எங்கள் குழுவுக்கு வந்த கத்திதான் என்பது விரைவிலேயே புலப்பட்டுவிட்டது. 
எங்கள் குழுவில் ஆறரைப் பேர்கள் செய்யும் வேலையை நான்கரைப்  பேர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று உத்தரவு வந்து விட்டது. அது என்ன அந்த அரைக்கணக்கு என்று  நீங்கள் கேட்பீர்கள். ஆறரை மூளைகளின் வேலையை நான்கரை மூளைகள் செய்ய வேண்டும் என்று சொன்னால் யாரந்தப்  பாதி மதி  கொண்ட பேர்வழி என்று நீங்கள் மீண்டும் கேட்பீர்கள். 
அவர்தான் எங்கள் சூப்பர்வைசர். அவருக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்து ஐந்து மாதம் என்பதால் பிள்ளையை  வீட்டில்  பார்த்துக் கொள்வதற்காக  வாரத்தில் இரண்டரை நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்து பாதிச் சம்பளத்தில்  வேலை செய்கிறார்.
மறுகட்டமைப்புடன் ஆட்குறைப்பு  என்று வந்த முதல்  மின்னஞ்சலின் அமளி அடங்கு முன்னே இரண்டாவது மின்னஞ்சல்  வந்திறங்கியது.
சில பிரிவுகளில் ஆட்கள் குறைப்புக்கான தேவையும் அதே நேரம் வேறு பிரிவுகளில் ஆட்கள் தேவை என்ற நிலையும் இருப்பதால் விருப்பத்தினடிப்படையில் வேறு பிரிவுகளில்  அல்லது கிளைகளில் வேலை  செய்ய வாய்ப்புண்டு என்றது மின்னஞ்சல்.
கழுத்துக்கு வந்த கத்தி காதை  உரசிக்கொண்டு போனதாகவே எண்ணிக் கொண்டேன். 
ஆறரையில் நாலரையைக் கழித்தால்  இரண்டு. இப்போ  எங்கள் குழுவிலிருந்து இடம்  மாறும் அந்த இரண்டு பேர் யார் என்பதில்தான் இடியப்பச் சிக்கல் வந்தது
ஆட்கள் தேவைப்படும் குழுக்களின் விபரமும், இது பற்றிய ஆலோசனைக்கு கூட்டத்திற்குமான அழைப்பும் மின்னஞ்சலில் வர நான் கையில்  ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனையையும் எதுவும் எழுதப்  போவதில்லை  என்று தெரிந்தும் கொண்டு போனேன்.
எல்லாமாக ஆறரைப் பேர்  இருந்த கூட்டத்தை  ஆரம்பித்த  சூப்பர் வைசர் யாராவது இருவர் தாமாகவே முன் வந்தால்  இடமாற்றம்  இலகுவாகிவிடும் என்றார்.
கொண்டு வந்திருந்த ரிம் ராம்  பாக்கட் ஒன்றை உடைத்து மேசையில் உலவ விடுவது அவரின் வழக்கம். எனக்கு வலப்பக்கமிருந்த இயன் அதை என்னிடம் தள்ளி விட நான் அதை இடப்பக்கம் மாக்கிடம்  தள்ளி விட்டேன்.
ரிம் ராம்  ஒரு ரவுன்ட்  சுற்றி  வந்ததும் மீண்டும் அதே கேள்வி. இந்த வயதில் புதிய குழுவில் சேர்ந்து மீண்டும் புதியதை கற்று  தேர்வதென்பது  தலை விதியா என்ன?
எங்கள் குழுவில் பலரும் எதுக்கும் அசைந்து கொடுக்காத உறுதி கொண்டவராய் தலையை இடம் வலமாக ஆட்டி மாற்றத்தை  மறுத்து விட என்னைப்போல இன்னொரு பேய்க் குஞ்சும் நானும் ஆமென்று எதோ தியாகம் செய்ய தற்கொலை தாக்குதலுக்கு ஒப்புக் கொண்டவர்கள் போல தலையை மேலும் கீழும் ஆட்டி ஒப்புக் கொண்டோம்.    
இப்படியாகத்தான் நான்  புதிய குழுவில் சேர்க்கப்பட்டேன்.
இந்தப் புதிய குழுவில் அனைவரும் இருபத்தைந்து வயதிற்குட்பட்டவர்கள்.  முதல் சந்திப்புக் கூட்டத்தில் குழுவில் உள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்தி பெயர்களை சொல்ல சொல்ல எழுதிக் கொண்டேன். எழுதி விட்டால் போதுமா ? பிறகு யாருக்கு  எந்தப் பெயர் என்பது மூளையில் எந்த மூலையிலும் நிற்கப் போவதில்லை  என்று என் பட்டறிவு சொல்லியது.  பெயர்களை மாறி மாறி சொல்லி மூக்குடைபட்ட பல அனுபவங்கள் உண்டு.
புதிய குழுவில் நேதன் என்று என்று ஒருவனுக்குப் பெயர். பார்த்தால் சிரித்தபடி நல்லவன் போல் தெரிந்தான். புன்  சிரிப்பு  எப்போதும் முகத்தில் ஒட்டி வைக்கப்பட்ட முகம் அவனுடையது. அவனை நாதன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டால் நாதன் - நல்லவன் என்று இலகுவில் நினைவில் கொள்ளலாம்.
மற்றவன் டானியல் இவன் எப்போதும்  சீரியஸாகவே முகத்தை வைத்திருப்பான். தாடியும் வைத்திருந்தான். தாடி- டானி என்று  சொல்லிப்பார்த்தால்  ரைம் பண்ணி வரும் போல தெரிந்தது.
 எனக்கு இந்தப் புதிய வேலை தொடர்பான சகலதையும் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்டவன் லியம்.
இயம்பிடுவாய் லியம்.  
புதிய சூப்பர்வைசர்  தனது வயது என் மகனின் வயதுதான் என்று அறிந்ததும்  ஆச்சரியப்பட்டார்.
ஐந்து ஆண்களுக்கு மத்தியில் பஞ்சாலி போல ஒரே ஒரு பெண்தான் அவள் பெயர் ஜாஸ்மின் ஆனால்  எல்லாரும் ஜாஸ் என்றே கூப்பிடுவதால்  அந்த இசையின் பெயரை நினைவில் கொண்டால் அதுவும் இலகுவாகி விடும்.  .
எமது புதிய கிளையின் பெயரைத்தான் எழுதி வைக்கவில்லை. அதற்கென்ன அவசரம் இப்போது. ?
ஒரு வழியாக எனது கணினியில் எனக்கு  தரப்பட்ட வேலையை எனக்கு பயிற்றுவிப்பதற்காக வந்தான் லியம். அது புதிய கணினி மொழி எனக்கு.  அதன் பிரயோகமும் நான் அறியாதது.
மிகுந்த பொறுமை காத்து அதை எனக்கு இயம்பினான் லியம்.
-->
மகனிடம்  பிரணவ மந்திரம் கேட்ட அப்பனின் நிலையில் இப்போது நான்.
No comments: