இலங்கைச் செய்திகள்


விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை

கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் 

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல்  பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - கனே­டிய பிர­தமர்

கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி இரத்து

யாழில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கான் அகதிகள்

 இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா-இலங்கை தீர்மானம்

வெளிநாட்டு அகதிகளை தங்கவைக்க பௌத்த குருமார் கடும் எதிர்ப்பு

ரிஷாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகுவோம் - மஹ்ரூப்

வெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் பதற்றம் ; இராணுவம் குவிப்பு

இராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் ரிஷாத்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

மினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை

வடக்கு ஆளுநரைச் சந்தித்த சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் 

மோடிக்கு பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த வாழ்த்து

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

சட்ட விரோதமாக  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் 

 “ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் ?''

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”

அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் மீள்குடியேறிய மக்கள் 

வரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்விடுதலை புலி உறுப்பினரின் உடல் நீதவான் முன் தோண்டி எடுக்கபட்டது

21/05/2019 முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது .
சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மண்டையோடு சிதைவடைந்தநிலையில் காணப்பட்ட குறித்த உடலத்தில் இரண்டு குண்டுகள் ,துருப்பிடித்த துப்பாக்கிரவைகள் ,வோக்கி டோக்கி ஒன்றின் சிதைவுகள்,இலக்கத்தகடுகள்,சயினைட் குப்பி  ஆகியனவும் மீட்க்கப்ட்டன.
மீட்கப்பட்ட உடல் சிதைவில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட  இலக்கதகட்டில் த.வி.பு  ஐ 2719 என்ற இலக்கம் காணப்படுகின்றமை குடிப்பிடத்தக்கது .  நன்றி வீரகேசரி 
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை

20/05/2019 யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்  முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன்  நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று (19) மாலை முன்னாள் போராளிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஒரு பயனாளிக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் 40 பேருக்குத் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக  விசேடமாக குறித்த  நிதி  வழங்கப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.
இதன் போது முன்னாள் போராளிகளோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கப்படும் நிதிகளை உரிய முறையில் தொழில் நடவடிக்கைகளுக்காக மூலதன முதலாக பயன்படுத்திச் சிறப்பான வாழ்க்கையை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.
பத்து வருடங்களாக எவ்விதமான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தொழிலை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டமை  பாராட்டத்தக்கது எனவும் முன்னாள் போராளிகள் மீதான கரிசனைக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ச்சியாக தமது தொழில் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாமும் கை கோர்த்துப் பயணிக்கத் தயார் எனவும் இதன் போது முன்னாள் போராளிகள் சார்பாகக் கருத்துக்களைத்  தெரிவித்திருந்தனர்.  நன்றி வீரகேசரி 

கிழக்கு ஆளுநருக்கு எதிராக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் 

20/05/2019 கிழக்கு மாகாண ஆளுனரினால் கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டிப்புதைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அமைதியான முறையில் வாயில் கறுப்பு துணி அணிந்தவாறு போராட்டம் நடைபெற்றது.
கிழக்கு தமிழ் மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைக்கும் முயற்சி, கிழக்கு மாகாண ஆளுனரின் ஒருபக்க பார்வையில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழ் மாணவர்களே போன்ற கோசங்களுடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர்கள், பிரதேசசபை, மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பேச்சில் நல்லிணக்கம்,செயலில் இனவாதம், வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமித்த, தமிழர்களின் கல்வியை புறந்தள்ளும் கிழக்கு ஆளுனர்,அழிக்காதே அழிக்காதே தமிழர்களின் கல்வியை அழிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பதிலீடுகள் இன்றி இடமாற்றம் வழங்கப்படுவதாகவும் அவற்றினால் தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் அதற்கு பதிலீடாக தமிழ் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவேண்டும் எனவும் முஸ்லிம் பிரதேசங்களில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பகுதிக்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது கிழக்கு மாகாண தமிழ் மாணவர்களின் கல்வியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியை கோரும் மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது  நன்றி வீரகேசரி 

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல்  பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - கனே­டிய பிர­தமர்

20/05/2019 இலங்­கையில் அர்த்­த­முள்ள வகையில் பொறுப்­புக்­கூறல்  பொறி­முறை உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும்  என்று  கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இலங்­கையில் யுத்தம் நிறை­வ­டைந்து பத்து ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வ­தனை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள காணொளி ஒன்­றி­லேயே கனே­டிய பிர­தமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 
அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 
 26 ஆண்­டு­க­ளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்­காலில் இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போதும் அதற்கு முன்­னரும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளார்கள். யுத்தம் நாடு முழு­வ­திலும் ஆறாத வடுக்­களை ஏற்­ப­டுத்திச் சென்­றுள்­ளது.
கடந்த ஒரு தசாப்த கால­மாக யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் கனே­டி­யர்கள் பலரை தனிப்­பட்ட ரீதியில் சந்­தித்து, அவர்­களின் வலிகள் வேத­னை­களை கேட்­ட­றிந்­து­கொண்­டுள்ளேன்.
தமிழ்க் கனே­டி­யர்­க­ளு­டனான சந்­திப்­புக்­களின் ஊடாக இலங்­கையில் சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் நிலை­நாட்­டு­வது மிக நீண்ட பயணம் என்­ப­தனை புரிந்து கொண்டேன்.
பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளினால் நம்­பக்­கூ­டிய வகை­யி­லான பொறுப்புக் கூறல் பொறி­மு­றைமை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்­டு­மென கோரிக்கை விடுக்­கின்றேன்.
சர்­வ­தேச மற்றும் உள்­நாட்டு ரீதியில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றைமை அமைய வேண்டும்.
யுத்தம் கார­ண­மாக சொந்­தங்­களை இழந்த, பல்­வேறு வழி­களில் இழப்­புக்­களை எதிர்­நோக்­கிய மற்றும் பாதிப்­புக்­குள்­ளான அனை­வ­ருக்கும் கனே­டிய அர­சாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்­கல்­க­ளையும் வருத்­தத்­தையும் வெளி­யிட்டுக் கொள்­கின்றேன்.
அண்­மையில் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அனைத்து மக்­களும் தங்­க­ளது நம்­பிக்­கை­களின் ஊடாக வழி­பா­டு­களில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.
கன­டாவின் வளர்ச்­சிக்கு தமிழ் கனே­டி­யர்கள் வழங்கி வரும் பங்­க­ளிப்­புக்­களை அனைத்து கனே­டி­யர்­களும் அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென இந்த சந்­தர்ப்­பத்தில் கோரு­கின்றேன்’ எனக் குறிப்­பிட்­டுள்ளார்.  நன்றி வீரகேசரி 

கிழக்கு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கு அனுமதி இரத்து

21/05/2019 கிழக்கில் ஷரிஆ பல்­க­லைக்­க­ழகம்  மற்றும் மத்­ரஸா  பாட­சா­லைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்­சர்கள்,  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன்  முன்­னெ­டுத்த முறை­யான கலந்­து­ரை­யா­டல்­களின் ஊடாக   வழங்­கப்­பட்ட  பரிந்­து­ரை­க­ளுக்கு   அமைய ஷரியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி   வழங்க முடி­யாது என முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. 
அத்­துடன்  மத்­ரஷா  பாட­சா­லை­களை  கல்­வி­ய­மைச்சின் கீழ்  கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்க  தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளதாக  என  பிர­தமர் ரணில்  விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
கிழக்கு    ஷரிஆ பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களை தொடர்ந்து  சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யினை பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஆசு­மா­ர­சிங்க    பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் நேற்று அலரி மாளி­கையில் தெளி­வுப்­ப­டுத்­தினார். 
இவ்­வி­டயம் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே   பிர­தமர் இதனை குறிப்­பிட்டார். 
பிர­தமர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தேசிய பாது­காப்பு  இன்று   உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது  மக்கள் அனை­வரும்  தங்­களின்   செயற்­பா­டு­களை  மீள  ஆரம்­பிக்­கலாம்.  இன்று  பாட­சா­லை­க­ளுக்கு   பிள்­ளை­களை பெற்றோர்  அச்­ச­மின்றி  அனுப்பி வைப்­பது    அவ­சி­ய­மாகும்.    அடிப்­ப­டை­வா­தி­களின்  தாக்­கு­தல்கள் மாண­வர்­களின் எதிர்­கா­லத்­திற்கு எவ்­வித  பாதிப்­புக்­க­ளையும்  ஏற்­ப­டுத்த  நாமே  வழி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்க கூடாது.
ஷரியா பல்­க­லைக்­ழ­கத்­திற்கு ஒரு­போதும் அனு­மதி வழங்க முடி­யாது. பட்­டப்­ப­டிப்பு நிறு­வ­னங்­க­ளுக்கு மாத்­தி­ரமே அனு­மதி  வழங்க முடியும்.  இந்த  பல்­க­லைக்­க­ழகம்  ஷரியா  பல்­க­லைக்­க­ழ­க­மாக  செயற்­பட முடி­யாது   என்று  சட்­டத்தின் ஊடாக  அறி­வு­றுத்­தப்­படும்.   இதற்­காக  பல்­க­லைக்­கழக் சட்ட மூலத்தில்   09வது அத்­தி­யா­யத்தின்  (அ) பிரிவு மீள் பரி­சீ­லனை செய்­யப்­படும்.   மதம்  மற்றும் இன அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வதை விடுத்து  மாண­வர்­க­ளுக்கு புதிய  பரி­மா­ணங்­க­ளையும், தொழி­னுட்ப  கற்­றல்­க­ளையும்  முழு­மை­யாக வழங்­கு­வதே  தற்­போ­தைய    காலக்­கட்­டத்தில்  பிர­தா­ன­மாக  காணப்­பட வேண்டும்  என்று   5வது அத்­தி­யா­யத்தில்  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய   இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் நிறை­வேற்று செயற்­பா­டுகள் மற்றும் நிறை­வேற்று குழுவின் தகை­மைகள்  ,  அடுத்­தக்­கட்ட  நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுத்தல்  தொடர்பில்  அனைத்து விட­யங்­களும் மீள் பரி­சீ­லனை செய்­யப்­படும்.   இவ்­வி­டயம் தொடர்பில்  பாரா­ளு­மன்­றத்தில்  பிரே­ரணை   விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும்.
அத்­துடன்   மத்­ரஷா  பாட­சா­லைகள் அனைத்தும்  கல்வி அமைச்சின் கீழ்  கொண்டு வரப்­படும்.   இப்­பா­ட­சா­லை­களின்   கற்றல்  செயற்­பா­டுகள் தொடர்பில்     முறை­யான   திட்­டங்கள் வகுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.   மற்றும் நடைமுறையில் பின்பற்றிய  விடயங்கள் தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்ய   முஸ்லிம் விவகார அமைச்சு  ஒன்றிணைந்து செயற்பட முடியும்.
இவ்விரு  விடயங்கள் தொடர்பிலும்   முஸ்லிம்  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும்  அறிக்கை சமர்ப்பித்தார்கள்.  அனைத்து விடயங்களும் முறையாக  பரிசீலனை செய்தே  இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 


யாழில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆப்கான் அகதிகள்

21/05/2019 வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து சென்று தனியார் வீடுகளில் தங்க வைக்கத் தனியார் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கையை வடமாகாண ஆளுநர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
ஆளுநரின் முடிவையடுத்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அகதிகள் குடும்பம், மீண்டும் வவுனியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் தங்கியிருந்த வெளிநாட்டு அகதிகளிற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதையடுத்து, அவர்களை வடக்கில் தங்க வைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் வவுனியா கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் ஒரு தொகை அகதிகளைத் தங்க வைப்பதுடன், யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை அகதிகளைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
எனினும் உள்ளூரில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்ப்பையும் மீறி வவுனியாவிற்கு ஒரு பகுதி அகதிகள் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 6 உறுப்பினர்களைக் கொண்ட குடும்பமொன்றை யாழிற்கு அழைத்து சென்று, யாழ் நகரிலுள்ள வீடொன்றில் தனி நபர் ஒருவர் தங்க வைத்தார். குறித்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை கொண்டவர்.
யாழ்ப்பாணத்தில் தனியார் வீட்டில் அகதிகளைத் தங்க வைப்பது பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படுத்துமென்பதை யாழ்ப்பாண பொலிஸார் புரிய வைக்க முயன்றும், அகதிகளை அழைத்து சென்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் வடக்கு ஆளுநரின் கவனத்திற்குச் சென்றது. அகதிகளை வடக்கிற்கு அழைத்து சென்று, அரச பராமரிப்பில் வைப்பதற்கு ஆளுநர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தைச் சிக்கலில்லாமல் முடிக்கவே ஆளுநர் முயற்சித்துக் கொண்டிருந்தார். 
இந்த நிலையில் தனியார் வீடுகளில் அகதிகளைத் தங்க வைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற விடயத்தை, வீட்டு உரிமையாளரை அழைத்து ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அதனால் அகதிகளை உடனடியாக வவுனியாவிற்கே அனுப்பி வைத்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு உரிமையாளர் கால அவகாசம் கோரியுள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் கால அவகாசம் வழங்க முடியாதென இறுக்கமாகத் தெரிவித்த ஆளுநர், உடனடியாக அரசாங்கத்தின் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும்படி குறிப்பிட்டார்.
இதையடுத்து நேற்று திங்கட்கிழமை இரவு ஆப்கான் அகதிக்குடும்பம் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி மையத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
 இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா-இலங்கை தீர்மானம்

21/05/2019 இரா­ணு­வத்­துக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்­காவும் இலங்­கையும் இணங்­கி­யுள்­ளன. வொஷிங்­டனில் நடந்த உயர்­மட்டப் பேச்­சுக்­களை அடுத்து வெளி­யி­டப்­பட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யி­லேயே இரண்டு நாடு­களும் இதனைத் தெரி­வித்­துள்­ளன.
“ஜன­நா­யகம், மனித உரி­மைகள் மற்றும் சட்­டத்தின் ஆட்சி ஆகி­ய­வற்­றுக்­கான அர்ப்­ப­ணிப்பின் அடிப்­ப­டையில், அமெ­ரிக்­கா-­இ­லங்கை பங்­கு­டமை கலந்­து­ரை­யாடல் மே 6 ஆம் திகதி  வொஷிங்­டனில் நடை­பெற்­றது.
வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன அமெ­ரிக்­காவின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்க செயலர் டேவிட் ஹாலே ஆகி­யோரின் இணைத் தலை­மையில் இந்தக் கூட்டம் இடம்­பெற்­றது.
இரு­த­ரப்பு உற­வு­களின் முக்­கி­யத்­து­வத்­தையும்,  இரண்டு அர­சாங்­கங்­களும் மீள உறு­திப்­ப­டுத்­தின. பங்­கு­ட­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக பணி­யாற்­று­வ­தற்கும் உறுதி பூண்­டுள்­ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தலை அடுத்து,  தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான  இலங்­கை­யுடன் இணைந்து நிற்­பதை வெளிப்­ப­டுத்தி அமெ­ரிக்க ஜனா­தி­பதி வெளி­யிட்ட அறிக்கை மற்றும் இலங்­கைக்கு உதவி வழங்­கு­வ­தாக எடுக்­கப்­பட்ட முடிவை அமெ­ரிக்கா மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­காவின் இந்த உத­வியை இலங்கை  மதிக்­கி­றது.
கொழும்பிலுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் பன்­முக உத­விகள், எவ்.­பி.ஐ. புல­னாய்­வா­ளர்­களின் விசா­ரணை உத­விகள் மற்றும் எதிர்­கா­லத்தில் சாத்­தி­ய­மாகக் கூடிய உத­விகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
அனைத்­து­லக சட்­டங்­களை மதிக்கும் வகையில்  இந்தோ -பசுபிக் சமுத்­தி­ரங்­களில்,  பாது­காப்­பான கடல் பய­ணங்­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு, அமெ­ரிக்­காவும் இலங்­கையும் இணைந்து பணி­யாற்றும்.
கண்­ணி­வெ­டி­களை அகற்­று­வ­தற்­கான அமெ­ரிக்க ஆத­ரவு, கூட்டு இரா­ணுவ செயற்­பா­டுகள், இலங்­கையின் அமைதி காப்பு நட­வ­டிக்­கைகள், இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு மனித உரி­மைகள் பயிற்சி அளிப்பது  அமெ­ரிக்க கப்­பல்கள் மற்றும் இரா­ணுவ அதி­கா­ரி­களின் வரு­கைகள், உள்­ளிட்ட  தற்­போ­துள்ள இரு­த­ரப்பு பாது­காப்புத் துறை ஒத்­து­ழைப்பை இரண்டு நாடு­களும் வர­வேற்­றன.
இரா­ணுவ- ஒத்­து­ழைப்பை மேலும் விரி­வு­ப­டுத்­தவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
நிலை­யான அமைதி மற்றும் செழிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல், நீதி மற்றும் மனித உரி­மை­களை ஊக்­கு­விக்கும் இலங்­கையின் அர்ப்­ப­ணிப்பை அமெ­ரிக்கா வர­வேற்­கி­றது.
காணாமல் போனோர் பணி­யகம்,  இழப்­பீ­டு­க­ளுக்­கான பணி­யகம், மற்றும் படை­யினர் வச­மி­ருந்த நிலங்­களை மீள­ளிப்­பது தொடர்­பான விட­யங்­களில் காணப்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­களை அமெ­ரிக்கா ஏற்றுக் கொள்­கி­றது.
ஜன­நா­யகம், ஜன­நா­யக நிறு­வ­னங்கள் மற்றும் நடை­மு­றைகள், நல்­லாட்சி, சட்­டத்தின் ஆட்சி, நீதி மற்றும் பாரா­ளு­மன்ற நடை­மு­றை­களை வலுப்­ப­டுத்­து­வதில் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை வலியுறுத்தியுள்ளது.
இந்த கடப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­துக்கு அமெ­ரிக்கா ஊக்­க­ம­ளிக்கும்.” என்றும், அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இந்தப் பய­ணத்தின்போது, அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் போல்­ட­னையும்  வெளி­வி­வ­கார அமைச்சர் சந்தித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 


வெளிநாட்டு அகதிகளை தங்கவைக்க பௌத்த குருமார் கடும் எதிர்ப்பு

22/05/2019 வவுனியாவில் பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு அகதிகளை தங்க வைப்பதற்கு பௌத்த குருமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மடுக்கந்தை விகாராதிபதி தலைமையில் நகரசபை மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஓன்று இன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த பௌத்த குருமார்,
இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள் விபரங்கள் அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியவில்லை. அப்படியென்றால் யார் இவர்களை இங்கு அழைத்து வந்தார்கள். ஐ.எஸ் மற்றும்  தெளபிக் ஜமாத் அமைப்பினர்கள் கூட இவர்களூடாக உள்நுழைந்திருக்க கூடும் என  சந்தேகமுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், இங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையில் புதிய பிரச்சினை இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடாது. அதனால் வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைக்க அனுமதிக்க முடியாது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பாராளுமன்ற ஆணையாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பிக்குமார் தெரிவித்தனர்.
இது தொடர்பில், வவுனியா அரச அதிபர், வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடமும் மனு ஓன்றினை கையளித்தனர்.
இக் கலந்துரையாடலில் பௌத்த குருமார், போதகர், இந்து மதகுரு, வவுனியா நகர சபை தலைவர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர், நகரசபை உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நீர்கொழும்பில் இருந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 35 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 


ரிஷாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகுவோம் - மஹ்ரூப்

22/05/2019 அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அவர் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவார். நாங்களும் அந்த தலைமையில் இருந்து விலகுவோம் என அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை தெரிவித்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றது. 
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கின்றது.அதனால் குறித்த குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று அவரது தலைமையின் கீழ் இருக்கும் நாங்களும் விலகுவோம்.
அத்துடன் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரும் தெரிவித்திருக்கின்றார். 
அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் கிறிஸ்தவ மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கிறிஸ்தவ உறுப்பினரும் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராகவோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ  விரல்நீட்டவில்லை. ஆனால் வேறு சில உறுப்பினர்கள் எமக்கு எதிராக குற்றம் சாட்டிவந்தனர்.
அத்துடன் முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளை சந்தித்திருக்கின்றது.அவ்வாறன எந்த காலத்திலும் நாங்கள் யார் மீதும் விரல் நீட்டவில்லை என்றார்.   நன்றி வீரகேசரி 

வெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் பதற்றம் ; இராணுவம் குவிப்பு

21/05/2019 வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை  காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
வவுனியாவில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் வெளிநாட்டு அகதிகள் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று பகல் 1 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மூன்று மதத்தலைவர்கள் மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிர்ந்த ஏனைய நான்கு பிரதேசசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் சிலரும் பொதுமக்கள் சிலருமாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது வெளிநாட்டு அகதிகளை வவுனியாவிலிருந்து அகற்றவேண்டும் என தீர்மானித்ததுடன் அவர்கள் இங்கு தங்கவைத்தமை தொடர்பிலும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டனர்.
அத்துடன் குறிப்பிட்ட தினத்திற்குள் அவர்களை வவுனியாவில் இருந்து வெளியேற்றாவிட்டால் எதிர்ப்பை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர். 
இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு மகஜர்களை கையளிப்பது எனவும் பூந்தோட்டத்தில் வெளிநாட்டு அகதிகளை தங்கவைத்துள்ள முகாமுக்கு செல்வது எனவும் தீர்மானித்து மகஜருடன் அரச அதிபர் பணிமனைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தால் மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்ததுடன் அகதிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினர் எனினும் மேலதிக அரசாங்க அதிபர் அகதிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் தொடர்பான எந்த வித விடயங்களும் தம்மிடம் இல்லை எனவும் பௌத்த மதகுருமார் அடங்கிய குழுவிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரதி பொலிஸ்மா அதிபரிடம் மகஜரை கையளிக்க சென்ற போதிலும் அவர் இல்லாத நிலையில் வேறு ஒருவரிடம் மகஜரை கையளித்த பின்னர் பூந்தோட்டம் முகாம் பகுதிக்கு சென்றனர். இதன்போது அதிகளவான இராணுவத்தினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்ததுடன் முகாமுக்கு செல்லும் பாதையும் பாரா ஊர்தியினால் வழிமறிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடும் மழைக்கு மத்தியில் குறித்த பகுதிக்கு சென்ற பௌத்த மதகுருமார் மற்றும் குழுவினர் முகாம் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது பொலிஸார் அவர்களை உள் செல்ல முடியாது என தெரிவித்ததுடன் அவர்களை அங்கேயே தடுத்து வைத்திருந்தனர்.
இதன்போது வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று குழுவினரை செல்ல முடியாது என தெரிவத்ததையடுத்து பௌத்த துறவிகள் அடங்கிய குழுவினர் தமது கோரிக்கைக்கு பதில் தராத பட்சத்தில் தம்மாலான நடவடிக்கையை ஓரிரு நாட்களில் எடுப்போம் என தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.  நன்றி வீரகேசரி 

இராஜினாமா செய்யத் தயார் - அமைச்சர் ரிஷாத்

22/05/2019 ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்  கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும்  எனது கட்­சியை சேர்ந்த இரண்டு  பிரதி அமைச்­சர்­களும் பத­வி­களை  இரா­ஜி­னாமா செய்­து­விட்டு பாரா­ளு­மன்­றத்தில்  பின்­வ­ரிசை ஆச­னத்தில் அமர்­வ­தற்கு  தயா­ராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். 
இதன்போது தன்­ மீ­தான  குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில்  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  விளக்­க­ம­ளித்­துள்ளார்.  தனக்கு எதி­ராக   எதி­ர­ணி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள   பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவர்  விளக்கி கூறி­யுள்ளார். 
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில்  கைது செய்­யப்­பட்ட   நபரை விடுக்­கு­மாறு   இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம்  தான் கோரி­ய­தாக  தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு மற்றும்  குண்­டுத்­தா­ரி­க­ளான  சகோ­த­ரர்­களின்  தந்­தை­யான  இப்­ராஹிம்  உட­னான  தொடர்பு குறித்த குற்­றச்­சாட்டு என்­பன குறித்தும் அமைச்சர்  விளக்­க­ம­ளித்­துள்ளார்.   தன்­மீ­தான  குற்­றச்­சாட்­டுக்கள்  அபாண்­ட­மா­னவை என்று  அவர்   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ; பத்திரத்தில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

22/05/2019 நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைவாக ஜனாதிபதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் சற்றுமுன்னர் கையெழுத்திட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 


மினுவாங்கொடை வன்முறை ; கைதான 78 பேரில் 32 பேருக்கு பிணை

22/05/2019 வடமேல் மாகாணம், மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைகள் மிகத் திட்டமிடப்பட்டு சந்தர்ப்ப வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை மினுவாங்கொடை வன்முறைகள் குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மேல் மாகாணத்தின் வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உறுதிசெய்துள்ளார்.
மினுவாங்கொடை வன்முறையின் ஆரம்பம் இளஞர் ஒருவரை மையப்படுத்திய தனிப்பட்ட விவகாரம் ஒன்றில் ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பின்னர் ஒரு ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து 10 நிமிடங்களிலேயே ஏனைய வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை மினுவனங்கொடை சம்பவங்கள் தொடர்பில் கைதான 78 பேரில் இன்று 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  சாதாரண சட்டத்தின் கீழ் மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த 32 பேரே இவ்வாரு விடுவிக்கப்பட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி 


வடக்கு ஆளுநரைச் சந்தித்த சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் 

23/05/2019 இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் தமயானியா சிகையிட்டமட்டி (Mr. Damiano Sguaitamatti)  வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano  மரியாதை நிமித்தம்  ஆளுநரைச் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 
அத்துடன் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.  நன்றி வீரகேசரி மோடிக்கு பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த வாழ்த்து

23/05/2019 இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், நரேந்திர மோடிக்கு  இலங்கை அரச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமா் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர்  வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
பிரதமா் ரணில் விக்ரமசிங்க புதிதாக அமையவுள்ள பா.ஜ.க. அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தொிவிப்பதாக டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா். 
இதே போன்று எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இந்நிய  மக்களவை தேர்தலில்  அமோக வெற்றிப் பெற்று  இரண்டாவது  முறையாகவும்   பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளமை  மகிழ்விற்குரியது.    தொடரும் ஆட்சியில்   வெற்றிகளே  கிடைக்க வேண்டும் என  எதிர்க்கட்சி  தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ  இந்நிய  பிரதமர் நரேந்திர மோடிக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை  தொடர்ந்து தனது அயல்  நாடான  இந்நியாவுடன்   இணக்கமாகவே செயற்படும்.   ஒன்றாக இணைந்து செயல்படுகின்ற வலுவான இருதரப்பு உறவுகளில்   இரு  நாடுகளும்  ன்றும்  இணைந்திருக்கும்    உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 

உறவு தொடரும் !...மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் மைத்திரி

23/05/2019 இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி  இடம்பெற்று வருகின்றது. இதில் பா.ஜ.க. 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்திய பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் தற்போது முன்னிலையில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி சிறிசேன வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான சுமூக உறவை மேலும் தொடர விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
நன்றி வீரகேசரி 
சட்ட விரோதமாக  அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

25/05/2019 சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 41 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  தெற்கு கடற்பரப்பிலிருந்து 715 கடல் மைல் தொலைவில் வைத்து 23 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 35 ஆண்களும், 6 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஏழு பேர் உள்ளடங்குகின்றனர். ஏனையவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடையவர்களாவர். 
இவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரதும் வைத்திய பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 
நாட்டில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புத் துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கினங்க சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதோ அல்லது உள்நாட்டுக்கு வருகை தருவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விடயம் தொடர்பில் கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது. 
வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறும் ஆட்கடத்தல்கார்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி பொது மக்கள் பணத்தை இழந்துவிடக் கூடாதென்றும், இது போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை அறிவுறுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 

பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடமாற்றம் 

25/05/2019 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக ஐந்து பொலிஸ்அத்தியட்சகர்களுக்கு  உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமையவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 
அதற்கமைய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யூ.பீ.ஏ.டி.கே.பீ. கருணாநாயக்க  நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மறுப்புறம்  எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜீ.ஏ.ஓ.டி. தல்துவ யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக  நியமிக்கப்பட்டுள்ளனர். 
அத்துடன், மன்னார் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எச்.எஸ்.ஏ.பீரிஸ் எல்பிட்டிய  பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
மேலும்,  பொலிஸ் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளரான பொலிஸ் அத்தியட்சர் பி.டி.ரி.பீ. ஏ.வீரசிங்க  மன்னார் பொலிஸ்பிரிவுக்கு பொறுப்பாகவும், நுகேகொட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ்  அத்தியட்சகர் எச்.பீ.ரணசிங்க பொலிஸ் மனிதவள முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளராகவும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.     நன்றி வீரகேசரி  “ 8 மாகாணங்கள் மறுத்த அகதிகளே வவுனியாவிற்கு அனுப்பிவைப்பு : ஆராயாது தமிழ்த்தரப்பு ஆதரவளிப்பதேன் ?''

26/05/2019 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை தமது மாகாணத்தில் தங்கவைப்பதற்கு எட்டு மாகாணங்களின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே மறுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறிருக்க எந்தவிதமான பின்னணியையும், ஆராயாது கண்மூடித்தனமாக வவுனியாவில் தங்கவைப்பதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் தலையசைத்து ஆதரவளிப்பது ஏன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வவுனியா பூந்தோட்டத்தில் வடமாகாண கூட்டுறவுத்துறைக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இது கடந்த காலத்தில் புனர்வாழ்வு முகமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு ஒருவரே புனர்வாழ்வு பெற்றுவருகின்றார். வடக்கில் வீழ்ச்சியடைந்துவரும் கூட்டுறவுத்துறையை மறுசீரமைப்புச்செய்வது குறித்த முயற்சிகளின்போது இந்த கட்டடத்தொகுதியையும் மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் பலவகையிலும் முன்னெடுக்கப்பட்ட போதும் இதுவரையில் சாத்தியமாகி இருக்கவில்லை.
இந்ந நிலையில் நீர்கொழும்பு பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பார்மா, சிரியா உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த 1670அகதிகளை அங்கிருந்து வேறு மாகாணங்களுக்கு மாற்றுவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும், எட்டு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், இதனை எதிர்த்து பிரதமர் உள்ளிட்டவர்களிடம் அழுத்தங்களை பிரயோகத்திருந்தனர்.
அதன்பின்னர் குறித்த அகதிகளை வவுனியாவுக்கு அனுப்புவதென்றும், ஒருதொகுதியினரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 35பேர் பூந்தோட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு சொற்ப நாட்களிலேயே பௌத்ததேர்களின் ஆhப்பாட்டத்தால் பதற்றமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
போர் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்னமும் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்ற நிலைமைகளே உள்ளன. வலிவடக்கில் அகதிமுகாம்கள் இன்னமும் காணப்படுகின்றன. சோந்த நிலங்களுக்குச் செல்ல முடியாது மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். துமிழகத்தில் ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தாயகம் திரும்பமுடியாது தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி சிந்திக்காது, பிற நாடுகளின் அகதிகளை வடக்கில் உள்வாங்க முயல்வதென்பது எந்தவகையில் நியாயமாகும். அதேநேரம், எட்டுமாகாணங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இவர்களை ஏற்க மறுத்திருக்கும் பின்னணி பற்றி ஆராயாது வவுனியாவில் இவர்களை தங்கவைப்பதற்கு அனுமதித்து தமிழ்பிரதிநிதித்துவங்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
தமிழர்கள் வந்தவர்களை வரவேற்கும் பாரம்பரிய பண்பு நிறைந்தவர்கள். ஆனால் அவர்களின் அன்றாட வாழ்வே அவலங்கள் நிறைந்ததாகவும் அச்சுறுத்தல் நிறைந்ததாகவும் நகர்ந்து செல்கின்ற நிலையில் புதிதாக அகதிகளை உள்ளீர்த்துக் கொள்வதானது பொருத்தமற்ற செயற்பாடாகும்.
மேலும் இந்த அகதிகள் எவ்வளவு காலத்திற்கு இருக்கப்போகின்றார்கள். இவர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எவ்விதமான விளக்கங்களும் இன்றி எழுந்தமானமாக முகாமில் தங்கவைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. வுவனியாவில் பெரும்பான்மையின் நிகழ்ச்சி நிரலில் எல்லைக்கிராமங்கள் பறிபோகும் நிலைமைகள் தொடர்ந்த வண்ணமிருக்கையில் இவ்வாறு அகதிகள் என்ற பெயரில் மக்கள் தொகுதியினரை அமர்த்துவது மேலும் பிரச்சினைகளை கூர்ப்படைச்செய்யவே வழிசமைக்கும்.
தற்போது பிராந்திய பாதுகாப்பு குறித்த கரிசனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தகைய அகதிமுகாம்களை போரின் உக்கிரத்தினை சந்தித்துள்ள பகுதியில் அமைப்பதானது தொடர்ந்தும் அப்பகுதியை பதற்றத்துக்குள் வைத்துக்கொள்வதை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.  நன்றி வீரகேசரி 

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன்”

26/05/2019 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதா இல்லையா என்பதை தற்போது கூறமுடியாத போதும் நாட்டுக்காக களமிறங்குவதற்கு தயாராக உள்ளேன் என்று முதல்தர வர்த்தகரான தம்பிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பினை அடுத்து ஜனாதிபதி அல்லது பிரதமர் வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டுக்காக எட்டு வருடங்கள் சேவையாற்றிருந்தேன். தற்போதும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கு தயாராகவே உள்ளேன். இன, மத, மொழி, கட்சி பேதமின்றி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கை உள்ளேன். 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே உள்ளேன். பொதுவேட்பளராக களமிறங்குவதா இல்லையா என்பது குறித்து தற்போது எனக்கு கூறமுடியாது.
எமது நாட்டினை வளமான எதிர்காலம் நோக்கி வலுவானதாக மாற்றியமைப்பதே எனது இலக்காக இருக்கின்றது. அதற்கான திட்டங்களும் என்னிடத்தில் உள்ளன. விசேடமாக, கல்வி, சுகாதாரம், தொழிவாய்ப்பு, வர்த்தகம், நிதி முகாமைத்துவம், முதலீடுகள், சுற்றுலா உள்ளிட்டவற்றை விரைவாக முன்னேற்றம் காணச்செய்வதற்குரிய சகல திட்டங்களையும் ஒருங்கே கொண்டிருக்கின்றேன்.
தற்போது நாட்டில் முப்பது அமைச்சுக்கள் காணப்படுகின்றன. இவற்றினை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது. அதற்குரிய கொள்கையமைப்புடன் கூடிய செயற்பாட்டு கட்டமைப்புக்களும் என்னிடமுள்ளன.
அமைச்சுக்கள் மறுசீரமைப்பு குறித்த செயற்பாட்டு விடயங்கள் குறித்து யாராவது என்னிடத்தில் பகிரங்க வெளியில் வினாக்களை தொடுப்பதற்கு விரும்பினால் அவற்றுக்கு பதிலளிப்பதற்கு நான் எந்தநொடியிலும் தயாராகவே உள்ளேன்.
இந்த நாடு பன்மைத்துவத்தினைக் கொண்டதாகும். வடக்கு, கிழக்கு, மலையகம், உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் வெவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அமைச்சின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் வடமாகாண புகையிரத சேவைக் கட்டமைப்பினை காங்கேசன்துறைவரையில் கொண்டு செல்லும் திட்டத்தில் வடமாகாணத்திற்குச் சென்று அந்த மக்களுடன் நெருங்கிப்பழகிய அனுபவங்கள் நிறைவே உள்ளன. அவர்களுக்கு விசேட தேவைப்பாடுகள் இருக்கின்றன. என்பதை நான் நன்கறிந்து கொண்டுள்ளேன். இவற்றையெல்லாம் முறையான செயற்பாடுகள் ஊடாக கையாளுகின்ற போது தீர்வுகளை பெறுவதொன்றும் கடினமான விடயமல்ல. ஆகவே அனைத்து பிரஜைகளினதும் தேவைப்பாடுகள் பற்றி செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளே அவசியமாகின்றன என்பதையும் நான் நன்கு அறிந்துள்ளேன். ஆகவே அந்த மக்களுக்காக, நாட்டுக்காக செயற்படுவதொன்றும் இயலாத காரியமாக நான் கருதவில்லை என்றார்.  நன்றி வீரகேசரி அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் மீள்குடியேறிய மக்கள் 

26/05/2019 கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம்  மீள்குடியேறினர்.
கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
தமது சொந்த நிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து 26 வருடங்களின் பின்னர்  மீள்குடியேறிய தமக்கு இதுவரை தற்காலிக வீடுகளையோ அல்லது மலசலகூட வசதிகளையோ ஏற்படுத்தித்தரவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே தமக்கு தற்காலிக வீடுகளையேனும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு மேற்படி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 

வரட்சியால் வாடும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்

26/05/2019 கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக  பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வரட்சி  காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதேவேளை இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனர்த்த முகாமைத்துவப் பிரிவினுடைய தகவல்களின் படி  கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச் சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வரட்சியினால்  பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்களைச் சேர்ந்த 6296 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச் சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு நிலவும் வரட்சியின் காரணமாக முல்லைத்தீவில் 12766 குடும்பங்களைச் சேரந்த 40093 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி No comments: