பயணியின் பார்வையில் -- அங்கம் --08 - முருகபூபதி




எங்கள் தாயகம் இனம், மொழி, மதம், நிலம் சார்ந்த நெருக்கடிக்குள் -

" நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா "   என வாதிக்கும்
                       " நாம் கருப்பர்"  நூலின் வரவு!


                                                                                                                     
" எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம் !
எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும், பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்"

                                                                                                     -- சித்தார்த்தன்

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்தாண்டுகள் நிறைவடைந்த மாதத்தில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு மாதம் நிறைவுபெற்ற மாதத்தில்  பிரார்த்தனைகள் தொடருகின்றன. இந்தப்பின்னணியில், இந்தக்காலப்பகுதியில் தொடரும் பயணியின் பார்வையில் - லண்டனில் பெற்றுக்கொண்ட               " நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆபிரிக்கா "   என வாதிக்கும்  " நாம் கருப்பர்" என்ற  நூலைப்பற்றி சில வார்த்தைகள்.

" தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. " உலகிலேயே முன் தோன்றிய மூத்தகுடி"  என்று இனப்பெருமை பேசுவதற்காக, பண்டைய இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம்."
இவ்வாறு தொடங்குகிறது, லண்டனில் வதியும் எழுத்தாளரும் ஆய்வாளருமான கலையரசன் எழுதியிருக்கும் " நாம் கருப்பர் நமது மொழி தமிழ் - நம் தாயகம் ஆப்பிரிக்கா " என்ற நூல்.
லண்டனிலிருந்து எதுவரை இணைய இதழை நடத்தும் இலக்கிய நண்பர் எம்.பௌசர் இலங்கையில் முன்னர் மூன்றாவது மனிதன் என்ற சிற்றிதழையும் நடத்தியவர். லண்டன் - ஈஸ்ட்ஹாமில் Trinity Centre இல் ஒரு மாலைப்பொழுதில் கலையரசனின் நூலை அறிமுகப்படுத்துவதற்காகவும் என்னுடனான சந்திப்பிற்காகவும் நிகழ்ச்சி ஒழுங்குசெய்திருந்தார்.
இவரை இலங்கையில் சந்தித்திருக்காதுவிட்டாலும்,  லண்டனுக்கு இவர் வருகை தந்த பின்னர் நண்பர் கருணாகரனின் ஏற்பாட்டில் எதுவரை இணைய இதழிலும் எழுதத்தொடங்கியிருந்தேன். எனது லண்டன் வருகையில் நான் சந்திக்கவிரும்பிய பலரும் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்பதை பௌசர் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசியல் மற்றும் கலை, இலக்கியச்சூழல் முதலானவற்றை முன்னர் அச்சுப்பிரதியாக வெளியான எதுவரையில் வெளியிட்டுவந்த பௌசர், அதனை இணைய இதழாகத் தொடங்கியதும் பலருக்கும் களம் வழங்கி, இலக்கியம், சமூகம், அரசியல், பண்பாடு முதலான  தளங்களிலமைந்த ஆக்க இலக்கியப் படைப்புக்களை பதிவுசெய்துவருபவர்..
 அன்றைய தினம் இரண்டு அமர்வுகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முதல் அமர்வில் கலையரசனின் நூல் வெளியிடப்பட்டது. 'தேசம்' ஜெயபாலன், வேலன் மற்றும் முரளி சண்முகவேலன் ஆகியோர் உரையாற்றினர்.
கலையரசனின் நூல் பல விவாதங்களுக்கு கதவு திறந்திருக்கிறது. அவரது நூலின் தொடக்கத்தில் பதிவாகியிருக்கும் தகவல்களை பாருங்கள்:
" அமெரிக்காவின் மாயன்களின் வரலாறு முதல், அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் வரை சகோதர உறவு முறை கொண்டாடுகின்றோம். அதே நேரம், ஆங்கிலம், கிரேக்கம், இத்தாலி மொழிகளுக்குள் எத்தனை தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்கிறோம். அதாவது, நாகரீகத்தால் உயர்ந்த ஐரோப்பியர்களின் மூதாதையரும் தமிழர்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த ஆய்வாளர்கள் எல்லோரும், ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை மறந்து விட்டு, அல்லது மறைத்துக் கொண்டு பேசுகின்றனர்.
உலகிலேயே முதலாவது மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான். உலகில் உள்ள மனித இனங்கள் எல்லாம், ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து சென்றவைதான். தம்மை தனித்துவமாக இனங்களாக கருதிக் கொண்டிருந்த ஐரோப்பியரும், சீனர்களும் ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகளும், மரபணு ஆராய்ச்சிகளும் அந்த முடிவுக்கே வருகின்றன. மனித இனத்தின் மூலத்தை ஆராயும் விஞ்ஞானம், ஆப்பிரிக்காவை சுற்றிக் கொண்டிருக்கையில், தமிழர்கள் கடலில் அமிழ்ந்த குமரி கண்டத்தினுள் தமது மூலத்தை தேடிக் கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது.

ஐரோப்பியரின் பூர்வீகம் (இன்று ரஷ்யாவுக்கு சொந்தமான) கொகேசியன் மலைகளில் இருந்து தொடங்கியதாக, காலம் காலமாக கற்பிக்கப் பட்டு வந்துள்ளது. அதனால் இன்றைக்கும் வெள்ளை இனம் என்பதை கொக்கேசியன் என்று குறிப்பிடுகின்றனர். சீனர்கள், தமது பூர்வீகத்தை வட சீனாவில் இருந்து ஆரம்பிக்கின்றனர். அதே போன்று, தமிழர்களும் தமது பூர்வீகத்தை குமரி கண்டத்தில் இருந்து தொடங்குகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளின் ஒரே நோக்கம், தமது இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவது. துரதிர்ஷ்டவசமாக, அது அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்குடைய இனவாதிகளுக்கு உதவி வருகின்றது.
உலகில் எது முதலில் தோன்றியது? இனமா, அல்லது மொழியா? உதாரணத்திற்கு ஆங்கிலேயர்களை எடுப்போம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்து குடியேறிய ஜெர்மன் இன மக்களும், பிரித்தானியாவில் வாழ்ந்த கெல்டிக் இன மக்களும் கலந்த இனம் தான் ஆங்கிலேய இனம். அவர்கள் இன்று ஜெர்மன் மொழியும் பேசவில்லை, ஐரிஷ் போன்ற கெல்டிக் மொழியும் பேசவில்லை. ஜெர்மன், பிரெஞ்சு, நார்வீஜியன் மொழிகள் கலந்து ஆங்கிலம் என்ற புது மொழி உருவாகியது. தமிழர்களும் அதே போன்றதொரு அடையாளச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இன்று தமிழ் பேசும் மக்கள், பல இனக்கலப்புகளால் உருவானவர்கள். தமிழை ஒத்த திராவிட மொழிகளைப் பேசும் மக்கள், சம்ஸ்கிருத கலப்பினால் புதிய மொழிகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி மூவாயிரம் ஆண்டு பழமையான மொழி என்பதை மறுக்க முடியாது. இதனால், மொழியியல் வல்லுனர்கள், திராவிட மொழிகளின் வேர்களை அறிவதற்காக தமிழ் மொழியை ஆழ்ந்து கற்கின்றனர். நாம் பேசும் நவீன தமிழ், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டது. பழந் தமிழில் இருந்து வேறுபட்டுள்ளது. ஆனாலும், பிற திராவிட மொழிகளைப் போலல்லாது, சம்ஸ்கிருத கலப்பை கூடுமான அளவு தவிர்த்து வந்துள்ளது. தமிழர்களை ஒரு தனி இனமாக வரையறை செய்வதற்கு, அது மட்டும் போதாது. இடப்பெயர்வுகளுக்காளாகும் மக்கள், தாம் தங்கி விடும் இடத்தில் பேசப்படும் மொழியை, சொந்தமாக்கிக் கொள்வது வழக்கம். ஆகவே, தமிழர்கள் என்பதை, ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் என்ற இனம் எங்கே இருக்கிறது? அது பெரும்பாலும் சாதி என்ற பெயரில் மறைந்திருக்கிறது. அகமண உறவுகளின் மூலம், இரத்த சம்பந்தம் பாதுகாக்கப்படுவதால், அந்த சாதி அல்லது இனம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று, நிறமூர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முடிகின்றது. அவ்வாறு தான், அண்மையில் தமிழக மலைப்பகுதியில் வாழும் பழங்குடி இனத்தின் மரபணு, இந்திய உபகண்டத்திலேயே பழமையானது என்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கேள்விப்பட்ட உடனேயே, பழங்குடி இனங்களை ஒதுக்கி வைத்திருக்கும், நகர்ப்புறத்தை சேர்ந்த 'நாகரீகமடைந்த' தமிழர்கள், தமது தமிழினவாத பிழைப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர்."

இந்த நூலை கலையரசனிடமிருந்து பெற்று பக்கங்களை புரட்டினேன்.
ஒவ்வொரு அத்தியாயத்தினதும் தலைப்புகள் புருவத்தை மேலுயர்த்தின.

உதாரணத்திற்கு சில:

பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்:  கண்ணகி அம்மன்.
சோமாலியர்கள்:  தமிழர்களின் மூதாதையர்கள்.
தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்க கடவுள்.
கோயிலில் பாலியல் தொழில்.
ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்.
ஆடியில் உயர்த்தெழுந்த  திராவிடர்களின் " கருப்பு இயேசு"
சிரியாவில் தமிழுக்கு " தம்முழ் " என்றும் பெயர்.
சிவபெருமான்:  ஈராக்கை ஆண்ட கருப்பின அரசன்
அரபு நாட்டவருக்கும் இறைவனான சிவனே போற்றி.

இந்த நூலை தமிழ்நாடு கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பயணியின் பார்வையில் தொடரின் அங்கம் 08 எழுதிக்கொண்டிருந்த தருணத்தில், யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன் அய்யா தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர்களின் தொன்மை பற்றிய கருத்துக்களும் -  தென்மராட்சி வரணியில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஒரு சமூகத்தினர் வழிபடுவதற்கு  எதிராக மற்றும் ஒரு மேல்தட்டு( ?) சமூகம் தடைவிதித்த செய்தியும் எனது கவனத்திற்குள்ளாகின்றது.

மதுரையை எரித்த கண்ணகிக்கும்  எகிப்திற்கும் என்ன தொடர்பு? ஆறுமுகநாவலர்,  கண்ணகியை  வடக்கிலிருந்து அப்புறப்படுத்த பெரும்பாடு பட்டவர். ஆனால், கண்ணகியோ செல்லும் இடங்களில் ஏதோ ஒருவகையில் சர்ச்சைக்குரியவளாகிவிட்டாள்.

முன்னர் புங்குடுதீவில் அமைந்த கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடிநிலை மக்கள் அங்கிருந்த  குடிநீர் கிணற்றில் தண்ணீர் பெறுவதற்கு தடுத்தனர் மேல்சாதியினர். அதற்கு எதிராக உண்ணாவிரதப்பேராட்டம் நடத்தியவர் எழுத்தாளர் மு. தளையசிங்கம்.

இன்றும் கடந்த ஆண்டும் தென்மராட்சி வரணி கண்ணகி அம்மன் கோயிலில் சாதிப்பிரச்சினையால் நெருக்கடி தோன்றியிருக்கிறது.

லண்டனில் கலையரசனிடமிருந்து பெற்றுக்கொண்ட  நூல் இலங்கையிலும் பரவலாக கிடைக்கவேண்டும். முக்கியமாக நீதியரசர் விக்னேஸ்வரன் கைகளுக்கு கிடைக்கவேண்டும்.

இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும்  எனது எழுத்தும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் நான் உரையாற்றிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழக - ஈழத்து இலக்கிய உறவுக்கு சங்கடங்களைத் தரும் உரைகள், நேர்காணல்கள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பிற்கு  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், நூலகர் செல்வராஜா, பத்மநாப அய்யர், ரத்ன சபாபதி அய்யர், சத்திய சீலன், நவஜோதி, ' அகாலம்' எழுதிய புஷ்பராணியின் தங்கை ஜீவரட்ண ராணி, சட்டத்தரணி சச்சிதானந்தன், மு. நித்தியானந்தன், ஶ்ரீகெங்காதரன் , வவுனியூர் இரா. உதயணன்,  எழுத்தாளர் தாமரைச்செல்வியின் தங்கை விமல்பரம் , தம்பி சுப்ரம் சுரேஷ் ஆகியோருட்பட பலர் வந்திருந்தனர். விமல்பரம் சமகாலத்தில் எழுதிவருபவர். அண்மையில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய அனைத்துலக சிறுகதைப்போட்டியிலும் பரிசுபெற்றவர்.

இவர்களில் ஶ்ரீகெங்காதரன் மின்னஞ்சல் ஊடாக விடுத்திருந்த வேண்டுகோளைத்தான் தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிறைவேற்றமுடியாது போய்விட்டது.
இவர்தான் பௌசரிடம் சொல்லி இந்தச்சந்திப்புக்கு  வித்தூண்றியவர். லண்டனில் முன்னர் வெளியான தமிழ் ரைம்ஸ் ஆசிரியர் ராஜநாயகம் அவர்கள் சுகவீனமுற்றிருப்பதாகவும், என்னை அவர் பார்க்க விரும்புவதாகவும் ஶ்ரீகெங்காதரன் தெரிவித்திருந்தார்.

கொழும்பில்  சோவியத் தூதுவராலய தகவல் பிரிவில் பணியாற்றிய எழுத்தாளர் பெரி. சண்முகநாதனின்  அண்ணர்தான் ராஜநாயகம்   என்பதும் ஶ்ரீகெங்காதரன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
லண்டனில் நின்ற சொற்ப நாட்களில் நான் பார்க்க விரும்பிய இடங்களையும் தரிசிக்காமல், சந்திக்க விரும்பிய அன்பர்களையும்  பார்க்கமுடியாமல் திரும்பிய ஏமாற்றம்  மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

லண்டனில் சந்தித்த நூலகர் செல்வராஜா, பத்மநாப அய்யர், ரத்தின சபாபதி அய்யர், நவஜோதி, மு. நித்தியானந்தன் பற்றியெல்லாம் முன்னர் எழுதியிருக்கின்றேன்.   

நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,  அதாவது 1972 இற்குப்பின்னர் ஒருவரை இங்கு சந்தித்தேன். அவர்தான் சத்தியசீலன். இவரும் மாவை சேனாதிராஜா, முத்துக்குமாரசாமி, மகேந்திரன்  உட்பட சில தமிழ் இளைஞர்கள் நீர்கொழும்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது சென்று பார்த்திருக்கின்றேன்.

அக்காலப்பகுதியில் சத்தியசீலன் அங்கு தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து கவலைக்கிடமான சூழலில் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். இச்செய்தி பத்திரிகையில் வெளியாகி பரபரப்பானது பற்றி சத்தியசீலன் அன்று நினைவுபடுத்தினார். 

ஈழக்கனவுகளை சுமந்தவண்ணம் போராட்டக்களத்தில் இறங்கிய பலரதும் வாழ்க்கை,  உள்நாட்டிலும் புகலிடத்திலும் திசைமாறிவிட்டது!  அதேசமயம், அவர்களில் சிலர் நாடாளுமன்ற பாதைக்குள் சென்று ஜனநாயகவாதிகளாகிவிட்டதையும் பார்க்கின்றோம்.

ரத்னசபாபதி அய்யர்,  1972 இல் எனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் மல்லிகையில் வெளியானதையடுத்து, தனது மதிப்பீட்டை அடுத்து வந்த மல்லிகை இதழில் எழுதி,  என்னை ஊக்கப்படுத்தியவர். எனது முகம் தெரியாமலேயே என்னைப்பற்றி எழுதியவர். அதன்பின்னரே அவரது நட்பு எனக்கு கிட்டியது. இற்றைவரையில் எந்த விக்கினமும் இன்றி உறவாடுகின்றோம். அவரது மகள் பானுவின் கணவர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர், மெல்பன் டீக்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். இவர்கள் இருவரும் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.  நடப்பாண்டில்  எமது சங்கத்தின் செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர். இவ்வாறு எமது இலக்கிய உறவு தாயகம் கடந்தும் தொடருகின்றது.

நண்பர் ரத்னசபாபதி போன்று, இக்காலத்தில் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளை அவ்வாறு ஊக்கப்படுத்துபவர்களை காண்பது அரிதாகிவிட்டது.

பத்மநாப அய்யர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்குமிடையே பாலமாக விளங்கிவருபவர். தனக்கு கிடைக்கும் சிற்றிதழ்கள், நூல்கள், சிறப்பு மலர்களை மற்றவர்களுக்கு படிக்கத்தருபவர்.   அன்றைய சந்திப்பிலும் எனக்குப்படிப்பதற்கு பலவற்றை தந்தார்.

அவற்றுள்  சிற்றேடு என்னும் இதழொன்றின் ஆசிரியத்தலையங்கத்தின் சில வரிகளை  காலத்தின் தேவையறிந்து இங்கு பதிவிடுகின்றேன்.

" தமிழ்த்துறைகளில் புதிய தமிழ்ப்பேராசிரியர்கள் வந்துள்ளனர். அவர்களை நட்புப்பாராட்டியும் விமர்சித்தும் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டுகோள் விடுக்கிறோம். முதலில் தமிழ்த்துறைகளில் ஆய்வு வழிகாட்டிகள் நடந்துகொள்ளும் எஜமானன் - அடிமை முறையைச் சிதைக்கவேண்டும். சனநாயமுறை தமிழ்த்துறைகளில் வரவேண்டும். அதன்பின்பு எதையும் படிக்காத பேராசிரியர்களையும் பழைய மனோபாவத்தை உடும்புப்பிடியாக வைத்திருக்கும் துறைகளையும் அன்போடு விண்ணப்பித்து மாற்றவேண்டும்.

மாணவர்கள் புதிய உணர்வுகளைக் கவிதையாக - கதையாக - நாடகமாக எழுதவேண்டும். புதிய பாடத்திட்டத்தில் Creative Literature உருவாக்கத்துக்கு ஒரு Semester  ஒதுக்கவேண்டும். நாவல் போன்றன எழுதுவது எப்படி என்று கற்பிக்கவேண்டும். மேல்நாடுகளில் கற்பிக்கிறார்கள். புதிய இலக்கியத்தின் வழி பழைய இலக்கியத்தை கற்பிக்கும் முறையியலை உருவாக்கவேண்டும். அவ்வப்போது சிறு பத்திரிகை எழுத்தாளர்களை அழைத்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்து உரையாட வைக்கவேண்டும்.
பழைய மனோபாவமும் அதிகாரத்துவமும் இணைந்துபோகின்றன. நுட்பமாக புரிந்துகொள்ளுங்கள். பெண் பேராசிரியர்கள் பெண்ணிய நோக்கில் தொல்- சங்க இலக்கியம், சிலப்பதிகாரத்தை கற்பிக்கும் சூழலை மாணவிகள் போராடி உருவாக்கவேண்டும்."

இக்கருத்துக்களை இலங்கை பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைக்கும் சமர்ப்பிக்கின்றேன்.  பெங்களுரிலிருந்து வெளியாகும் சிற்றேடு இதழின் மின்னஞ்சல்: tamil4545@gmail.com

இச்சந்திப்பில் கலந்துகொண்ட வவுனியூர் இரா.  உதயணன் தமது அமைப்பின் சார்பில் இந்த ஆண்டுக்கான இலக்கிய விருதை,  எனது கையால் நவஜோதி யோகரட்ணத்திற்கு வழங்குவதற்கு விரும்பினார். அந்த நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன்,  ரஸஞானி ஆவணப்படத்தின் சில காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.

லண்டன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, தமிழகத்திற்கு புறப்பட்டேன்.

(தொடரும்)























-->

No comments: