தமிழர் என்றோர் இனமுண்டு - ஒத்தோடா அரசியல்


“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு”

என்று எந்தச் சூழலில் நாமக்கல் வே.இராமலிங்கம் பிள்ளை பாடிவைத்தாரோ தெரியவில்லை ஆனால் அது காலாகாலத்துக்கும் ஒட்டுமொத்தத் தமிழினத்துக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்து விட்டது. அதை மீளவும் நிறுவி விட்டது நேற்றைய இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்.

சொல்லப் போனால் இந்த மாதிரியானதொரு போக்கு தாய்த் தமிழகத்திலும், தமிழீழத்திலும் காலாகாலமாக ஊற்றி வளர்க்கப்பட்டதால் தான் இலங்கையில் கூட ஒவ்வொரு தேர்தலிலும் கோடு கிழித்தால் போல கோட்டுக்கு அந்தப் பக்கம் தமிழர் தரப்பு தேர்தல் முடிவுகள் நின்று கொண்டிருக்கும்.

மானமும் அறிவும் தமிழருக்கு அழகு என்ற பெரியாரிய சிந்தனைகள் புரையோடிப் போன சமூகத்தில் இந்த முறை ஒப்பீட்டளவில் இளம் வாக்காளர்கள் அதிகம் கலந்து கொண்ட தேர்தலில் இந்தத் தொடர்ச்சி நிலை வியப்புக்குரியது. இதே தான் விடுதலைப்புலிகள் இல்லாத பத்தாண்டு கடந்த சமூகத்தில் என்னதான் விமர்சனம் இருப்பினும் தமிழ்த் தேசியம் என்று வரும் போது எல்லோரும் ஒரே குடையின் கீழ் அணி திரளும் போக்கு. இதற்கு முந்திய உதாரணமாக 1995 இல் யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆட்சியதிகாரம் கழன்ற பின்னர் கூட தொடர்ச்சியான ஆதரவும் போக்கு அடுத்த தலைமுறையிடம் கடத்தப்பட்டதைக் குறிப்பிட முடியும்.

ஆனால் இந்த ஒத்தோடா அரசியலின் விளைவுகள் என்ன? 
இந்தியாவின் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனித்துவம் தமிழகத்துக்கு. ஈழப் பிரச்சனையைத் தன் பிரச்சனையாக மடியில் போட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடின்றி ஈழத்தை ஆதரித்தார்கள். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னரும் முன்னரும் கூட தமிழகத்தின் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தமது கட்சிக் கோட்பாடுகளுக்கு விதிவிலக்காக ஈழத்துக்கான உடல், உள ஆதரவைக் கொடுத்ததை அறிவேன். திமுக மீது இன்று முன் வைக்கப்படும் அத்தனை விமர்சனங்களையும் கரைத்து விடக் கூடியது கலைஞர் ஒரு தனிப் பெரும் சக்தியாக நின்று ஈழத்தில் அமைதிப்படை நடத்திய அகோரங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர்களை வரவேற்காது மிடுக்காக நின்றது. 

2009 இல் நடந்த கூட்டழிப்பில் இந்தியாவின் தார்மிக ஆதரவு இலங்கைக்குக் கிடைத்த சூழலில் தமிழகத்தின் எந்தத் தலைமையுமே அதைத் தடுக்கக் கூடிய காலம் அப்போது கடந்து விட்டது. 
இது குறித்து இரண்டு பக்க தர்க்க நியாயங்களையும் பேசலாம். ஆனால் அப்போது கலைஞர் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதைத் தமிழக அரசியலை ஆழமாக நோக்குவோருக்குத் தெரியும்.
தமிழகம் பேரம் பேசும் சக்தியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தது அப்போது தான். காரணம் மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமக்குக் காலா காலமாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகம் மீது மத்தியில் யார் வந்தாலும் ஒரு கண் இருந்தது.
கண் என்பதை விட கடுப்பு இருந்தது என்பது சாலப் பொருந்தும். தமிழகத்தை அதன் பேரம் பேசும் பாங்கிலிருந்து ஓரம் கட்டுவது என்பதே அந்த சித்தாந்தம். இவன் யாரடா எங்க வெளியுறவுக் கொள்கையில் தலையிடுவது என்ற சினத்தின் வெளிப்பாடு அது. இன்றைக்கு ஜெயலலிதா மறைவுக்குப் பின் பா.ஜ.க வின் நிழல் அரசாங்கம் தமிழகத்தை ஆட்கொண்டதும் அதன் நீட்சியே. 

இது ஒருபுறமிருக்க வளைக்கவே முடியாத தமிழகத்தை விட்டு பிற மாநிலங்களில் தம்மை நிலை நிறுத்துவது என்பது தேசியக் கட்சிகளில் பா.ஜ.கவுக்கு ஒரு தெளிவான அரசியல் பாதையாகப் பட்டது. அதன் அறுவடை தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவும். இனிமேல் தமிழகம் தன் காதுக்குள் வந்து குடைச்சல் போட்டாலும் கண்டுக்கவே தேவை இல்லை. மரியாதையாக நாம் போட்டதை வாங்கிக் கொண்டு போய் விட வேண்டியது தான் என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

இதே மாதிரியானதொரு நிலை தான் இலங்கையிலும். தமிழர் தரப்பு ஆதரவு இல்லாமல் எனது சிங்கள மக்களின் பேராதரவோடு நான் ஜனாதிபதியாக வருவேன் என்று அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் மகிந்தவின் சகோதரர் கோத்தபாய சூளுரைத்திருப்பதும் இதன் பாங்கே. அவர் மட்டுமல்ல இலங்கையின் எல்லாத் தேசியக் கட்சிகளுக்கும் உள்ளே கருவுற்றிருப்பது இதே தான். 

இலங்கையில் தமிழர் தரப்பு தன் பேரம் பேசும் சக்தியை முற்றாக இழந்து விட்டது. 2009 ஆம் ஆண்டோடு அது முடித்து வைக்கப்பட்டது. எப்படியும் எங்களோடு தானே வந்து ஒட்ட வேண்டும் என்று இன்றைய தேசியக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வளையம் போட்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலம் கடந்து ஒத்தோடும் அரசியலில் முண்டு கொடுக்கிறது. ஆனால் அது தன்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்ச் சமூகத்தைக் கவனியாது தனது பங்காளிக் கட்சியைப் பார்த்தால் போதுமென்ற நிலை.
ஒரு ‪உறுதியான போராட்ட அமைப்பை உருவாக்க முடிந்த எம் சமூகத்தில் நிலையற்ற, வலுவிழந்த அரசியல்வாதிகளையே பெற முடிந்திருக்கிறது என்பது பெரும் சாபம்.‬

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று டக்ளஸ் தேவானந்தா கொண்ட கொள்கை கூட அவர் மீதான தனிப்பட்ட அரசியல் விமர்சனம் கடந்து ஆழமாகப் பார்க்க வேண்டியதொன்று.
ஒத்தோடும் அரசியலில் இலங்கையில் மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்திய தொண்டமானும், அவருக்குப் பின்னால் வந்தவர்களும் செய்யாத காரியத்தை இதே ஒத்தோடும் அரசியலில் மிக நிதானமாக முஸ்லீம் அரசியல் தலைமைகள் காய் நகர்த்தி விட்டன். இன்றைக்கு தமிழர் பிரதேசங்களில் இருந்து எத்தனை பேர் நிர்வாக சேவைகளிலும், அரச மட்ட உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள் என்ற ஒப்பீடும், அபிவிருத்தி என்று வரும் போது வடக்கையும், கிழக்கையும் ஓப்பிட்டுப் பார்க்கும் போது புரியும். நம்மவரோ பல்கலைக் கழகத்தைப் பூட்டி விட்டுப் போராட்டம் நடத்தி 25 வயசில் பட்டம் பெற்று 20 வயசுக்காரனோடு நேர்முகத் தேர்வில் நிற்க வேண்டும். 

எதிர்காலத்தில் கம்போடியா, பர்மா போன்று இந்து ஆலயங்களில் எதிர்ப்புகள் இன்றி புத்தர் முளைப்பார். தமிழினம் தம் ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிக்கும் ஒரு அரசியல் சக்தி அல்ல என்பது மெல்ல வலுவிழக்கும்.

ஆனால் முன் சொன்னது போலத் தான் தமிழரும் அவர் குணமும் அழியப் போவதில்லை. ஆனால் நாம் தேயப் போகிறோம் என்பதே உண்மை. 

பிற்குறிப்பு : இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததில் பெரும் ஆறுதல் இரண்டு பக்கம் பிரிந்து ஈழப் பிரச்சனையின் அடிப்படை தெரியாது வந்த கூச்சல்கள். நம்மவரும் தம் தலைவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கத் திராணியற்றுச் சமூக வலைத்தளங்களில் கும்மியடித்ததும் கொஞ்சக் காலம் இல்லாமல் இருக்கும். அடுத்தத்த தேர்தல்களில் ஈழப் பிரச்சனை இந்தியத் தேர்தல்களில் பேசு பொருளாக இல்லா விட்டால் பெரும் ஆறுதலாக இருக்கும் என்பதே எம் பிரார்த்தனை. இனியாவது அவரவர் தம் சமூகத்ததைக் கட்டியெழுப்பட்டும். ‪தமிழாலும், கலையாலும் ஒன்றுபடுவோம். அரசியலில் தனித்தியங்குவோம்.‬
இனி யாரும் யாருக்காகவும் பேச மாட்டார்கள்.

கானா பிரபா



No comments: