உலகச் செய்திகள்


உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி

பிணை முடிந்து சிறைக்குத் திரும்பிய நவாஸ் செரிப்

ஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்!

வடகொரிய கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 11 குழுக்களுக்கு தடை!



உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி


09/05/2019 இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹரிக்கும் அவர் மனைவி மேகன் மார்க்லேவுக்கும் திங்கட்கிழமை ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் மவுன்ட் பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று, இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோவில், மேகன், "உலகின் சிறந்த இரண்டு ஆண்கள் என்னிடம் இருக்கிறார்கள். நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். என் மகன் மிக அமைதியாக இருக்கிறான்'' என்று சிரித்தபடியே சொல்ல, ஹரியோ "அந்த அமைதி யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லையே'' என்று மனைவியைச் செல்லமாக கேலி செய்கிறார்.


அத்தோடு தம்பி ஹரிக்கு குழந்தைப் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அண்ணன் இளவரசர் வில்லியம் தன் தம்பியிடம்,'தூக்கமில்லாத உலகத்துக்கு உங்களையும் வரவேற்கிறோம். அதுதான் குழந்தை வளர்ப்பு' என்று ஜோக் அடித்திருப்பதும் அரச தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.  நன்றி வீரகேசரி 








பிணை முடிந்து சிறைக்குத் திரும்பிய நவாஸ் செரிப்


08/05/2019 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் வீட்டிலிருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக உச்சநீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் தனக்கு நிரந்தர பிணை வழங்ககேட்டு உச்சநீதிமன்றில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே அவரது பிணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார். 
அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். 
முன்னால் சென்ற காரில் நவாஸ்செரீப் அமர்ந்து இருந்தார். அவருடன் மகள் மரியம், தம்பி மகன் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கை நடத்தப்பட்டது.
பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களில் கலந்து கொண்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி சிறையை சென்று அடைந்ததும், சிறை அதிகாரிகளிடம் நவாஸ் ஒப்படைக்கப்பட்டார்.   நன்றி வீரகேசரி 










ஈரானுக்கு புதிய தடைகளை விதித்த ட்ரம்ப்!


09/05/2019 ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்கு அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீறவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நியைில், எண்ணெய் வளத்துக்கு அடுத்தபடியாக ஈரானுக்கு அதிக அளவு வருமானத்தை கொடுக்கும் துறைகளை இலக்காக்கியுள்ளோம். தனது நடத்தைகளை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஈரான்  எதிர்பார்க்க வேண்டியேற்படும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நன்றி வீரகேசரி 








வடகொரிய கப்பலை கைப்பற்றியது அமெரிக்கா


10/05/2019 ஐக்கியநாடுகளின் தடையை மீறிய குற்றச்சாட்டில் வடகொரிய கப்பலொன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
அமெரிக்க நீதிதிணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.
நிலக்கரியுடன் பயணித்துக்கொண்டிருந்த எம்பி வைஸ்ஹொனெஸ்ட் என்ற கப்பலையே அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
சீனா உட்பட உலகநாடுகளிற்கு விற்பனை செய்வதற்காகவே இந்த கப்பலில் வடகொரியா நிலக்கரியை அனுப்பியது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
முதல்தடவையாக இவ்வாறு கப்பலொன்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் வடகொரிய அரசாங்கத்திற்கு கடும் அழுத்தத்தை கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கப்பலையே அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.இந்த கப்பலில் பெருமளவு பொருட்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவிற்கு பாரிய  இயந்திர சாதனைங்களை கொண்டு செல்வதற்கும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுவது வழமை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரியா ஐநா தடைகளை மீறி சட்டவிரோத நிலக்கரி வர்த்தகத்தில ஈடுபட்டுள்ளதுடன் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது ஏவுகணை மற்றும் அணுவாயுத திட்டங்களிற்கு பயன்படுத்துகின்றது என அமெரிக்கா குற்றசம்சாட்டி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 11 குழுக்களுக்கு தடை!


12/05/2019 சர்வதேச பயங்கரவாதி மசூத் அஸாரின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் இந்தியாவின் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹஃபீஸ் சயீதின் ஜமாத் உத்-தாவா அமைப்புடன் தொடர்புடைய 11 குழுக்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
லாகூரில் செயல்படும் இந்த குழுக்களுக்கு தடை விதிக்கும் முடிவு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உள்துறை அமைச்சர் இல்ஜாஸ் ஷா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 7 குழுக்கள், ஜமாத் உத்-தாவா மற்றும் அதன் அறக்கட்டளையான ஃபலாஹ் ஏ இன்சானியாத் ஆகியவற்றுடன் தொடர்புடைய 5 குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி 






No comments: