கேஷிகா அமிர்தலிங்கத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் என்பார்வையில் - சௌந்தரி கணேசன்

.
Photos by C.Paskaran
ஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும், கலையும், கலாச்சாரமும் பண்பாடும் ஆகும். 

நமது இளம் தலைமுறையினர் பல்கலாச்சார சூழலில் வாழ்ந்தாலும் எமது மொழி, எமது கலை போன்றவற்றில் பாண்டித்துவம் பெறுவது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். 

12 May 2019 ஞாயிறு அன்று செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்களின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் Parramatta Riverside theatre ல் சரியாக 5.30 மணிக்கு கேஷிகாவின் தம்பி திவ்யேஷின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. 

கேஷிகா, திரு திருமதி  அமிர்தலிங்கம் சாரதா தம்பதிகளின் புதல்வி ஆவார்.

சங்கீத ஆசிரியை திருமதி புஸ்பா ரமணா அவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்ற கேஷிகா பின்பு கானக்குயில் ஶ்ரீமதி Binni Krishnakumar ஐ தனது குருவாக ஏற்று ஒரு இளம் பாடகியாகத் தன்னை வளர்த்துக் கொண்டவராவார்.

'மாதே மலயத்வாஜா' என்ற விருத்தத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி கணபதியே, 
ஆனந்த நடமாடுவார் போன்ற 
பாடல்களுடன் தொடர்ந்தபோது வரப்போகும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சற்று அதிகரித்தது. 

தொடர்ந்து பாபநாசம் சிவனின் தோடி ராகத்தில் அமைந்த பிரபல 'கார்த்திகேயா' என்ற பாடல் மற்றும் துரிதகதியில் அமைந்த வாத்தியங்களின் பிரயோகங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 

அதைத் தொடர்ந்து சுவையான உணவை ரசிகர்கள் ருசித்தபின் மீண்டும் மண்டபம் நிறைந்தது. 

Photos by C.Paskaran


கேஷிகாவின் குரு திருமதி பின்னி கிருஷ்ணகுமாரின் இசை அமைப்பில் உருவான 'ராகம் தாளம் பல்லவி' அரங்கத்தின் கரகோசத்தோடு சுகமாக அரங்கேறியது. 

அதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் சங்கீத கலாநிதி கிருஷ்ணகுமார் மற்றும் கேஷிகாவின் குரு திருமதி பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரது உரையும் குரு சிஷ்யை மரியாதை நிகழ்வுகளும் நடைபெற்றன. 

எஸ் வி ரமணா அவர்களின் மிருதங்க இசையும் சிறீகாந்த் வெங்கடரமணனின் வயலின் இசையும் ஜெய்ராம் ஜெகதீசனின் கடம் இசையும் வாய்ப்பாட்டுக்கு மகுடம் சூட்டி ரசிகர்களைக் மேலும் உற்சாகப்படுத்தின. 

ஆரம்பத்திலிருந்து தனது கம்பீரமான குரலில் அறிவுப்புக்களை செய்த கிருஷ்ணாவுக்கும் பாராட்டுக்கள். 

அதைத் தொடர்ந்து தில்லானா மற்றும் கிளிப்பாடலைப் பாடி நிகழ்ச்சியின் அழகுக்கு அழகு சேர்த்து மங்களம் பாடி கச்சேரியை நிறைவுசெய்தார் கேஷிகா. 

சுமார் நான்கு மணி நேரமாக சபையோரை தன் இசையால் அப்படியே கட்டிப் போட்டு விட்டார் கேஷிகா. முழுமையான ஒரு சங்கீதக் கச்சேரியை கேட்டு ரசித்த உணர்வு சபையோர் அனைவரிடம் ஏற்பட்டது. 

சபையோரின் உணர்வுகளை சிறப்பு விருந்தினராகவும், பிரதம விருந்தினராகவும் வந்திருந்தவர்கள் ஆற்றிய உரை எடுத்தியம்பியது.

சின்ன வயதிலிருந்தே பல உள்ளூர் மேடைகளில் தன் பாடல் திறமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்திய கேஷிகா இன்று அரங்கேற்றம் காணுவதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சியாக இருந்தது

தனது இசைத் துறையில் மேலும் வளர்ந்து தனது சங்கீத குருக்களின் வழிநடத்தலில் சாதனைகள் புரிய வேண்டுமென்பதே எல்லோருடைய வாழ்த்துக்களாகவும் அமைந்தன.

Photos by C.Paskaran

பிறமொழிப் பாடல்களை மட்டுமல்லாது தமிழ் கீர்த்தனைப் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் தெரிவுசெய்து பாட முன்வருவது பெரிதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

இசையைக் கற்றதைப் போன்றே தமிழைக் கற்றுக் கொள்வதற்கும் தமிழ் பாடசாலைக்கு சென்று முறையாக தமிழ் கற்றுக் கொண்டவர் கேஷிகா. 

தனது அழகு தமிழில் எத்தனையோ மேடைகளில் பாடியவர் கேஷிகா இவ் அரங்கேற்றத்திலும் சிறப்பம்சமாக செதுக்கியெடுத்த பல பாடல்களைத் தெரிவு செய்து பாடினாலும் எல்லோருக்கும் பரிச்சயமான பாரதியின் பாடலையும் ஈழத்துப் பாடல் ஒன்றையும் அவரது கம்பீரமான குரலில் கேட்கவேண்டுமே என்ற ஆர்வத்திற்கு தடை  போடமுடியவில்லை. 

ஈழத்தமிழர்களின் நிதி சேகரிப்பு நிகழ்வுகளில் கேட்கும் போதெல்லாம் எந்த ஓர் மறுப்பும் தெரிவிக்காமல் கேஷிகாவை அழைத்துச் சென்று பாடவைத்து அழகு பார்த்தவர்கள் கேஷிகாவின் பெற்றோர். 

இசையை இசைக்காகவே புரிந்து கொள்வதற்கான ஆரோக்கியமான மனநிலையையும் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்த அவரது பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். கேஷிகாவின் நன்றி உரையிலும் அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.

திரையிசைப் பாடகியாக அறிமுகமான சிட்னி சமூகத்தின் ஓர் செல்லப் பெண் இன்று கர்நாடக இசைப் பாடகியாக அரங்கேறி இருப்பது சமூகமாக பெருமைப்பட வேண்டிய ஓர் விடயமாகும். தொடர்ந்தும் பல மேடைகளில் கேஷிகாவின் குரல் ஒலிக்க வேண்டும் அவர் மேலும் பல உச்சங்களை எட்டவேண்டும் என்று வாழ்த்துகிறோம். 

கேஷிகாவின் அரங்கேற்றம் அவரது பெற்றோர்களின் மேற்பார்வையில் மிகவும் கச்சிதமாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். 











































No comments: