பயணியின் பார்வையில் – அங்கம் -06 லண்டனில் நடக்கும் மாதாந்த இலக்கிய சந்திப்பில் கற்றதும் பெற்றதும் முரண்கள் விலத்தி மனிதரும் மாக்களும் நாடும் இளகிய மனம் ஒன்றைப்பொருத்தி வீதி வழிவந்தால் இன்பமொன்றை இவ்வுலகு பெற்றிடக்கூடும் - மாதவி சிவலீலன் - முருகபூபதி


எனது  லண்டன் வருகை பற்றி அங்கிருக்கும் கலை இலக்கிய ஊடக  நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன். அவர்களில் சிலர் தொடர்புகொண்டு சந்திப்புகளுக்கும், வானொலி, தொலைக்காட்சி நேர்காணல்களுக்கும் ஒழுங்கு செய்யவிருப்பதாக சொன்னார்கள்.
சந்திப்புகள் உவப்பானவை! நேர்காணல்கள் எச்சரிக்கையானவை! சமகாலத்தில் இணைய வழிகளில் மின்னல்வேகத்தில் பரவக்கூடியவை. லண்டனிலிருந்து தொடர்புகொண்டவர்கள் எனது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள்.
அவர்களுடனான உறவும் தொடர்பும் நீண்டகாலமாக நீடித்திருப்பவை. நண்பர் இளையதம்பி தயானந்தாவை இலங்கை வானொலி கலையகத்தில் 1997 ஆம் ஆண்டில் நண்பர் வி.என். மதியழகன் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தார்.
அக்காலப்பகுதியில் எனது இலக்கிய – ஊடகத்துறை பிரவேச வெள்ளிவிழா மெல்பனிலும் இலங்கையில் எமது ஊரிலும் நடந்தது. எமது ஊர் விழாவில் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தோம்.
அச்சமயம் பிரேம்ஜி ஞானசுந்தரன், ராஜஶ்ரீகாந்தன், ஆ. சிவநேசச்செல்வன், தெளிவத்தை ஜோசப், துரைவிஸ்வநாதன், மேமன் கவி, வன்னியகுலம், சூரியகுமாரி, நீர்கொழும்பூர் முத்துலிங்கம், நவமணி ஆசிரியர் சிவலிங்கம், வீ.தனபாலசிங்கம், தங்கவடிவேல் மாஸ்டர்  ஆகியோருடன் வருகைதந்து இலங்கை வானொலி தமிழ்ச்சேவையின் சார்பில் உரையாற்றியவர் இளையதம்பி தயானந்தா.
அதன்பின்னர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்காகவும் அவர் என்னை கொழும்பில் ஒரு நேர்காணலுக்காக அழைத்து அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியவர்.
நண்பர் அனஸ் இளைய அப்துல்லா, ஏற்கனவே 2008 ஆம் தொடக்கத்தில் நான் லண்டன் சென்றிருந்த வேளையில் தீபம் தொலைக்காட்சிக்காக ஒரு நேர்காணலை நடத்தி ஒளிபரப்பியவர்.
அவர் தற்போது லண்டனில் ஐ.பி.சி. தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார். அவரும் இந்தப்பயணத்தில் அழைத்திருந்தார்.
எமது மூத்த இலக்கியவாதியும் எனது அருமை நண்பருமான அகஸ்தியரின் புதல்வி நவஜோதி யோகரத்தினமும் தொடர்புகொண்டு,  நண்பர் நடா. மோகன் நடத்தும் லண்டன் தமிழ் வானொலியில் ஒரு நீண்ட நேர்காணலை ஒழுங்கு செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இவர்கள் அனைவரும் தொலைக்காட்சி, வானொலி ஊடகத்துறையில் தேர்ச்சிபெற்ற அனுபவசாலிகள். அதனால் முன்னெச்சரிக்கை அவசியமற்றது என்பதில் ஆறுதலிருந்தது.
இலங்கையில் ஒரு பிரபல தொலைக்காட்சி என்னை ஒரு நேர்காணலுக்கு அழைத்திருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் பின்னர், அங்கு அதன்பின்னர் செல்லும் சந்தர்ப்பங்களில் அத்தகைய நேர்காணல்களை தவிர்த்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.
அந்த கசப்பான அனுபவம் பற்றி ஏற்கனவே எழுதியுமிருக்கின்றேன்.
லண்டனில் Harrow  என்னுமிடத்தில் ஒரு உணவு விடுதியில் அங்கிருக்கும் கலை, இலக்கிய , ஊடக நண்பர்கள் மாதந்தோறும் சந்திக்கிறார்கள். கலந்துரையாடிவிட்டு இராப்போசன விருந்துடன் விடைபெறுகிறார்கள். அதன்பின்னர் அடுத்த மாதம் மீண்டும் சந்திக்கிறார்கள்.
அத்தகைய ஒரு சந்திப்புக்கு வருமாறு இளையதம்பி தயானந்தா அழைத்திருந்தார்.
லண்டனில் வதியும் எனது மருமகள் ஜெயசித்திரா இந்திரனுடன் சென்றேன். மு. நித்தியானந்தன் தலைமையில் அந்தச் சந்திப்பு - கலந்துரையாடல் நடந்தது. நாழிகை ஆசிரியர் மாலி . மகாலிங்கசிவம், ராகவன்,                 மூத்த கவிஞர் ( அமரர்) காரை சுந்தரம்பிள்ளையின் புதல்வி – கவிதாயினி மாதவி சிவலீலன், இளையதம்பி தயானந்தா, அனஸ் இளைய அப்துல்லா, எஸ்.கே. ராஜன், நவஜோதி உட்பட சிலர் வந்திருந்தனர்.
மு. நித்தியானந்தன் உரையாற்றுகையில் தனக்கும் எனக்கும் இடையே நீடித்திருக்கும் நட்புறவையும் எவருடனும் முரண் அறுத்து பழகும் இயல்புகளையும் குறிப்பிட்டார். அத்துடன், எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் இடம்பெற்ற சில பதிவுகளையும் சிலாகித்துப்பேசினார்.
தனது கூலித்தமிழ் நூலின் பிரதியும் தந்தார். பதுளையில் வெளியான கலைஒளி இதழின் ஆசிரியர் முத்தையாவின் புதல்வரான நித்தியானந்தனை, 1972 ஆம் ஆண்டுமுதல் நன்கு அறிவேன். இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை மாணவராக இருந்த காலப்பகுதியில் கொழும்பில் வெளியான பூரணி காலாண்டிதழ் வெளியீட்டு நிகழ்வில்தான் முதல் முதலில் சந்தித்தேன். பின்னர் நித்தி,  தினகரனில் சிறிதுகாலம் பணியாற்றியவேளையில் எங்கள் ஊரில் நாம் நடத்திய பாரதி விழாவிற்கும், தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டு பிரசாரக்கூட்டத்திற்கு பேராசிரியர் கைலாசபதியுடனும்  வருகைதந்திருந்தவர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் தோன்றியதும் அங்கு பொருளியற் துறை விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பின்னர் இவரது வாழ்விலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன.
1983 வெலிக்கடை சிறையில் நடந்த தாக்குதலில் உயிர்தப்பினார். தமிழகம் சென்றதும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் பதிப்பிலும் பங்கேற்றவர். இற்றைவரையில் தொலைபேசி – மின்னஞ்சலில் தொடர்பிலிருக்கும் நண்பர் நித்தியானந்தன், எழுதியிருக்கும் கூலித்தமிழ் நூல் பற்றி பரவலான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. கனடா இலக்கியத் தோட்டத்தின் விருதையும் இந்த நூல் பெற்றுள்ளது.
நித்தியானந்தன்,  இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1983 இற்கு முன்னர் மலையக இலக்கிய முன்னோடிகள் என்.எஸ்.எம். ராமையா ( ஒரு கூடைக்கொழுந்து) தெளிவத்தை ஜோசப் ( நாமிருக்கும் நாடே) சி.வி. வேலுப்பிள்ளை ( வீடற்றவன்) ஆகியோரின் நூல்களை தனது வைகறை பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.
சிறந்த திறனாய்வாளரான நித்தியானந்தன்,  இவ்வாறு பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் காண்பித்த அக்கறை முன்மாதிரியானது. எனினும் நித்தியின் நீண்ட கால தேடலிலும் ஆய்விலும் எழுதப்பட்ட கூலித்தமிழ், 2014 ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது.
கூலித்தமிழ் நூல் பற்றி தமிழகத்தைச்சேர்ந்த சித்தார்த்தன் சுந்தரம் மலையகமும் தமிழர்களும் என்னும் தலைப்பில் குறிப்பிட்டிருந்த வரிகளை இங்கு காணலாம்.
    தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த அஞ்சுகம், யாழ்ப்பாணம் கைத்தடியில் வளர்ந்து, கொழும்பு சிவனாலயத்தில் `பொட்டுக்கட்டிய’ தேவதாசியாகத் திகழ்ந்து, க. சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமான ஸ்திரீயாக வாழ்ந்து, `உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு’ என்னும் அரிய இலக்கிய நூலினை ஆக்கி,  தனது குலகோத்திரத்தின் சரித்திரத்தைப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியையாகக் கெளரவம் பெறுகிறார். இந்நூலாக்கத்திற்கு அஞ்சுகம் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப்புலமையைப் பறைசாற்றுவதாக அமைகிறது.

இந்து சனாதனப் புராணப் புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது என்கிறார் மு. நித்தியானந்தன்.
தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக் குரல்கள் தமிழகத்தில் பின்னாளில் வேகம் பெற்றது.  ஆனால் வலிமை வாய்ந்த சனாதன மரபிற்குப் பலியாகிப் போன அஞ்சுகத்தின் தமிழ்ப் புலமை வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது என்கிறார் நூலாசிரியர்.
இந்நூலின் மூலம் மலையகத் தமிழர்கள் பற்றிய புதிய பார்வையையும், அவர்களுடைய இலக்கிய ஆக்கங்களையும் அறிமுகப்படுத்தியிருப்பதோடு பல அரிய தகவல்களையும் ஆவணப்படுத்தியிருப்பது இதன் சிறப்பாகும். இதன் மூலம் சுந்தரமீனாளையும், கண்ணனின் காதலியையும், துரைமார்களுக்கு எதிராக ஒலித்த கருமுத்து அவர்களின் எதிர்ப்புக் குரலையும், கோப்பிக் கிருஷியின் 280 கும்மிப் பாடல்களைப் பற்றியும் இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் எனக்குள் எழுந்தது போல இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் என்பதில் ஆச்சரியமில்லை.  அப்படி ஏற்பட்டால் அதுவே நூலாசிரியரின் உழைப்புக்குக் கிடைத்தக் ‘கூலி’ யாகும்.

லண்டன் Harrow  சந்திப்பில்தான்   முதல் முதலில் எனது நண்பரும் கவிஞருமான ( அமரர் ) கரை சுந்தரம்பிள்ளையின் புதல்வி மாதவி சிவலீலாவை சந்தித்தேன். யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ். வேம்படி மகளிர் உயர் கல்லூரி, மற்றும் யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்று, தமிழில் சிறப்புக்கலை பட்டமும் , முதுதத்துவமாணிப் பட்டமும் பெற்றவர்.
கலை, இலக்கியம், கவிதை முதலான துறைகளில் ஈடுபட்டுள்ள இவர்,    பொன்னாலை கிருஷ்ணபிள்ளையின் கவிதைகள் ஓர் ஆய்வு  என்ற நூலை வெளியிட்டவர். கம்பராமாயணக் கதையமைவும் கட்டமைப்பும் என்ற தலைப்பில் ஆய்வேட்டையும் சமர்ப்பித்துள்ளார். தமிழர் புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக்கல்வி போதனா முறைமைகள் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபடுபவர். இவரது இமைப்பொழுது கவிதை நூல் லண்டனில் வெளியிடப்பெற்றது.
இந்த நூல் பற்றி தமிழக கவிதாயினி குட்டி ரேவதி இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
  மாதவி, தான் வாழும் நிலத்தில் தன் தலையின் வெளியில் மடித்துவைத்த தாய் நிலத்தின் வரைபடத்துடன் திரியும் ஒரு பெண்ணாக காட்சி தருகிறார். முதாயியைப்போன்று எல்லோருக்காகவும் எழுந்து நிற்கிறார். துயரின் பேதலிப்பில் தனக்குள் தானே சுருண்டுகொள்கிறார். சொற்களால் எப்படியெல்லாம் துயரை வெல்ல முடியுமோ அப்படியெல்லாம் எழுந்து நின்று பெருங்காற்றில் ஆடும் மரம்போல தொடமுடியாத விண்ணை நோக்கி சீறிப்பேயாட்டம் செய்கிறார். என்றாலும்  இவை எல்லாவற்றையும் தாண்டி எனை மிகவும் ஈர்த்தது, இக்கவிதைகளின் வழியாக அவர் நமக்குக் காட்டும் நன்னம்பிக்கை முனைகள், பெருவெளிச்ச இலட்சியங்கள். இரண்டு,  உட்பொருளுக்கு ஏற்றவாறு கவிதையின் வெவ்வேறு தொனிகளைக்கொடுத்து ஈரமனதில் சொற்களைப் பதியச்செய்வது, வலுவான இலட்சியமும்,பெண் சொற்களில் மண்டிக்கிடக்கும் வரலாற்றின் கொடுந்துயர்களையும், கவிதைகளால் அவற்றின் எல்லைகளைத் தொட்டுவிட முடியும் என்ற முழுநம்பிக்கையும் கொண்டிருக்கும் ஒரு கவியாக மாதவி ஆகி நிற்கிறார். ஓர் இமைப்பொழுது, பெருங்காலமாக கண்முன்னே விரிகிறது.
 லண்டன் Harrow  சந்திப்பில், சமகால இலக்கிய போக்குகள் பற்றியும் இலங்கை கவிஞர்கள் குறித்து தமிழகத்தவர்களின் பார்வைகள் குறித்தும் உரையாடினோம்.
இராப்போசன விருந்துடன் அச்சந்திப்பு நிறைவுபெற்றது.
( தொடரும்)    
-->
No comments: