" காலம் தரித்து
நிற்பதில்லை. அதனால் வயதும்
முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.
இறுதியில் முதுமை வரும்பொழுது
உடன் வரும் நண்பர்கள் தனிமை,
இயலாமை, நனவிடை தோயும் இயல்பு, எல்லாம்
போதும் என்ற மனப்பான்மை.
ஆயினும் -
முதுமையிலும் ஒருவர் அயராமல்
இயங்குவதென்பது கொடுப்பினை. அவ்வாறு மருத்துவனையில் தங்கியிருக்கும் வேளையிலும் தமிழ் அகராதியொன்றை தயாரிப்பதற்காக குறிப்புகளை பதிவு செய்து வெளியிட்டவர்தான் அவுஸ்திரேலியா
மெல்பனில் வதியும் பல்துறை ஆற்றல் மிக்க கலைவளன்
சிசு. நாகேந்திரன்." . இவ்வாறு
சிலவருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கின்றேன்.
நீண்டகாலம் மெல்பனை வதிவிடமாகக்கொண்டிருந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களை , அவரது புதல்வியும்
பேரப்பிள்ளைகளும் சிட்னிக்கு அழைத்துச்சென்றுவிட்டதாக அறிந்தேன். அவர் சிட்னிக்கு இடம்பெயரவைக்கப்படுவதற்கு
முன்னர்? மெல்பன் Dandenong அரச பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதையறிந்து
சென்று பார்த்துவிட்டு வந்துதான் மேற்குறித்த வரிகளுடன் தொடங்கும் பதிவொன்றை எழுதியிருந்தேன்.
யாழ். நல்லூர் இவரது
பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், கேகாலையில்தான் 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர்.
கவிஞர் அம்பி அவர்களின் 90 வயது பிறந்த தினவிழா கொண்டாட்டத்திற்காக சிட்னிக்கு வந்தவேளையில் அங்கு
Beecroft (NSW 2119) இல் அமைந்திருக்கும் முதியோர் காப்பகத்திலிருக்கும்
கலைவளன் சிசு. நாகேந்திரன் அவர்களையும் பார்த்தேன்.
உள்ளுர், வெளியூர், வெளிநாட்டுப்பயணங்களில் நான்
முதலில் பார்க்க விரும்புவது முதிய நண்பர்கள் மற்றும் நான் நேசிக்கும் குழந்தைகள்.
குழந்தைகளும் முதியவர்களும் பல இயல்புகளில் ஒற்றுமைப்பட்டவர்கள். முதியவர்களிடம் பல
சுவாரசியமான கதைகளை கேட்கமுடியும். குழந்தைகளின் மழலை மொழியையும் குறும்புத்தனங்களையும்
ரசிக்கமுடியும்.
நண்பர் சிசு. நாகேந்திரன், மெல்பனிலிருந்த காலப்பகுதியில்
ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி
நிதியம், கே.சி. தமிழ் மன்றம் ஆகியனவற்றில்
அங்கம் வகித்து சிறப்பான சேவையாற்றியவர்.
சிறந்த ஒளிப்படப்பிடிப்பாளர். எழுத்தாளர், ஆய்வாளர்,
நாடக - திரைப்படக்கலைஞர், முதியவயதிலும் தமிழ் - ஆங்கில அகராதி எழுதியவர். அந்தக்கால
யாழ்ப்பாணம், பிறந்த
மண்ணும் புகலிடமும் ஆகிய நூல்களை எழுதியிருப்பவர். யோகாசனப்பயிற்சி
தொடர்பாக காணொளிக்காட்சி இறுவட்டையும் வெளியிட்டவர்.
இத்தனை பணிகளையும் தனது முதிய வயதில் மேற்கொண்டவர்.
அவரது தற்போதைய புகலிடத்தின் முகவரியை மெல்பனில்
வதியும் அவரது நண்பர் நவரட்ணம் தந்திருந்தார். சிட்னியில் இளைய தலைமுறைக்கு கிரிக்கட்
ஆட்ட பயிற்சியாளராகவும் இருக்கும் எனது நண்பர் லோகேந்திரன், யாழ். பரியோவான் கல்லூரி
பழையமாணவருமாவார். இவரும் சிட்னி Beecroft
இல் வசிப்பதனால், இவருடன்தான் முன்னறிவுப்புமின்றி சிசு. நாகேந்திரனை பார்க்கச்சென்றேன்.
என்னைக்கண்டதும் அவருக்கு இன்ப அதிர்ச்சி. அவர்
அருகில் அமர்ந்து நண்பர் லோகேந்திரனை அறிமுகப்படுத்தினேன்.
சிசுவும் விளையாட்டுப்பிரியர். அந்த அறையிலிருக்கும் தொலைக்காட்சியில் தான் விரும்பும்
விளையாட்டுக்களை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
சிட்னி முதியோர் காப்பகம் எப்படி இருக்கிறது? எனக்கேட்டேன்.
உதட்டைப்பிதுக்கினார். ஏமாற்றத்தின் சாயல்கள் அவரது முகத்தில் தென்பட்டன. " நன்றாக
பராமரிக்கிறார்கள். இங்கிருக்கும் மகள் அடிக்கடி வந்து பார்க்கிறாள். விருப்பமான உணவுகளையும்
தின் பண்டங்களையும் தருகிறாள். ஒரு குறையும் இல்லை, ஆனால், மெல்பனிலிருக்கும்போது பல
நண்பர்களும் வந்து பார்ப்பார்கள். இங்கு அந்தளவுக்கு நண்பர்கள் இல்லை என்பதும் ஒரு
காரணம். அனைவரும் பிஸியாகிவிட்டார்கள். " எனச்சொன்னவர், மெல்பனிலிருக்கும் பல
நண்பர்களையும் பெயர்சொல்லி விசாரித்தார். அவரது நினைவாற்றல் குறையவில்லை!
கவிஞர் அம்பியின் 90 ஆவது பிறந்த தினவிழாவுக்கு
வந்திருப்பதைச்சொன்னதும், தனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கச்சொன்னார். அந்த விழாவைப்பற்றி
முன்னரே தெரிந்திருப்பின், தானும் அதற்கு வந்திருக்கலாம் என்றார்.
அது தொடர்பாக தனது உடல் உபாதை மற்றும் பாதுகாப்பு
சம்பந்தமாக பல நிருவாக அனுமதிகள் பெறவேண்டும். அதற்கு கால அவகாசம் இனி இல்லை. என்றார்.
தினமும் காலை எழுந்தவுடன் சிரம பரிகாரம் முடித்து
தேகப்பயிற்சிக்காக தனது Walker ஐ தள்ளிக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்து, லிஃப்டில்
நுழைந்து கீழ் தளத்திற்கு வருகிறார்.
அங்கிருக்கும் தேகப்பயிற்சி கூடத்தில் பயிற்சி
செய்கிறார். அதனையடுத்து பக்கத்திலிருக்கும் சிற்றுண்டிச்சாலையில் தனக்கு பிடித்தமானதை
வாங்கி உண்கிறார். மீண்டும் Walker ஐ தள்ளிக்கொண்டு
தனது அறைக்குத் திரும்புகிறார். கட்டிலில்
அவருக்கு அருகில் அவர் முன்னர் எழுதிய " பழகும் தமிழ்ச்சொற்களின் மொழி மாற்று அகராதி
- ( தமிழ்- ஆங்கிலம்) நூல் இருக்கிறது.
" அதன் இரண்டாம்
பாகமும் எழுதவேண்டும். யாராவது அருகிலிருந்தால் அதனை எழுதுவதற்கு பெரிய உதவியாக இருக்கும்.
" என்றார்.
அன்றைய தினம் அவருக்கு
நான் அறிமுகப்படுத்திய நண்பர் லோகேந்திரனிடம், நேரம் கிடைக்கும்போது வந்து தன்னுடன்
பேசிக்கொண்டிருக்குமாறும் வேண்டுதல் விடுத்தார். கலைவளன் சிசு நாகேந்தரனுக்கு
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 98 வயது பிறக்கிறது.
நூறாண்டும் கடந்து அவர் இயங்குவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
விடைபெறும் தருணத்தில், நான் அணிந்திருந்த தொப்பி
தனக்குப்பிடித்தமானது, அதுபோல் ஒன்று வேண்டும் என்றார். அதனையே அன்று அவருக்கு வழங்கி
மகுடம் சூட்டிவிட்டு விடைபெற்றோம்.
"பொறுங்கள், லிஃப்ட் வரையும் வந்து வழியனுப்புகின்றேன்"
எனச்சொல்லியவாறு வந்தார். அரவணைத்து வாழ்த்தி மகிழ்ந்து விடைபெற்றோம். எனக்கு அவரைப்பார்க்கும்தோறும் மகாகவி
பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு
வரும்.
" தேடிச்சோறு நிதந்தின்று
- பல
சின்னஞ் சிறு கதைகள்பேசி - மனம்
வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள்
செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ "
No comments:
Post a Comment