வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது ; நீதிமன்ற தீர்மானம் புதன்கிழமை
சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து
விஜயகலாவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்டநடவடிக்கை தொடர்பில் அறிவிக்கவும் ; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் ஆலோசனை
முன்னாள் போராளிகள் விடுதலை
வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.!
சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
06/05/2019 யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாயில் ஏப்ரல் 10 ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர் வாளுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டானதுடன் மற்றொரு இளைஞரும் காயமடைந்தார். அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சுன்னாகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் வாளுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தரை பதவி விலக்கிய ஜனாதிபதி
06/05/2019 யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாக ஜனாதிபதி அறிவிப்பொன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நேற்று மே மாதம் 5 ஆம் திகதி பின்னராகவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சறீசற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை யாழ்ப்பாண புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அறியவருகின்றது.
இதேவேளை, காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது ; நீதிமன்ற தீர்மானம் புதன்கிழமை
06/05/2019 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்படுவதா? அல்லது வழக்கிலிலிருந்து அவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை எதிர்வரும் புதன்கிழமை வழங்கப்படும் என யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் அறிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் அணைத்தும் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என இருவேறு தரப்பு சட்டதரணிகள் தனித்தனியாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தனர்.
சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் திருக்குமரன், செலஸ்ரின், கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் முற்பட்டனர்.
கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியும் மன்றில் முன்னிலையானார்.
மாணவர்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது அவரது பதவிநிலைக்கு குறையாத ஒருவரே சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்று சட்டத்தரணிகள் தமது வாதத்தை முன்வைத்து நீண்ட சமர்ப்பணத்தை சமர்ப்பித்தனர்.
சந்தேகநபர்களை 72 மணிநேரத்துக்குள் நீதிமன்றில் முற்படுத்தியதால் பொலிஸ் அத்தியட்சகரால் மன்றில் முற்படுத்த வேண்டும் என விதி தேவையற்றது என பொலிஸார் மன்றுரைத்தனர்.
இருதரப்பு நீண்ட சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், பிணை அல்லது வழக்கை நிராகரித்து மாணவர்களை விடுவிப்பதா? என்ற கட்டளை நாளைமறுதினம் வழங்குவதாக வழக்கை ஒத்திவைத்தார். நன்றி வீரகேசரி
சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதிகளின் 700 கோடி சொத்து
06/05/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 14 கோடி ரூபா பணம் தொடர்பில் பிரதான விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினர் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் அவற்றை முடக்கி, அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சிறப்பு சி.ஐ.டி. குழு ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதில் 14 கோடி ரூபா பணத்தில் ஒரு தொகுதியை சி.ஐ.டி. மீட்டுள்ளதுடன் ஏனைய பணம் வங்கிக்கணக்குகளில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த வங்கிக்கணக்குகளை முடக்கி விசாரனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே இந்த பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான 700 கோடி ரூபா பெறுமதி கொண்ட சொத்துக்களை சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்தியுள்ளது. அந்த சொத்துக்களையும் முடக்கி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
விஜயகலாவுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்டநடவடிக்கை தொடர்பில் அறிவிக்கவும் ; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் ஆலோசனை
10/05/2019 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை சம்பந்தமாக அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு இன்றையதினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தேபோதே நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கருத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
முன்னாள் போராளிகள் விடுதலை
11/05/2019 மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் மற்றும் கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் என்பவர் விடுக்கபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தனர்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு தாக்குதலை தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில் அஜந்தன் மற்றும் கிளிநொச்சியை சேர்நத கதிர்காமத்தம்பி ராஜகுமாரன் ஆகியோரை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பிணையில் விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.
அதனைத்தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு கையளிக்கப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி
வவுனியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்.!
12/05/2019 வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதனையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி மற்றும் வைத்தியசாலையினை சூழவுள்ள வீதி அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் உட்செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பாதுகாப்பு வழமையினை விட அதிகளவிலான இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவத்தினரால் புதிதாக ஓர் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன்,வவுனியா மன்னார் வீதி காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக பாதையின் இரு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வவுனியா நகரினுள் உள்செல்லும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி வவுனியா மின்சாரசபை வீதியின் ஆரம்ப பகுதியிலும் முடிவு பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்செல்லும் வெளிச்செல்லும் வாகனங்களை சோதனைக்குட்படுத்துகின்றனர்.
மேலும், வவுனியா புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லும் அனைத்து பயணிகளினதும் பொதிகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சோதனைக்குட்படுத்திய பின்னரே பேரூந்து நிலையத்தினுள் உட்செல்ல அனுமதியளிக்கின்றனர். மேலும் புகையிரத நிலைய வீதி மற்றும் சுற்றுவட்ட வீதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
வவுனியா நகரினுள் தேவையற்ற விடயத்திற்கு செல்ல வேண்டாமெனவும் தேவை நிமித்தம் வவுனியா நகரினுள் செல்லும் சமயத்தில் அடையாள அட்டையினை எடுத்துச் செல்லுமாறு பொதுமக்களிடம் இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை போன்ற இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்ற கடித்தினையடுத்தே இப்பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
சஹ்ரானின் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் வெளியாகும் தகவல்கள்
11/05/2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.
சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா (வயது 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தான் புனித போருக்குச் செல்லப்போவதாக கொள்ளுப்பிட்டியிலுள்ள கட்டடத்தில் ஏப்ரல் 18 ஆம் திகதி இரவுணவு அருந்திய பின்னர் சஹ்ரான் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். தான் மரணமடைந்த பிறகு 4 மாதங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறும் அவர் மனைவியைக் கேட்டிருந்தார்.
ஆனால் தன்னை ஆரம்மலவின் கெக்குனகொல்ல பிரதேசத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்புமாறு சஹ்ரானின் மனைவி கேட்டிருக்கிறார். எனினும் சஹ்ரான் அதற்குப் பதிலளிக்கவில்லை. தன்னை விவாகரத்துச் செய்யுமாறு கூட சஹ்ரானை சாதியா பல தடவைகள் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.
ஈஸ்டர் ஞாயிறன்று தாங்கள் சாய்ந்தமருதில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் சாதியா மேலும் தெரிவித்தார். தங்களது குழுவினர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சஹ்ரானின் சகோதரி (ரில்வானின் மனைவி) அன்று காலை சாதியாவிடம் கூறியிருக்கிறார்.
எதற்கும் பயப்பட வேண்டாம். உங்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று சஹ்ரானின் தாயார் சாதியாவிடம் கூறியிருக்கிறார். இந்தத் தகவல்கள் அனைத்தும் சாதியாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment