இந்தியா - தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த
செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு
வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம்
செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்
6 ஆம் திகதி வீரகேசரி பத்திரிகையின் முதல்
இதழை வெளியிட்டார்.
முதலில் கொழும்பு செட்டியார் தெருவிலிருந்து
வெளிவந்த வீரகேசரி, அதன் விரிவாக்கம் கருதி கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்க இல்லத்திற்கு
இடம்பெயர்ந்தது.
அந்த இல்லமும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது
என்பதை பலரும் அறியமாட்டார்கள்! அங்குதான் இலங்கையின் முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனா
பிறந்திருக்கிறார்.
இத்தகைய அரிய தகவல்களை தன்னகத்தே வைத்துள்ள வீரகேசரியின்
தொடக்காலத்தில் வ.ராமசாமி அவர்களும் தமிழகத்திலிருந்து வருகை தந்து ஆசிரியராக பணியாற்றியவர்.
வ.ரா. என சுருக்கமாக
அழைக்கப்படும் வ. ராமசாமி அய்யங்கார் மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பருமாவார். மகாத்மா
காந்தி சென்னைக்கு வந்த சமயத்தில் அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயில் காப்போனாகவும்
பணியாற்றியவர். இந்தக்காட்சியை பாரதி திரைப்படத்திலும்
பார்த்திருப்பீர்கள்.
இத்தகைய பின்புலத்தில் வெளிவந்திருக்கும் வீரகேசரிக்கு
இன்று ஓகஸ்ட் 6 ஆம் திகதி 89 வயது பிறக்கிறது.
வீரகேசரி நாளிதழ், செய்திகளுக்கும் செய்தி அறிக்கைகளுக்கும் உலக விவகாரங்கள்
மற்றும் உள்நாட்டு நடப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கினாலும், ஞாயிறன்று வெளியாகும்
வாரவெளியீடு, மற்றும் வராந்தம் வெளிவரும்
சங்கமம் முதலானவை கலை, இலக்கியம்,கலாசாரம்,
பண்பாட்டுக்கோலங்கள், மலையகம், சினிமா, சிறுகதை, கவிதை, தொடர்கதை, முதலான விடயதானங்களுக்கு
களம் அமைத்து வெளிவருகின்றன.
இலங்கையில் சிறந்த சிறுகதைகளை வெளியிட்ட இதழ்
என்ற பெருமையும் வீரகேசரி வாரவெளியீட்டையே சாரும். காலத்துக்காலம் சிறுகதை, நாவல் மற்றும் கலை இலக்கியப்போட்டிகளையும் வாரவெளியீடு
நடத்தியிருக்கிறது.
கடந்த 88 வருடகாலத்தில் வீரகேசரியில் பல புகழ்பூத்த
படைப்பாளிகள், கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது முக்கியமான தகவல்.
வீரகேசரியில் ஈழத்து எழுத்தாளர்கள் அ.ந. கந்தசாமி,
கே. கணேஷ், சில்லையூர் செல்வராசன், செ. கதிர்காமநாதன், காசிநாதன், அன்டன் பாலசிங்கம்,
க. சட்டநாதன், ஆ. சிவநேசச்செல்வன், சோமசுந்தரம் ராமேஸ்வரன், மூர்த்தி, தெய்வீகன்,
சூரியகுமாரி பஞ்சநாதன், சந்திரிக்கா சுப்பிரமணியன், ரவிவர்மா, எஸ்.எம். கோபாலரத்தினம், முருகபூபதி, டீ.பி.எஸ்.ஜெயராஜ், சொலமன்
ராஜ், ஜீ.நேசன், சுபாஷ் சந்திரபோஸ், அன்னலட்சுமி இராஜதுரை, கமலா தம்பிராஜா, யோகா பாலச்சந்திரன்,
கு. இராமச்சந்திரன் , வி.ஏ. திருஞானசுந்தரம் உட்பட பலர் வீரகேசரி - மித்திரன் மற்றும்
முன்னர் வெளிவந்த ஜோதி முதலானவற்றின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்கள்தான்.
தமிழகத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராக
விளங்கிய கு.மா. பாலசுப்பிரமணியமும் ஒரு காலத்தில் வீரகேசரியில்தான் பணியாற்றியவர்.
வீரகேசரியில் தமது கன்னிப்படைப்பை எழுதிய பலர்
பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகவும் தேசிய சாகித்தியவிருது முதலான சிறப்பு விருதுகளை
பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.
வீரகேசரி மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டிகளில்
பரிசுபெற்ற பலரும் வீரகேசரியில் எழுதிவளர்ந்தவர்களே! குறிப்பிட்ட சிறுகதைப்போட்டியை
மலையக எழுத்தாளர் மன்றத்துடன் இணைந்து நடத்திய வீரகேசரி, பின்னாளில் வீரகேசரி பிரசுரமாக
அவற்றை தொகுத்தும் வெளியிட்டுள்ளது. அவ்வாறு வெளிவந்த தொகுதிதான் கதைக்கனிகள்.
எண்ணிறந்த எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துத்தந்துள்ள
வீரகேசரி வாரவெளியீட்டில் தொடர்கதைகளாக வெளியான பல நவீனங்களும் நூலுருவாகி தேசிய சாகித்திய
விருது உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளன.
கொழும்பில் நீண்டகாலமாக இயங்கிவரும் தமிழ்க்கதைஞர்
வட்டம் (தகவம்) ஆண்டுதோறும் தெரிவுசெய்யும் சிறந்த சிறுகதைகளின் வரிசையில் வீரகேசரி
வாரவெளியீட்டில் வெளியானவையும் இடம்பெற்றுள்ளமையும்
குறிப்பிடத்தகுந்தது.
1970 இற்குப்பின்னர், தென்னிந்திய இதழ்களின்
இறக்குமதியில் கட்டுப்பாடுகள் வந்த சமயத்தில் தொடங்கப்பட்ட வீரகேசரி பிரசுர வெளியீடுகள்
ஈழத்து இலக்கியவளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமது படைப்புகளை நூலுருவில் காணும் பாக்கியத்தையும்
பல எழுத்தாளர்கள் வீரகேசரி பிரசுரங்களின் வாயிலாகவும் பெற்றனர்.
அவ்வாறு வெளிவந்த நவீனம்தான் செங்கை ஆழியான்
எழுதிய வாடைக்காற்று. பின்னர் இந்த நாவலின்
பிரபல்யத்தினால், இக்கதை அதேபெயரில் தரமான திரைப்படமாகவும் வெளியானது.
வீரகேசரி பிரசுரங்கள் வெளிவரும் சந்தர்ப்பங்களில்,
அவை தொடர்பான மதிப்பீடுளை வீரகேசரி வெளியிட்டு, வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமிடையே ஆரோக்கியமான
இலக்கியப்பாலத்தையும் கட்டி எழுப்பியிருக்கிறது. வீரகேசரி பிரசுரங்கள் பற்றிய விரிவான
மதிப்பீட்டை இலக்கிய விமர்சகர் கலாநிதி ந.
சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.
வீரகேசரியின்
ஐம்பதாவது வருட நிறைவு காலத்தில் அந்த நூல் வெளிவந்தது. இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களையும் சேர்ந்த எழுத்தாளர்களின்
படைப்புகளுக்கு களம் வழங்கிவரும் வீரகேசரி பத்திரிகை குறிப்பிட்ட பிரசுர நாவல் வெளியீட்டுத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம்,
வன்னிப்பிரதேசம், கிழக்கிலங்கை, மலையகம், தென்னிலங்கை, உட்பட பல பகுதிகளையும் உள்ளடக்கிய
பிரதேசமொழிவழக்குகளுக்கும் களம் வழங்கியிருப்பது கவனத்திற்குரியது. வரலாற்று நாவல்களும்
இத்திட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளன.
வீரகேசரியில் கலை, இலக்கியவாதிகளின் நேர்காணல்கள்
தொடர்ச்சியாக வெளிவந்து, வாசகர் மத்தியில் அதிர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்து
இலக்கியவளர்ச்சியில் சிறந்த விமர்சன செல்நெறியை உருவாக்கியதிலும் வீரகேசரிக்கு பெரும்
பங்கிருக்கிறது.
பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை மாணவர்கள் தமது
ஆய்வுகளுக்கும் வீரகேசரி பிரசுரங்களையும் வீரகேசரியில் வெளியாகும் ஆக்கங்களையும் உசாத்துணையாக்கியிருக்கின்றனர்.
வீரகேசரியின் வரலாற்றை ஒரு நாளிதழின் நெடும்பயணம் என்ற பெயரில் நூலாக ஆவணப்படுத்தியிருப்பவர்
வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம். கார்மேகம்.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் தென் கிழக்கு ஆசியாவிலேயே தரமான தமிழ் இதழ் என்ற
புகழையும் பெருமையையும் வீரகேசரி வாரவெளியீடு பெற்றிருக்கிறது. வீரகேசரியில் வெளியான பல கலை - இலக்கியப்படைப்புகள் சிங்கப்பூர்,
மலேசியப்பத்திரிகைகளிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ன.
பிரதேச இலக்கியங்கள்
தேசிய – சர்வதேச தரத்திற்கு உயர்ந்து மக்களின் கவனத்தை
ஈர்க்கின்றதாயின்,
அவற்றை தெரிவுசெய்யும் பத்திரிகை இதழ்களின் ஆசிரியர்களின் பொறுப்புணர்வை நாம் சாதாரணமாக
கணிப்பிடமுடியாது.
வீரகேசரியின் ஐம்பது ஆண்டு நிறைவு விசேட மலரை வெளியிட்ட சமயத்திலும் குறிப்பிட்ட
பொன்விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நாவல் போட்டியின் காலகட்டத்திலும் வீரகேசரியின் கலை - இலக்கிய வகிபாகம்
முக்கியத்துவமானது.
ஐம்பது
ஆண்டு நிறைவு மலராக
வீரகேசரி வெளியானபொழுது, அதன் உள்ளடக்கச்சிறப்பு முக்கியத்துவம்
பெற்றது. இதழியல் ஆய்வுகளை சாதாரண வாசகனும்
புரிந்துகொள்ளும்வகையில் ஆக்கங்களை தெரிவுசெய்து வெளியிட்டது.
இலங்கை
செய்தி ஏடுகளின் தோற்றத்தின்
அரசியல் சமூக பின்னணிகளை
விரிவாக கூறிய ஆய்வுகளும் அம்மலரில் வெளியாகின.
பொன்விழா நாவல் போட்டிக்கு வந்து குவிந்த நாவல்களைத் தேர்வுசெய்யும் பணியில் பல தரப்பு வாசகர்களையும் வீரகேசரி நிறுவனம் இணைத்துக்கொண்டதையும்
இங்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.
பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பத்தலைவர்கள், தலைவிகள், பத்திரிகாலய ஊழியர்கள், இப்படி
பலரையும் அணுகி முதல்கட்டம் , இரண்டாம்கட்டம் , மூன்றாம்கட்டம் தேர்வுகளை நடத்தியே பரிசுக்குரியவை
தேர்வுசெய்யப்பட்டன.
இப்போட்டியில் பிரபல எழுத்தாளர்
செம்பியன் செல்வனின் 'நெருப்பு மல்லிகை நாவல்
முதல் பரிசினைப்பெற்றது.
சமகாலத்தில்
வெளியாகும் சங்கமம் இதழில்
எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு அனுபவத்தில் முதல் முயற்சிதொடர்பான நனவிடை
தோய்தல் பதிவும் முக்கியத்துவமானது.
எழுத்தாளர்கள்
தமது நூல் வெளியீட்டில் கன்னிமுயற்சி பற்றிச்சொல்லும்போது தம்மைத்தாமே
சுயவிமர்சனம் செய்தவாறு வாசகரின் சிந்தனையில் ஊடுறுவினார்கள்.
இவ்வாறு
பல வழிகளிலும் தமிழ் இலக்கியத்திற்கும் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் மத்தியில் ஆரோக்கியமான தொடர்பாடலை வீரகேசரி
நீண்ட நெடுங்காலமாக ஏற்படுத்திவருகிறது. அந்த நெடும்பயணத்தில் மீண்டும் ஒரு
மைல்கல்லை இன்று சந்திக்கின்றோம்.
( நன்றி: வீரகேசரி 05-08-2018)
letchumananm@gmail.com
No comments:
Post a Comment