முல்லைத்தீவு மீனவர்களின் உடமைகள் தீக்கிரை ; மூவர் கைது
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன?
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு
மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல் மட்டக்களப்பில்!!!
இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்திற்கு என்றும் பாகிஸ்தான் ஆதரவு
முல்லைத்தீவு மீனவர்களின் உடமைகள் தீக்கிரை ; மூவர் கைது
14/08/2018 முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் நேற்றிரவு தமிழ் மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் வாடிகள் என்பன தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தன் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்றையதினம் முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 27 மீனவர்களை கைதுசெய்துள்ள முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் பயணித்த 8 படகுகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு
மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல் மட்டக்களப்பில்!!!
நன்றி வீரகேசரி
இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்திற்கு என்றும் பாகிஸ்தான் ஆதரவு
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன?
16/08/2018 இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்னொரு நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டும், இல்லாமல் ஆக்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சில மோசமான விடயங்களால், தமிழர்களின் தொன்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது என்பது தான் வெளிப்படையான உண்மை.
அந்த வகையில் கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையில் , புகழ் பெற்ற சிவனொளிபாத மலையின் தொடக்க பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகை திட்டமிட்ட முறையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது, தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வளவு காலமும், சிவனடி பாதம் என இடம்பெற்றிருந்த பெயர்ப்பலகை இப்போது திடீரென கௌதமபுத்தரின் ஸ்ரீ பாதஸ்தானம் என மாற்றப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்தார்கள்? யார் இப்படி செய்தார்கள்? இவ்வாறான இனக்குரோதங்களை நெருப்பாக கொட்டி அதில் குளிர் காயும் எண்ணம் கொண்டவர்களின் நோக்கம் என்ன? என பல்வேறு கேள்விகள் தற்போது இலங்கை மட்டுமல்லாது, உலக வாழ் தமிழர்களிடையே எழ ஆரம்பித்துள்ளது. நன்றி வீரகேசரி
கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு
15/08/2018 இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் கலந்துகொணடு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இன்று கொண்டாடப்படுகின்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தினமானது மகாத்மா காந்தியின் 150 ஆவது நினைவு தினத்தை நினைவூட்டுவதாக அமைகின்றது.
நாம் அனைவரும் அவரது கொள்கைகளை வாழ்நாளில் பின்பற்றி செயற்பட வேண்டும். அத்துடன் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த வகையில் நாம் ஏனைய நாடுகளுக்கு எம்மாலான சகல உதவிகளையும் செய்து வருவதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
15/08/2018 மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இன்று புதன் கிழமை காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பட்டது.
கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக போது மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,ரவி கருநாநாயக்க உற்பட அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னார் ஆயரிடம் கையளித்தார்.
இதேவேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல் மட்டக்களப்பில்!!!
14/08/2018 செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படை நடாத்திய தாக்குதலில் 52 சிறுவர்கள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
இந் நினைவு நாளையொட்டி மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் நினைவேந்தல் சுடரேற்றப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌனப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.
மேலும் மட்டக்களப்பு கொடுவாமடுவிலுள்ள முன் பள்ளி பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு நிதியன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்திற்கு என்றும் பாகிஸ்தான் ஆதரவு
14/08/2018 பாகிஸ்தான் எப்போதும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆதரவளிக்கின்றதுடன் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றங்களினை அடைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றதென இலங்கைக்கான பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் தெரிவித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானின் 72 ஆவது சுதந்திர தினத்தினை மிகவும் அர்ப்பணிப்புடன் கொண்டாடியது.
பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியக வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தானிய தேசியக்கொடியானது பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கானினால் ஏற்றிவைக்கப்பட்டது. இதன்போதே உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியானது பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கானினால் இதன்போது வாசிக்கப்பட்டது.
பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நமது முன்னோர்கள் பாகிஸ்தான் என்ற தேசத்தினை உருவாக்குவதற்காக இணையற்ற தியாகங்களால் மற்றும் தனித்துவமான போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பாகிஸ்தானின் தேசபிதாக்களின் கனவுகளின்படி அதனை வடிவமைக்க வேண்டியது எமது பாரிய பொறுப்பாகும். அந்நோக்கத்தினை அடைவதற்கு அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்வுறவு பேணப்படவேண்டும்.
எங்களுடைய சொந்த விருப்புக்களை ஒதுக்கிவைத்துகொண்டு ஒற்றை மனோபாவத்துடன் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் அபிவிருத்தி மற்றும் கடந்தகால வெற்றிகளை புதுப்பிக்கமுடியும்.” என பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்நூன் ஹிசைனின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானிய பிரதமரின் ஓய்வுபெற்ற நீதிபதி நஸிர் உல் ஹக்கின் சுதந்திர தின வாழத்துச் செய்தியில்,
இயற்கையின் கொடைகளால் எமது நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளமை நிதர்சனமான உண்மை. முக்கியமான புவிச்சரிதவியல் அமைவிடத்திலிருந்து உலகில் வெற்றிபெற்ற தேசமாக உயர்ச்சிபெறவும், எமது சொந்த விதியினை திறம்பட செதுக்கவும், எமது முற்போக்கான இளைஞர்கள் அதிசிறந்த திறமை பெற்றிருக்கின்றார்கள்.
மேலும் முஹம்மத் அலி ஜின்னாவின் கொள்கைகளின்பால் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தின் கொள்கைகளை கடைப்பிடித்தல் நிகழ்கால சவால்களிலிருந்து மீளவும், பாகிஸ்தானை பொருளாதாரரீதியாக வலிமையாக்கவும் மற்றும் வளமான நாடாக உருவாக்கவும் துணைபுரியும்”. எனக் கூறப்பட்டிருந்தது.
பதில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் ஜான்பாஸ் கான் இலங்கை பாகிஸ்தான் இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த தருணம் முதல் பாகிஸ்தான் இராஜதந்திர உறவுகளை நிர்மாணித்தது. பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பொது நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள இருதரப்பு உறவுகள் மென்மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எப்பொழுதும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஜனநாயகம், சட்டவாட்சி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு ஆதரவளித்திருக்கின்றது. அத்துடன் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்களிற்கு சமாதானம், நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றங்களினை அடைவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு இலங்கை - பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக முதலீட்டு சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக சபையின் உறுப்பினர்கள், இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment