.
திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின்
மெரினாவில் கருணாநிதிக்கு அடக்கம் செய்ய இடம் மறுத்து தீர்ப்பு வந்திருந்தால் என்னையும் அவருக்கு அருகில் அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று திமுக செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கமுடன் பேசினார்.
திமுக செயற்குழுவில் குரல் தழுதழுக்க ஸ்டாலின் உருக்கமுடன் பேசியதாவது:
“இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்ற உணர்வோடு இந்த அவசர செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அத்தனைபேரும் நமது அஞ்சலியை செலுத்திய பின்னர், தலைவருடன் நெருங்கிப் பழகியிருந்த இயக்க முன்னோடிகள் உரையாற்றினார்கள்.
பொதுச்செயலாளர் நிறைவுரை ஆற்றவேண்டும் என்று நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. ஆனால், பேராசிரியர் 'நான் பேச இயலாது, அந்த சூழ்நிலையில் நான் இல்லை, தயவு செய்து யாரும் என்னைக் கட்டாயப்படுத்தக்கூடாது' என்று என்னிடத்தில் தெரிவித்தார்.
தலைவர் இல்லாத இந்தக் கூட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. நீங்கள் எல்லாம் தலைவரை இழந்துள்ளீர்கள். நான் தந்தையையும் சேர்த்து இழந்துள்ளேன். தலைவர் தொண்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து பேச முடியாத நிலையில் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவருடைய ஆசியுடன் செயல் தலைவர் பொறுப்பேற்று உங்களின் ஒத்துழைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் மாவட்டந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். அந்த ஆய்வு நிகழ்ச்சியில் ஒவ்வொரு கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகளோடு நான் கலந்துரையாடியபோது நான் அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, “அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒன்றாகச் செயல்பட்டு வருகின்ற காலகட்டத்தில் திமுகவை வெற்றிபெறச்செய்து அந்த வெற்றியை அவர் காலத்திலேயே அவர் காலடியில் வைப்போம்” என்று சொன்னேன்.
ஈரோட்டில் நடந்த கூட்டத்திலும் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். அந்த வெற்றியை அவரது காலடியில் கொண்டு வைப்போம் என்று பேசினேன். ஆனால் அதை நிறைவேற்றிட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் நான் உள்ளேன்.
தலைவர் உடல் அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யவேண்டும் என்று நாமெல்லாம் முடிவு செய்தோம். அது நம்முடைய எண்ணமல்ல, தலைவரின் எண்ணம், ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டோம்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எங்களிடம் 'இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கிற சூழ்நிலை இருக்கிறது, இனி காப்பாற்றவே வழி இல்லை, நாங்கள் முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தனர்.
சோகத்தில் கண்ணீர் மல்க நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம், நம்முடைய முன்னோடிகள் தலைவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிட வேண்டுமே என்று யோசித்து பல நண்பர்கள் மூலம் அரசுக்கு சேதியைச் சொல்லி அனுப்புகிறோம். ஆனால், அங்கிருந்து வந்த செய்தி தலைவரின் ஆசையை நிறைவேற்ற முடியாத செய்தியைத்தான் தெரிவித்தது.
அப்போது நமது முன்னோடிகள் நேரடியாக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைப்போம் அரசு சாதகமான முடிவெடுக்கும் என்று கூறினார்கள். என்னை வரவேண்டாம், தலைவரின் மகன் நீங்கள் என்று முன்னோடிகள் சொன்னார்கள். இல்லையில்லை தலைவரின் விருப்பம் தான் எனது எண்ணம். அதைத்தாண்டி மானம் மரியாதை எல்லாம் அப்புறம் என்றேன்.
பின்னர் முதல்வரைச் சந்தித்துப் பேசினோம். எங்கள் கோரிக்கையைச் சொல்கிறோம், அப்போது முதல்வர் சொல்கிறார், விதிமுறைகள் கொடுக்க வாய்ப்பில்லை. நாங்கள் லீகல் ஒப்பினியன் கேட்டுள்ளோம். அதற்கும் வாய்ப்பில்லை என்றார்.
அப்போது நான் கூறினேன் “என்ன லீகல் ஒப்பீனியன் அரசு நினைப்பதைத்தான் லீகல் ஒப்பீனியனாகக் கூறுவார்கள். நாங்களும் ஆட்சியில் இருந்துள்ளோம்” என்று கூறினேன்.
வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு நான் “தலைவரின் இறுதி ஆசை அது. எப்படியாவது நிறைவேற்றிக்கொடுங்கள்” என்று கூறினேன். எங்களை விரட்டவேண்டும் என்ற எண்ணத்தில், 'ஆகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அப்போதும் நம்பிக்கையுடன் வந்தோம்.
அதன் பின்னர் 6.10க்கு தலைவர் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்தார் என்ற சோக செய்தி வருகிறது. கண்ணீருடன் உடனடியாக அனைவரும் கூடி கடிதம் எழுதுகிறோம். முறைப்படி கேட்கவேண்டும் என்று கடிதம் எழுதுகிறோம். ஆனால் அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கோரிக்கையை நிராகரித்து காந்த ிமண்டபத்தில் இடம் கொடுப்பதாகக் கூறுகின்ற அறிவிப்பு வெளியானது.
என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வழக்கறிஞர் வில்சன் வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு போடலாம் என்றார். வெல்ல முடியுமா என்று கேட்டேன். நான் நீதிபதியிடம் இரவே பேசுகிறேன் என்றார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கண்ணீரும் கம்பளையுமாக ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் நிற்கிறோம், தீர்ப்பு சாதகமாக வந்தது.
அதை நாங்கள்கூட அறியவில்லை, கீழே நின்றுகொண்டிருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்கள் கோஷமிடுகின்றனர். பிறகுதான் எனக்குத் தெரிகிறது. அந்தத் துக்கத்திலும் எங்களுக்கு சிறிது மகிழ்ச்சி அளித்த சம்பவம் அது.
அதற்கு எல்லோரும் என்னைப் பாராட்டினீர்கள். ஆனால் நான் சொல்கிறேன் இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக வழக்கறிஞர் அணி என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, திமுக பல்வேறு சோதனைகளைச் சந்தித்த காலம் உண்டு. கட்சிக் கொடியை சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நிலைமை வரக்கூடிய நிலையில் தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடந்தது.
விசாரணை தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்தது. அன்று தலைவர் சொன்னார், தீர்ப்பு நமக்கு ஒருவேளை சாதமாக வராமல் போயிருந்தால் அண்ணாவின் அருகில் என்னை நீங்கள் புதைத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் நீங்கள் எல்லாம் எனக்கு மலர்வளையம் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினார்.
ஒருவேளை தீர்ப்பு மாறியிருந்தால் என்னையும் தலைவர் பக்கத்தில் புதைக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு நிலை வரவில்லை. கருணாநிதியின் போராட்டம் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது, ஆக அவர் மறைந்தும் வெற்றிபெற்றார்.
தலைவர் கருணாநிதிக்கு நாமெல்லாம் நம்முடைய அஞ்சலியை செயற்குழு மூலம் தெரிவித்திருந்தாலும், உங்களுக்கு மட்டுமல்ல, திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் தலைவர் சார்பில் கேட்டுக்கொள்வது இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கருணாநிதி வழி நின்று இயக்கத்தை காப்போம். அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்வுகளைக் காப்பாற்ற உறுதியெடுப்போம்.”
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment