உலகச் செய்திகள்


கருக்கலைப்பு தடைச்சட்டத்தை சீர்திருத்த தீர்மானம்!!!

ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் பரிதாபமாக பலி!!!

ரஷ்ய பிரதமர் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்
கருக்கலைப்பு தடைச்சட்டத்தை சீர்திருத்த தீர்மானம்!!!
30/01/2018 அயர்லாந்தில் நீண்டகாலமாக அமுலிலுள்ள கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.


எதிர்வரும் மே மாதம் இதற்கான வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் தற்போது கருக்கலைப்புச் செய்தல் சட்டவிரோதமாக உள்ளது. இருப்பினும், கருவைச் சுமக்கும் பெண்ணின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் இருந்தால் மாத்திரம், அந்நாட்டில் கருக்கலைப்புச் செய்ய அனுமதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 


ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் பரிதாபமாக பலி!!!
29/01/2018 இந்தியா - மும்பை வைத்தியசாலையொன்றில்  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளியுடன் சென்ற நபர் ஒருவர் ஸ்கேன் இயந்திரத்தின் காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ராஜேஷ் மாரு என்பவர் விற்பனை விநியோகஸ்த்தராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வயதான உறவினர் ஒருவரை தனியார் வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றுள்ளார்.
ராஜேஷ் அழைத்துச் சென்ற பெண்ணுக்கு சுவாசக் கேளாறு இருந்ததால் ராஜேஷ் ஒக்சிஜன் சிலிண்டர் ஒன்றை உடன் எடுத்துச் சென்றுள்ளார்.
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் அறைக்குள் ராஜேஷ் ஒக்சிஜன் சிலிண்டருடன் சென்றுள்ளார். பணியில் இருந்த வைத்தியர் மற்றும் ஸ்கேன் அறைக்கு வெளியே இருந்த ஊழியரும் ஒக்சிஜன் சிலிண்டருடன் உள்ளே செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. 
ஸ்கேன் அரைக்குள் சென்ற ராஜேஷ் இயந்திரத்தின் சக்தி வாய்ந்த காந்தபுலத்தால் ஈர்க்கப்பட்டு இயந்திரத்தில் வேகமாக மோதியதில் உயிரிழந்துள்ளார்.
ராஜேஷ் உயிரிழப்புக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து ராஜேஷின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டிற்கமைய ஸ்கேன் அறையிலிருந்த ஊழியர்கள் வைத்தியர் உட்பட மூவரை மும்பை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  நன்றி வீரகேசரி

ரஷ்ய பிரதமர் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை

31/01/2018 ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் உட்பட 210 பேர் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ரஷ்ய உளவுத் துறை சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டி ரஷ்யாவைச் சேர்ந்த 210 பேரின் பட்டியலை அமெரிக்க அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், 22 அமைச்சர்கள், ரஷ்ய அதிபர் மாளிகையின் தலைமை நிர்வாகி அன்டன் வைனோ, 100 தொழிலதிபர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இவர்கள் அனைவரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
இப்போதைக்கு இவர்கள் மீது எவ்வித பொருளாதார தடையும் விதிக்கப்படவில்லை.
ஆனால், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 210 பேரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இவர்கள் மீது வருங்காலத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியபோது, “வரும் மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நேரத்தில் அதிபர் விளாடிமிர் புதின், முன்னணி தொழிலதிபர்கள் இடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்க அரசு முயற்சி செய்கிறது” என்று தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி
இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறை : புதிய சட்டம்

31/01/2018 இந்தியா உட்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருப்பதால் போரில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் விகிதாச்சாரத்தை விட பெண்களின் விகிதாசாரம்  கூடிக்கொண்டே செல்கிறது.
இதனை சரி செய்ய அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, இரண்டாவது திருமணம் கணவர் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ இரண்டு பேருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
அதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரிNo comments: