கண்மூடிக் காதல்கொள்ளும்
காதலினை விட்டிடுவோம்
காதலினைச் செய்திடுவோம்
பெண்மனமும் ஆண்மனமும்
பேதமின்றிக் கலக்கும்படி
மண்மீது காதலினை
மலர்ந்துவிடச் செய்திடுவோம் !
அரும்பாகி மொட்டாகி
மலராகும் காதலினை
விரும்பாதர் இவ்வுலகில்
இல்லையென்றே இயம்பிடலாம்
நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
நற்காதல் என்றென்றும்
நம்வாழ்வின் அடித்தளமாய்
நமையியக்கும் சக்தியன்றோ !
காதலிப்பார் வாழ்வெல்லாம்
காணுவது பேரின்பம்
காதலனும் காதலியும்
கனவினிலும் காதலிப்பார்
சோதியெனக் காதலங்கே
சுடர்விட்டு நிற்குமங்கே
சொர்க்கமதைக் காதலர்கள்
சொந்தமாய் ஆக்கிடுவார் !
காலமெலாம் காதலுடன்
கைகோர்த்துப் பாருங்கள்
காணுகின்ற அத்தனையும்
கற்கண்டாய் ஆகிவிடும்
ஓடியோடி உழைத்தாலும்
உள்ளமதில் காதலின்றேல்
உங்கள்வாழ்வு உலகினிலே
உவப்புதனை ஈந்திடுமா !
காதலர்கள் தினமதிலே
காதலினைப் போற்றிடுவோம்
காலமெலாம் காதலது
வாழ்கவென வாழ்த்திடுவோம்
சாதிமத பேதமின்றி
காதலர்கள் தினமதனை
பூதலத்தில் பொலிகவென்று
புகழ்ந்து கவிபாடிடுவோம் !
No comments:
Post a Comment