அவுஸ்திரேலியா "தமிழ் அம்மா"வின் கனவுகளை நனவாக்குவோம்! பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார் - முருகபூபதி


இந்தப்பதிவில் நான் "அம்மா" எனக்குறிப்பிடுவது, "அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்" என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே!
பொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது சந்ததி குறித்தும் அவர்களின் வளமான வாழ்வுபற்றியதுமாகவே தொடரும். எனக்கு இலங்கையிலும் புகலிட தேசத்திலும் நீண்டகாலமாக நன்குதெரிந்த " தமிழ் அம்மா" திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த பரிச்சியமுடன், சமய இலக்கியங்கள் தொடர்பாக பரந்த ஞானத்துடனும், அவுஸ்திரேலியா சிட்னியிலும் மெல்பனிலும் கலை,இலக்கிய நிகழ்வுகளில் முடிந்தவரையில் தவறாமல் கலந்துகொள்ளும் கலா ரஸிகையாகவும் எம்மத்தியில் நடமாடுபவர்.
இந்த ஆண்டு இறுதியில் அவருக்கு 90 வயது பிறக்கிறது. எனினும் சுறுசுறுப்புடன் இயங்கிவருகிறார். தொடர்ச்சியாக சொற்பொழிவாற்றி வருகிறார். வாசிக்கிறார். வாசித்தவற்றிலிருக்கும் சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
         இலங்கையில் ஒரு கால கட்டத்தில் தமிழ் கல்வித்துறையிலும் இலக்கிய வட்டாரத்திலும் பிரபல்யம் பெற்று விளங்கிய வித்தியாதிபதியாக கல்வி அமைச்சில் நீண்ட காலம் பணியாற்றிய லக்ஷ்மண ஐயரின் அருமைத்துணைவியாரான பாலம் அவர்கள், கணவரின் கல்விப்பணிக்கும் பக்கபலமாக மிளிர்ந்தவர்.
      இலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்ப்பாடசாலைகளில் நடக்கும் விழாக்களுக்கு பிரதம அல்லது சிறப்பு விருந்தினராக கணவர் அழைக்கப்படும்பொழுதெல்லாம் மனைவி பாலம் அவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களினால் அழைப்பு விடுக்கப்படும்.
   திருமதி பாலம் அவர்களின் கைகளினால் பரிசுகள்- தங்கப்பதக்கங்கள் வாங்கிய தமிழ் மாணவர் சமுதாயம் இதனை மறக்கமாட்டாது.
   இந்தியாவில் காசி சர்வகலாசாலையில் பி.ஏ. பட்டத்தில் அதிக கூடிய புள்ளிகளைப்பெற்றமைக்காக தங்கப்பதக்கம் பெற்றிருக்கும் பாலம், முறையாக கர்நாடக சங்கீதமும் சித்தார் இசையும் கற்றவர்.
  வேலூரில் கல்விப்பாரம்பரியமும் கலை,இலக்கிய உணர்வும் மிக்க குடும்பத்தில் பிறந்த இவரின் வயதையொத்த இரத்த உறவினர்கள்தான் எழுத்தாளர் சார்வாகன் என்ற 'பத்மஸ்ரீ' ஸ்ரீனிவாசன். பல திரைப்படங்களில் தோன்றியிருக்கும் நடிகர் கல்கத்தா விஸ்வநாதன், இந்திய பாதுகாப்புத்துறையில் உயர்  பதவியிலிருந்த கேர்ணல் ஹரிஹரன் ஆகியோர்.
பாலம் அவர்களின் தமிழறிவு சமயம் இசை முதலான துறைகளிலிருந்த ஆற்றலினால் பெரிதும் கவரப்பட்டுத்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற லக்ஷ்மண ஐயர், இவரை வாழ்க்கைத்துணைவியாக்கிக்கொண்டார்.
பாலம் அவர்களின் சகோதரர் (அமரர்) கலாநிதி சிவராமனும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்தமையால் அவரே இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்து இணைத்துவிட்டவர்.
கலாநிதி சிவராமன் சைவசித்தாந்தத்தில் பட்டம் பெற்று கனடாவில் பேராசிரியராக பணியாற்றியவர்.
தமது இல்லறவாழ்விற்கு துணைநின்றவரின் பெயரையே இந்த இலக்கியத்தம்பதியர் தமது மூத்த புதல்வனுக்கும்  சூட்டியிருக்கின்றனர்.
  திருமணத்தின் பின்னர் இலங்கை வந்த பாலம், ஆசிரியையாக தனது கல்விப்பணியைத்தொடர்ந்தார்.
  சுமார் நாற்பது ஆண்டுகள் கொழும்பில் வாழ்ந்தார். கல்வி அமைச்சு சமய விவகாரம் தொடர்பாக பாடத்திட்டங்களை உருவாக்க முனைந்தபொழுது இந்து சமய பாட நூல்களை எழுதும் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றினார். இலவசமாக பாட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்கத்தொடங்கிய  அந்தக்காலப்பகுதியில், இந்து சமயம் 1 முதல் 10 வரையிலான பாட நூல்களை எழுதும் பணியில் பலருடனும் இணைந்து சிறப்பாகப்பணியாற்றியிருக்கிறார்.
இவர் அங்கு பணியாற்றிய காலத்தில், சமயபாடத்தை மாணவர்கள் இலகுவாக கற்கவேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்களை மறுசீரமைக்க ஒரு குழு  அமைக்கப்பட்டது.
அதற்காக பாடசாலைகளில் சமயபாடத்தை கற்பித்த ஆசிரியர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டிருக்கின்றன. அக்குழுவிலே பாலம் அம்மாவுடன் இணைந்திருந்தவர் தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.
"லக்‌ஷ்மண அய்யர், கைலாசபதி முதலான கல்விமான்களும் ஆலோசகர்களாக இருந்தனர். சமயம் கற்பித்த வேறும் பல ஆசிரியர்களும் மற்றும் ஓவியர்களும் நூலாக்கக்குழுவில் அங்கம் வகித்தனர். தற்பொழுது சிட்னியில் வதியும் புவனேஸ்வரி அருணாசலம், ஓவியர் ஞானசேகரம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
சைவநெறி என்னும் தலைப்புடன் முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்கும்  மாணவர்களின் மனதிலே சாதாரணமாகத் தோன்றக்கூடிய சந்தேகங்களுக்கு தகுந்த விடையளிக்கும் வண்ணம் நவீனமுறையிலே இலகு தமிழில் அழகிய படங்களுடன் பாடங்களை அமைத்ததாகவும், இதற்கு மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாகவும்,
இந்தியாவிலே ஆசாரம் மிக்க ஒரு பிராமணக்குடும்பத்திலே பிறந்து வளர்ந்த பெண்ணாக பாலம் அம்மா இருந்தபோதிலும் பழமையை கைவிடாமலும் நவீன உலகிற்கு ஏற்றவகையிலே  மாணவர்கள் சவால்களை சந்திக்கவேண்டும் என்பதில் அவருடைய பார்வை இருந்ததாகவும்" திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் குறிப்பிடுகிறார்.
அத்துடன் அக்காலப்பகுதியிலேயே அவர் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கியிருந்ததைப்பார்த்து தான் வியப்புற்றதாகவும் தெரிவிக்கிறார்.

   1970-80 காலப்பகுதியில் கொழும்பில் நடந்த பல இலக்கிய நிகழ்வுகளுக்கும் பாலம் தலைமை ஏற்றவர்.
1970 களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தபின்னர் இலங்கையில் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்த்திரைப்படங்கள் தயாரிப்பதற்கு கடனுதவி செய்வதற்காகவும் திரைப்படக்கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் தரமான தமிழ்த்திரைப்படங்களை இந்தியாவிலிருந்து அரசே நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கத்தொடங்கியது. அக்காலப்பகுதியில் சிறந்த தமிழ்ப்படங்களை தெரிவுசெய்யும் குழுவிலும் அங்கம் வகித்திருந்த பாலம் அம்மையார், திரைப்பட தணிக்கைச்சபையிலும் இருந்தவர். அத்துடன் தமிழ்த்திரைப்பட சுவடிகளையும்  தெரிவுசெய்திருக்கிறார்.
கலாரசிகையாகவும் அவர் விளங்கியிருப்பதற்கு இந்தப்பதவிகளும் காரணம்.
   1975 இல் புதுக்கவிதை மிகுந்த வீச்சுடன் எழுச்சிகொண்ட வேளையில், புதுக்கவிதைக்காகவே அக்னி என்ற இதழை கவிஞர் ஈழவாணன் நடத்தினார்.
 அக்னி முதலாவது இதழின் வெளியீட்டுவிழா பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபொழுது அதற்குத் தலைமை தாங்கி இலக்கியக்கூட்டங்களுக்கு பெண்களையும் தலைமைதாங்கச்செய்யவேண்டும் என்ற புதிய மரபை அந்த புதுக்கவிதை ஏட்டின் விழாவில் உருவாக்கினார்.
 ஈழத்தில் கவிஞர் முருகையன் தமிழகத்தில் சிதம்பர ரகுநாதன் கி.வா.ஜகன்னாதன் போன்றோர் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்த அக்காலகட்டத்தில், இலக்கணத்தை தெரிந்துகொண்டு புதுக்கவிதையில் மீறல்கள் இடம்பெறவேண்டும் என்ற கருத்துப்போராட்டம் நடந்துகொண்டிருந்த சர்ச்சைமிக்க வேளையில் பாலம் அவர்களின் தலைமையுரை இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.
 கல்வி, இலக்கியம் என தனது சிந்தனைகளை வளர்த்துக்கொண்டிருந்த பாலம், பெண்கள் சமூகப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதிலும் மிகுந்த சிரத்தைகொண்டிருந்தவர். அதற்குத்  தாமே முன்மாதிரியாக இயங்கியவர்.
 கொழும்பில் இராமகிருஸ்ண மிஷனில் இணைந்து சாரதா சமிதியை வளர்த்தெடுத்தார். இந்த அமைப்பில் சில வருடங்கள் தலைவராகவும் பணியாற்றினார். அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னரும் கொழும்பிலும் மட்டக்களப்பில் இயங்கும் இராமகிருஸ்ண மிஷனுடனான தொடர்புகளைப்பேணிவருகிறார்.
 அவுஸ்திரேலியாவில் பல இலக்கியக்கூட்டங்களில் சமய நிகழ்வுகளில் இவரது கருத்துரைகள் பயன் மிக்கது. நூல் வெளியீட்டு விழாக்களில் நூல் ஆய்வுரை நிகழ்த்தவரும்பொழுது குறிப்பிட்ட நூலை முழுமையாகப்படித்து எளிமையாகவும் நயமாகவும் பேசுவார்.
 அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தொடர்ச்சியான வருடாந்த எழுத்தாளர் விழாக்களுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கிவரும் இவர், இந்த அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமாவார்.
 சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியில் பல வாரங்கள் யாத்திரை என்ற தலைப்பில் இந்தியத்திருத்தலங்களைப்பற்றி உரையாற்றியிருக்கிறார்.
 தொடர்ச்சியான வாசிப்புப்பழக்கத்தை இயல்பாக்கிக்கொண்டிருக்கும் பாலம், அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் பலரதும் படைப்புகளைப்படித்துவிட்டு, தமது கருத்துக்களை நேரடி சந்திப்பின்போது அந்தப்படைப்புக்குரியவரிடம் தெரிவிக்கும் நல்லியல்பு கொண்டவர். இந்த இயல்பு முன்மாதிரியானது.
  எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் கனிவாகப்பேசும் பாலம் லக்ஷ்மணன், யேசு பாலகன் அவதரித்த கிறிஸ்மஸ் தினத்தன்றுதான் பிறந்தார்.
  இவரிடமிருந்து இலக்கியவாதிகளும் கலா ரஸிகர்களும் தமிழ்க்கல்வியியலாளர்களும் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்வதற்கும் நிறையவுண்டு.
 இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து கல்வியை தொடர முடியாமல் தவித்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிதியுதவி வழங்கிவரும் எமது  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடக்க கால உறுப்பினராக விளங்கும் பாலம் அம்மையார், இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதையும் தம்மாலியன்ற ஆதரவுகளை வழங்குவதையும் வழக்கமாகக்கொண்டவர்.
இதுதொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலை இங்கு பதிவுசெய்யலாம்.  கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஊடாக ஒரு மாணவருக்கு பாலம் அம்மா உதவி வழங்கிவந்தார். இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் அம்மாணவரைச்சந்தித்து கல்வி முன்னேற்றம் பற்றியும் கேட்டுத்தெரிந்துகொள்வார்.
குறிப்பிட்ட மாணவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பட்டமும் பெற்றார். அதன் பின்னரும் பாலம் அம்மா, அம்மாணவரைச்சந்தித்திருக்கிறார். அவ்வேளையில் அந்த மாணவருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அம்மாணவருக்கு வேலைக்குச்செல்வதிலிருந்த போக்குவரத்து பிரச்சினையையும் ஆக்கபூர்வமாக தீர்த்துவைத்துவிட்டு திரும்பிவிட்டார்.
ஆனால், எம்மிடம் சொல்லவில்லை. காலம் கடந்துதான் அறிந்துகொண்டோம். இவ்வாறு இரண்டு கரங்களுக்கும் தெரியாமல் மனிதநேயம் பாராட்டும் அருங்குணத்தையும் கொண்டிருப்பவர்.
1994 ஆம் ஆண்டு அவருடைய தலைமையில்  எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலை மெல்பனில் வெளியிட்டுவைத்தேன். அங்கு அவர் உரையாற்றும்போது, "எழுத்தாளர்கள் பல்வேறு இயல்புகளுடன் இயங்குபவர்கள். முரண்பாடான கருத்துக்களையும் எழுதுபவர்கள். அதனால் சர்ச்சைகளும் எழுவதுண்டு. எனினும் அவர்களைப்பற்றிய நினைவுகளை பதிவுசெய்யும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இந்த நூலில் முருகபூபதி ஒரு அன்னப்பட்சியைப்போன்று இயங்கியிருக்கிறார். தான் சந்தித்த எழுத்தாளர்கள் எத்தகைய குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும், அவர்களிடம் தான் கண்டுகொண்ட மேன்மையான இயல்புகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கி, நாம் அறியாத பக்கங்களையும் தெரிவித்துள்ளார்."  என்று பேசினார்.
அந்தச்சபையில் ஓவியர் கே.ரி. செல்வத்துரை அய்யாவும் இருந்தார். இவர் எழுத்தாளர் அருண். விஜயராணியின் தந்தையார். அவர் வீடு திரும்பியதும் பெரிய  அன்னப்பட்சி படம் வரைந்து அதற்கு அழகான பிரேமும் இட்டு எடுத்துவந்து எனக்கு அன்பளிப்பாகத்தந்தார்.
அவர் தந்த அன்னப்பட்சி இன்றும் எமது இல்லத்தில் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது!
2003 ஆம் ஆண்டு  மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவின்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் அடங்கிய எம்மவர் நூலை எழுதியிருந்தேன்.  பாலம் அம்மா அவர்கள்தான் அதனையும் அறிமுகப்படுத்தி வெளியிட்டுவைத்தார்.
1972 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் மன்றத்தை உருவாக்கினோம். அந்த அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட   நிகழ்ச்சிகளுக்கும் தமது கணவர் லக்ஷ்மண அய்யருடன் வந்திருக்கிறார். அங்கு  ஏற்பட்ட அறிமுகத்தினால் 1975 இல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த அக்னி - புதுக்கவிதை இதழ் வெளியீட்டு விழாவில் பாலம் அம்மா தலைமையில் பேராசிரியர் நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோருடன் நானும் உரையாற்றியிருக்கின்றேன்.
இவர்தான் தமிழகத்தின் படைப்பாளி  பத்மஶ்ரீ சார்வாகனையும் மெல்பனில் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தவர்.
இவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எம்மோடு கலை இலக்கிய உறவில் கலந்திருக்கும்   பாலம் அம்மாவுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவரின் ஆழ்ந்த தமிழ் இலக்கியப்புலமையை அறிந்துகொள்ள முடியும். இலக்கியத்தேடல் அவரது இயல்பு.
" மெல்பனில் நடந்தவொரு தமிழ்ப்பாடசாலைக்கலைவிழாவில், தலைமையுரை, நிகழ்ச்சி அறிவிப்பு, நன்றியுரை எல்லாவற்றையும் மாணவர்களே ஏற்று நடத்தினார்கள். உச்சரிப்பு செம்மையாகவிருந்தது. அங்கு வந்திருந்த ஒரு பெரியவருடன் இதுபற்றிப்பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்:" எங்களுடைய பிள்ளைகள் தங்களைச்சூழ அவதானிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், சுய அடையாளம் அமைத்துக்கொள்ளும் ஆர்வம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழை அறியும் ஆவல் வந்துள்ளது" என்று.
வருங்காலத்தில் இந்தத் தமிழ் முயற்சிகள், வளரும் தலைமுறையின் தமிழறிவு ஆகியவை ஒரு சில தமிழறிஞர்களை தோற்றுவிக்காமல் போய்விடாது, புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து புதிய தமிழ்ச்சக்தி பிறக்காமல் போய்விடாது என்றே சொல்லத்தோன்றுகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரம் தமிழிலே பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதி சொல்லிய வாசகத்தை நிறைவுசெய்யும் தமிழ்ப்பெருமகனும் தமிழ்ப்பெருமகளும் இந்த இளைய சந்ததியினரிடையே மறைந்திருக்கிறார்கள். வெளிவருவார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது." என்று முடிவுறும் ஒரு கட்டுரையை பாலம் அம்மா, மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரில் (2000 நவம்பர்) புலம்பெயர்வில் எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதில் அவரது தீர்க்கதரிசனம் தென்படுகிறது. அவரது கனவுகளும் தொடர்கிறது.
இம்மலர் மெல்பனில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது.
அவுஸ்திரேலியாவில்  பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான புகுமுக பரீட்சையில் தமிழில் சித்திபெற்று மேலதிக புள்ளிகளை பெற்றுவருகின்றனர். பாலம் அம்மாவின் கனவுகளை தொடர்ந்தும் நனவாக்கும் பணிகளை இங்கு வாழும் படைப்பாளிகளும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களும் நனவாக்குவார்கள்!
அம்மாவின் கனவை நனவாக்கவேண்டியது பிள்ளைகளினதும் பேரர்களினதும் கடமை!
அண்மையில் நடந்த எனது புதிய நூலின் வெளியிட்டுவிழாவில் தமிழ் வாழ்த்துப்பாடியதும், தமிழில் வரவேற்புரை நிகழ்த்தியதும் மெல்பனில் பிறந்த தமிழ்க்குழந்தைகள்தான்! அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதிவைத்துக்கொண்டு பாடவில்லை! பேசவில்லை!! இதுவும் சொல்லவேண்டிய கதைதான்!!!
பாலம் -  லக்ஷ்மண அய்யர் தம்பதியரின் புதல்வி திருமதி மங்களம் ஶ்ரீநிவாசனும் கலை இலக்கிய ஆர்வலராவார். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்  நிகழ்ச்சிகளில் தலைமையேற்றிருப்பவர். இவரின் பிள்ளைகளும் கலைஞர்களாவர். அரங்கேற்றம் கண்டவர்கள். இவ்வாறு கலை - இலக்கிய பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கும் பாலம் அம்மா எனது நேசத்துக்குரியர்.
எனது தாயார் இலங்கையில் எதிர்பாரத விதமாக திடீரென்று 2003 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்கள். அவ்வேளையில் நான் இருதய சத்திரசிகிச்சைக்குட்பட்டிருந்தமையால் தாயாரின் இறுதி நிகழ்வுக்குச்செல்ல முடியவில்லை.
மெல்பனில் எமது இல்லத்தில் நடந்த அஞ்சலி நிகழ்வுக்கு தமது மகள் பேரக்குழந்தைகள் சகிதம் வருகை தந்து ஆறுதல் சொன்ன பாலம் அம்மா, அன்றையதினம் கூட்டுப்பிரார்த்தனையும் நடத்தி, அன்னையர் மகிமை என்ற தலைப்பில் உரையும் நிகழ்த்தினார். எனது வாழ்வில் இந்தச்சம்பவமும் சொல்லவேண்டிய கதைதான்!
இலங்கையில் ஞானம் இதழ் பாலம் அம்மாவை அட்டைப்பட அதிதியாக கௌரவித்தபோது அதற்கான பாராட்டுரையும் எழுதியிருக்கின்றேன். சிட்னியில் கம்பன் கழகம் இவருக்கு சான்றோர் விருது வழங்கியிருக்கிறது.
              ----0---



No comments: