உலகச் செய்திகள்


ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் : முறியடித்த பொலிஸார்

ஏமன் அதிபர் அப்துல்லா ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்

ட்ரம்பை ரத்தத்தில் குளிக்க வைப்போம் : எச்சரிக்கும் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள்

அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய லெபனானின் கோரிக்கை.!

ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ‘முஸ்லிம்கள் பயணத் தடை’ கொள்கையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதோடு முழு வீச்சில் அதை செயல்படுத்தவும் ஆதரவு அளித்திருக்கிறது.
சாடு, ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கும் ட்ரம்பின் கொள்கைக்கு எதிரான சில சட்டரீதியான தலையீடுகளால் அக் கொள்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் அலுவலகம் அந்தத் தடையை நீக்குபடி அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 9 நீதிபதிகளில் 7 பேர் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
ட்ரம்பின் இக் கொள்கை தொடர்பாக  நீதிமன்றங்களில் தற்போது  விவாதிக்கப்பட்டு வந்தாலும் கூட சர்ச்சைக்குரிய இந்த கொள்கையை இனி முழுமையாக செயற் படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.  நன்றி வீரகேசரி 
பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டம் : முறியடித்த பொலிஸார்

06/12/2017 பிரிட்டன் பிரதமரை கொலை செய்ய தீவிரவாதிகள் செய்த சதி திட்டம் அம்பலம் ஆகி இருக்கிறது. இந்த சதி திட்டத்தை தீட்டிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பிரிட்டனில் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு  சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் லண்டனை சேர்ந்த  சக்காரியா ரகுமான், முகமது ஆகியுப் இம்ரான் ஆகியோர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார்  நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்துள்ளது. அதன்படி அவர்கள் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பிரிட்டனில் இருக்கும் 'வெஸ்ட்மின்ஸ்டர்' நீதிமன்றம் வழியாக பிரதமர் வரும் போது அவர் வாகனத்தில் குண்டு வீச திட்டமிட்டு இருக்கின்றனர்.
அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 
ஏமன் அதிபர் அப்துல்லா ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்

05/12/2017 ஏமனின் அதிபராக 22 ஆண்டுகள் பதவி வகித்த அலி அப்துல்லா சலே ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
தலைநகர் சனாவில் அரசுக்கு எதிராக ஹவுத்தி படையினர் நடத்திய தாக்குதலில் அலி அப்துல்லா சலே கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல்லா கொல்லப்பட்டது குறித்து  ஹவுத்தி தலைவர் அப்துல் மாலிக் அல் அவுதி "எங்களுடைய சிறந்த தருணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏமனில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைக்கும் இடையே நடந்த மோதலில் 125 பேர் கொல்லப்பட்டனர். 230க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இதில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வந்த அப்துல்லா சமீபத்தில் சவுதி கூட்டுப் படைக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் அப்துல்லா கொல்லப்பட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 


ட்ரம்பை ரத்தத்தில் குளிக்க வைப்போம் : எச்சரிக்கும் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள்

08/12/2017 ஜெருசலேமை இஸ்ரேலின்  தலைநகர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு ரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அறிவிப்பு வெளியானது முதலே டிரம்பின் இந்த முடிவிற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்து வருகின்றனர்.
 அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா டிரம்பின் இந்த முடிவு சரியானது அல்ல என குற்றம் சாட்டியுள்ளது. டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன.
பாலஸ்தீனர்கள் டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம் மற்றும் அமெரிக்க தேசியக்கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரத்தத்தில் குளிக்க வைப்போம்  என அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. நன்றி வீரகேசரி


அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய லெபனானின் கோரிக்கை.!

08/12/2017 அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேம்யை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஜெருசலேம் பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. தொடர் போர் காரணமாக ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. டெல் அவிவ் என்ற பகுதி இஸ்ரேலில் தலைநகராக இருந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த அறிவிப்பு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரபு நாடுகள் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது லெபனான் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி அமெரிக்காவிற்கு எண்ணெய் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி தடை என பல திட்டங்கள் தீட்டியுள்ளதாம்.
அமெரிக்க அதிபரின் செயல்பாடுகள் அனைத்தும் அரபு நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்து வருகிறது. எனவே, லெபனானின் கோரிக்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று கூறப்படுகிறது.   நன்றி வீரகேசரி
No comments: