ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள் முருகபூபதி


-->
" கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு."
-- இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ஆம் ஆண்டிலும்  அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே  இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான  தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது.
உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும் கதைகளும்  புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற ' புதுமைப்பித்தன் விளக்கு' விருது முதலானவற்றைப்பெற்றவர்.
தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்,  மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா,  க. நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன்  நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர்.
சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர்.
ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.
தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர்.
சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர்.
உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால - மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி  முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர். அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
சென்னை ஏயர் இந்தியா   நிறுவனத்தில் பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி, ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.
2010 இல் நாம் மெல்பனில் நடத்திய பத்தாவது எழுத்தாளர் விழாவின் கருத்தரங்கில் " இலக்கியப்படைப்பு படைப்பாளியின் பிம்பத்தை உணர்த்துமா?" என்ற தலைப்பில் கருத்துச்செறிவுள்ள உரையை நிகழ்த்தினார். அந்தவுரை பின்னர் வீரகேசரியிலும் வெளியானது. கொழும்பில் 2011 இல்  நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரிலும் இடம்பெற்றது.
இப்பொழுது அதனைப்படித்தாலும் புதிதாக படிக்கும் உணர்வையே தரக்கூடியது. வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் அனைத்திற்கும் இந்தத்தன்மை இருப்பது வியப்பானது.  வைதீஸ்வரனின் குறிப்பிட்ட அந்தக்கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது:
" எழுத்தாளன் என்பவன் மனிதகுலத்தின் மனசாட்சி என்ற பொன்மொழி மாறி,  அவன் தன் சமுதாயத்தின் பிணசாட்சியாக எல்லாவற்றையும் தயக்கமான குரலில் முணுமுணுத்துக்கொண்டிருப்பவனாக  இன்று செயல்படவேண்டியிருக்கிறது.
பொதுவாக நமக்கு எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகம் என்பது அவர்களுடைய புத்தகங்கள்தான். நாம் வாசிக்கும் புத்தகங்கள் மூலம் விவரிக்கப்படும் கதா பாத்திரங்களின் சாயல்களில் ஏதாவது ஒன்றை அந்த எழுத்தாளருடைய ஆளுமையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், நடைமுறையில் அது வேறாக இருக்கிறது.
இந்த சமயம் எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 1971 என்று நினைக்கிறேன். திருச்சியில் ஒரு கவிதைக்கூட்டத்துக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். ரயிலில் இருந்து இறங்கியவுடன் வரவேற்க வந்திருந்தவர்களில் ஒருவர் " ஏன் வைதீஸ்வரன் வரவில்லையா? " என்று என்னைப்பார்த்துக்கேட்டார். " நான்தான் அது" என்றேன். எனக்கு அப்போது 35 வயது இருக்கும். " என்ன ஸார்... நீங்களா...வைதீஸ்வரன்?" உங்கள் கவிதைகளைப்படித்தபோது வயதான முதியவராக  நீண்ட  தாடியும் காவி ஜிப்பாவும் போட்டுக்கொண்டு கைத்தடியுடன் நிற்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  நீங்கள், உங்கள் கவிதையின் முதிர்ச்சிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆளாக இருக்கிறீர்களே?" என்று சொல்லிச்சிரித்தார்.

ஒரு படைப்பு நம் மனதிற்குள் அதன் ஆசிரியரின் பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. ஒரு படைப்பை வாசிக்கும்போது அதை எழுதிய ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று  தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றோம்."
வைதீஸ்வரனின் இந்தக்கூற்றிலிருக்கும் உண்மை,  அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு புரியும். அகிலனின் பாவைவிளக்கு திரைப்படமாகிய வேளையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்த அகிலனைப்பார்த்துவிட்டு சிவாஜி கணேசனும் அவ்வாறு ஏமாற்றமடைந்தவர்தான்.
வைதீஸ்வரன் முதல் முதலில் எனக்கு தொலைபேசி ஊடாகவே 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமானார். அவர் சிட்னியில் தமது பிள்ளைகளிடம் வந்திருந்தசமயம் தொடர்புகொண்டார்.  நண்பர் இந்திரா பார்த்தசாரதியிடத்திலேயே எனது தொலைபேசி இலக்கம் பெற்றிருக்கிறார். ஒருநாள்  தொடர்புகொண்டு " வைதீஸ்வரன் பேசுகின்றேன்" என்றார். அன்றிலிருந்து  இற்றைவரையில்  கடிதங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக  என்னோடு பேசிக்கொண்டிருப்பவர்.
இவருடனும் நேர்காணல் நடத்தி, பிரான்ஸிலிருந்து வெளியான நண்பர் குகநாதன் நடத்திய ஈழநாடு இதழில் எழுதியிருக்கின்றேன். 1998 இல் வெளியான எனது சந்திப்பு நேர்காணல் தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

 
முதலாவது தொலைபேசித்தொடர்பாடலின்போது, " விந்து நிலையிலிருந்து, விந்தையான உயரங்களுக்கு, செயல் திறன்களுக்கு மனிதன் வளருவது விஞ்ஞான - தத்துவ இயல்களில் இன்னும் ஆச்சரியமான  விஷயம். அவன் வளரும் திசைகளை இரண்டு விஷயங்கள்  நிர்ணயிக்கின்றன. ஒன்று, அவன் பிறவித்துளிக்குள் கொண்டு வந்த செய்திகள், இரண்டு அதை பரிமளிக்கச்செய்யும் புறவாழ்க்கை சூழல்கள். அதன் தாக்கங்கள். இந்த இரண்டு விஷயங்களும்தான் தனது இலக்கிய நாட்டத்திற்கான காரணங்களாக இருந்திருக்கவேண்டும்"  என்றார்.
இவர் தமது பள்ளிப்பருவத்தில் பிரதானமான பாடமாக எடுத்துக்கொண்டது வடமொழி சமஸ்கிருதம். ஆனால், பள்ளிக்கு வெளியே ஆர்வமாக மூழ்கியிருந்தது தமிழ்க்கவிதைகளில்.
இலக்கண பண்டிதத்தமிழிலிருந்து இளமைக்காலத்திலேயே தப்பியிருக்கும் வைதீஸ்வரன், கம்பரையும் இளங்கோவையும் தாயுமானவரையும் திருமூலரையும் சங்க இலக்கியங்களையும் கற்றவர். மகாகவி பாரதி புதுச்சேரியில் பாரதிதாசன், குவளைக்கண்ணன் முதலான நண்பர்களுடன் இணைந்து மாந்தோப்புகளில் இலக்கியம் பேசியதுபோன்று, இவரும் தனது நண்பர்களுடன் மாமர நிழலில் அமர்ந்து இலக்கியம் படித்தவர்.
இளம்வயதிலேயே கையெழுத்து இதழ் வெளியிட்ட அனுபவம் பெற்றவர். ஐரோப்பாவில் 1920 - 25 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் தோற்றம்பெற்ற புதுக்கவிதை இயக்கம் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாரதியும் இதன் பாதிப்பிற்கு ஆட்பட்டிருந்தவர்.
சி.சு. செல்லப்பா தமிழகத்தில் புதுக்கவிதைக்காகவே எழுத்து என்னும் சிற்றிதழை தொடக்கியபோது அதில் எழுதத்தொடங்கிய கவிஞர் வைதீஸ்வரன்,  அந்த இலக்கிய வடிவத்தில் தான் ஈடுபட்டதற்கான காரணத்தை இவ்வாறு விளக்குகிறார்:
" இந்தியா சுதந்திரம் பெற்று தாய்க்கொடி பறக்க ஆரம்பித்தவுடன், தமிழ் இலக்கியம் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டது. சுதந்திரத்துக்கு முன்னம் பக்திப்பரவசமாய் வீர உணர்ச்சிகளைக்குழைத்து, குழைத்து வெள்ளையனை ஏசி, இந்தியனை ஏற்றிப்பாடிய பாட்டுக்களெல்லாம் சுதந்திரத்துக்குப்பின்னர் சற்றே அர்த்தம்  குறைந்து அழுத்தம் குறைந்த ஒலிபெருக்கிக் காற்றாயிற்று.
இந்தியன் குருட்டு உணர்ச்சிவசங்களைக் கைவிட்டு, தன் சொந்த வாழ்க்கையை, தனக்கே சொந்தமாகிவிட்ட  இவ்வளவு  பெரிய நாட்டை, அறிவால், விஞ்ஞானத்தால் புதிய சமூகப்பார்வைகளால் ஆண்டு வளர்க்கவேண்டிய கஷ்டம் வந்தது. அப்போது இலக்கியமும் தன் குரலை - புதுக்குரலாக, புதிய சூழ்நிலைக்கு இசைந்த குரலாக மாற்றிக்கொள்ளவேண்டிய பரிணாம அவசியம் ஏற்பட்டது.
அப்போது பத்திரிகைகளில் உய்யும் வகையறியாமல் திரும்பத்திரும்ப பழைய மரபு உவமைகளை, அலங்கார வெறுமைகளைத் தாங்கி செய்யுள்கள் ஊமையைப்போல் கவிதைகள் என பிரசுரம் கண்டதை நான் பார்த்ததுண்டு.
இப்படிப்பட்ட " காலண்டர்" கவிதைகளுக்கு மாறாக, காலத்தால் "பொய்த்துப்போன" சில மரபுத்தாளங்களை நீக்கி, சிந்தனையின் வேகத்தையே கவிதையின் தாளமாக ஏற்றி ஏன் கவிதை படைக்கக்கூடாது? என்று சிந்திக்க சில படைப்பாளிகள் துணிந்தனர். அந்தவகையில் ந. பிச்சமூர்த்தி முன்னோடி"
வைதீஸ்வரனின நகரச்சுவர்கள் கவிதைத்தொகுப்பில் 154 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. "இவருடைய கவிதை மொழி பெரும்பாலும் பேச்சு சந்தத்தையும் மெல்லிய ஓசை நயத்தையும் கொண்டது. இவர் கூர்மையான பார்வையும் ஒலியின் இழைவும் தெரிந்த ஒரு காட்சிக் கவிஞராக வெளிப்படுகிறார். இவரின் கவிதை மாந்தர்கள் நேரடியான இயல்பான வாழ்வுச்செயல்பாடுகளைக்கொண்டு பறவை போன்று மென்மையும் விலங்குகள் போன்று கடுமையும் உடையவர்கள்"  என்று இந்த நூலைப்பற்றிய அறிமுகத்தில் ஆர். ராஜகோபாலன் சொல்கிறார்.
வைதீஸ்வரனின் கால் முளைத்த மனம் கதைத்தொகுப்பு 1993 இல் வெளியாகிறது. இதுவே இவரது முதல் கதைத்தொகுப்பென நினைக்கின்றேன்.   அவரது பேச்சிலும் எழுத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமானது அவரது  ஆச்சரிய குணங்கள்தான். எனக்கு அவர் எழுதும் மின்னஞ்சல் வரிகளிலும் அதனை அவதானித்திருக்கின்றேன்.
கால்முளைத்த மனம் தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஐராவதம், " எஸ். வைதீஸ்வரன் என்ற அற்புதமான கலைஞரோ கண்களில் வியப்பு  மறையாமல் உலகை பார்க்கிறார். இத்தகைய பார்வை படைத்திருப்பதே நல்ல கலைஞனின் அடையாளம். நிஜமாகவே குழந்தையின் கண்களில் ஒளிரும் ஆச்சரியத்தோடு உலகைப்பார்க்கிறார். அப்பொழுது எழுத்து புத்துணர்ச்சி தோன்றும் வகையில் அமைகிறது" என எழுதுகிறார்.
இந்தத்தொகுப்பின் முதல் கதை சைக்கிள் சாமி  என்னையும் ஆச்சரியப்படவைத்தது.  எதிர்வரும் நாட்களில் வாசிப்பு அனுபவப்பகிர்வுக்கு  இந்தத்தொகுதியை சிபாரிசு செய்யவிரும்புகின்றேன். சிறுகதைக்குரிய அத்தனை இலட்சணங்களுடனும் கட்டுக்கோப்புடனும் அழகியல் இழையோடும் வகையில் எழுதும் ஆற்றலும் மிக்கவர் வைதீஸ்வரன்.
கடந்த மே - ஜூன் மாதங்களில் இலங்கையில் நின்றேன். எங்கள் ஊருக்கு சமீபமாக இருக்கிறது மினுவாங்கொடை என்ற பிரதேசம். அங்கு கல்லொலுவை என்ற முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஒரு கிராமத்திலிருக்கும் எனது நீண்டகால இலக்கிய நண்பர் மு. பஷீரைப் பார்க்கச்சென்றிருந்தேன்.
                                      அவரும் முதுமை தந்த தளர்ச்சியினால் ஊன்றுகோலுடன் நடமாடுகிறார். என்னோடு வெளியே சிறிய உலாத்தலுக்கு வரும்போதும் அந்த  ஊன்றுகோலுடன் புறப்பட்டார். இடையில் நின்று " பூபதி, வைதீஸ்வரனின் ஒரு கவிதையை சொல்கிறேன்"  என்றார்.
அவர் சொன்ன கவிதை:
"நிலத்தில் ஒரு தடி விதியென  நகருகிறது,
முதுமையை  வீடுவரை  இழுத்துக்கொண்டு"
இவ்வாறு படிமங்கள் நிறைந்த ஏராளமான கவிதைகளை அவர் வரவாக்கியிருக்கிறார்.   அவரைப்படித்தவர்கள்   எங்கிருந்தாலும் அவரது வரிகளையும்  தத்தமது நினைவுகளுக்குள் கொண்டுவருவார்கள்.  இதுதான் அவரது எழுத்தின் வியப்பு.
சமீபத்தில் எழுதி முடித்த பயணியின் பார்வையில் தொடரின் ஓர் அங்கத்தில் இந்தத்தகவலை பதிவுசெய்திருந்தேன். அதனைப்படித்திருக்கும் வைதீஸ்வரன்,  எனக்கு எழுதிய மடலில், " கடந்த கால தகவல்களையும் நேசங்களையும் வெளிப்படுத்துகிறது. இவ்வளவு பொருத்தமாக இங்கே என்னுடைய கவிதை செருகப்பட்டிருப்பது எனக்கு வியப்பைத்தருகிறது. கவிதைகள் இப்படிப்பட்ட மனித சம்பவங்களுக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கின்றன." என்று எழுதியிருந்தார்.
இந்த வருடம் மீண்டும் சிட்னிக்கு வந்தவுடன் தொடர்புகொண்டார். சிட்னியில்  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்கு செய்திருக்கும்  கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சியில் உரையாற்றுமாறு அவரை அழைத்தபோதும், " இலக்கிய ரஸனை என்பது மிகவும் சார்புள்ள விஷயம். ஒரு படைப்பு எத்தனை மக்களின் பொதுவான உளப்பாங்கை  தொடக்கூடும்  என்பது  ஒரு  புதிர்தான்" என்று சொன்னார். சிட்னி நிகழ்ச்சியில் அவர்,  " குளத்துள் எறிந்த கற்கள் - என் கவிதைகள் " என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
எமது சங்கத்தில் அருண். விஜயராணி தலைவராக  இருந்த 2010 ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  நடந்த எழுத்தாளர் விழாவில் உரையாற்றிய வைதீஸ்வரன்,  அன்று மாணவர் அரங்கில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் சங்கத்தின் சார்பில்  பரிசளித்து பாராட்டினார்.
இவருடைய  இலக்கியப்பணிகளை பாராட்டியிருக்கும்   எமது சங்கமும் கடந்த 2 ஆம் திகதியன்று  சிட்னியில் நடந்த நிகழ்வில் விருது வழங்கி கௌரவித்தது. பாராட்டு மடலை சங்கத்தின் உறுப்பினர் கவிஞர் செ. பாஸ்கரன் சமர்ப்பித்தார். உறுப்பினர் கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம் விருதை வழங்கினார்.
தமது 82 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கும் இக்கவிஞருடைய கவிதைகளும் இளமையானவை.
----0-----No comments: