இலங்கைச் செய்திகள்


இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

வெலிக்கடை படுகொலைகள்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம்

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்



இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?

06/12/2017 இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள்  அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 
உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக  உலகில் பல்வேறு நாடுகளில் அழிவுகள் அதிகரித்து வருகின்றது. இலங்கையிலும் அண்மைக் காலமாக பாரிய அனர்த்தங்கள், அழிவுகள் ஏற்பட்டு வருகின்றது நாம் அறிவோம்.  நாட்டின் ஒருபுறம் நீண்டகால  வறட்சி, மறுபுறம் வெள்ளப்பெருக்கு, கடல் மட்ட நீர் அதிகரிப்பு, சூறாவளி, அதிகரித்த மழை, கனமான காற்று  என்று பாரிய நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பூலோக உஷ்ண உயர்வே காரணமாகும். மக்களின் செயற்பாடுகளே  இதற்கு  பிரதான காரணமாகும். இதை நாம் யாரும் ஏற்றுகொள்ள மறுக்கின்றோம். ஆனால் உண்மை இதுதான். இதன் காரணமாக இயற்கை அழிந்து வருகின்றது.
ஆகவே இதற்கான மாற்று வழியினை நாம் தெரிவு செய்யாவிடின் நிலைமைகள் மேலும் பாரதூரமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 












 வெலிக்கடை படுகொலைகள்: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம்


06/12/2017 வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன்போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த நிலைவரத்தை மன்றில் தாக்கல் செய்ய சட்ட மா அதிபருக்கு ஒரு வார கால அவகாசத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (6) வழங்கியது.
இவ்வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்பி.டி.தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் மேற்படி விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார்.
எனினும் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கும் ஆயத்தங்கள் எதுவும் இல்லை என சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னகோன் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க குறுகிய கால அவகாசம் ஒன்றினை வழங்குமாறு சட்டத்தரணி ரத்னவேல் கோரினார். அதனை ஏற்று நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.  நன்றி வீரகேசரி 











சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

05/12/2017 சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா, ஸ்ரீகஜனுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென மன்றைகோரியதற்கு இணங்க மேற்கண்டவாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 










அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்

04/12/2017 யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதில் 3 மாடிக் கட்டடத் தொகுதி நிலக்கீழ் அடித்தளத்துடன் அமைக்கப்படவுள்ளது.
நன்றி வீரகேசரி 




No comments: