மழலை மொழி ! - எம் . ஜெயராமசர்மா

     குழலினிது யாழினிது என்பர்  ஆனால்
image1.JPG     குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது
      மழலைகள் நிறைந்திடும் போது அங்கு
      மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !

      கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால்
      குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை
      கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில்
      குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் ! 

       ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு
       ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து
       நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது
       நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் ! 

      கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில் 
      குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால் 
      கோபங்கள் ஓடியே போகும் அவர்
      குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் ! 


      வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும்
      தலைதடவும் பிஞ்சுவிரல் தளர்வெல்லாம் போக்கிவிடும்
      புவியினிலே வாழ்கின்றார் பொலிவுடனே வாழுதற்கு
      அவர்வீட்டில் மழலைமொழி அருந்துணையாய் அமையுமன்றோ !
      

       No comments: