கம்பன் விழாவில் கலை தெரி அரங்கம் - கேசினி

.

கம்பன் விழாவின் இறுதிநாள் (05/11/2017)  மாலை நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல், மங்கல ஆரத்தி, கடவுள் வாழ்த்து , தொடக்கவுரை என்பவற்றுடன் மங்கலமாக ஆரம்பமாகி, அடுத்த நிகழ்வாக கலை தெரி அரங்கத்தில் வில்லுப்பாட்டு நிகழ்வு ஆரம்பமானது. திரை திறக்கப்பட்ட்தும், மேடையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் "தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட வந்தோம்" என வில்லுப்பாட்டினை ஆரம்பித்தனர்.
கம்ப ராமாயணத்தில், கிட் கிந்தா காண்டத்தில், நட்புக்கோள் படலத்தில், இராமனிடம் சுக்கிரீவன் சரணடைந்த நிகழ்வை "உன்னைச் சரணடைந்தேன்" என்ற தலைப்பில்  தொடர போவதாக கூறினர் கம்பன் கழக உயர்தர வகுப்பு மாணவர்கள். இரண்டு மங்கைகள் கதை சொல்பவர்களாகவும், இரண்டு ஆண்கள் நகைச் சுவையுடன் கேள்வி கேட்பவர்களாகவும், முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே அழகிய வில்லு வைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் மிருதங்கமும், அதனை வாசிப்பவரும், மறுபக்கத்தில் ஹார்மோனியமும், அதனை இசைப்பவரும் இருந்தனர். பின்வரிசையில் நடுவில் பாடகர்களும் , ஒரு முனையில்  கடமும் வாசிப்பவரும், மறு முனையில் மோர்சிங்க் இசைப்பவரும் என வில்லிசைக் குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.
காப்புப் பாடலின் பின், வந்திருந்த அனைவரையும் வணக்கம் கூறி, வரவேற்று, சொற்பிழை, பொருட் பிழை ஏற்படுமிடத்து, தங்களை மன்னிக்குமாறு சான்றோரிடம் வேண்டி,   அவையடக்கம் கூறி, கதைக்குள் சென்றனர். கிட் கிந்தை நாட்டின் வளம், வாலி, சுக்கிரீவனின் பிறப்பு,
அவர்களுக்கு இடையில் ஏற்படட பகை, இராம இலக்குவரரைச் சந்தித்தமை , அவர்களிடம் நடபு பாராட்டி, சரண் அடைந்தமை என பல விடயங்களைத் தெளிவாக சொல்லியும், பாடியும் சபையோரைக் கவர்ந்தனர். இறுதியில் மங்களம் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். வில்லுப்பாட்டில் கம்ப ராமாயணம் மட்டுமன்றி, திருக்குறள்,  ஒளவையார் பாடல்கள் என்பவற்றையும் மேற்கோள் காட்டி , நீதிக் கருத்துக்களை கூறியமை பலரது கவனத்தையும் ஈர்த்தது.


கதை சொல்பவர்கள் கதா பாத்திரங்களுக்கேற்ப முகபாவனை செய்து, கண்களாலும், கைகளாலும் அபிநயம் செய்து, கதையை உணர்ந்து, உணர்வு பூர்வமாகச் சொன்னதால் எல்லா வயதினரும் கதையை விளங்கிக் கொண்டனர். அருகிலிருந்த ஆடவர்கள் நகைச் சுவையாகவும், விளக்கத்திற்காகவும் கேள்விகளைக் கேட்டு , சபையில் இருந்தவர்களை சிரிக்கவும்  சிந்திக்கவும் வைத்தனர். பாடகர்கள் அருமையான பாடல்களை பலவிதமான மெட்டுகளிலும், சந்தங்களிலும் அதற்கேற்ப சுருதிகளில் பாடி, சபையோரை ஆனந்தமுறச் செய்தார்கள். சபையில் இருந்த பொது  மக்கள் பலர், தலையை ஆட்டி, தாளம் போட்டு ரசித்ததை காணக் கூடியதாக இருந்தது.
இந்நிகழ்ச்சியை மெருகூட்டியவர்கள் பக்கவாத்திய இசைக் கலைஞர்கள்.  ஒவ்வொரு பாடலுக்குமுரிய சுருதியை, இசையை, மெட்டை, சந்தத்தை, ஹார்மோனியம் வாசித்தவரே சரியாக எடுத்துக் கொடுத்தார். மிருதங்கம் வாசித்தவர் வெவ்வேறு சுருதி சேர்க்கப்படட மிருதங்கங்களை மாறி, மாறி தேவைக்கேற்ப வாசித்து நிகழ்ச்சியை இனிமையாக்கினார். மோர்சிங்க் வாசித்தவர் சில இடங்களில் குறிக்கப்படட ஒலிகளை எழுப்பி சபையோரின் கைதட்டலைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சி முழுவதிலும் அருமையாக கடம் இசைக்கப்பட்டது. குழுவில் ஒவ்வொருவரும் தனக்குரிய பகுதியை தனியாகவும், குழுவாகவும் திறம்படச் செய்தனர்.


நிகழ்ச்சி எவ்விடத்திலும் எந்த தொய்வுமில்லாமல் , விறுவிறுப்பாக சரளமான தமிழ் நடையில் அமைந்திருந்ததை  சபையில் இருந்த பலரும் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். சிறு குறிப்புகள் அடங்கிய காகிதத் தாள்களோ , அலைபேசியோ இன்றி தன்னம்பிக்கையுடன் இவ்வில்லிசையை சிறப்பாகச் செய்தமை நிச்சயமாக அனைவராலும் பாராட்டப் பட வேண்டிய விடயம். மேடை அலங்காரம், ஒளி,ஒலி அமைப்பு, குறிப்பாக ஒலி வாங்கிகள் வைக்கப்படட முறை , இந்நிகழ்ச்சிக்கு மேலும் வலுச் சேர்த்தன.
இந்த வில்லிசைக் குழுவில், தொழில் செய்பவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். மெல்லிய சிவப்பு  சார்ந்த நிறங்களில் அனைவரும் உடை அணிந்து இருந்தனர். அனைவரும் தமிழ் கலாசாரத்தை  பேணி,  வேட்டி,சேலை,பாவாடை தாவணி   அணிந்து, தலை வாரி  பூச் சூடி, பொட்டு அணிந்து இருந்தமை மனதிற்கு மகிழ்ச்சி தந்தது. இந்த இளைஞர்கள் செந்தமிழையும், பண்பான கலாசாரத்தையும் எமது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நாற்பது நிமிடங்கள் தங்களது நாவன்மையால் சபையினரைக் கட்டிப் போட்ட ,  வில்லிசைக் குழுவினரை "நாத ஒளி" மேளக்காவேரி பாலாஜி அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து, இவர்களின் திறமை பற்றி சில நிமிடங்கள் பேசினார். இந்தக்குழுவினர் மேலும் பயிற்சிகள் செய்து, தொடர்ந்து வில்லுப்பாட்டு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அவர்களின் அயராத முயற்சிக்கும் , உழைப்பிற்கும் வாழ்த்து தெரிவிக்கின்றோம்.No comments: