இலங்கையில் பாரதி - அங்கம் 34 முருகபூபதி


-->
" வெள்ளத்தின் பெருக்கைப்போல்  கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப்பதவி கொள்வார்."
பாரதியின்  இந்தத்தாரக மந்திரத்துடன் 2000 ஆம் ஆண்டில்  கண்டியிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஞானம் கலை, இலக்கிய மாத இதழ் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் தி. ஞானசேகரன் ஒரு மருத்துவராவார். இலங்கையில் வடபுலத்தில் புன்னாலைக்கட்டுவனில் 1941 ஆம் பிறந்தவர்.   
தந்தையோ   ஆலயத்தில்  குரு.   பூட்டனார்  கணேசய்யர் தொல்காப்பியத்திற்கு  விளக்கவுரை  எழுதிய   வித்துவ சிரோன்மணி. கதாப்பிரசங்கம்  புகழ்   மணி அய்யர்   சுவாமிநாதத்தம்பிரான்  தாய் மாமனார்.    கணேசய்யர்   பற்றி   இரசிகமணி   கனகசெந்திநாதன் தமது  ஈழத்து  இலக்கிய  வளர்ச்சி  நூலில்   குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிநாத   தம்பிரான்தான்  இலங்கையில்  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு   மொடலாக  இருந்தவர்.    இந்தப்பின்னணியிலிருந்து வருகைதந்த   ஞானசேகரன்,    அந்தப்பரம்பரையின்  குலமுறை ஆலயத்தொண்டிற்குச்செல்லாமல்,   தனது   பெயருக்குப்   பின்னால் அய்யர்   என    பதிவுசெய்துகொள்ளாமல்,    மருத்துவம்  பயின்றார். இலக்கியம்    படித்தார்.    படைத்தார்.    இதழாசிரியரானார்.

பொதுவாக  பிராமணர்  சமூகத்திலிருந்து  வருபவர்கள்    தந்தைக்குப்பின்   தனயன்   என்பதுபோன்று   தர்ப்பையும்   மணியுமாக  வாழ்ந்து   சோதிட   நூல்களையே  ஆய்வுசெய்வர்.
ஆனால் ,  அவர்களின்    பரம்பரையிலிருந்து  வேறு   திசையில் சமூகப்பிரக்ஞையுடன்  சாதாரண    மக்களுக்காக ,  அவர்களின்   எளிய குரலுக்காக   உழைத்தவர்கள்   சிலரைப்பற்றி   எமது  தமிழ் இலக்கியஉலகம்  இன்றும்   பேசிக்கொண்டிருக்கிறது.    பாரதியும் தனது தந்தைக்குப்பின்னர் தந்தையின் தொழிலுக்குச்செல்லாமல் இலக்கியம் படைத்தார். இறுதிவரையில் படைப்பாளியாகவும் பத்திரிகையாளனாகவும்  வாழ்ந்து மறைந்தார்.
பாரதிக்கும் ஞானம் என்ற சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. ஞானரதம் எழுதியவர் பாரதி. பாரதியை தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டிருந்த ஜெயகாந்தனும்  அதனையடியொற்றி ஞானரதம் என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்தியவர்.
இலங்கையில் ஞானம் இதழைத்தொடங்கியிருக்கும் தி. ஞானசேகரன், சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை வெளியிட்டிருப்பவர்.  காலதரிசனம் , புதியசுவடுகள், குருதிமலை,  அல்சேஷனும்   ஒரு பூனைக்குட்டியும் லயத்துச்சிறைகள்,  கவ்வாத்து   உட்பட பல நூல்களை வரவாக்கியிருக்கும் இவர், இலங்கையின் தேசிய சாகித்திய விருது உட்பட பல விருதுகளும் பெற்றவர்.
இவரது சில நூல்கள் பல்கலைக்கழக மட்டத்திலும்  மாணவர்களினால்  ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. 2011 இல் கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இணைப்பாளராகவும் இயங்கியிருக்கும் ஞானசேகரன்,  தொடர்ந்தும் மேலே குறிப்பிட்ட பாரதியின் தாரக மந்திரத்துடனேயே தமது இதழை வெளிக்கொணர்வதிலிருந்து, இவரையும் பாரதி எவ்வளவுதூரம் பாதித்திருக்கிறார் என்பது தெரிகிறது.
ஞானம் இதழும் இலங்கையில் பாரதி குறித்த ஆய்வுகளுக்கு சிறந்த களம் வழங்கியுள்ளது.
ஞானம்  இதுவரையில் போர்க்கால இலக்கியச்சிறப்பிதழ், புகலிட இலக்கிய சிறப்பிதழ்களையும் இறுதியாக 200 ஆவது இதழை நேர்காணல் ஆவண மலராகவும் வெளியிட்டுள்ளது.
இவற்றுக்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் அதன் பின்னரும் பாரதி தொடர்பான ஆக்கங்களை ஞானம் இதழ்களில் காண முடிகிறது.
பிஜித்தீவுக்குச்சென்று அங்கு கரும்புத்தோட்டங்களில் துன்பக்கேணியில் வாடும் இந்திய மக்கள் பற்றி பாரதி நெஞ்சுருகி எழுதிய கவிதை இன்றளவும் பேசப்படுகிறது. அதற்குள்ளிருந்தது தேசியப்பார்வையல்ல, சர்வதேச ரீதியிலும் நோக்கப்படுகிறது என்று  பாலகிருஷ்ணன் சிவாகரன்,  ஞானம் 144 ஆவது இதழில் ஆய்வுசெய்திருந்தார்.  பாரதியின் குறிப்பிட்ட கவிதையில் பாரதியின் பல்கோணப்பார்வை மேற்கிளம்பும் தன்மை மெய்சிலிர்க்கவைக்கிறது என்கிறார் இந்த ஆய்வாளர். அத்துடன் அக்கவிதையின் தலைப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும் எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
" கரும்புத் தோட்டத்திலே - என்ற இந்தக்கவிதை முதன் முதலில் பாரதி பிரசுரத்தாரின் தேசிய கீதங்கள் என்ற தொகுப்பில் வெளிவந்தபோது " பிஜித்தீவிலே ஹிந்து ஸ்தீரிகள்" என்ற தலைப்பில் வெளிவந்தது. புதிய பதிப்புகளில் " கரும்புத்தோட்டத்திலே" என பிரசுரம் பெற்று பிஜித்தீவின் கரும்புத்தோட்டத்தில் பாடுபட்ட இந்திய நாட்டுப்பெண்களின் அவல நிலையைக்குறித்து எழுதப்பட்டது  " என்று  எமக்கெல்லாம் நன்கு தெரிந்த தகவலையும்  பாலகிருஷ்ணன் சிவாகரன் பதிவுசெய்துள்ளார்.
தரகு கங்காணிமார்களின் ஆசைவார்த்தைகளை நம்பி  இலங்கை, பிஜி, ஆபிரிக்கா, கென்யா, பிரிட்டிஷ் கயானா, மேற்கிந்தியத்தீவு முதலான நாடுகளுக்குச்சென்றவர்களுக்கு அங்கு நேர்ந்த அவலம் பற்றிய இலக்கியங்களில் பாரதியின் குறிப்பிட்ட கரும்புத்தோட்டத்தினிலே கவிதை முக்கியத்துவம் பெறுகின்றது.
அதிலிருந்து பெறப்பட்ட துன்பக்கேணியில் என்ற சொல்லிலிருந்து புதுமைப்பித்தனும் இலங்கை வந்து துயருற்ற இந்திய மக்கள் பற்றி ஒரு புதினம் படைத்திருக்கிறார். இந்தப்பின்னணிகளுடன்தான் இலங்கையில் மலையகம் வந்த இந்திய மக்கள் பற்றிய பின்வரும் கவிதை, பாடலாக மேடைகளில் ஒலிக்கிறது.
" வாடையடிக்குதடி, வடகாத்து வீசுதடி, செந்நெல் மணக்குதடி, சேர்ந்து வந்த கப்பலிலே....
" நாட்கள் கழிகின்றன, நாடுகடக்கும் வேளை நெருங்குகிறது. பிரிவு வாசலைத் தட்டுகின்றது, பிரிவு வேதனையின் பிரதிநிதி விழிவாசலை முட்டுகின்றான், அழுதுவிடுவேனோ என்ற பயம் என்னை அமுக்குது....
" நான் பிறந்த நாட்டினிலே நான் இருக்க விதியில்லை, என் ஜென்ம பூமியிலே எனக்கு உரிமையில்லை"
என்ற பாடல்வரிகளையும் எமது வாசகர்களுக்கு ஞானம் இதழின் ஊடாகத்தருகின்றார் பாலகிருஷ்ணன் சிவாகரன். ஞானம் இதழ் பாரதியை இலங்கை வாசகர்களுக்கும் தமிழ்கூறும் நல்லுலகிற்கும் வேறும் ஒருவகையில் அறிமுகப்படுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர்.
ஆனால், அது தவறு என்று ஞானம் 197 ஆவது இதழில் ( ஒக்டோபர் 2016) ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றார் செங்கதிரோன் த.கோபலகிருஷ்ணன். இவர் இலங்கையில் இலக்கியவாதியாகவும் அரசியல் சமூகப்பணியாளராகவும் அறியப்பட்டவர். இலக்கியவிமர்சகர் செங்கதிர் என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். மீன்பாடும் தேனாடாம் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இவரும், இலங்கையில் பாரதியை ஆய்வுசெய்துள்ளார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் ஒரு காலத்தில் சிறுகதைகளுக்கு இரண்டு தலைப்புகள் இடப்பட்டிருக்கும். பாரதியாரும் அவ்வாறுதான் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார்.
1905 இல் சக்கரவர்த்தினி என்னும் இதழில் பாரதி எழுதியிருக்கும் சிறுகதை: துளசிபாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் சரித்திரம். கோபலாகிருஷ்ணன் இச்சிறுகதையின் சுருக்கத்தை இவ்வாறு தருகின்றார்.
" துளசிபாய் என்ற பெயருடைய ரஜபுத்திரகன்னிகைக்குத் திருமணம் நிச்சயிக்கப்பெற்று அவளுக்கு விவாகம் நடத்துவதற்காக மணமகனுடைய ஊருக்குப் பல்லக்கில் அவளை இருத்திப் பயணம் செல்கிறார்கள். போகும் பாதையில் ஒரு கொள்ளைக்காரக்கும்பலிடம் துளசிபாய் அகப்பட்டுக்கொள்கிறாள். அவளை அக்பரின் படைத்தளபதி அப்பாஸ்கான் என்பவன் அந்தக்கொள்ளைக்காரக் கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறான். தன்னைக் காப்பாற்றிய அப்பாஸ்கானுக்கு ஒரு வயிரக்கணையாழியைப் பரிசளித்துத் துளசிபாய் நன்றி பாராட்டுகிறாள். கதையின் முற்பகுதி இங்கே முடிவடைகிறது.
அடுத்து ஒரு வருடகால இடைவெளிக்குப்பின்னர்  அப்பாஸ்கான் மீண்டும்  துளசிபாயைச்சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அப்போது திருமணமாகிக்  கணவன் இறந்துபோன நிலையில் துளசிபாயை சுற்றத்தார்  இந்திய நாட்டின் பண்டைய வழக்கப்படி உடன்கட்டை ஏறும்படி   வற்புறுத்துகிறார்கள். துளசிபாய் கதறிக்கொண்டு கூக்குரலிட  அப்பாஸ்கான் அருகில் சென்று பார்க்கிறான். " இது எனது... எனது...எனது... துளசிபாய்  அல்லவா...? அரே அல்லா, மேரீகுலாப் கோ ஜலாவோங்கே...? எனது காதல் ரோஜாவையா இப்பாதகர்கள் சாம்பலாக்கப்போகிறார்கள்" என்ற கோபத்தோடு அவர்களோடு மீண்டும்  சண்டையிட்டு  மீண்டும்  துளசிபாயை  காப்பாற்றுகிறான்.
இவ்விதம் தம்மால் இருதடவைகள் காப்பாற்றப்பெற்ற துளசிபாய் மீது அப்பாஸ்கான் காதல்கொள்கிறான். அப்பாஸ்கானின் காதலை துளசிபாயும்  ஏற்றுக்கொள்கிறாள்.
இதுதான் பாரதியார் எழுதிய கதை. எந்தக்காலத்தில் என்பதைப்பாருங்கள்...? இந்தக்கதையில் பாரதி சொல்லும் செய்திகளை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
பெண்மைக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கும் பாரதியின் முதல் சிறுகதையே பெண்ணிற்கு நேர்ந்த அநீதிக்கு எதிரான குரலையே ஒலித்திருக்கிறது. அத்துடன் விதவை மறுமணத்தையும், மூட நம்பிக்கைக்கு எதிரான சிந்தனையையும்  இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், கலப்புத்திருமணத்தையும்   அக்காலத்திலேயே அவர் வலியுறுத்தியிருக்கிறார்.  செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், இந்தப்பதிவில்,  மேலும் இவ்வாறு சொல்கிறார்:
" நவீனத்துவம், பின்நவீனத்துவம், யதார்த்தவாதம், கட்டுடைப்பு வாதம் என்றெல்லாம்  கலை  இலக்கியக்கோட்பாடுகள் குறித்த கருத்தியல்கள் எல்லாம் மேற்கு நாடுகளில் பின்னாளில் எழுந்து தமிழ்நாட்டுக்குத் தொற்று முன்பாகவே ஒரு முற்போக்கான கதையை பாரதி 1905 இலேயே பின்னியிருக்கிறார்.  எனவே நல்ல முற்போக்கான சிறுகதையொன்றினைப் படைப்பதற்கு எந்த 'இஸம்' களும் தேவையில்லை. எந்த ' வாதம்' களும் அவசியமில்லை."
இவ்வாறு பாரதியின் முதல் சிறுதையும்  தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் சிறுகதையுமான " துளசிபாய் அல்லது ரஜபுத்திரகன்னிகையின் சரித்திரம்" பற்றி ஞானம் இதழில் விரிவாக அறிமுகப்படுத்தியிருக்கும் செங்கதிர் த. கோபாலகிருஷ்ணன், ஞானம் 205 ஆவது இதழில் ( 2017 ஜூன்) பாரதியார் எழுதிய முதற்கவிதை பற்றியும் அதனை இலக்கிய வரலாற்றில் பதிவுசெய்வதற்கு தொடர்ச்சியாக நேர்ந்த தாமதங்கள் பற்றியும் விரிவாக சொல்லியிருக்கிறார்.
பாரதி  எழுதி அச்சுவாகனம் ஏறிய முதல் கவிதை 1904 ஆம் ஆண்டில் விவேகபாநு இதழில் வெளியாகியிருக்கிறது. தனிமையிரக்கம் என்ற அக்கவிதையே அச்சில் வெளியான முதல்கவிதையாயினும்  அதுவே பாரதி எழுதிய முதல் கவிதை அல்ல  என்றும்  அவர் சுட்டிக்காண்பிக்கின்றார்.
எட்டயபுர சமஸ்தான மன்னர் வெங்கடேசுவரரெட்டப்பபூபதிக்கு பாரதி தனது படிப்புக்கு உதவி கேட்டு கவிதை வடிவில்  24-01-1897 இல் எழுதிய கடிதமே அவர் எழுதிய முதல் கவிதை என்றும் அதனை பாதுகாத்துவைத்திருந்தவர் பாரதியின் இளைய சகோதரன் சி. விசுவநாதஐயர் எனவும் குறிப்பிடுகிறார்.
" குயிலானாய்... எனத்தொடங்கும் அச்சில் வெளியான முதல் கவிதையும், தென்னிளசை நன்னகரிற் சிங்கம்... எனத்தொடங்கும் எட்டயபுர மன்னருக்கு அனுப்பிய கவிதைக்கடிதமும் ஞானம் இதழில் முழுமையாக இடம்பெற்றுள்ளது. இளைசை என்பது எட்டயபுரத்துக்கு மற்றும் ஒரு பெயர்.
எனினும், பாரதியாரே 1908 இல் பதிப்பித்த அவரது முதல் நூலான 'ஸ்வதேச கீதங்கள் ' நூலிலும் அதன்பின்னர் வந்த பல தொகுப்புகளிலும் இக்கவிதை இடம்பெறவில்லை எனவும், பாரதி நூற்றாண்டு விழாக்காலத்தின் பின்னர்தான், தஞ்சை பல்கலைக்கழகம் வெளியிட்ட பாரதி பாடல்கள் (ஆய்வுப்பதிப்பு) சேர்க்கப்பட்டிருக்கும் தகவலையும் கோபாலகிருஷ்ணன் ஞானம் இதழின் ஊடாக எமக்கு தெரிவிக்கின்றார்.
அடுத்த அங்கத்தில், ஞானம் இதழில் மேலும் வெளியான பாரதி தொடர்பான ஆக்கங்களையும் ஆய்வுகளையும் பார்ப்போம்.
( தொடரும்)













No comments: