உலகச் செய்திகள்


கொலம்­பி­யாவில் சிந்­திய புனித குருதி

பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கம் .!

இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

இந்தியாவின் முதல் ‘புல்லட்’ ரயிலுக்கான திட்டம் ஆரம்பம்

மார்க்கப் பாடசாலையில் தீ : 23 இளம் மாணவர்கள் பலி

யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்




கொலம்­பி­யாவில் சிந்­திய புனித குருதி

12/09/2017 கொலம்­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனக்­கு­ரிய விசேட கண்­ணாடி  வாக­னத்தில்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணத்தை மேற்­கொண்ட போது, அவ­ரது தலை அந்த வாகன உள் மேற்­ப­ரப்பில் மோதி­யதால் அவ­ருக்கு  நெற்­றியில் காயம் ஏற்­பட்­டது.

கார்ட்­ட­ஜெனா நக­ரி­னூ­டாக அவ­ரது வாகனம் பய­ணித்துக் கொண்­டி­ருந்த வேளை திடீ­ரென அந்த வாக­னத்தை சூழ்ந்து கொண்ட அபி­மா­னி­களால்  அதனை  நிறுத்த வேண்­டிய நிலை அதன் சார­திக்கு ஏற்­பட்­டது.





இதனால்  அந்த சாரதி  அந்த வாக னம் மக்கள் மீது மோது­வதைத் தடு க்க சடு­தி­யாக வேகத்­த­டுப்பை பிர­யோ­கிக்­கவும் நிலை தடு­மா­றிய பாப்­ப­ரசர் அந்த வாக­னத்தின் உட்­புற கண்­ணாடி  மேற்­ப­ரப்பில் தனது தலையை மோதிக்கொள்ள நேர்ந்­தது.
இதன்­போது அவ­ருக்கு கண்­ணு க்கு மேலான நெற்றிப் பகு­தியில் காயம் ஏற்­பட்டு  குருதி சிந்­தி­யது. அந்தக் குரு­தியின் துளிகள் அவ­ரது வெண்­ணிற ஆடை­யிலும்  சிவப்பு நிற கறை­யாக படிந்­தன. அவ­ருக்கு  ஏற்­பட்ட காயத்­துக்கு அவ­ரது வாக­னத்தில் வைத்தே உட­ன­டி­யாகப் பற்றுப் போடப்­பட்­டது. நன்றி வீரகேசரி










பொதுசெயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கம் .!

12/09/2017 பொது செயலாளர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்ட சசிகலாவை, அப்பொறுப்பிலிருந்து ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறியது.
அதிமுகவின் பொதுசெயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்த பின்னர், அக்கட்சி அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் என பிரிந்தன. இவ்விரு அணிகளும் பலசுற்று பேச்சு வார்த்தைக்கு பின் கடந்த சில வாரங்களுக்கு முன் இணைந்தன. இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவிற்கு, சுமார் 2,500 உறுப்பினர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்தனர். அழைப்பிதழை காண்பித்த பிறகே அவர்கள் கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். அழைப்பிதழ் இல்லாத யாரும் உள்ளேச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டம் நடக்கும் அரங்கில் பொலிஸார் குவிக்கப்பட் டிருந்தனர்.
முதலில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 14 தீர்மானங்கள் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் அனைத்தும், ‘பொதுக்குழு அழைப்பிதழில், “தற்போது கழகத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டன.
அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்பு, ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக தெரிவு செய்தது ஆகியவற்றுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அ.தி.மு.க.வை வழி நடத்த கழக சட்ட திட்ட விதி 20(5)ன்படி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 15 பேர் கொண்ட வழிகாட்டும் குழு உருவாக்குதல், ராமன் - லட்சுமணன் போல் அதிமுகவை காப்பாற்ற முதல்வர் துணை முதல்வர் ஒன்றிணைந்துள்ளதை பாராட்டுதல், தமிழக அரசின் சார்பின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்தல், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்னர் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும், கட்சிப்பொறுப்புகளில் புதியவர்களை நியமித்தும், பொறுப்பு வகித்து வந்தவர்களை நீக்கியும் ரி ரி.வி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது என்றும், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்றும் 14 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
தகவல் : சென்னை அலுவலகம்   நன்றி வீரகேசரி














இலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
16/09/2017 இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இலண்டன் தென்மேற்குப் பகுதியிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில், ரயிலின் கடைசிப் பெட்டியில், ஒரு வாளியில் பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் இருபத்தொன்பது பேர் காயமடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், அந்த குண்டு தாக்குதல்தாரியால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் அந்த குண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், அதைத் தயாரிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்தத் தாக்குதலுடன் நின்றுவிடாது என்றும், இது போன்ற தாக்குதல்கள் தொடரலாம் என்று தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இத்தாக்குதலை ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றிருப்பதாக, அதன் செய்தி இணைய தளமான அமாக் அறிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி












இந்தியாவின் முதல் ‘புல்லட்’ ரயிலுக்கான திட்டம் ஆரம்பம்

14/09/2017 இந்தியாவின் முதல் ‘புல்லட்’ ரயிலுக்கான திட்டம், ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயினால் குஜராத்தில் இன்று(14) ஆரம்பமானது.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் அபே, மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் இதற்கான அடிக்கல்லை நாட்டி இந்தத் திட்டத்தை சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார்.
பதினேழு பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான நிதியின் பெருந்தொகையை ஜப்பானே கடனாக வழங்கியுள்ளது.
இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அஹமதாபாத் முதல் மும்பை வரையிலான 500 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று மணிநேரங்களில் சென்றடையலாம். தற்போது இதற்காக எட்டு மணி நேரத்தை பயணிகள் செலவிட வேண்டியுள்ளது.
இங்கு பேசிய ஜப்பானியப் பிரதமர், “அடுத்த முறை நான் இந்தியாவுக்கு வருகை தரும்போது, புல்லட் ரயிலில் பயணித்தபடியே இந்தியாவின் பசுமை நிறைந்த அழகுக் காட்சிகளைக் கண்டு இரசிக்க முடியும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி










மார்க்கப் பாடசாலையில் தீ : 23 இளம் மாணவர்கள் பலி

14/09/2017 மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் சமயப் பாடசாலை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருபத்தைந்து பேர் உயிரிழந்தனர்.

தாஃபிஸ் தாருல் குரான் இத்திஃபாக்கியா என்ற இந்த மத்ரஸா பாடசாலையில் ஐந்து முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்கள் பாடசாலையிலேயே தங்குவதும் உண்டு.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் மாணவர்கள் வழக்கமாகத் தங்கும் பாடசாலைக் கட்டிடத்தின் மேல் மாடியில் தீ பரவியது. அப்போது மாணவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தனர். காலை நேரம் என்பதாலும், மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாலும் தீ பரவ முன்னர் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாமல் போனது.
விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் ஒரு மணி நேரத்தினுள் தீயைக் கட்டுப்படுத்தினர். என்றபோதும் அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போனது.
விபத்தில் பலியானவர்களில் இருபத்து மூன்று பேர் மாணவர்களும், இரண்டு பேர் பாதுகாவலர்களுமாவர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
கடந்த இருபது வருடங்களில் மலேசியாவில் இடம்பெற்ற மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.
நன்றி வீரகேசரி












யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

14/09/2017 உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
நதியின் நடுப் பகுதியை அடைந்த அந்தப் படகு, நிலை தடுமாறி நதியில் சரிந்து மூழ்கியது.
இதையடுத்து மீட்புக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
என்றபோதும், இதுவரை பன்னிரண்டு பயணிகளே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 22 பேரின் உயிரற்ற உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எஞ்சியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.  நன்றி வீரகேசரி


No comments: