ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க ஜெனிவாவில் 15 உப குழுக் கூட்டங்கள்
கொழும்பில் இலவச திருமணத் திட்டம்
கொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை
நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி
இலங்கையில் போர்க்குற்றம் : மீண்டும் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா
சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது
ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது
11/09/2017 கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத்
தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி
கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின்
போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம்
மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு
துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14
பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில்,
குறித்த விருதை பெறுவதற்காக பாடசாலை மேடைக்கு 37 வருடங்களுக்கு பிறகு
வந்துள்ளேன் என்றும் விருதை பெற்றதற்காக தான் சந்தோஷமடைவதாகவும் 35 வருட
கடற்படை சேவையுடன் வெற்றிகரமான கடற்படையின் 21ஆவது கடற்படை தளபதியாக புகழ்
பெற்ற விருந்தினர்கள் முன் உரையாட வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில்
மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடற்படையில் தன்னுடைய பாதை மிக நீண்டது மற்றுமல்லாது தடைகள் பல
நிறைந்தது எனவும் தடைகளை எதிர்கொள்ள பாடசாலை கற்றுக்கொடுத்த விடாமுயற்சி
மற்றும் போராடும் குணம் என்பன பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறினார்.
தனது உரையின் இறுதியில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கும்
கௌரவத்திற்கும் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும்
தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு
11/09/2017 இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொகை கடந்த ஆகஸ்ட்
மாதத்தில் 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்தே
அதிகமானோர் வருகைத்தந்திருந்தாகவும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ
மதவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க ஜெனிவாவில் 15 உப குழுக் கூட்டங்கள்
12/09/2017 ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று
ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பான உப நிகழ்வுகள் தொடர்பில்
அனைவரும் அவதானம் செலுத்தியுள்ளனர். ஜெனிவா வளாகத்தில்
நடைபெறவுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்டங்களில் இலங்கை மனித
உரிமை விவகாரம் தொடர்பில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் எழும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச அரசசார்பற்ற
நிறுவனங்கள் இலங்கை தொடர்பான இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை தூதரகத்தின் பிரதிநிதிகள் என
பலரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். அத்துடன் இலங்கையில்
பாதிக்கப்பட்ட மக்களும் இந்த உப குழுக் கூட்டங்களில்
கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரான்ஸ் அமைப்பு நடத்தும் கூட்டம்
இலங்கை தொடர்பான முதலாவது உபகுழுக் கூட்டமானது பிரான்ஸ் நாட்டின்
அமைப்பு ஒன்றினால் நாளை 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 22
ஆவது அறையில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3.30 வரை நடைபெறவுள்ளது.
தமிழ் உலகத்தின் கூட்டம்
இலங்கை தொடர்பான இரண்டாவது உபகுழுக் கூட்டம் 14ஆம் திகதி
நடைபெறவுள்ளது. தமிழ் உலகம் என்ற சர்வதேச அமைப்பு ஏற்பாடு
செய்துள்ள இந்த உபகுழுக் கூட்டம் மனித உரிமைப் பேரவையின் 11ஆவது அறையில்
14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்றாவது உபகுழுக் கூட்டம்
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 4.30 க்கு இலங்கை தொடர்பான மூன்றாவது
உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாரதி நிலைய அமைப்பினால் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை
நிலைமை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இது ஜெனிவா மனித உரிமைப் பேரவை
வளாகத்தின் 23 ஆவது அறையில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவை
வளாகத்தில் 11 ஆவது இலக்க அறையில் மற்றுமாரு உப குழுக் கூட்டம் 15 ஆம்
திகதி நடைபெறவுள்ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த
கூட்டத்தை லீ பொண்ட் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
பிரான்ஸ் அமைப்பு
மற்றொரு பிரான்ஸ் நாட்டின் தொண்டர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை
தொடர்பான உப குழுக் கூட்டம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 27
ஆவது குழு அறையில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பகல் 12 மணி முதல் ஒரு
மணி வரை நடைபெறவுள்ள இந்த உப குழுக் கூட்டத்தில் பல்வேறு
நிபுணர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தமிழ் உலகம் என்ற அமைப்பு
ஏற்பாடு செய்துள்ள இலங்கை மனித உரிமை தொடர்பான உப குழுக் கூட்டம்
நடைபெறவுள்ளது. நிலைமாறு கால நீதி என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் 11
ஆவது இலக்க அறையில் நடைபெறவுள்ளது.
மற்றுமொரு சர்வதேச மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இலங்கை
தொடர்பான உப குழுக் கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை
வளாகத்தின் 27 ஆவது குழு அறையில் நடைபெறவுள்ளது. பாரதி கலாசார
நிலையம் ஏற்பாடு செய்யது இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் 20 ஆம்
திகதி நடைபெறவுள்ளது. இலங்கை மனித உரிமையின் நிலைமைகள் என்ற
தலைப்பில் இடம்பெறவுள்ள இந்தக கூட்டத்தில் கூட்டம் 22 ஆவது குழு
அறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலுவூட்டல் மற்றும் சமூகத்திற்கான அபிவிருத்தி என்ற அமைப்பு
ஏற்பாடு செய்துள்ள இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் 21ஆம் திகதி
ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை 24 ஆவது குழு
அறையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்துவிதமான அநீதிகளும் எதிரான சர்வதேச இயக்கம் இலங்கை
தொடர்பான 22 ஆம் திகதி ஒரு உப குழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை வளாகத்தின் 27 ஆவது குழு அறையில் மாலை 4 மணிக்கு
இக்கூட்டம் நடைபெறும்.
சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பின் உபகுழுக் கூட்டம்
சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் இலங்கை
தொடர்பான உபகுழுக் கூட்டம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிற்பகல் ஒரு
மணிக்கு ஆரம்பமாகும் இந்த உபகுழுக் கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டு
நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை குறித்து
விவாதிக்கப்படவுள்ளது. ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் வளாகத்தின்
15 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அநீதிகளுக்கு எதிரான அமைப்பு
அத்துடன் 26 ஆம் திகதி 12 மணிக்கு இலங்கை தொடர்பான ஒரு உப குழுக்
கூட்டம் நடைபெறவுள்ளது. சகலவிதமான அநீதிகளுக்கும் எதிரான
சர்வதேச இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டம் 27 ஆவது குழு
அறையில் நடைபெறவுள்ளது. மற்றும் பிரான்ஸ் சர்வதேச நிறுவனம்
ஒன்றினால் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டம் ஒன்று 26 ஆம் திகதி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவும் குழு அறை 27 இல் பிற்பகல் 1.30
இற்கு ஆரம்பமாகும்.
பசுமை தாயகம்
இதேவேளை இந்தியாவின் பசுமை தாயகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள
இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி
நடைபெறவுள்ளது. பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில்
பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது.
இலங்கை மனித உரிமை நிலைமை மற்றும் அநீதி என்ற தொனிப்பொருளில் எதிர்வரும்
27 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் இறுதியாக ஜெனிவாவில்
நடைபெறவுள்ளது. சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வு குழு அறை 15 இல் நடைபெறும். நன்றி வீரகேசரி
கொழும்பில் இலவச திருமணத் திட்டம்
12/09/2017 பிரித்தானிய சைவமுன்னேற்றச் சங்கம் தனது 40 ஆண்டுப் பூர்த்தியை
முன்னிட்டு அகில இலங்கை இந்துமாமன்றத்துடன் இணைந்து 40
மணமக்களுக்கு இலவச திருமணத் திட்டம் ஒன்றினை நடத்தவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.17 முதல் 8.33
வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் பம்பலப்பிட்டி, சம்மாங்கோடு
ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய மண்டபத்தில் இத் திருமண வைபவம்
நடைபெறவுள்ளது.
திருமண வயதினை அடைந்தும் வறுமை நிலை காரணமாக திருமண பந்தத்தில்
இணைய முடியாமலிருக்கும் 40 மணமக்கள் தெரிவு செய்யப்பட்டு இத்
திட்டத்தின் கீழ் திருமணம் செய்துவைக்கப்படவுள்ளனர்.
ஒவ்வொருமணமக்களுக்கும் தாலி, கூறைப்புடவை, பட்டு, வேட்டி
சால்வை, இரண்டுமோதிரங்கள் ஆகியவற்றுடன் வீட்டுப்பாவனைப் பொருட்கள்
மற்றும் திருமணச் செலவுக்கென நிதியுதவியும் வழங்கப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை
12/09/2017 கொரிய ஜனநாயக மக்கள் குடியரசால் கடந்த 3 ஆம் திகதி
பரீட்சிக்கப்பட்ட 6 ஆவது அணுசக்தி பரிசோதனைக்கு இலங்கை தனது கண்டனத்தையும்
எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
கொரியாவின் இத்தகைய செயற்பாடானது மக்கள் நலனுக்காக ஐ.நா. பாதுகாப்பு
குழுவின் தீர்மானங்கைளை மீண்டும் மீண்டும் மீறுகின்ற தான் தோன்றித்தனத்தை
எடுத்துக்காட்டுவதாகவுள்ளது எனவும் குறித்த பகுதி மற்றும் அதற்கு அப்பாலும்
சமாதானத்திற்கும் ஸ்தீரதன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும்
இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கையை பாதுகாப்பதற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை
கடைப்பிடிப்பதற்கும், கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்வுக்குக்
கொண்டுவருவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு கொரிய ஜனநாயக
மக்கள் குடியரசை இலங்கை வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையால் கையொப்பமிட்ட புதிய தீர்மானத்தை
வரவேற்கும் அதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபை முடிவுகளை நிறைவேற்றுவது தொடர்பில்
மீண்டும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
நியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி
13/09/2017 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்
தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ
யோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள்
மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடுகளின் அரசியல்
தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின்
பிரதமர் டுருடூ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு
நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் பக்க சந்திப்புக்களாகவே
அரசியல் தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்புக்கள்
நடைபெறுவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான
சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
அதாவது இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில்
மிகவும் தாமதமாக செயற்படுகின்றதாக நேற்று முன்தினம் ஐக்கிய
நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் கடும் அதிருப்தியை
வெ ளியிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை விசேட
அம்சமாகும்.
இதன்போது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில்
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அல்
ஹுசேனுக்கு ஜனாதிபதி மைத்திரி விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன்
காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கான அலுவலகம்
நியமிக்கப்படவுள்ளமை குறித்தும் புதிய அரசியலமைப்பை
உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை
தொடர்பாகவும் ஜனாதிபதி விளக்கிக்கூறவுள்ளார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில்
அரசாங்கம் தாமதமாக செயற்படுவதாக இந்த சந்திப்பின்போது செய்ட்
அல் ஹுசேன் அதிருப்தியை வெ ளியிடலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் 2015
ஆம் ஆண்டு பிரேரணையை அமுலாக்குதல் தொடர்பில் அரசாங்கம்
எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இனவாத சக்திகளின் இடையூறுகள்
தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு எடுத்துரைப்பார் என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில்
கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் ஜனாதிபதி
சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வளாகத்தில் இந்த பிரத்தியேக சந்திப்பு
நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும்
கட்டியெழுப்புதல் குறித்தும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை
அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் இரண்டு
நாடுகளினதும் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
மேலும் இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு
அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பன
தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது. மேலும் எட்கா
உடன்படிக்கை விவகாரம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி
இணக்கப்பாடுகள் குறித்தும் இதன்போது இரண்டு நாடுகளினதும்
தலைவர்களினால் கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள்
பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இரண்டு
தலைவர்களினதும் சந்திப்பு மிகவும் முக்கியத்துவமிக்கதாக
பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்
கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி ஜின்பின் மற்றும் ஜப்பான் பிரதமர்
சின்சிரோ அபே ஆகியோரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தக உறவு மற்றும் ஏனைய தொடர்புகள் குறித்தும்
பேசப்படவுள்ளது. துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் மற்றும்
சீனாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபி்விருத்தி திட்டங்கள்
உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை சீன தலைவர்கள்
கலந்துரையாடவுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில்
கைச்சாத்திடப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை
குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஜப்பான் நாட்டின் பிரதமருடன் திருமலை துறைமுகத்தை
அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை
நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார
உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை
நடத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்டோனியோ கட்ரஸுடனும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் ஐக்கிய
நாடுகள் சபையுடன் இணைந்து பயணிப்பது குறித்து ஆராயவுள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும்
அபிவிருத்தி உதவி திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில்
கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க
செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை
தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட
அமைச்சர்கள் சிலரும் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள
நியுயோர்க் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கையில் போர்க்குற்றம் : மீண்டும் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா
13/09/2017 இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில்
விசாரணை மேற்கொள்ள காத்திரமான வழிமுறை அவசியம் என அமெரிக்கா
மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு தெற்காசியாவுக்காக செலவிடப்படும் நிதி தொடர்பில்
நடைபெற்ற நிகழ்வில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடா்பில்
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி
வழங்கியிருந்தது. அதனை நிறைவேற்றுவது தொடர்பில் இலங்கையுடன்
இணைந்து அமெரிக்கா செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான திட்டவட்டமான நடவடிக்கை பட்டியல் ஒன்றையும்
சர்வதேச இராஜதந்திரிகள் முன்னிலையில் அவரால்
சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மாகாண சபைகளுக்கு அதிக நிர்வாக அதிகாரங்களை வழங்கும்
அரசியலமைப்பு திருத்தச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு
பதிலாக சர்வதேச தரத்திற்கு பொருந்தும் மற்றொரு சட்டம்,
இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை
மீட்டெடுத்தல், காணாமற் போனோர் தொட
ர்பான அலுவலகத்தை நிறுவுதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
நிறுவுதல் ,இழப்பீட்டு அலுவலகம் மற்றும் போர்க்குற்றங்களை
விசாரிக்க மற்றும் தண்டிக்க நம்பகரமான செயல்முறை அந்த
திட்டவட்டமான வழிமுறைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில்
வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தை போர்க்குற்ற
விசாரணைக்காக நிறுவுவதாக வாக்குறுதியளித்தது.
அதற்காக மேலும் இரு வருட கால அவகாசம் வழங்குவதற்கு 2017ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இணக்கம் வெளியிடப்பட்டது.
எப்படியிருப்பினும் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிப்பதாக இலங்கையின் சமகால அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது
13/09/2017 ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள்
ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,
இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் வடக்கு
மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான
சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனீவா
சென்றடைந்துள்ளது.
இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தியாகராசா, கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அரசாங்கம் கோரி நிற்கின்ற
இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி
No comments:
Post a Comment