இலங்கைச் செய்திகள்


நாமலுக்கு விளக்கமறியல்.!

அயதுல்லா - பிரதமர் சந்திப்பு

பொறிமுறை அமைக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் ; அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட மாநாடு

சுற்றுலா துறை அபிவிருத்தி ; எந்த காணியையும் வழங்க தயார் கிழக்கு முதல்வர் !!

யாழ். பல்கலையில் கலவரம் : வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடல்

கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் !!

யாழ் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடம் காலவரையறையின்றி மூடல் : சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும்நாமலுக்கு விளக்கமறியல்.!


நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஜுலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 
அயதுல்லா - பிரதமர் சந்திப்பு

12/07/2016 ஈரான் நாட்டின் மதத்தலைவர் அயதுல்லா ஹுசையின் கொமேனி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
நன்றி வீரகேசரி பொறிமுறை அமைக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் ; அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும் போது சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தமது பங்களிப்புக்கள் தொடருமெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனநாயகம், மனித உரிமை தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோருக்கும், எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.  
இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 


இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட மாநாடு

14/07/2016 ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட மாநாடு இலங்கையில் முதல் முறையாக  கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில் இடம்பெற்றது.
“ அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை பிரதான ஊக்குவிப்பு காரணியாகும் ” என்ற தொனிப்பொருளில் இம் மாநாடு இடம்பெற்றது.
குறித்த உயர் மட்ட மாநாடு பாசிக்குடா சன்ரைஸ் ஜெட்விங் பீச் மற்றும் அமாயா ஹோட்டல்களில் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ கலாசார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் செயலாளர் தாலிப் ரிபாய், ஜோர்தான் பெட்ரா நெஷனல் ரஸ்ட்டின் தவிசாளர் இளவரசி டானா பிராஸ், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மதவிவகார அமைச்சின் செயலாளர் ஜானக சுஹததாஸ, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அருந்திக பெர்னாண்டோ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் என 70 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாநாடு தொடர்பான ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியினை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ வாசித்தார்.
மாநாட்டில் வரவேற்புரையாற்றிய சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ மதவிவகார அமைச்சின் செயலாளர் ஜானக சுஹததாஸ,
“அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை பிரதான ஊக்குவிப்பு காரணியாகும் " என்ற தொனிப்பொருளின் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.
இலங்கை சுற்றுலாதுறையின் பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இந்த சர்வதேச மாநாடு அமைந்துள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய தொனிப்பொட்களாக அபிவிருத்தி, சமாதானம்,நல்லிணக்கம் மற்றும் சுற்றுலாத்துறை அமைந்துள்ளன.
சுற்றுலா நகரங்களான கொழும்பு, கண்டி மற்றும் தென்பகுதிகள் இருக்கும் போது பாசிக்குடா தெரிவுசெய்யப்பட்டமைக்கான காரணம் உள்ளது.
ஏனென்றால் “அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை பிரதான ஊக்குவிப்பு காரணியாகும் ” என்ற இந்ந மாநாட்டின் தொனிப்பொருள் இதற்கு சரியாக பொருந்தும் என்பதாகும்.
இலங்கையிலுள்ள 2 ஆவது பெரிய கடற்கரை சுற்றுலாத்தலமாக பாசிக்குடா காணப்படுகின்றது.
யுத்த சூழல் மற்றும் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தையடுத்து பாசிக்குடா பெரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது பாசிக்குடா அபிவருத்தியடைந்துள்ளதை பார்க்கக்கூடியதாகவுள்ளதென அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் உரையாற்றிய சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ கலாசார அமைச்சர் ஜோன் அமரதுங்க,
ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் மாநாடு இங்கு இடம்பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இம்முறை “அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை பிரதான ஊக்குவிப்பு காரணியாகும் "  என்பது இந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந் நாட்டில் கடந்த 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. எவ்வாறு நாடு கடந்த காலத்தில் அபிவிருத்தியடைந்தது என்பதை பாசிக்குடா எடுத்துக்காட்டுகின்றது.
மக்களை ஒன்றுபடுத்துவதற்கு சரியான துறையொன்றும் இல்லை. ஆனால் சுற்றுலாத்துறையானது மக்களை ஒன்று படுத்துவதற்கு சரியான துறையாகவுள்ளது.
சமூகத்திற்குள் தொடர்புகளைப் பேணவும் முரண்பாடுகளைத் தீர்க்கவும் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.

மாநாட்டை நடத்துவதற்கு இலங்கையை தெரிவுசெய்த உலக சுற்றுலாத்துறை அமைப்பின் பொதுச்செயலாளர் தாலிப் ரிபாய்க்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சுற்றுலாத்துறையானது அபிவிருத்தி மற்றும் அமைதியை ஊக்குவிக்கின்றது. இலங்கைக்கு பயணிப்பதென்பது மிகவும் பாதுகாப்பானது என்பதை இம் மாநாடு உலகிற்கு எடுத்துச்செல்லும்.
முதலீட்டாளர்கள் வரிசையில் நிற்கின்றனர் இங்கு தமது முதலீடுகளை செய்வதற்கு. எமது அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது.
சுற்றுலாத்துறையானது அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் துணை நிற்கின்றது.  
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப பாடுபட வேண்டும். அமைதி இல்லாமல் சுற்றுலாத்துறை இருக்க முடியாதென அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மாநாட்டில் உரையாற்றுகையில்,
“ சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவதும் கிழக்கு மாகாண சபையின் எண்ணமாகும்.
 
உலகில் முதல் தர விருந்தோம்பல் துறைசார் பயிற்சிகளை இளைஞர், யுவதிகளுக்கு வழங்குவதற்கான பயிற்சி நிலையத்தை புல்மோட்டை முதல் பாசிக்குடா வரையிலான கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் சுற்றாடலைப் பாதிக்காத வகையில் அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். 
கடந்த 30 வருட யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரத்தை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் பெருக்கலாம். 
அரசியலில் அர்ப்பணிப்பு, கொள்கை மாறாத திட்டங்கள், சமூக, பொருளாதார மற்றும் புவியியல்சார் துறைகள் மூலம் சுற்றுலாத்துறையை பெருக்குவது சாத்தியமாகலாம். 
சுற்றுலா உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அமைதியான சக வாழ்வுடன் கூடிய பல்சமய, சமூகங்கள் ஒன்றிணைவதனால் உலகில் சுற்றுலாத்துறையினர் வந்து சேரும் கேந்திர நிலையமாக கிழக்கை மாற்ற முடியும். இதற்காக மாகாண அமைச்சுக்கு மத்திய அரசு உதவி ஒத்தாசைகளைப் புரிய வேண்டும்' 
மாநாட்டில் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் பொதுச்செயலாளர் தாலிப் ரிபாய் மற்றும் ஜோர்தான் பெட்ரா நெஷனல் ரஸ்ட்டின் தவிசாளர் பிரின்செஸ் டானா பிராஸ் ஆகியோரும் உரையாற்றினர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட மாநாடு  இம் மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை (11.07.2016) இரவு ஆரம்பமாகி 14 ஆம் திகதி (14.06.2016 ) வியாழக்கிழமை நிறைவடைந்தது. 
ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், இவ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து சுமார் 70 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் வளவாளர்கள், பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை சுற்றுலாத்துறை பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக குறித்த சர்வதேச மாநாடு பாசிக்குடாவில் இடம்பெற்றது.
நிகழ்வின் தலைவரும், அமைச்சருமான ஜோன் அமரதுங்கவினால் மாநாட்டில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 
சுற்றுலா துறை அபிவிருத்தி ; எந்த காணியையும் வழங்க தயார் கிழக்கு முதல்வர் !!

14/07/2016 அண்மையில் பாசிக்குடாவில் இடம்பெற்ற சுற்றுலா துறையில் அபிவிருத்தியும் நல்லிணக்கம் எனும் துணைப்பொருளில் இடம்பெற்ற 50 தேசிய மாநாட்டில் சுற்றுலா துறை அபிவிருத்தி க்காக கிழக்கில் எந்த காணியையும் வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் வடக்கு கிழக்கில் இந்த காணி அபகரிப்பின் மூலம் எத்தனை மீனவர்களது வாழ்க்கை சீரழிய போகுதென்பதை கிழக்கு முதல்வர் கவனத்தில் கொள்ள வில்லை என்று காணி உரிமைகளுக்காக போராடும் பிரஜா அபிலாஷை அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
அபிவிருத்தி நல்லிணக்கம் என சொல்லிக் கொண்டு பாசிக்குடாவில் அதிகமான தமிழர்கள் இருக்கின்ற இடத்தில் மாநாட்டில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப் பட்டுள்ளது மற்றும் தேசிய கருமா மொழி தமிழ் சிங்களம் என்று சொல்லப்பட் ட போதிலும் மாநாடு முழுக்க சிங்களத்திலும் ,ஆங்கிலத்திலும் நடத்தியமை நல்லிணக்கமா என கேள்வி எழுப்பியுள்ளது .
பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது 1 மீனவனையோ ,சிறு விடுதி அமைப்புக்களுக்கோ மாநாட்டில் தங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்க அனுமதிக்க வில்லை .
இன்று இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் விடுதிகளை அமைத்து வருகின்றனர் மக்களது காணிகளை அபகரித்து உள்ளனர் கடற் படை முகாம் எனும் போர்வையில் சிறு சிறு விடுதிகள் அமைத்து இலாபம் அடைகின்றனர் இவை எல்லாம் தமிழர்களது காணிகள் என்று கிழக்கு முதல்வருக்கு தெரியாமல் போனது வேடிக்கையாக உள்ளது .
இன்று யுத்தத்துக்கு பின் தமிழர்களது பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன ,உதாரணமாக வடக்கில் மாவீரர் துயிலும் இல்லம் ,திலீபன் நினைவு தூபி, என தமிழர்கள் அடையாளம் அழிக்கப் பட்டு ஆனையிறவில் யுத்த வெற்றி என்று கூறி சிலைகளை அமைத்து சுற்றுலா துறை என்கின்றனர் அது போன்று முள்ளி வாய்க்காள் என இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம் .
இந்த நிலை இன்று இலங்கையில் இருக்கும் போது எவ்வாறு அபிவிருத்தியும் நல்லிணக்கம் தமிழர்களை சென்றடையும் என காணி உரிமைகளுக்காக போராடும் அமைப்பு தெரிவித்துள்ளது நன்றி வீரகேசரி 


யாழ். பல்கலையில் கலவரம் : வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடல்


17/07/2016 யாழ்ப்பாண பல்கலைகழத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்குகான வரவேற்ப்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடணத்தை நடாத்தமுற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது.
இவ் சம்பவத்தையடுத்து இன்றைய  தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இக் கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைகழக பதிவாளரால் வெளியிடப்பட்டது.
மேலும் விரிவுரையாளர்களும் மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் மேலும் பல்கலைகழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சுழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதனையும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதாக பல்கலைகழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 


கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் !!
17/07/2016 இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து 7 மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது . இது தொடர்பாக தெரியவருவதாவது வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த  போது பின்னால் வந்த கதிர்காமம்  7 மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை என கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது எமது இடம் உங்களை யார் வர சொன்னது என தகாதவார்த்தையால் திட்டியதுடன் கத்தியை கொண்டு குத்துவதற்கு முயன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலக்கனா  மட்டக்களப்பை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது . தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கதிர்காம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரியாழ் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடம் காலவரையறையின்றி மூடல் : சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும்
17/07/2016 யாழ். பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட விஞ்ஞானபீட மாணவர்களை இரண்டாம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது வழமையாக இந்நிகழ்வுகளுக்கு தமிழர் பாரம்பரியத்தின் பிரகாரம் மேளதாள நாட்டியத்துடனேயே விருந்தினர்களை வரவேற்றிருந்தனர்.
இருந்த போதிலும் இம்முறை இந்நிகழ்விற்கு வழமைக்குமாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை நடாத்தி விருந்தினர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் சிங்கள மாணவர்களுடைய இவ் ஏற்பாட்டை தமிழ் மாணவர்கள் எதிர்த்திருந்த போதும் அதனையும் மீறி சிங்கள மாணவர்கள் நிகழ்வை நடாத்த ஆரம்பித்தனர். இதன்போது தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது பாரிய கலவரமாக வெடிக்க ஆரம்பித்தது.
இதனையடுத்தே பல்கலைகழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக விடுதிகளில் உள்ள சிங்கள மாணவர்களை அவர்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு வெளியேறுமாறும் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை யாழ் பல்கலைகழக நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி

No comments: