ஜூலை 15. பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.- ப.கண்ணன்சேகர்,

.


அரசியல் தூய்மையின் அடித்தள பாடமாய்
      அறவழி பாதையின் அரியதொரு தலைவரே!
முரண்பாடே இல்லாமல் முற்றிலும் நேர்மையாய்
       முத்திரை ஆட்சியின் முத்தான முதல்வரே!
தரமான திட்டத்தால் தமிழகத்தை வளமாக்கிய
       தன்னிகர் இல்லாத தென்னாட்டு காந்தியே!
வரமான கல்வியை வறியோரும் பெற்றிட
        வள்ளலாய் உதவிய வையக தெய்வமே!

வெற்றியும் தோல்வியும் வேறென கருதாது
        வேண்டிய உதவியை வருவோர்க்கு செய்தவர்!
சுற்றமும் சொந்தமும் சட்டத்தின் முன்னாடி
         சாய்ந்திட செய்யாமல் சமமாக பார்த்தவர்!
பற்றற்ற வாழ்வினை படித்திட்ட மேதையாய்
         பாரினில் புகழ்ந்திட பணியாற்றி வாழ்ந்தவர்!
தற்புகழ்ச்சி கொள்ளாமல் தன்னலம் காணாமல்
         தவவாழ்வின் எளிமையை தரணியில் கொண்டவர்!

விடுதலை போராட்ட வேள்வியில் கலந்திட
        வெள்ளையர் ஆதிக்க விலங்கினை கண்டவர்!
வீடுவாசல் சொத்தின்றி வெறுமனே வாழ்வினை
        விதைத்திட பொதுநலனில் வித்தாக மாறியவர்!
மேடுபள்ள அரசியலில் மேன்மைமிகு தலைவரென
        மேதினியில் கறைபடா மேலோராய் திகழ்ந்தவர்!
தேடுகின்றோம் தினந்தோறும் தெய்வீக தலைவனை
        திரும்பவும் வருவாரா தேம்பிட கேட்கின்றோம்!

No comments: