காக்கா முட்டை
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது மிக குறைவு. அப்படி குழந்தைகளை வைத்து படம் பண்ணினாலும் அந்த குழந்தைகளின் குழந்தை தனம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.அதேபோல விருதுகள் வாங்கிய படம் என்றால் அது திரையரங்குகளுக்கு செல்லுபடியகாது என்றும் ஒரு எழுதப்படாத விதியுள்ளது, ஆனால் இவ்விதிகளை உடைத்துள்ளது இந்த காக்கா முட்டை!
கதை
சென்னை குப்பத்தில் வாழும் 2 சிறுவர்கள், சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை (ஆம், படத்திலும் இதே பெயர்தான்) குடும்பத்துக்கு உதவ முடியாத சூழலில் இருக்கும் அப்பா, குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்கும் அம்மா, பாசமிகு பாட்டி, ரயில்வேயில் வேலை செய்யும் இவர்களின் பெரிய நண்பனான பழரசம், இவர்கள் மட்டும்தான் இவர்களின் சொந்தம்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டவர்கள், ஒரு முறை அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் திறக்கப்பட்ட பிட்சா (Pizza) கடையையும், தொலைக்காட்சியில் வரும் பிட்சா விளம்பரத்தையும் பார்த்த சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடவேண்டும் என ஆசை எழுகிறது.
அதற்காக தாங்களே அதற்கான தொகையை தயார் செய்ய பல வேலைகளை செய்கிறார்கள். பிறகு அந்த தொகைக்கு பிட்சா வாங்க செல்கிறார்கள்.ஆனால் குப்பத்தில் வாழும் சிறுவர்களான இவர்களை உள்ளே விடமறுக்கிறார் கடையின் மேலாளர்.
அதனால் எற்படும் அவமானம், அதை வீடியோ எடுக்கும் மற்றொரு சிறுவன் அந்த வீடியோ பிறகு Viral ஆக பரவ இதை சாக்காக வைத்து கொண்டு ஆதாயம் தேடும் இரு குப்பத்து இளைஞர்களும் அக்குப்பத்தின் MLAவும்,. சின்ன பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் ஊடகம்.
இப்பிரச்சனையிலிருந்து வெளிவர துடிக்கும் கடை முதலாளி, இதைப்பற்றி எதுவும் தெரியாமல் தங்கள் உலகத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கும் இரு காக்கா முட்டைகள், பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை!
நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்
இந்த படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும் இது முதல் படம்போல யாருக்கும் தோன்றாத அளவில் நடித்திருக்கிறார்கள், பல முன்னணி நடிகர்கள் கூட இவர்களை போல எதார்த்தமாக நடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
பிட்சா டெலிவரி செய்ய வந்தவரை நிறுத்தி பிட்சாவை காண்பிக்க சொல்லும் போதும், பிட்சா வாங்க பல வேலைகள் செய்து சம்பாதிக்கும் போதும், பானிபூரிக்கு பதில் உடைகளை Deal பேசி வாங்கும் காட்சிகளில் அவர்களின் எதார்த்த நடிப்பிற்கு ஈடு இணையில்லை.
இவர்களின் தாயாக நடித்த ஐஸ்வர்யாவை பாராட்டாமல் இருக்கவே முடியாது இவ்வளவு இளம் வயதிலேயே தாயாக நடிக்க பல நாயகிகள் மறுத்துவரும் நிலையில் அதை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார். சிறுவர்களின் பாட்டி, பிட்சாவிற்க்கு பதில் தோசையில் Decorate செய்து தரும் காட்சியில் செம லூட்டி!
இவர்களை தவிர ரமேஷ் திலக், பாபு அந்தோனி அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களாக சிம்புவை திரையில் காணாத ரசிகர்களுக்கு இவரின் சிறப்புதோற்றம் ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது,
”நம்ம வீட்டு Address என்னமா?” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா?” என்ற கேள்விகள் மனதை நெருடுகின்றன.இரு சிறுவர்கள், அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் அதனால் எற்படும் விளைவுகள் என சாதாரண கதை களத்தை எடுத்துக்கொண்டு மிக அழகாக இந்த காக்கா முட்டையை அடை காத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன்.
இவரின் நடிகர்கள் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதினால் காட்சிகளை வடிவமைத்தற்க்கு மிகவும் உதவியுள்ளது. மிகக் குறுகலான சேரி வீதிகளையும், கால் நீட்ட முடியாத சிறு வீட்டையும் கூவம் ஆற்றங்கரையையும் மிக எதார்த்தமாக படம் பிடித்துகாட்டியிருக்கிறார்.
இப்படத்தில் முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது! ஆம் இந்த படத்தில் இடைவேளை என்றே ஒன்று கிடையாது, இடைவேளை இல்லாமல் எடுத்து அதில் வெற்றியடைந்ததுக்கும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்!
படத்தின் நீளம் வெறும் 109 நிமிடங்கள் மட்டுமே அதை மிக எளிமையாகவும் மிக அழகாகவும் நமக்கும் விருந்து அளித்திருக்கிறார் எடிட்டர் கிஷோர். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்க்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது.
படத்தின் கதை போக்கிற்கேற்ப அழகாகவும், அளவாகவும் இசையமைத்திருக்கிறார் ஜீ.வி பிரகாஷ் குமார். பின்னணியும் சரி பாடல்களும் சரி மனதை வருடுகிறது.
க்ளாப்ஸ்:
இரு காக்கா முட்டைகளின் எதார்த்த நடிப்பும் மற்ற எல்லா நடிகர்களின் ஒத்துழைப்பும் இயக்குனரின் எளிமையான கதை.
அதை மிக நேர்மறையாக கையாண்ட விதம்.ஜீ.வி பிரகாஷ் குமாரின் அழகான இசை.
பல்ப்ஸ்:
”இவை தேவைதானா” என்று யோசிக்கவைக்கும் சில இடங்கள்!
மொத்ததில் ஒரு எதார்த்த குழந்தைகளுக்கான சினிமாவான இந்த காக்கா முட்டை தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தும் ஒரு உன்னத படைப்பு!
ரேட்டிங்: 3.75 / 5 நன்றி cine ulagam
No comments:
Post a Comment