ஒரு ஆண்டு நிறைவாகிறது! ’’விழுதல் என்பது எழுகையே’’



என்ற பெருந் தொடர்கதை  26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக  வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது  என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.

விழுதல் என்பது எழுகையே பெருந் தொடரின்  50வது வாரம்
விழுதல்  என்பது எழுகையே (அவுஸ்திரேலியா) அருண் விஜயராணி  தொடர்ச்சி பகுதி 50  கதை தொடர்கிறது.


உடம்பு அடித்துப் போட்டால் போல் இருந்தது
இன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் ஆறுதலாக எழும்பி ஆறுதலாகக் கோப்பி குடித்து ஆறுதலாகச் சாப்பிட்டு ஆறுதலாக சுடு தண்ணீரில் ஆசை தீரக் குளித்து வெளிநாட்டுக்கு வந்த நாளில் இருந்து இந்த ஆறுதல் என்ற வார்த்தையே மறந்து விட்டது போல் இருந்தது. சீலன்  எழும்பி வேலைக்கு வரமுடியவில்லை என போன் பண்ணிட்டு  மறுபடியும் கட்டிலில் வந்து  விழுந்தான்.
குமரன் யாழ்ப்பாணம் போவதாக சொல்லி இருந்தான்.
அம்மாவுக்கு ஒரு நல்ல சீலை அப்பாவுக்கு வேட்டி தங்கச்சிக்கு ஒரு நல்ல வடிவான காஞ்சிபுரம் இவ்வளவும் இண்டைக்கு கடைக்குப் போய் வாங்க வேண்டும்.

சீலன் மனதிற்குள்ளயே பட்டியல் போட்டுக்கொண்டான். நேரம் பதினொன்றை                நெருங்கியது. சிட்டுக்குருவி பதினொரு முறை தலையை காட்டிக் காட்டி     விட்டு கூண்டுக்குள் தன்னை இழுத்துக் கொண்டது.
சீலன் கட்டிலை விட்டு எழுந்தான் எல்லாவற்றையுமே ஆறுதலாகச் செய்து விட்டு வீட்டை விட்டு இரண்டு மணி போல் கிளம்பினான் . இந்திய இலங்கை கடைகளில் கூட்டம் அலை மோதியது
ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி தனக்கு பிடித்தமானவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான் தனக்கு எதிராக வந்த பெண்னைக் கண்டு திகைத்து விட்டான் 
இது....?  இது... சுபத்திரா அக்கா... அவாவோ நோர்வேக்கு கல்யாணம் கட்டிக் கொண்டு போனவா  எப்படி இங்கை?
அவன் யோசிக்கும் முன்பு வந்த பெண்மணி சடுதியாகத் திரும்பித் தான் வந்த பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
சீலன் விடவில்லை, „சுபத்திரா அக்கா சுபத்திரா அக்கா“ எனக் கூப்பிட்டுக்கொண்டு விரைவாக முன்னால் சென்று அவளை மறித்தான் அதற்கு மேலும் அவனிடமிருந்து தப்ப முடியாத நிலையில் சுபத்திரா நின்றாள்.
„தம்பி சீலன் எப்ப இங்கை வந்தனீர்.“
„தம்பி எண்டு சொல்லுறீங்கள் பிறகு ஏன் என்னைத் தெரியாத மாதிரி ஓட்டம் பிடித்தனீங்கள“;. 
அவள் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொல வென உதிர்ந்தது .
„வாரும் சீலன் ஒரு கோப்பிக் கடையில் இருந்து கதைப்போம்.“
இருவரும் அருகே உள்ள ஒரு கோப்பிக் கடைக்கு போய் கோப்பியை ஓடர் பண்ணி விட்டு அமர்ந்தார்கள். 
„சொல்லுங்கோ அக்கா நோர்வேக்குப் போனனீங்கள் எப்ப இங்கை வந்தனீங்கள்?“
„ஊரில இருக்கேக்கிள்ளை எவ்வளவு வடிவாக இருந்தனீங்கள் இப்ப கடுமையாகப் பழுதாப் போனீங்கள்,,,
சுபத்திராவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
„சீலன் என்னுடைய அப்பா வெளிநாட்டு மாப்பிள்ளை வேணுமெண்டு சீதனம் டொனேசன் என அள்ளிக் குடுத்து நோர்வே மாப்பிளையை எடுத்தார் அவருடன் நோர்வேக்கு வந்து இறங்கிய அடுத்த நாளே ஓர் வெள்ளைக் காரி வீட்டுக்கு வந்தாள் எனக்கு முன்னேயே அவரைக் கட்டிப்பிடித்து கொஞ்சினாள் இவரும் நான் வெளியாலபோட்டு வாரன் எனச் சொல்லிப்போட்டு அவளுடன் காரில் ஏறிப் போய் விட்டார்.“
எனக்கு ஒன்றுமே புரியவில்லை அன்று நேரம் கழித்து வந்தவரிடம் யார் அவள் எனக் கேட்டேன,; „அவள் என்னுடைய பெண்சாதியாகப ;போறாள் நாங்கள் இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்துகிறோம்“ என்றார்.
„என்னுடைய அம்மா தங்கச்சி மாரை கரை சேர்க்க வேணும் என்று அழுது கொண்டு கூறியதால் தான் யாழ்ப்பாணம் வந்து உன்னைக் கல்யாணம் கட்டிக் காசை அம்மாவிடம் குடுத்தனான“; என்றார்.
நான் விறைத்துப் போய்விட்டேன்.
„என்னை கைவிட்டு விடாதையுஙகோ, முறையாக என்னை நீங்கள் கல்யாணம் கட்டிக் கொண்டு  வந்தனீங்கள் என்று அவளுக்கு விளங்கப்படுத்துங்கோ“ என்றன்.
என்னுடைய அழுகை அவரை ஒன்றும் செய்யவில்லை என்னைத் தனியே விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் வேலையால் வந்தவுடன் அவளுடன் வெளிக்கிட்டு விடுவார். ஒரு நாள் இரவு முழுவதும் அழுது சண்டை பிடித்தேன். 
இரண்டு நாட்களின் பின்னர் வா உன்னை வேறு இடத்துக்குக் கூட்டிப்போய் அங்கே நாங்கள் சந்தோசமாக இருப்போம் வெள்ளைக்காரிக்கு எங்கட புது விலாசத்தை குடுக்க மாட்டன் என்றார்.
அடுத்த நாள் புகையிரத்தில் ஏறிப் புறப்பட்டம். அது ஓர் நீண்ட பயணமாக இருந்தது. நான்கு ஸ்ரேசன் கடந்து  இருக்கும் ரொய்லட்டுக்கு போட்டு வாறன் என்று சொல்லிப் போனவர்  திரும்ப வரவேயில்லை. வருவார் வருவார் எனத் திரும்பி பார்த்தபடியே இருந்தன் அவர் வரவில்லை கடைசி ஸ்ரேசனும் வந்து விட்டது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படபடப்பும் பயமும் ஏற்பட்டது. இறங்கி ஸ்ரேசனில் இருந்த கதிரையில் இருந்து அழுது கொண்டிருந்தேன்.  
நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு வெள்ளைக்காரி என்னருகில் வந்து என் தலையை அனுதாபமாக  தடவி ஏதேதோ கேட்டாள். எனக்கு அவளுடைய மொழி புரியவில்லை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் உரையாடினேன். 
அவள் என்னைத் தன்னோடு அழைத்துச் சென்றாள். ஒரு வாரம் சைகைப் பாசையிலேயே எங்கள் உரையாடல் தொடர்ந்தது. அடுத்த கிழமை அவளைப் போலவே இன்னொரு பெண்மணி வீட்டிற்கு வந்தாள்.
என்னை அழைத்து வந்தாள் புதிய பெண்மணியுடன் என்னைப் போகச் சொன்னாள் . ஏன் என சைகையில் கேட்டேன் புதிய பெண் மணி ஜொப் ஜொப் என்றாள் வேலை செய்யப் போகிறேன் என்ற நம்பிக்கையில் அவளுடன் புறப்பட்டேன் என்னைப் போலவே புதிய பெண்மணிக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்திருந்தது.
அவளுடைய பெயர் மார்க்கிரட,; அழகாக இருந்தாள். ஆனால் மார்க்கிர்ட்டின் வீட்டிற்கு வந்த பிறகுதான் நான் பிழையான இடத்திற்கு வந்து விட்டேன் என்று புரிந்தது.அது ஓர் விபச்சார இல்லம்.
கொஞ்சம் பெண்களை வைத்து வியாபாரம் நடாத்திக்கொண்டிருந்தார்கள். மார்க்கிரட் வெளியே மசாச் செய்யும் இடம் என பெயருக்கு பலகை ஒன்று மாட்டப்பட்டிருந்தது . நான் எவ்வளவோ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியும் அவள் கேட்கவில்லை.
சம்மதிக்காவிட்டால் என்னை வெளியே துரத்திப் போடுவன்  எனப் பயப்படுத்தினாள்.சீலன் தற்கொலை செய்பவர்கள் கோழை என்கிறார்கள். இல்லை உண்மையிலே அவர்கள் தைரியசாலிகள் என்னால் தற்கொலை செய்யக் கூட முடியவில்லை. உயிரற்ற உடலாக அவளது கட்டளைக்குப் பணிந்தேன் இரண்டு மாதம்  சென்றிருக்கும்  அந்த வீட்டிற்கு எங்கள் ஊர்க்காரர் ஒருவர் வந்தார் அவர் பெயர் மணியம்.
அவருடைய காலில் விழுந்து கதறிக் கதறி அழுதேன் என்னை  இந்த நகரத்திலிருந்து கூட்டிக் கொண்டு போங்களே எனக் கெஞ்சினேன். வந்தவர் நல்லவர்.
முப்பத்து எட்டு வயதாகியும் தன்னுடைய திருமணத்தைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காத அம்மா தன்னை பணம் தரும் மெசினாக எண்ணுவதைச் சொல்லி கவலைப்பட்டார். அப்படி ஒரு விரத்தியான நேரத்திலேயே தன்னுடைய சினேகிதன் இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.
அன்று இரவு முழுவதும் என்னுடைய கவலையை அவரும் அவரது கவலையை நானும் கேட்டு பதில் கழிந்தது. அடுத்த நாள் தொட்டு என்னைத் தேடி வருவதாக மணியம் அந்த விடுதிக்கு வந்து வந்து போனார். 
ஒரு நாள் மார்க்கிரட்டை மசாஜ் என்ற லைசன்சை வைத்துக்கொண்டு தவறான் தொழில் நடத்துவதாக பொலிசாரிடம் கூறப்போவதாக மிரட்டி என்னை அந்த நகரத்திலிருந்து இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்.
பொலிஸ் ஸ்ரேசனுக்கு என்னை அழைத்துச் சென்று என்னுடைய நிலபரத்தை எடுத்துச் சொன்னார். இங்குள்ள அரசாங்க அலுவலகங்கள் உதவும் மகளீர் மன்றங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். ஒரு வாரத்தின் பின்னர் பொலிசார் என்னுடைய கணவர் சபேசன் அந்த விலாசத்தில் இல்லையென்று கூறி தாம் இன்னமும் தேடுவதாகச் சொன்னார்கள்.
என்னைக் கை கழுவி விட்ட உடனேயே இருவரும் இடம் மாறிப் போயிருக்க வேண்டும் என நினைக்கின்றேன். அவளது கண்ணீரை ஓர் சகோதர வாஞ்சையுடன் எட்டித் துடைத்தான் சீலன்.
அழாதேங்கோ அக்கா எங்கட அப்பாவும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற ஆசையில செய்யேல்லை. நாட்டு நிலவரத்தால உங்களைப் போல வடிவான பிள்ளைகளை  வைச்சிருக்கப் பயந்தும் இருக்கலாம்.
அதுக்காக ஒருவரையும் தெரியாத நோர்வே நாட்டுக்குப் புரோக்கரிண்ட பேச்சை நம்பி கல்யாணம் செய்து அனுப்பினதே தன்னுடைய மகளுக்கு என்ன நடக்கும் என்றே தெரியாத அப்பா. என்னை ஊரிலேயே கட்டிக் குடுத்திருந்தால் என்னுடைய நன்மை தீமைக்கு அழ வந்திருப்பார். 
தான் வெளிநாட்டுக்கு அனுப்பிய மகள் ஓர் விபச்சாரியாக நகரத்தில் உழைத்திருக்கின்றாள் என அறிந்தாள் அவர் உயிரோடு இருப்பாரா . அக்கா நீங்கள் போய் நாலாவது மாசமே உங்களைக் காணவில்லை என்று சபேசன் அறிவித்து விட்டார். செத்த வீடு கொண்டாடி விட்டு இருக்கினம். அதுதான் உங்களை இங்கை கண்டு திகைத்துப் போனன், அப்ப இப்ப சீவியத்திற்கு என்ன செய்யிறீங்கள். 
என்னை ஒரு பிளாஸ்டிக் செய்கிற பெக்றரி ஒன்றில சேர்ந்து விட்டிருக்கிறார். கொஞ்சம் சம்பளம் தான் சீவியம். டிக்கட் காசைச் சேர்த்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு போற நாலை என்ணிக் கொண்டிருக்கிறேன் என்னுடைய பாஸ்போட் கூட சபேசனிடம் தான். 
மணியந்தான் எனக்கு பாஸ் போட் எடுக்கவும் ஓடித்திரிகிறார். எனக்கு இவ்வளவு உதவி செய்த மணியத்திற்கு நான் என்னைக் காணிக்கை ஆக்கியுள்ளேன். தாலி கட்டாத மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். 
மகன் குடும்பப் பொறுப்பானவன் ஒழுக்கமானவன் என்பதுக்காக உரிய வயதில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் பல அம்மாக்கள் பிழை விடுகிறார்கள். எப்ப மணியம் கல்யாணம் கட்டிகிறரோ அப்ப நான் கண்ணியமாக விலகி விடுவன் சீலன்.
சீலனுக்கு ஆச்சரியமாக இருந்தது, „அக்கா நான் மணியம் அண்ணாவை சந்திக்கவேணும்“ என்ற சீலனிடம் சுபத்திரா „ இந்தாரும் என்னுடைய போன் நம்பர் அடிக்கடி அவர் வரமாட்டார். விடுமுறை நாட்களில் மட்டுமே வருவார்“ எனச் சொல்லியபடியே தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தாள்.
அக்கா நானும் உங்களை இலங்கைக்கு அனுப்ப என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன் என்றான்.
நெகிழ்ந்து போன அவள் அவனது கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக்கொண்டாள் கைகளின் நடுக்கத்தில் அவளது வலியை அவன்  புரிந்து கொண்டான்.
சீலனின் கையிலிருந்த ஜேர்மன் பத்திரிகையை பார்த்த சுபத்திரா“ ஜேர்மன் பேப்பர் வைத்திருக்கிறியள் ஏதாவது முக்கியமான செய்தியா“ என சுபத்திரா கேட்க, „ உலக நாடுகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றிய கருத்தரங்கம் நடக்கவிருக்கு, நான் போகிறன் நீங்களும் வருகிறீர்களா“ என சுபத்திராவிடம் கேட்கிறான் „ பார்ப்பம்“ என அவள் பதில் சொல்லுகிறாள்.
சீலன் அவளிடம் விடைபெற்றுச் செல்லுகிறான்.
Mr.E.K.Krishnamoorthy
Editor of Pannagam.com
fomer Editor of Namathu Ilakku
News paper
GERMANY
Tel: 0049 15229510307
Office Tp 0049 1779750795
Skype pannagam1

No comments: