20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி
வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ
சனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை
புலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்
20ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி
09/06/2015 அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாற்ற சட்டமூல வரைபை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
125 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மூலமும், 75 உறுப்பினர்கள் விகிதாசார ரீதியிலும், 25 உறுப்பினர்களை தேசி யப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யும் வகையிலும் 225 உறுப்பினர்களை கொண்டதாக புதிய தேர்தல் முறை அமைந்துள்ளது.
அதாவதுஇ விருப்பு வாக்கு முறையற்ற தொகுதி மற்றும் கலப்பு என இரண்டு முறைகளிலும் அமைந்த புதிய கலப்பு தேர்தல் முறை யோசனை அரசியலமைப்பின் 20 ஆவது சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறை மாற்ற யோசனயை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர் அதற்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி. திகாம்பரம் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
அதாவது நுவரெலியா மஸ்கெலியா தொகுதிகளில் நான்கு பல் தொகுதிகள் உருவாக்கப்படும் வகையில் தேர்தல் முறை மாற்ற யோசனை வரவேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு உடனடியாக எதிர்ப்பு வெளியிட்ட அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வகையில் தேர்தல் முறை மாற்றத்தை அங்கீகரிக்கவேணடும் என்று வலியறுத்தியுள்ளனர். குறிப்பாக அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் எஸ்.பி. திசாநாயக்க உள்ளிட்டோர் முன்வைக்கப்பட்ட தேர்தல் முறையில் மாற்றம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனிடையே தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பை அவதானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ""அப்படியானால் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்ற நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு தரப்புக்கும் அநீதி ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தடையாக இருக்கவேண்டாம் என்றும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கையும் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேர்தல் முறை மாற்றத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.
அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் திகாம்பரத்தை சந்தித்த ஜனாதிபதி சிறிசேன சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேர்தல் முறை மாற்றம் வரும் என்று உறுதியளித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பெரெரா கூறியுள்ளதாவது
"" புதிய தேர்தல் முறையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் மாற்றம் ஏற்படாது. அதில் 125 உறுப்பினர்கள் கலப்பு முறைமை அடிப்படையிலும் 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளனர். மேலும் 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். பிரதமரின் இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இதனை முழுமையாக தயாரித்து சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்"
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்திலிருந்து தேர்தல் முறை மாற்றத்தை உருவாக்குவது குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்று தேர்தல் முறையை தயாரிக்க அமைச்சரவை உப குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இந்த அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கபிர் ஹஷீம், சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கருணாதிலக்க, பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த உறுப்பினர்கள் பல தடவைகள் கூடி தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து சில வாரங்களுக்கு முன்னர் தமது வரைபை முன்வைத்திருந்தனர். ஆனால் அதற்கும் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியும பிரதமரும் களத்தில் இறங்கி தேர்தல் முறை மாற்ற யோசனையை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் 255 உறுப்பினர்களை கொண்டு தேர்தல் முறை மாற்றத்தை தயாரிக்கவே யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அதாவது 196 உறுப்பினர்களை மாவட்ட ரீதியிலும் 59 உறுப்பினர்களை தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் பாராளுமன்ற ஆசனங்கள் 255 ஆகன உயர்வதை பல கட்சிகள் எதிர்த்தன. இந்நிலையில் வாரக்கணக்கில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதியில் தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ
10/06/2015 யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய குர்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நாயினதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவின் விஷேட விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் சந்தேக நபரின் நண்பர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
விளக்கமரியலில் உள்ள சந்தேக நபர்களிடம் குர்ரப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தலமை தாங்கும் கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான சிறப்பு விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் பலனாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஏற்கனவே ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த முதலாம் திகதி மன்றுக்கு மேலதிக அரிக்கை9யையை சம்ர்பித்திருந்த புலனாய்வுப் பிரிவினர் மேலும் சிலர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படலாம் என அப்போதைய விசாரணைத் தகவல்களை வைத்து தெரிவித்திருந்தனர்.
இந் நிலையிலேயே நேற்று முன் தினம் 10 ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
10/06/2015 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
10/06/2015 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மஹாபொல உதவித் தொகை குறைக்கப்பட்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கலஹா சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
நாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை
12/06/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
புலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்
12/06/2015 புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. கொழும்பு கோட்டையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இரட்டைப்பிரஜாவுரிமை சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இதன்போது இரட்டைப்பிரஜாவுரிமை பெற்றவர்கள் எழுந்து நின்று சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர். இலங்கையின் பிரஜாவுரிமை தொடர்பில் 1948 ஆம் ஆண்டின் போதே சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்ட நிறைவேற்றத்தின் பிரகாரம் 18 ஆம் இலக்க சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேவேளை இலங்கையில் இரட்டைப்பிரஜாவுரிமை 1987 ஆம் ஆண்டே இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அந்த வருடத்தின் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 45 ஆவது இலக்க சட்டமூலத்தின் பிரகாரம் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கல் செயற்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இதுவரையில் சுமார் 34 ஆயிரம் பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் 2011 ஆம் ஆண்டளவில் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கல் அரசாங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்படி சுமார் நான்கு ஆண்டுகள் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.
எவ்வாறாயினும் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவையின் அனுமதியுடன் இரட்டைப்பிரஜாவுரிமை மீள வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரைக்கும் 2000 விண்ணப்பங்கள் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு கிடைக்கப்பெற்றாலும் புதிய ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதலில் விண்ணப்பம் செய்த 450 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே நேற்று மேலும் 150 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment