தமிழ் சினிமா


புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை  





தமிழ் சினிமாவில் சமூக புரட்சி கதைகளை கையாளுபவர்கள் மிகவும் குறைவு. அப்படியே அந்த கதைக்களத்தை தொட்டாலும் முழுமையாக மக்களுக்கு புரியும் படியாகவும், பிடிக்கும் படியாகவும் கொடுக்கும் இயக்குனர்கள் மிக அரிது.

இதில் ஈ, பேராண்மை என தொடர்ந்து வெளிநாடுகள் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க என்ன சதி திட்டம் செய்கின்றது என்பதை தோல் உரித்து காட்டியவர் எஸ்.பி.ஜனநாதன். இவரின் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள படம் தான் புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை.
கதைக்களம்
வெளிநாடுகளின் ஆயுத கழிவுகளை அவர்கள் நாடு நன்றாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, வளரும் நாடான இந்தியாவின் ஆசையை தூண்டி, இங்கு அனுப்புகிறார்கள். இதனால், எண்ணற்ற சீரழிவுகள் இந்தியாவில் நடக்க, இதையெல்லாம் தடுத்து நிறுத்தும் கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா வருகிறார்.
ஆனால், படத்தின் முதல் காட்சியிலேயே அவருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கின்றனர். இவரை தூக்கில் இடும் பொறுப்பு காவல்துறை அதிகாரியாக வரும் ஷாமிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அவர் ஆர்யாவை தூக்கில் போட, அனுபவம் வாய்ந்த ஒருவர் வேண்டும் என்று விஜய் சேதுபதியின் உதவியை நாடுகிறார். ஆனால், விஜய் சேதுபதிக்கு இதில் துளிகூட விருப்பம் இல்லை.
இந்த உண்மை ஆர்யாவின் கூட்டத்தில் ஒருவரான கார்த்திகாவுக்கு தெரிய வர, விஜய் சேதுபதியையும் தன் கூட்டத்தில் ஒருவராக இணைத்து, ஆர்யாவை காப்பாற்ற முயற்சிக்கிறார். இவர்கள் திட்டப்படி ஆர்யா காப்பாற்றப்பட்டாரா? இல்லை ஷாம் திட்டப்படி தூக்கிலிடப்பட்டாரா? என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக கூறியிருக்கிறார் ஜனநாதன்.
படத்தை பற்றிய கண்ணோட்டம்
ஆர்யா, விஜய் சேதுபதி, என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இருந்தாலும், படத்தில் முழு பலத்தையும் தாங்கி செல்வது ஷாம் தான். இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் படத்தை போன்று ஷாமின் திரைப்பயணத்தில் மைல் கல் தான் இந்த புறம்போக்கு.
ஆர்யாவை ஜாலியான பையனாக பார்த்து போராளியாக பார்க்க வித்தியாசமாகவும், ரசிக்கும் படியாகவும் உள்ளது. விஜய் சேதுபதியும் தான் செய்யும் தவறை உணர்ந்து அழுது புரளும் இடத்தில் கண் கலங்க வைக்கின்றார்.
வழக்கமான ஜனநாதன் படத்தை போல கம்யூனி
ஸ்ட் வசனங்கள் கொஞ்சம் தூக்கல் தான். படத்தில் எத்தனை கதாநாயகன்கள் இருந்தாலும் முதல் கதாநாயகன் கலை இயக்குனர் தான். இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சிறைச்சாலையை தத்ரூபமாக யாரும் பார்த்திருக்க முடியாது. ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்
ஷாம் ஒரு போலிஸ் அதிகாரியாக கனகச்சிதமாக தன் நடிப்பை தந்திருக்கிறார். ஹீரோயின் என்றாலே ஆடல், பாடல் என்றில்லாமல் பல கஷ்டமான காட்சிகளில் நடித்து கலக்கியிருக்கிறார் குயிலியாக வரும் கார்த்திகா. படத்தின் இரண்டாம் பாதி மிகவும் வேகமாகவும், எதிர்ப்பார்க்காத கிளைமேக்ஸ் மனதை உருக்கும்படியாகவும் உள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கொஞ்சம் தடுமாறுகிறது சில இடங்களில், இத்தனை புரட்சிகரமான ஒரு படத்தில் தேவையில்லாத இடத்தில் எதற்கு பாடல்கள். அது கமர்ஷியல் விஷயம் என்று நினைத்தால், இயக்குனர் செய்த முதல் தவறு அது தான்.
மொத்தத்தில் தலைப்பிலேயே கூறிவிட்டனர் புறம்போக்கு அனைவருக்கும் பொதுவுடமை என்று, அதேபோல் தான் அனைவரும் பார்க்க வேண்டிய பொதுவுடமையான திரைப்படம் இந்த புறம்போக்கு.
ரேட்டிங்-3.5/5   நன்றி cineulagam



No comments: