எச். ஏ. அஸீஸ்
முட்டையொன்றை மனதுக்குள்ளே மறைத்து வைத்து
மறைத்து வைத்து
மறந்து போவேன்
தூங்கப் பாய் விரித்து தலை சாய
இரவில்
மீண்டு வரும் முட்டை
முழு வடிவில்
மூச்சு ஓடும் பாதையிலே
முடிச்சு ஒன்று போட்டது போல்
வந்து அது அமர்ந்திருக்க
வலி என் நெஞ்சுக்குள்ளே
சித்தாந்தம் தத்துவங்கள்
சிந்தனைகள் இன்னும் பல
சொல்லத் தொடங்கும் முட்டை
என் நெஞ்சுக் குழிக்குள்
நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து
வித்தகர் எவரும் சொல்ல
விளையாத கருத்துகளை
தர்க்கிக்கும்
அது தன் திறனாகக் கருதி
கொல்லன் பட்டறையில்
கொழுந்து விட்டெரியும்
நெருப்பாய் நெஞ்சு கொதிக்கும்
நடுநிசி எனினும்
என்னால் உடன்பட இயலவில்லை
எதற்கும்
நெஞ்சு நிமிர்த்தி முட்டை சொல்லும்
அப்போது
என் கதை
ஏன் நீ
ஏற்பதில்லை
உடைந்து விடுவேன்
உன்முன் நானாக உடைந்து விடுவேன்
நீ ஓடி ஒதுங்க வேண்டி வரும்
என் கோது வெடிக்கும் போதே
குமட்டல் வரும் உனக்கு
உன்னை உலகம்
உமிழும் காறி
இது என்ன மிரட்டல்
இந்தக் கும்மிருட்டில்
கூழ் முட்டை காட்டும் கூத்துக்கள்
பல பல
என்னால் உடன்பட இயலவில்லை
எனினும்
இந்த கூழ் முட்டை
உடையா திருப்பதற்கே
அடைகாத்து வாழும்
வாழ்க்கை இது
அவதியும்
அமைதியும்
ஒரு விதம் மிகுதியாய்
ஒரு விதம் மிகுதியாய்
-எச் ஏ அஸீஸ்
No comments:
Post a Comment