வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜனாதிபதி..!
வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்
கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை
அத்தே ஞானசார தேரருக்கு பிணை
சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஷிராந்திக்கு அழைப்பு
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்
வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஆறுதல் கூறினார் ஜனாதிபதி..!
26/05/2015 யாழில் வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுதல் கூறினார்.
வித்தியாவின் படுகொலைக்குப் பின்னரான நிலைமையை நேரடியாகப் பார்வையிட வேண்டுமெனக் கேட்டதற்கு இணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வித்தியாவின் தாயார், சகோதரனை அவர் சந்தித்து தனது அனுதாபத்தை வெளியிட்டதோடு, அவர்களது பாதுகாப்பு குறித்தும் தான் கவனம் செலுத்துவதாகவும் உறுதியளித்தார். நன்றி வீரகேசரி
வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்
25/05/2015 புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்களை மக்கள் தண்டிக்க துடிப்பதையும் ஆக்ரோஷப்படுவதையும் நாம் குறைகூற முடியாது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த சட்டத்தை கையில் எடுக்கவேண்டாம் என்றும் சட்டம் தன் கடமையை சரியாக செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை குழப்பகரமான நிலைமையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மனிதாபிமானத்துக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த வேண்டும். பாலியல் கொடுமைகள், கொலைகளை தடுத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோல் மக்கள் தமது மனச்சாட்சிக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். வட மாகாணத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவி வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் அவரை கொலை செய்தமை கண்டனத்துக்குரிய விடயமாகும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறான நபர்கள் கட்டாயம் சட்டத்துக்கு அமைய தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்கு முரணான வகையில் எந்த சம்பவங்களும் நடைபெறக் கூடாது.
மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் அம் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்கள் மீது மக்கள் கோபப்படுவதையும் அவர்களை தண்டிக்கத் துடிப்பதையும் நாம் குறை கூற முடியாது. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் எவரும் செயற்படுவது சட்டத்தை மீறும் செயலாகி விடும். பின்னர் சட்டத்தை கடைப்பிடிக்க பலரை கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான ஒரு நிலைமை தான் இன்று வடக்கில் ஏற்பட்டுள்ளது. மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த ஆக்ரோஷமாக நடந்து கொள்வது சாதாரண பொதுமக்கள் அனைவரினதும் செயற்பாடுகளை பாதித்துள்ளது. குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ள நிலையில் மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.
குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது இப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் கொந்தளிப்பதும் தமது கைகளில் சட்டத்தை எடுத்து தண்டிக்க நினைப்பதும் சட்டத்திற்கு முரணானது. ஆகவே மக்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே உண்மையான குற்றவாளிகளை சரியாக இனங்கண்டு அவர்களை தண்டிக்க முடியும்.
அதேபோல் இந்த சம்பவத்தில் காவல் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. ஆகவே பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி குற்றவாளிகளை தண்டிக்க உதவ வேண்டும். ஒருசில அரசியல் தலையீடுகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையாக இருப்பின் மக்கள் அவற்றை இனங்கண்டு உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். அரசியல் எதிர்பார்ப்புகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டு வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்திவிடாது அமைதியாக செயற்படுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி
கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை
26/05/2015 பிரபல பிரான்ஸ் திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
பிரான்ஸில் குடியேறும் மூன்று வெவ்வேறு ஈழத்தமிழ் அகதிகள் அகதித்தஞ்சம் பெற்றுக்கொள்வதற்காக தற்காலிகமாக தங்களை ஒரு குடும்பமாக இணைத்துக் கொள்கிறார்கள். குடியேறிய அந்நிய நாட்டில், அந்நிய சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த திரைப்படம் விவரிக்கிறது.
ஒருவகையில் தனது சொந்த வாழ்வின் போராட்டங்களின் பெரும்பகுதியை இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தீபன் பாத்திரம் சித்தரிப்பதாக இந்ததிரைப்படத்தில் தீபனாக நடித்திருக்கும் ஷோபா சக்தி தெரிவித்திருந்தார்.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழ் அகதிகள் சந்திக்கும் புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும், அகச்சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புக்களையும், மனப்போராட்டங்களையும் பேசக்கூடிய முதல் ஐரோப்பிய திரைப்படம் "தீபன்" என்று பரவலாக பார்க்கப்படுகிறது.
கேன்ஸில் இந்ததிரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சர்வதேச திரைப்பட போட்டியில் ஹாலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் பல போட்டியில் இருந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டு, முற்றிலும் புதுமுகங்களும், தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதினை வென்றிருப்பது ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நன்றி வீரகேசரி
அத்தே ஞானசார தேரருக்கு பிணை
26/05/2015 பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை 5 ஆயிரம் காசுப்பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டோக்கியோவிலிருந்து நேற்று நாடு திரும்பிய ஞானசார தேரர் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று காலை வாக்குமூலம் ஒன்றை அளித்தன் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட ஞனசார தேரரை கருவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது 5 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
சச்சிதானந்தம் கொலை: கொலையாளியை கண்டு பிடியுங்கள்: மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
27/05/2015 சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி சமூக சேவை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்னால் இன்று புதன்கிழமை காலை கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீரப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆயுத கலாசாரத்தை ஒழியுங்கள், கொலையாளியை கண்டு பிடியுங்கள், அமைதியான சூழலை ஏற்படுத்துங்கள், விரைவாக தண்டனை வழங்குங்கள், அரச உத்தியோகத்தருக்கு பாதுகாப்பு தாருங்கள், நிதியினை நிலை நாட்டுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்; கொலையாளியை விரைவாக கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உதவுங்கள் என ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் முகமாக மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனிடம் கையளிக்கப்பட்டது.
அவ்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
'எமது சக உத்தியோகத்தரான சச்சிதானந்தம் மதிதயன் அவர்கள் 2015.05.26ம் திகதி அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் மண்டூரில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் கடந்த 1999ம் ஆண்டிலிருந்து சமூக சேவை உத்தியோகத்தராக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே இத்துக்ககரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தினை வண்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டில் வன்செயல்கள் ஓய்ந்து நல்லாட்சி நிலவும் இவ்வேளையில் இவ்வாறான ஒரு துப்பாப்பிச் சூடு நிகழ்ந்துள்ளது. மழை ஓய்ந்தும் துவானம் முடியவில்லை என்பது போல இந்நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான குற்றவாளிகளை வளரவிடாது உடனடியாக கொலைக்கான காரணத்தினையும், சூத்திதாரிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதன் மூலம் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதுடன், அரச உத்தியோகத்தரிடையேயும், பொதுமக்களிடையேயும் காணப்படும் பீதியை தடுத்து நிறுத்த உதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.'நன்றி வீரகேசரி
பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
27/05/2015 திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்த கடுவலை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகுமவின் முன்னாள் பணிப்பாளர் கே.ரணவக்க, மேலதிக பணிப்பாளர் பந்துல திலக்கசிறி ஆகியோருக்கும் ஜுன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் பகுதியில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உடல்நிலை கருதி பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் அதனை நிராகரித்த நீதவான் தம்மிக ஹேமபால விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார். நன்றி வீரகேசரி
ஷிராந்திக்கு அழைப்பு
27/05/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை
நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்
28/05/2015 யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் முத லாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி வழக்கில் யாழ்ப்பாணத்தில் விசேட நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு, 1999 இலிருந்து 2000 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் இவர் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின்னர் 3 வருடங்கள் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் பின்னர் 2008 ஆம் ஆண்டு வரையிலான யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் நீதிபதி இளஞ்செழியன் கடமையாற்றியிருந்தார்.
அதனையடுத்து 2008 ஆம் ஆண்டு அவர் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திருகோணமலையில் 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய அவர், பின்னர் கல்முனைக்கு மாவட்ட நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றிருந்தார்.
கல்முனை மாவட்ட நீதிபதியாக 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் கடமையாற்றிய பின்னர், 2012 ஆம் ஆண்டு அவர் மீண்டும் திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக நியமிக்கப்பட்டு அங்கு 2014 ஆம் ஆண்டு வரை மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றினார்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து, அவர் தற்போது அங்கு கடமையாற்றி வருகின்றார். இப்போது பிரதம நீதியரசர் அவரை எதிர்வரும் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்திருக்கின்றார்.
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment