நவம்பர் 16 - இந்த நாளை மறக்க முடியுமா சச்சின்?

.
நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா. அதோடு சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.
சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியைக் காண அவருடைய தாய், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு விசேஷ நாணயம் பயன்படுத்தப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் இலச்சினையும், மறுபக்கத்தில் சச்சினின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருந்தன. டாஸ் போட்டபிறகு அந்த நாணயம் சச்சினிடமே வழங்கப்பட்டது.
வெற்றிகளோடு விடை பெற்ற சச்சின்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த அந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாள்களில் முடிந்துபோனதால் போட்டியின் 4 மற்றும் 5-வது நாட்களில் சச்சினுக்காக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அடியோடு ரத்தாகின. இந்த டெஸ்டில் 74 ரன்கள் எடுத்த சச்சினின் விக்கெட்டை கடைசியாக எடுத்தவர், ஆஃப் ஸ்பின்னர் நர்சிங் டியோநரேன். சச்சின் தனது கடைசி டெஸ்ட் (2013), கடைசி ஒருநாள் போட்டி (2012), ஒரேயொரு சர்வதேச டி20 (2006), கடைசி ஐபிஎல் (2013), கடைசி சாம்பியன்ஸ் லீக் (2013), கடைசி ரஞ்சிப் போட்டி (2013) என அனைத்திலும் வெற்றியோடே விடை பெற்றிருக்கிறார்.
மூச்சிருக்கும் வரை…
கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய அணி வெற்றி பெற்று, பரிசளிப்பு விழா சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு பலத்த கரகோஷத்துக்கு இடையே பேச வந்தார் சச்சின். தன்னுடைய இறுதியுரையில், முதலில் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு நன்றி சொன்னார். பிறகு தன் குருவுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தினார். ‘சச்சின்... சச்சின்... என்ற உங்களின் முழக்கம் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை எனது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.’ என்று சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டபோது பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.
பிறகு ஆடுகளத்தைத் தொட்டு வணங்கினார். வழக்கமாக போட்டி முடிந்தவுடன் வீட்டுக்குக் கிளம்பிப் போகும் ரசிகர்கள், அன்று மட்டும் பரிசளிப்பு விழா முடிந்தபிறகும் நகராமல் இருந்தார்கள். இனிமேல் சச்சினை ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மைதானத்தில் பார்க்கமுடியாது என்பதால் அவர் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் கண்கொட்டாமல் ரசித்தார்கள். ‘சச்சினின் கடைசி கிரிக்கெட் தினத்தை நான் நேரில் பார்த்தேன்’ என்கிற பெருமையும் சோகமும் அவர்களிடம் இரண்டறக் கலந்துவிட்டதைக் காணமுடிந்தது.
சச்சினை புகழ்ந்த நியூயார்க் டைம்ஸ்
சச்சினின் ஓய்வு பற்றி குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ், ‘கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெறுவது, மகாத்மா காந்தி இறந்த சம்பவத்துக்குச் சமம்’ என்று எழுதியது. ஆட்டம் முடிந்தபிறகு பேசிய தோனி, ‘சிறந்த முன்மாதிரியாக இருந்ததற்கு சச்சினுக்கு மிக்க நன்றி. அவர் வாழ்ந்த விதத்தைப் பார்க்கும்போது அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ளமுடியும்’ என்று பேசினார். சச்சின் ஓய்வு பெற்ற சிலமணி நேரங்களில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.
அதன்பிறகு சச்சின் சர்வதேச கிரிக்கெட் ஆடாவிட்டாலும், அவரைப் பற்றிய செய்திகள் மட்டும் இன்று வரை வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த ஆண்டு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். லார்ட்ஸ் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அங்கு ஜூலை 5-ம் தேதி நடந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் வார்னே அணிக்கு எதிராக 44 ரன்கள் எடுத்தார் சச்சின். இந்தப் போட்டியிலும் சச்சின் தலைமை தாங்கிய மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணியே வெற்றி பெற்றது. பேட்டிங்கின்போது வார்னேவுக்குக் காயம் உண்டானதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், வார்னே இடையிலான ஆரோக்கியமான, ஆக்ரோஷமான போட்டியைக் காணமுடியாமல் போனது.
கிராமத்தை தத்தெடுத்த சச்சின்
மறைந்த டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக கவுரவிக்கப்பட்டார் சச்சின். ‘தூய்மை இந்தியா' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். எம்.பி.யின் கடமையாக, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தை தத்தெடுத்தார். சச்சின், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 3 நாள்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார் என்றொரு சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு, தனது மூத்த சகோதரர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த காரணத்தால் தன்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என மாநிலங்களவை துணைத் தலைவர் குரியனுக்கு விடுப்புக் கடிதம் அனுப்பி அதற்கான ஒப்புதலைப் பெற்றார்.
சச்சினை வியக்கவைத்த ரஜினி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கரைத் தனக்குத் தெரியாது என்று சொன்ன பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை யார் இந்த மரியா ஷரபோவா என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் சச்சின் ரசிகர்கள் கொந்தளித்தார்கள். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா அணியை (பிவிபி நிறுவனத்துடன் இணைந்து) வாங்கினார் சச்சின். ஹாக்கி உலகக்கோப்பைக்குத் தயாராகிக்கொண்டிருந்த இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். ஃபார்முலா 1 கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசிக்க பஹ்ரைன் சென்றார். டிசம்பர் 2013-ல், என்.டி.டி.வி விருது வழங்கும் விழாவில் ரஜினியை சந்தித்துப் பேசி, “ரஜினியின் பணிவும் தன்னடக்கமும் என்னை வியக்க வைத்தது.” என்று பேட்டி கொடுத்தார்.
ஓய்வு பெற்ற அடுத்த ஒருவருடத்துக்குள் சச்சினின் சுயசரிதை வெளிவந்துவிட்டது. அதன் விற்பனை, சச்சினைப் போலவே சாதனையும், சகாப்தமும் படைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது அவருடைய எல்லா கிரிக்கெட் கடமைகளும் முடிந்துவிட்டனவா என்கிற கேள்வி எழுகிறது. அடுத்ததாக பயிற்சியாளர், கட்டுரையாளர், வர்ணனை
யாளர் என கிரிக்கெட்டின் வேறு அவதாரங்களுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கிறாரா? சச்சினையும் கிரிக்கெட்டையும் அவ்வளவு எளிதாக பிரிக்கமுடியாது. அவர், ஒரு பேட்ஸ்மேனாக தன் கடமைகளை முடித்துவிட்டாலும், வேறு ரூபத்தில் விரைவில் வெளிப்படுவார். அந்த தருணத்துக்காக காத்திருப்போம்!

nantri http://tamil.thehindu.com/

No comments: