எமது சந்ததிக்கு அரியதொரு பொக்கிஷம் - பராசக்தி சுந்தரலிங்கம்

.

எமது சந்ததிக்கு அரியதொரு பொக்கிஷம் -நமது தாய் நாட்டிலே இருந்த இருக்கும் நூறு ஆலயங்கள் பற்றிய வரலாற்று நூல்

Hundred Hindu Temples Of Sri Lanka -Ancient Medieval And Modern By Sanmugam Arumugam

சிறந்த கல்விமான் எழுத்தாளர் பொறியியலாளர்  திரு திருமுகம் ஆறுமுகம் அவர்கள் தமது தந்தையார் திரு சண்முகம் ஆறுமுகம் அவர்கள்  ஆங்கிலத்திலே எழுதிய 'இலங்கையில் நூறு ஆலயங்கள்' என்னும் நூலை ஆகஸ்ட் ஏழாம் நாள் 2014--Bates-St-Strathfield  -Sydney'ல் உள்ள சன  சமூக நிலைய   மண்டபத்திலே மூத்தோர் ஒன்றுகூடல் நிகழ்வின் போது வெளியிட்டார்
சாதாரண நூல் வெளியீடு போலல்லாமல் இதனை அவர் அரங்கேற்றிய முறை புதுமையாக இருந்தது .நூலைப்பற்றிய ஒரு சிறிய முன்னுரையுடன் ,,நூலிலே கூறப்பட்டிருக்கும் கோவிலோடு தொடர்புடையதாக, இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் பொலநறுவையிலிருந்து இலங்கையை ஆண்ட போது கட்டிய சிவன்கோவில் மற்றும் அங்கே கண்டெடுத்த அரிய வெண்கலத் திருஉருவச் சிலைகள் ஆகியவற்றைத்       திரையிலே காண்பித்து அரியதொரு விளக்கத்தை அளித்தார் (Power Point Presentation )
இராஜேந்திரச்சோழமன்னன் ஆட்சி புரிந்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடும் இவ்வேளையிலே அவனின் பெருமையை நினைவுகூருவதுபோல அவன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஆலயத்தோடு அவன் பொலநருவையிலே கட்டிய சிவன் கோவில் (2ம் கோவில்) கட்டிட அமைப்பை ஒப்பிட்டு  திரையிலே விளக்கிய முறை சிறப்பாக இருந்தது


கலைநயம்மிக்க  வடிவங்களை  பஞ்சலோகத்திலே   வடித்தவர்கள் சோழர்கள் அழகான நடராஜர் வடிவம்  சிவனும் அம்மனும் சேர்ந்திருக்கும் வடிவம்  விநாயகர் விக்கிரகம் இவற்றுடன் ''இறைவா நான் உன் அடியின் கீழ் இருக்க ''என்று மனமுருகிப் பிறவா வரம் வேண்டிய  காரைக்கால் அம்மையாரின் சிலை ஆகியவற்றை ஒளிப்படங்களாகத் திரையிலே  காண்பித்து-காரைக்கால் அம்மையாரின் சிலை வடிவமைப்புக்கு நிகராக இன்றைய நவீன கலைவடிவங்களை ஒப்பிடமுடியாது என்று  அவர்  கூறிய  கருத்து  எம்மை வியப்பில் ஆழ்த்தியது.
இதுவரை காலமும் வரலாற்று நூல்களிலே படித்தவற்றிற்கும் அறிந்தவற்றிற்கும் இவ்விளக்கம் ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது என்று சொல்லலாம்.
இந்நூலாசிரியர்  திரு ஆறுமுகம் அவர்கள் நீர்ப்பாசன இலாகாவிலே முதன்மை  அதிகாரியாகவும் பொறியியலாளராகவும் பதவி வகித்தவர் தனது வேலை விடயமாக -தூர்ந்து போன குளங்களைத திருத்துவதற்கும் இருப்பனவற்றைப்    பராமரிப்பதற்கும் -அவர் இலங்கை முழுவதும் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது குளங்களுக்குப் பக்கத்திலே பல ஆலயங்கள் -சில நல்ல நிலையிலும் பல அழிந்துபோன நிலையிலும் இருந்ததை அவர் கவனித்துள்ளார்

இயல்பிலேயே ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இந்த ஆசிரியர் இவற்றைப்பற்றிய விபரங்களைத்தேடியபோது அவற்றிலே பல எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்தன என்ற குறிப்பு வியப்பளித்திருக்கிறது .விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்திருக்கின்றன என்றும் பல கோவில்கள்   சோழமன்னர்களால் கட்டப்பட்டவை என்றும் யாழ்பாணமன்னர்  பலர் கோயில்களைக்கட்டியிருந்தனர் என்றும்  சிங்கள பௌத்தமன்னர்கூட சில கோவில்களைக்கட்டியிருந்தனர் என்றும்   அறிந்ததாகத் தனது நூலிலே கூறுகிறார்
மன்னராட்சி வலுவிழந்த காரணத்தால் பராமரிப்பின்றியும் பின்னர்  வந்த போர்த்துக்கேயப்படைஎடுப்பினாலும் ----மற்றும்   இயற்கைக் காரணங்களாலும்   புகழ்பெற்ற கோயில்கள் பல அழிந்துபோய்விட்டன என்று  அவர் உணர்ந்த போது அவற்றின் தொன்மையையும் பண்டைய பெருமையையும்  நூல்வடிவிலே கொண்டு வரவேண்டுமென்று விரும்பினார்..  இந்தத் தேடலின் பயன் இரு நூல்கள்  -1980லும் 1991லும் ஆங்கிலத்திலே வெளிவந்தன


Ancient Hindu Temples Of Sri Lanka ,More Hindu Temples Of Sri Lanka -இவற்றை ஒரே நூலாகக் கொண்டுவரவேண்டும் என்ற தந்தையாரின் விருப்பத்தை இப்பொழுது மகன் நிறைவேற்றியுள்ளார் -
Hundred Hindu Temples Of Sri Lanka -Ancient Medieval And Modern ஆசிரியர் முதலிலே விக்கினம் தீர்க்கும் விநாயகர் கோவில்களையும் தொடர்ந்து சிவன் முருகன்  விஷ்ணு  அம்மன் கோவில்களையும் வரிசைப்படுத்துகிறார்.
மேலும் எத்தனையோ  கோவில்கள் உள்ளன இவற்றைத  தொடர்ந்து  பதிவு செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளோடு  நூலை நிறைவு செய்கிறார்
இந்த மனிதநேயம் மிக்கவர் பலகோயில்களைப்   புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அறிகிறோம்
மேலும் குளங்களைப் புனரமைத்தபோது மக்கள் அங்கு  குடியேறி  பயிர்ச்செய்கையை   ஆரம்பித்ததால் கோயில்களும்   புத்துயிர் பெற்றதாகவும் தெரிகிறது
இந்நூலை வாசிக்கும் போது  எங்களுடைய ஊர்க்கோயிலையும்   குலதெய்வத்தையும் பற்றி எழுதியிருக்கிறாரா என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு -ஆவலைத் தூண்டும் வகையான  எழுத்து!
எமது ஈழத்துப் பெரியார் சிவயோக சுவாமிகளின் குருவான செல்லப்பா சுவாமிகளை   இவ்வாசிரியர் நேரிலே பார்த்திருக்கிறார் என்பதை வாசித்தபோது மிகவும் வியப்பாக இருந்தது
நல்லூரைப்  பிறப்பிடமாகக் கொண்டிருந்த நூலாசிரியர்  தனது இளமைக்காலத்திலே   தொண்டு செய்வதற்காக நண்பர்களுடன்  நல்லூருக்குச்  செல்லும்போது   நல்லூர்த்தேரடியிலே   தங்கியிருந்த சுவாமிகள் தங்களை திட்டித்துரத்துவார் என்றும் எல்லோரும் அவரை ''விசரன் செல்லப்பா ''  என்று அழைத்ததாகவும் அவர் எத்தகைய பெரியார் என்பதைப் பிற்காலத்திலேயே  தான் அறிந்ததாகவும் பதிவு செய்கிறார்
மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலை வாசிக்கும் போது நூலாசிரியரின்     ஆராய்ச்சி  ஈடுபாடு  அர்ப்பணிப்பு நாட்டுப்பற்று  ஆழமான இறையுணர்வு   ஆகியவை பிரமிப்பை ஏற்படுத்துகின்றன
அந்தக் காலத்திலே அவர் எடுத்த கோயில்களின் படங்கள் ,வரை  படங்கள் ,உசாத்துணை நூல்கள்
விளக்கக் குறிப்புகள்  எல்லாம் விரிவாக இருப்பதால் அதுவும் ஆங்கிலத்திலே  இருப்பதால் வருங்காலச் சந்ததியினருக்கு  இந்நூல்  ஒரு பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை
எம்முன்னோர் எழுதிய பல பொக்கிஷங்கள் எமது அடுத்த தலைமுறையினரைச் சென்று சேரவேண்டும் -இன்று புலம் பெயர் நாடுகளிலே வாழும் இளைய தலைமுறையினர் தமது வேர்களைத் தேடுவதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கிறோம்
ஆசிரியரின் பெயரன் தர்ஷன் இராஜராயன்  வரைந்த திருக்கேதீஸ்வரம் கோயில் கோபுரம் நூலின் முகப்புக்கு அணி   செய்து சிறப்பிக்கிறது
இவ்வேளையிலே   திருமுகம் ஆறுமுகம் அவர்களை நன்றியோடு நினைக்கும் போது
''மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் என்னும் சொல் '

என்னும் குறள் நினைவில் வருகிறது.

2 comments:

Kanags said...

காலம்சென்ற எஸ். ஆறுமுகம் அவர்களின் நூல் அறிமுகம் பற்றிய விளக்கமான தகவல்களைத் தந்த திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களுக்கும், இதனை வெளியிட்ட தமிழ்முரசுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும். இவரது இன்னும் ஒரு அருமையான நூல் Dictionary of Biography of the Tamils of Ceylon. ஆறுமுகம் அவர்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை உள்ளது. https://ta.wikipedia.org/s/414t

Aum Muruga Society said...

We are thankful to Thiru for publishing his father's book on Hindu temples in Sri Lanka. Early this year, I was in Pollanaruwa and saw the ruins of the Shiva and Vishnu temples. In one of the temples, Sinhalese are conducting regular puja and attended by many Buddhists. The same situations in all around Sri Lankan Hindu temples. My youtube posting on my Pollanaruwa visit shows the current status of the Shiva temples.The link is attached
https://www.youtube.com/watch?v=vjstHYi2UVI&index=13&list=PLw-rStGnMhRgK2uxsvoCdIGjXPm0kjYMI