தமிழ் சினிமா


மாலினி 22 பாளையங்கோட்டை


பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் வன்கொடுமையை தோலுரித்துக் காட்ட நினைத்திருக்கும் படமே மாலினி 22 பாளையங்கோட்டை.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து நாயகி நித்யா மேனன், கோவை சரளா மற்றும் அஞ்சலி ஆகியோர் வருகிறார்கள்.

அஞ்சலி ராவ் மூலம் சென்னையில் ஒரு ஆடம்பர வீட்டில் இருந்து கொண்டு ஒரே மருத்துவமனையில் மூவரும் வேலைக்கு சென்று வருகிறார்கள்.
நித்யாமேனன் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார். அதற்காக ஒரு நிறுவனத்தை அணுகுகிறார். 



முதலில் நித்யா செல்வதற்கு விசா கிடைக்கவில்லை. பிறகு அந்த நிறுவனத்தின் அதிகாரியான நாயகன் கிரிஷ் சதார் மூலம் விசா கிடைக்கிறது.
இதன் மூலம் இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.

இந்த சூழ்நிலையில் நித்யாவின் தோழியான அஞ்சலி வெளியூருக்கு செல்ல நேரிடுவதால் ஆடம்பர வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. கோவை சரளா வேறொரு வீட்டிற்கு செல்கிறார். நித்யா தங்க இடம் இல்லாமல் தவிக்கிறார்.

கிரிஷ் சதாரை காதலிப்பதால் நித்யாவை அவருடன் சேர்ந்து தங்கும்படி தோழிகள் யோசனை சொல்கிறார்கள். இருவரும் ஒன்றாக தங்க முடிவு செய்கிறார்கள்.

தனியாக இருக்கும் நித்யாவும், கிரிஷ் சதாரும் நமக்குள் எந்தவித தவறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள். பிறகு அந்த ஒப்பந்தத்தை மீறி ஒன்றாக இணைந்துவிடுகிறார்கள்.

ஒருநாள் கிரிஷ் சதாரின் முதலாளி வீட்டிற்கு வருகிறார். அங்கு நித்யாவை அறிமுகம் செய்து வைக்கிறார் கிரிஷ் சதார். பிறகு இருவரையும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறார் முதலாளி.
அங்கு நடக்கும் டிஸ்கோவில் நித்யாவிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்கிறான். அதை பார்க்கும் கிரிஷ் அவனை அடித்து விட்டு நாயகியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிடுகிறார்.

மறுநாள் காலை கிரிஷ் சாதருக்கு முதலாளி போன் செய்கிறார். நீ அடித்தது எம்.எல்.ஏ.வின் மகன், அவர்கள் உன்னை அடிக்க தேடுகிறார்கள், அதனால் நீ 2 நாட்கள் தலைமறைவாக இரு என்று கூறுகிறார். அதன்படி கிரிஷ் சதார் தலைமறைவாகிறார்.

வீட்டில் தனியாக இருக்கும் நித்யாவை அடைய முதலாளி முயற்சி செய்கிறார். அதற்குபடியாத நித்யாவை அடிக்கிறார். இதனால் மயக்கநிலைக்கு செல்லும் அவளை கற்பழித்து விடுகிறார்.
அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நித்யாவை பார்க்க கிரிஷ் வருகிறார். உண்மையை அறியும் அவர் மிகுந்த கோபம் அடைகிறார்.
பிறகு மருத்துவர் மற்றும் நித்யாவின் தோழிகள் ஆகியோர் இந்த விடயம் வெளியே தெரிந்தால் அவமானம். அதனால் இந்த விடயத்தை அப்படியே விட்டு விடுவது நல்லது என்று கூறி நாயகனை சமாதானப்படுத்தி விடுகிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் கிரிஷ் வீட்டில் இல்லாதபோது முதலாளி மீண்டும் வந்து நித்யாவை கெடுத்து விடுகிறார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளாகிறார் நித்யா. இதனை சும்மா விடக்கூடாது, அவரை பழி வாங்க வேண்டும் என்று நித்யா முடிவெடுக்கிறார்.

ஆனால் கிரிஷ் அவளை சமாதானப்படுத்தி கோவைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு நித்யாவின் பையில் போதைப்பொருட்களை வைத்துவிட்டு பொலிசிடம் சிக்க வைத்துவிடுகிறார்.

இதனால் ஜெயிலுக்கு செல்கிறார் நித்யா. ஜெயிலுக்கு செல்லும் அவர் அங்கு ஒரு பெண் மூலம் கிரிஷ் சதாரும், முதலாளியும் கூட்டாளிகள், இருவரும் சேர்ந்து பெண்களை ஏமாற்றுபவர்கள் என்று தெரிந்து கொள்கிறார்.

உண்மையை தெரிந்துக்கொண்ட நித்யா காதலன் செய்த துரோகத்தை எண்ணி மனமுடைந்து போகிறார். அவனையும், அவனது முதலாளியையும் பழிவாங்க முடிவெடுக்கிறார். பின்பு ஜெயிலில் இருந்து வெளியில் வந்த நித்யா தன் வாழ்க்கையை சீரழித்த இருவரையும் பழி தீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

முதல்பாதியில் நித்யாமேனன் காதல், கலாட்டாவென கலக்கியுள்ளார். இரண்டாம் பாதியில் கொலைகாரியாக மாறி ஆவேசம் காட்டுவதில் அழகான ராட்சசியாக முத்திரை பதித்திருக்கிறார்.

கிளைமாக்ஸில் காதலனை பழிவாங்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் இவருடைய நடிப்புதான் பேசும்படியாக உள்ளது. காதல் காட்சிகளில் நாயகனை மிஞ்சும் விதத்தில் ரொமான்ஸ் காட்டியிருக்கிறார்.

நாயகன் கிரிஷ் ஜே சதார் அழகாக இருக்கிறார். காதலிக்கும் காட்சிகளைவிட வில்லத்தனமான நடிப்பில்தான் அசத்தியிருக்கிறார். இவருடைய முதலாளியாக வரும் நரேஷும் பிரமாதமாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் இருவரும் வில்லன்களாக மாறுவது எதிர்பார்க்காதது.

மருத்துவமனையில் நோயாளியாக வரும் கோட்டா சீனிவாசராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. படத்தில் கோவை சரளாவின் கொமடி ரசிக்க முடியாதது வருத்தமே.

நித்யா மேனனின் தங்கையாக வரும் வித்யுலேகா ராமன், தோழியாக வரும் அஞ்சலி ராவ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீப்ரியா தான் திறமையான நடிகை மட்டுமில்லாமல், இயக்குனரும்கூட என்பதை நிரூபித்திருக்கிறார். முதல்பாதியைவிட இரண்டாம் பாதியைத்தான் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

முதல்பாதியில் காட்சிகளுக்கு கட் கொடுக்காமல் நீளமான காட்சிகளாக எடுத்திருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் படத்தைக் கொடுத்த அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்.

ஆனாலும், பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் வன்கொடுமையை தோலுரித்துக் காட்ட நினைத்திருக்கும் இயக்குனர், பெண்கள் சமூகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதுபோல், அஞ்சலி ராவ் ஒரு தொழிலதிபருடன் தொடர்பு வைத்துக்கொள்வதால்தான் அவர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நன்மை கிடைக்கிறது என்ற கருத்தை பதிவு செய்திருப்பது ஏற்றுக்கொள்வதாக இல்லை.

அரவிந்த் சங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் மிரள வைக்கிறார். மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு காட்சிகளை பலப்படுத்தியுள்ளது. கதையோடு பயணிக்க இவரது கேமிராவும் பக்கபலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ பாராட்டத்தக்கது.
நடிகர்: கிரிஷ் ஜே சதார், நரேஷ்
நடிகை: நித்யா மேனன், கோவை சரளா, அஞ்சலி ராவ்
இயக்குனர்: ஸ்ரீப்ரியா
இசை: அரவிந்த் சங்கர்
ஓளிப்பதிவு: மனோஜ் பிள்ளை

நன்றி விடுப்பு 



No comments: