உணர்வுக் கோலம் - கணேசலிங்கம்

தந்தை பெரியார் காண விழைந்த திராவிடம் கானல் நீராகலாம்.
கடவுள் மறுப்புக் கொள்கை காற்றிலே போகலாம். ஆனால்
அவர் ஏற்றிய சுயமரியாதைச் சுடர் தொடர்ந்து எரியவேண்டும். 
   
சுயமரியாதைச் சுடர்

சுயமரி  யாதைச்  சுடரினை  ஏந்திச்
சூழ்ந்திடு  சிறுமைகள்  எரித்தான்!
உயர்இன  மான  உணர்வினைத்  தமிழர்
உளங்களில்  நிலைத்திட  உழைத்தான்!
கயமையின்  சின்னம்  எனஒரு  கூட்டம்
காட்டிடும்  சாதிவேற்  றுமையை
புயலெனச்  சாடிப்  புலியெனப்  பாய்ந்தான்!
பார்ப்பனச்  சூழ்ச்சியீ  தென்றான்!


தாழ்வுயர்  வகற்றத்  தன்சுக   போகம்
தரணியில்  துறந்துயர்ந்  திட்டான்!
வாழ்வினில்  மூட  வழக்கமும்  பயமும்
வழங்குதல்  மதமென  மொழிந்தான்!
ஊழ்வினை   விதியென்  றுலகவர்  கூறும்
உரையெலாம்  மனிதனைக்  கீழே
ஆழ்த்திடும்  என்றான்!  பகுத்தறி  வொன்றே
அனைவரும்  போற்றிட  விழைந்தான்!

மனத்தினிற்   பட்ட  தெதனையும்  மூடி
மறைத்திடாக்  குழந்தையின்  பண்பு!
நினைத்ததைச்  செய்து  முடித்திடும்  ஆற்றல்,
நெறிபிறழ்ந்  திடாதநல்  வாழ்வு;
வினைத்திறன்,  பெண்மை  விடுதலை,  அடிமை
விலங்கறுத்  திடவிரை  எண்ணம்,
எனத்திகழ்  வாழ்வில்  எமக்குழைத்  திட்ட
எழுச்சியின்  வடிவமே  பெரியார்!

தந்தையின்  சுயமரி  யாதையை  எந்தத்
தமிழன்தான்  இன்றுளம்  கொண்டான்?
முந்தைய  பெருமை  மொழிஇன  மானம்
முழுவதும்  மறந்தின்று  தமிழர்
மந்தைக  ளாகி  வாழ்கிறார்!  பெரியார்
மண்ணினில்  இவர்களை  உயர்த்த 
சிந்திய  உழைப்பும்  தியாகமும்  வீணா?
செந்தமிழ்  இனம்விழித்  தெழுமா?

No comments: