.திரும்பிப்பார்க்கிறேன்
இலங்கையில் இசைத்துறையில் நிறைகுடமாக வாழ்ந்த கலைஞர்
வயலி ன் - வி.கே. குமாரசாமி
சுமார் 102 வருடங்களுக்கு (15 ஏப்ரில் 1912) முன்னர் கடலில் மூழ்கிய உல்லாசப்பயணக்கப்பல்
டைட்டானிக்
பற்றிய திரைப்படம்
சில வருடங்களுக்கு
முன்னர்
வெளியானதும்
அதனைப்பார்த்து வியந்த கோடிக்கணக்கான
ரசிகர்களை அத்திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள் மெய்சிலிர்க்கச்செய்திருக்கும்.
ரோமாபுரி பற்றி
எரிந்த பொழுது அந்நாட்டு மன்னன்
நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்ததாக வரலாறு
சொல்கிறது. அதுபோன்று
டைட்டானிக்கப்பல்
அத்திலாந்திக்
கடலில்
மூழ்கிக்கொண்டிருந்தவேளையில் அதில்
பயணித்த இசைக்குழுவின் தலைவர்
ஹார்ட்லி தமது கையிலிருந்த வயலின்
இசைக்கருவியில் - இறைவா உன்னருகில் நானிருந்தால் - என்ற பாடலுக்கு இசைமீட்டிக்கொண்டிருந்தாராம்.
அந்த விபத்தில் சுமார் 1500
பேர்
மாண்டுபோனார்கள்.
அவர்களில் வயலின் இசை
விற்பன்னர்
ஹார்ட்லியும் ஒருவர்.
டைட்டானிக்
கப்பல்
மூழ்கிக்கொண்டிருப்பதை
அறிந்ததும்
- அந்த
வயலின் இசைக்கருவியும்
தன்னோடு
சேர்ந்து
மூழ்கட்டும்
என்ற
எண்ணத்தில் அதனை
தனது
உடலோடு
பிணைத்து
கட்டியிருந்திருக்கிறார்.
காலப்போக்கில்
நடந்த தேடுதலில்
அவரது
உடலோ
எலும்பின்
எச்சங்களோ கிடைக்காது போனாலும் அந்த
வயலின் கிடைத்திருக்கிறது. தற்பொழுது அந்த
வயலின்
ஏலத்துக்கு
வந்திருக்கிறது. குறைந்தது ஆறு இலட்சம் டொலர்களுக்காவது
அந்த வயலின் ஏலம்போகலாம்
என்று
கணித்திருக்கிறார்கள்.
இசைக்கு அழிவில்லை என்பதற்கு இந்தத்தகவலும் பதச்சோறு.
வில்லிசை
கேட்டிருக்கின்றோம். வில்லிசையும் பல
உருவங்களையும்
உருப்படிகளையும்
கொண்டது.
வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பெரிய
வில்லில் பிணைக்கப்பட்ட
நாணில்
மணிகள்
தொங்கவிடப்பட்டிருக்கும். வில்லுப்பாட்டு கலைஞர்கள் பாடும்பொழுது அதில் இரண்டு
கோல்களினால்
தட்டித்தட்டி
இசைஎழுப்பி
பாட்டும்
கதையும் சொல்வார்கள்.
சிறிய வில்லில்
நாண்பூட்டி
அதில்
வில்
குச்சியினால் நாதமெழுப்பும்
நாடோடி மக்களை
நேரிலும் திரையிலும் பார்த்திருப்போம்.
ஸ்ரீபிரியா நடித்த
நட்சத்திரம் படத்தில் ( ஒரு
நடிகையின்
கதை)
அவர் அத்தகைய
ஒரு
சிறிய வில்லுடன்தான்
பாடிக்கொண்டு அறிமுகமாவார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வில்லினைக்கொண்டு
தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளுக்கு
பிடில் என்ற பெயர்
சூட்டப்பட்டாலும் காலப்போக்கில் அதிலிருந்து உருவானதுதான்
வயலின்.
கி.மு. 555 இல்
பித்தகோரஸ் என்ற
கிரேக்க
அறிஞர்
- நன்கு இழுத்துக்கட்டப்பட்ட ஒரு
தந்தியில் ஏற்படும்
சுவரமானது
- அதன்
நீள அளவையொத்து
மாறுபட்டு ஒலிக்கும்.
அதேபோல்
அத்தந்தியின்
முறுக்குத்தன்மை
(Tension) வேறுபடும்போதும்
- அதற்கேற்றவாறு தந்தியின்
சுவரம் மாறுபட்டு
ஒலிக்கும்
- என்ற உண்மையை கண்டுபிடித்தார்.
(
ஆதாரம்:
தமிழிசை அரங்கக் கருவிகள் நூல் - எழுதியவர் திருமதி தேவகி
மனோகரன்)
கர்நாடக இசையில்
மட்டுமன்றி
நவீன இசை மரபிலும்
வயிலின்
பிரதான இடத்தைப்பெற்றுள்ளது.
இசைக்கச்சேரிகள் - நடன
அரங்கேற்றங்கள் - திரை இசைப்பாடல்கள்
முதலானவற்றிலும் வயலின் முக்கிய
பங்கினை வகிக்கின்றது.
இலங்கையின்
மூத்த
வயலின்
இசைக்கலைஞர்
வி.கே. குமாரசாமி
அவர்களைப்பற்றி நினைக்கும் பொழுது
இங்கு பதிவுசெய்த தகவல்களும் நினைவுக்கு வந்தன.
அத்துடன்
ஏதேனும்
இசைத்துறையில் வல்லுநர்களாக
விளங்குபவர்களின் பெயர்களுடன்
அவர்கள் தேர்ச்சிபெற்ற
இசைக்கருவியின் பெயரும்
இணைந்திருக்கிறதா? என்றும்
யோசித்துப்பார்த்தேன்.
உதாரணமாக
காருக்குறிச்சி அருணாசலம் புகழ்பெற்ற நாதஸ்வர
வித்துவான். அவரது இயற்பெயருக்கு
முன்னால் நாதஸ்வரம் இல்லை. அவர்
பிறந்த
ஊர்தான் இணைந்துள்ளது.
நாச்சிமார் கோயிலடி
கணேசன் என்ற
தவில்
வித்துவானின்
பெயரின் முன்னாலும்
தவில் இல்லை. ஊரின்
பெயர்தான்.
அளவெட்டி பத்மநாதன் என்ற
நாதஸ்வரக்கலைஞரின்
பெயரிலும்
நாதஸ்வரம்
இணைந்திருக்கவில்லை.
ஊரின்
பெயர்தான்.
இவ்வாறு
பலரை உதாரணப்படுத்திக்கொண்டிருக்கலாம்.
ஆனால் - இலங்கையில் ஊர்காவற்றுறையை பூர்வீகமாகக் கொண்டிருந்த இலங்கையில்
புகழ்பூத்த
வயலின்
இசைக்கலைஞர்
குமாரசாமியை வயலின் வி.கே. குமாரசாமி
என்றுதான்
அடையாளப்படுத்துகிறார்கள்.
வயலின்
அவரது
வாழ்வுடன்
இரண்டறக்கலந்தது. இலங்கையில் அவரிடம் வயலின் கற்ற மாணவர்களுக்கு
அவர்
மாஸ்டர். இலங்கை வானொலி
மற்றும்
அவர்
பணியாற்றிய
கலாசாலைகளில் அவர் வயலின் வி.கே. குமாரசாமி.
ஆனால் அவர் எனக்கும்
ஒரு
அப்பா. எப்படி எனக்கேட்கிறீர்களா?
இனியும்
படியுங்கள்.
வடமராட்சியில் 1986 ஆம் ஆண்டு
இறுதியில் நடந்த தாக்குதல்
சம்பவம் தொடர்பான செய்திகளை நேரடியாகச்சென்று சேகரிக்க
வேண்டிய அதிமுக்கியமான பணியொன்றுக்காக
வீரகேசரி நிருவாகம் என்னை யாழ்ப்பாணம்
அனுப்பியது.
இதுபற்றிய
விரிவான தகவல்களை
எனது - சொல்ல
மறந்த
கதைகள் - தொடரில் பார்க்கலாம்.
குறிப்பிட்ட
செய்திகளுக்காக
அச்சம்பவம்
நடந்து
நான்காவது நாள்
காலை யாழ்ப்பாணத்தில் இறங்கியதும்
நேரே
நல்லூரில் இராமலிங்கம் வீதியிலிருந்த
வயலின் வி.கே.குமரசாமி
அவர்களின் வீட்டிற்கே
சென்றேன்.
வாசலில் நின்று சுருட்டுப்புகைத்துக்கொண்டிருந்த
அவரோ
அவரது
மனைவி பிள்ளைகளோ
எனது
திடீர் வரவை
அந்தக்காலை வேளையில் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவருடைய
அறிமுகம்
எனக்கு
கிடைத்தமைக்கு அவரது
மகன் ராஜன்தான் காரணம்.
ராஜன் - எனக்கு
எங்கள்
ஊர் பாடசாலையில் பாலர் வகுப்பில்
தமிழ்சொல்லிதந்த எங்கள் பெரிய ரீச்சர் அம்மாவின்
கணவர்
திருச்செல்வத்தின் நெருங்கிய
உறவினர்.
திருச்செல்வம் இலங்கை
வான்படையில் உத்தியோகத்தராக பணியாற்றியவர்.
ராஜனுக்கும் வான்படையில்
வேலை
கிடைத்தது.
ஆனால்
உத்தியோகத்தராக அல்ல.
ராஜன்
வான்படையில் ஆயுதம்
ஏந்தி
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டவர்.
கட்டுநாயக்கா
விமானத்தள
முகாமில் அவர்
பணிநிமித்தம்
இருந்தபோது
அடிக்கடி
நீர்கொழும்புக்கு
எமதில்லம் வருவார்.
உடன்பிறந்த
சகோதரனாகப்பழகியவர். அவரது
உறவினால் காலப்போக்கில்
அவரது
தந்தையார் குமாரசாமியும் அவரது
மனைவி
மக்களும்
எனக்கு
நெருக்கமானார்கள். குடும்ப
நண்பர்கள் காலப்போக்கில் திருமண
பந்தமொன்றினால் இன்று
உறவினருமானவர்கள்.
இலங்கையில் இசைக்கலைஞர்கள்
வரிசையில்
முன்னணியில்
திகழ்ந்த குமாரசாமி
தனது தொழில் நிமித்தம்
வயலினை
கையில்
எடுத்தார். மகன் ராஜன்
துப்பாக்கியை எடுத்தார்.
மற்றுமொரு மகன்
இரத்தினகுமார் டொக்டராக
கையில்
ஸ்டெத்தஸ்கோப்பை எடுத்தார்.
இதர பிள்ளைகள் தமது
பணிகளின்
நிமித்தம் கையில்
பேனையை
எடுத்தனர்.
இனி மீண்டும்
மேலே குறிப்பிட்ட 1986 ஆம் ஆண்டிற்கு
வருகின்றேன்.
வாசலில் நின்று என்னை
ஆச்சரியத்துடன்
வரவேற்ற
குமாரசாமி அவர்கள்
- சுருட்டை வாயிலிருந்து
கைக்கு எடுத்து - உள்ளே
குரல்
கொடுக்கிறார். - இங்க
உம்முடைய மற்ற மகன் வந்துவிட்டார் - . அதனைக்கேட்ட திருமதி
புவனசுந்தரி
குமாரசாமி
சமையலறையிலிருந்து ஓடி
வருகிறார். விமானப்படையிலிருக்கும் மகன்
ராஜன்தான்
திடீரென்று
வந்துவிட்டான்
என்ற எண்ணத்தில்
வந்தவர் - பூபதி ---
என்ன --- திடீரென்று? - எனக்
கேட்கிறார்.
திடீர் பயணத்தின்
நோக்கத்தைச்
சொன்னேன்.
- உதையெல்லாம்
வாசலில்
நின்று
கதையாமல் - உள்ளேவந்து முதலில்
ரெஸ்ட்
எடும்.
அம்மா இடியப்பம்
அவிக்கிறன். குளித்து
சாப்பிட்டுவிட்டு உம்மட வேலைகளுக்கு
போம்.
என்ன
- உங்களைத்தான் - பூபதிக்கு
உங்கட
சைக்கிளை
கொடுத்துவிடுங்கோ
- அம்மா வழக்கமான
பரிவோடு
என்னை
வரவேற்றார்.
நான்
குமாரசாமி
அவர்களை அப்பா என்றும்
திருமதி குமாரசாமியை
அம்மா
என்றும்
அழைப்பதுதான்
வழக்கம்.
பழக்கம்.
அவர்களின்
பிள்ளைகளின் பாசமுள்ள
அண்ணன் நான்.
நீர்கொழும்பில் அவர்களுடைய மகனால் ஏற்படுத்தப்பட்ட உறவு
தொடர்ந்தும் நீடிக்கிறது. அந்திம
காலத்தில் அந்த அம்மாவும் அப்பாவும்
நீர்கொழும்பில்
வாழ்ந்த
காலத்தில்
மறைந்தார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர்
இலங்கை
திரும்பியபோது
அவர்கள் நீர்கொழும்பின் நிரந்தரவாசிகளாகிவிட்டதை
அவதானித்தேன்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கர்நாடக
இசை
உலகில்
புகழ்சம்பாதித்த வயலின் கலைஞர்
தமது அந்திம காலத்தில் நீர்கொழும்பில் ஒரு
ஒதுக்குப்புறமான பிரதேசத்தில்
ஒதுங்கியிருந்தது
மிகக்கொடுமையான
காட்சி.
தகரங்கள் சிகரங்களாக
முயற்சித்து பம்மாத்துப்பண்ணிக்கொண்டிருந்த போது வயலின்
இசையில்
சிகரமாக
விளங்கிய
குமாரசாமி
அமைதியாக
ஆர்ப்பாட்டம்
எதுவுமின்றி
தனது
அந்திம
காலத்தை
நீர்கொழும்பில் மருந்து
மாத்திரைகளுடன் கழித்தார்.
அவரையும் தனது
மற்றுமொரு
பிள்ளையாக பராமரித்த
அவரது
அருமை மனைவியார் - அவருக்கு முன்பே போய்விட்டது அவரைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய
இழப்பு.
அன்று வடமாராட்சி
தாக்குதல்
சம்பந்தமான பூரண
செய்திகளையும் சேகரித்துவிட்டு அவரது
வீட்டில்
தங்கிநின்ற
ஒருநாள் இரவு தனியே
யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
அப்பொழுதும் சுருட்டை
புகைத்துக்கொண்டு என்னருகில் வந்த
குமாரசாமி அப்பா - ' என்ன
பலமான யோசனை? ' என்று
கேட்டார்.
' செய்திகளை
ஆதாரத்துடன்
எடுத்துவிட்டேன். இனி இதனை
கொழும்புக்கு எடுத்துச்செல்லவேண்டும்.
இடையில்
ஆனையிரவு
முகாம் - சில
சோதனைச்சாவடிகள் - அதுதான்
யோசிக்கின்றேன்.'
என்றேன்.
' பூபதி - செய்திகள் வெளியான
யாழ்ப்பாணம்
ஈழநாடு
இதழ்களை
தபாலில் முதலில்
அனுப்பும். நீர் எடுத்த
செய்திகளை
எப்படி
அனுப்பவேண்டும் என்று சொல்லித்தாரன்.'
அவரது
ஆலோசனைப்படி செய்தேன்.
ஒரு வயலின்
கலைஞருக்கு இப்படியும்
சிந்திக்கத்தோன்றுமா
? என்று
எனக்குள் வியப்பு
அதிகரித்தது.
கணினி - மின்னஞ்சல்
இல்லாத ஒரு
யுகத்தில் குறிப்பிட்ட முக்கியமான செய்திகளை
கொழும்புக்கு அவரது ஆலோசனையின் பிரகாரம்
எவ்வாறு
எடுத்துச்சென்றேன்
என்பது பற்றி
ஊடக
தர்மத்தின் நிமித்தம்
இங்கே
பதிவுசெய்ய
விரும்பவில்லை.
வி.கே. என்றால்
இலங்கை தமிழ்
இசை
வட்டாரத்தில்
வயலின் வி.கே.குமாரசாமி
அவர்களையே குறிக்கும்.
அவர்
என்னுடன்
உரையாடும்போது பல்வேறு விடயங்களைப்பற்றியும் பேசுவார்.
ஆனால் தனது
இசைத்துறைபற்றியோ தான்
பங்கேற்ற
இசைநிகழ்வுகள் தொடர்பாகவோ
பெற்றுக்கொண்ட
பட்டங்கள் - விருதுகள் பற்றியோ
வாயே
திறக்கமாட்டார். நாட்டு நடப்புகள்
அரசியல் பற்றி கலந்துரையாடுவார். நானும் அவருடன்
என்றைக்கும் இலக்கியம்
பேசியதில்லை.
அவர் நிறைகுடமாக
வாழ்ந்த
கலைஞர்.
அதனால்
தளும்பாமல்
அமைதியாகவும் எளிமையாகவும்
வாழ்ந்து
மறைந்தார்.
நான்
யாழ்ப்பாணம் செல்லும்போதெல்லாம் அவருடைய
வாடகை
வீட்டிலேயே விருந்தினனாகத்தங்குவேன்.
எனது
சொந்த
வீட்டுக்குச்செல்லும் உணர்வே
எனக்கு இருப்பதுண்டு.
1983 ஆம்
ஆண்டு
ஆடிக்கலவரத்தையடுத்து
நான்
எனது
குடும்பத்துடன்
தற்காலிகமாக யாழ்ப்பாணம் இடம்பெயர
நேரிட்டது.
அப்பொழுது எமக்கு
முதலில் அடைக்கலம்
கொடுத்தவர்கள்
குமாரசாமியின் குடும்பத்தினர்தான்.
அவர்களது நல்லூர்
இராமலிங்கம் வீதியிலிருந்த
வாடகை
வீட்டில் சிலநாட்கள்
தங்கியிருந்துகொண்டே பின்னர்
அரியாலையில்
வீடு
எடுத்து
சில
காலம் வாழ
நேர்ந்தது.
எனது
மூத்த இரண்டு பெண்குழந்தைகளும்
அவரின்
வீட்டில்
தவழ்ந்தும் அவர் மனைவி
பிள்ளைகளின்
கரத்தில்
இருந்தும்
வளர்ந்தவர்கள்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு
புறப்பட்டதன்
பின்னர்
வடபகுதியில் போர்
நெருக்கடி
உக்கிரமடைந்ததைத்தொடர்ந்து
குமாரசாமி
அவர்களின்
குடும்பத்தினர்
நீர்கொழும்புக்கு
இடம்பெயர்ந்தனர்.
அதன்பின்னர் 2009 ஆம்
ஆண்டு மறையும் வரையில் எங்கள்
நீர்கொழும்பிலேயே மனைவி
மக்களுடன்
வாழ்ந்தார்.
1983 இல் தான்
தூக்கிச்சுமந்து
உச்சிமுகர்ந்த
எனது
இரண்டாவது
மகள்
பிரியாவின்
திருமணம் நீர்கொழும்பில் 2005 இல்
நடந்தபோது
தனது சுகவீனங்களையும்
பொருட்படுத்தாமல் வந்து
கலந்துகொண்டு மணமக்களை
ஆசிர்வதித்தார்.
நீர்கொழும்பில் அவர்
வாழ்ந்த
காலத்தில் நான் இலங்கை
செல்லும்போதெல்லாம் சென்று
பார்க்கும் பலருள்
அவர்
முக்கியமானவர். நான்
அன்பொழுக
அப்பா என
விளிக்கும்
இக்கலைஞர் நாட்டின்
சூழலினாலோ
என்னவோ
மறக்கப்பட்ட ஒரு
கலைஞராகவே இருந்தார்.
எனினும்
அதற்காக என்றைக்கும்
அவர்
அலட்டிக்கொண்டதில்லை.
அவரது
மறைவின் பின்னர்
வெளியான
நினைவு
மலர் மற்றும்
அவர் குறித்து எழுதப்பட்ட
பத்திகளிலிருந்தே
அவரது
ஆற்றலையும்
ஆளுமையையும்
தெரிந்துகொள்ள
முடிந்தது.
ஒரு சமயம்
சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரனை
அவரது
யாழ்ப்பாணம் வீட்டில்
சந்திக்கச்சென்றபோது
எனக்கு வழித்துணையாக
வந்தவர்
குமாரசாமியின்
மகன்
ராஜன்.
ராஜனை
சிரித்திரன் சிவஞானசுந்தரனிடம்
அறிமுகப்படுத்தியபோது ராஜன் அச்சமயம் விமானப்படையிலிருந்தமையால் - தம்பி
உங்கள்
அப்பா
வயலினைத்தூக்கினார். நீங்கள் துப்பாக்கியைத்
தூக்கியுள்ளீர்கள்
- என்று வேடிக்கையாகச் சொன்னார்.
வயலின் வி.கே. குமாரசாமி
அவர்களைப்பற்றி
கிடைத்த
தகவல்களை
இங்கு வாசகர்களுக்காக
பதிவுசெய்வது
பொருத்தமானது எனக்கருதுகின்றேன்.
1925 ஆம்
ஆண்டு யாழ்ப்பாணம்
ஊர்காவற்துறையில் பிறந்திருக்கிறார். அந்த
ஊரின்
பிரபல கல்விச்சாலையான
புனித
அந்தோனியார் கல்லூரியில் ஆரம்பக்கல்வி
பயின்றவர்.
1940 இல்
தமிழ்நாடு சென்று இசைப்பயிற்சி பெற்றுள்ளார்.
1942 இல்
கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையிடம்
முறையாக வயலின்
பயிற்சியைப் பெற்றுக்கொண்டு
தனது
இசைப்பயணத்தைத்
தொடங்கியிருக்கிறார். 1945 இல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து இசை
பயின்று
சங்கீத
பூஷணம் பட்டம் பெற்றார்.
1949 இல்
இலங்கை
திரும்பி - கொழும்பில் சைவமங்கையர் கழகம் - இசைக்கலைமன்றம் ஆகியனவற்றில்
இசையாசிரியராக பணியாற்றினார்.
இக்காலகட்டத்தில்
இலங்கை
வானொலியும் இவருக்கு
கதவு
திறந்துள்ளது.
அங்கிருந்த
தமிழ்ப்பிரிவு வாத்தியக்குழுவில்
அங்கம்
வகித்து பல
தரமான
நிகழ்ச்சிகளுக்கு தனது
வயலின் இசையின்
மூலம் மெருகூட்டினார்.
இலங்கை
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின்
இசை
ஆவணக்காப்பகத்தில் வி.கே. யின்
வயலின் இசை பதிவான
தட்டுக்கள் ஒலி
நாடாக்கள் இப்பொழுதும் பாதுகாப்பாக
இருக்கலாம் என நம்புவோமாக.
( முக்கிய குறிப்பு: வானொலி இசை ஆவணக்காப்பகத்தில் பல
ஈழத்துப்பாடல்கள் உட்பட முக்கியமான பழைய
தமிழ்ப்பாடல் இசைத்தட்டுக்கள்
இரும்பு ஆணியினால் கீறி சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன
என்ற தகவலையும் இங்கு பதிவுசெய்யவேண்டும்.)
1959 இல்
பாடசாலைகளுக்கான இசையாசிரியராக
அரச சேவையில்
இணைந்து வடபிரதேசத்தில் பல பாடசாலைகளில்
பணியாற்றத்தொடங்கினார். யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தின்
இராமநாதன் நுண்கலைப்பிரிவில்
பகுதிநேர
வயலின்
இசை
விரிவுரையாளராகவும் சில
வருடங்கள்
பணியிலிருந்திருக்கிறார்.
வட இலங்கை
சங்கீத சபையில் அங்கம்
வகித்து
அதன்
வளர்ச்சிக்கு உறுதுணையாக
விளங்கியிருக்கிறார்.
கர்நாடக
இசையுலகில் புகழ்பெற்ற
கலைஞர்கள்
மகாராஜபுரம்
சந்தானம் - மதுரை
சோமு - கல்யாண
கிருஷ்ண பாகவதர் - கல்யாணராமன் -ரி.கே. கோவிந்தராவ் - ரி.கே. ரங்காச்சாரி
- ரி.எம்.
தியாகராஜன் - ஏ.கே.சி. நடராசன் - என்.கே.சி. அம்மையார் - மணி கிருஷ்ணசாமி
முதலான பல
கலைஞர்களின்
நிகழ்ச்சிகளில் வயலின் வித்துவான் வி. கே. அவர்கள்.
இலங்கையில் பரம் தில்லைராஜா - ராம் குமாரசாமி - பொன். சுந்தரலிங்கம்
- சத்தியபாமா இராஜலிங்கம் - நாகம்மா
கதிர்காமர்
ஆகியோருக்கும் வி.கே. அவர்கள் பக்கவாத்திய
வயலின்
இசைக்கலைஞர்.
சுமார் ஐம்பது
ஆண்டுகள்
அவர்
கர்நாட
இசையுலகில்
இரண்டறக்கலந்து வாழ்ந்திருக்கிறார்.
நூற்றுக்கணக்கான இசைநிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இலங்கை அரசின் கலாபூஷணம் விருதும்
அகில
இலங்கை
கம்பன்
கழகத்தின்
இசைப்பேரறிஞர்
விருதும் அவருக்குக்கிடைத்துள்ளன.
இவ்வளவும் அவரது
வாழ்வில்
நிகழ்ந்துள்ளன.
ஆனால்
என்றைக்குமே
அவர் தனது
இசையுலக
வாழ்வு குறித்து
என்னுடன் பேசியதே இல்லை.
தன்னைப்பற்றி ஏதும்
இதழ்களில்
எழுதிப்பதியுமாறும் கேட்டுக்கொண்டதில்லை. எத்தனையோ
படைப்பாளிகள் - கலைஞர்கள் - அரசியல்வாதிகள் - சமூகப்பணியாளர்களைப்பற்றியெல்லாம் இதழ்களில்
பதிவுசெய்திருக்கிறேன். மேடைகளில்
பேசியிருக்கிறேன்.
ஆனால் - வயலின் வி.கே.
குமாரசாமி
அவர்களைப்பற்றி நான்
எழுதவும் இல்லை.
பேசவும் இல்லை.
ஏன்?
ஏன்? என்று அவரது
மறைவுச்செய்தி அறிந்த நாள் முதலாக நினைத்து
நினைத்து
வருந்தியிருக்கிறேன்.
அவர் கர்நாடக
இசை உலகில் ஆளுமையுள்ள கலைஞராக
வாழ்ந்தமைக்கும் அப்பால்
நான் உளமாற
நேசித்த
ஒரு அப்பா வாக இருந்தமையால்தானோ
என்னவோ எனது
எழுத்திலிருந்து
நழுவி மறைந்துவிட்டார் என
இப்போது நினைத்துப்பார்க்கின்றேன்.
அந்தக் குறையை
நீடிக்கவிடாமல் இந்தக்குறிப்புகளை நான்
எழுதுவதற்கு உதவிய
வி.கே. அவர்களின் அருமைச்செல்வங்களான எனது உடன்பிறவாச்சகோதரங்களுக்கு
எனது
நன்றி.
டைட்டானிக் கப்பல்
மூழ்கும் பொழுது வயலின்
இசைக்கருவியுடன்
மூழ்கிய
ஹார்ட்லியைப்போன்று வயலின்
வி.கே. குமாரசாமி அவர்களும் தமது மறைவு நெருங்கிய
வேளையில்
- இறைவா
உன்னருகில் நானிருந்தால் என
மனதுக்குள் பாடியிருப்பாரோ
எனவும்
யோசிக்கின்றேன்.
--0--
No comments:
Post a Comment