அருணாசல அற்புதம் 4: வீடு புகுந்து வேரறுப்பவன்


அகம் என்ற சொல்லுக்கு உள், மனம், வீடு என்று பல அர்த்தங்கள் உண்டு. இன்னொரு பொருளும் உண்டு. அதற்குப் பின்னால் வருகிறேன்.

நாம் ஒருவருக்கு வீட்டின் ஓர் அறையை வசிக்கக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவன் உள்ளே புகுந்தான். மெல்ல மெல்ல வியாபித்து வீடு முழுவதையும் தன்னதாக்கிக் கொண்டுவிட்டான். போதாததற்கு வீட்டுக்குள் நாம் வைத்திருந்த பொருட்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கி எறிந்து விடுகிறான். தன் பொருட்களால் நிரப்பி வைக்கிறான்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவனை வெறுப்பதற்குப் பதிலாக நாம் அவனை எப்போதையும்விட அதிகம் நேசிக்கத் தொடங்குகிறோம். “அப்பா, தயவு செய்து இந்த வீட்டைவிட்டுப் போய்விடாதே! என்னால் ஒருகணம்கூட நீ இல்லாமல் இருக்க முடியாது” என்று சொல்லித் தவித்துப் புலம்பத் தொடங்குகிறோம்.

சரி என்று அவனும் தொடர்ந்து குடியிருக்கிறான். குடியிருப்பதற்கு நாம் அவனுக்குக் குடக்கூலி தரவேண்டியிருக்கிறது. அப்படிக் கொடுத்தாலும் சும்மா இருக்கிறானா! தான் இருக்கும் வீட்டையே இடித்துப் போட்டுவிடுகிறான். தரைமட்டமாக்கி விடுகிறான். ஏனென்றால், அப்படி இடிக்க அனுமதித்தால்தான், இந்த அகத்தை நொறுக்கித் தரைமட்டமாக்கினால்தான், அவன் தரும் வீட்டை நாம் பெற முடியும்.

அருணாசலமென அகமே நினைப்பவர்
அகத்தை வேரறுப்பாய் அருணாசலா

என்று தொடங்குகிறது பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் எழுதிய அருணாசல அக்ஷரமணமாலை.

பகவான் பதினான்கு வயதுச் சிறுவனாக, வெங்கட்ராமன் என்ற பெயருடன் மதுரையில் இருந்தபோது வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் அருணாசலத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அருணாசலம் என்ற பெயரைக் கேட்டமாத்திரத்தில் வெங்கட்ராமனின் அகத்தில் அருணாசலம் புகுந்துவிட்டது. அதுவே அவரை ‘பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி’ என்ற ஆன்மீக தீபமாக மாற்றி உலகுக்கு ஒளிகாட்ட வைத்தது.

நம் அகத்தை நாம் காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மாத்சரியம் என்ற தீக்குணங்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். இவை ‘மனித இயல்புகள்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று யாரொ சொன்னதை வைத்து, ‘தவறு செய்வதே மனித இயல்பு’ என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். எப்போதோ ஒருமுறை தவறிப்போய்ச் செய்வதுதான் தவறு. அப்படி எப்போதோ ஒருமுறை மனிதன் தவறக்கூடும் என்பதுதான் உண்மை. நாமோ, அறிந்தோ அறியாமலோ, செய்யத் தகாதவற்றைச் செய்து கொண்டிருப்பதே மனித இயல்பு என்று நம்பிவிட்டோம். இவைதாம் நமக்கு மகிழ்ச்சியைத் தருவன என்று நம்பி இவற்றால் எல்லையற்ற மனரீதியான, உடல்ரீதியான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தவறு, குற்றம், இயல்பு, வாழ்க்கை முறை என்று ஒன்றையொன்று பிரித்தறிய இயலாதவர்களாகிவிட்டோம்.

ஆனாலும், நம் முன்னோர் செய்த புண்ணியத்தால், ஒருநாள் திடீரென அருணாசலம் வந்து அகத்தில் புகுந்துகொள்கிறது, வெங்கட்ராமனுக்கு ஏற்பட்டது போலவே. வெங்கட்ராமனின் தயார்நிலை வேறு நமது நிலை வேறு. ஆனாலும் அந்த அருணகிரி விடுவதில்லை. அகத்தில் மெல்லப் புகுந்து ஒரு ஓரமாக உட்கார்ந்துகொள்கிறது. ஓரறையிலிருந்து மற்றோர் அறைக்குப் பரவுகிறது. பிறகு பார்த்தால் அகம் முழுவதும் அதுவே ஆக வியாபித்து விடுறது. நம்மை அழச் சொல்கிறது, சிரிக்கச் சொல்கிறது, கருணை காட்டச் சொல்கிறது; பொய்கூறிய உடனே நாவைக் கடித்துக் கொள்ள வைக்கிறது. வேண்டாததைப் பார்க்கவொட்டாமல் இமையை இழுத்து மூடுகிறது. நமது கடுமையான சூழலின் தாக்கத்தையும் மீறி நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.

அதுமட்டுமா, வீட்டுக்குள் நாம் நிரப்பி வைத்திருந்த காமம், குரோதம் முதலிய, நாம் நண்பர்களாக நினைத்த ஆறு எதிரிகளை, வெளியே விரட்டிவிடுகிறது. தனது குணங்களாகிய அன்பு, இரக்கம், கருணை, சாந்தம், ஆனந்தம் முதலியவற்றால் அகத்தை நிரப்பி வைக்கிறது. பக்தியை ஆழப்படுத்துகிறது.

அருணாசலம் என அகமே நினைத்ததால் வந்த வினை இது. உள்ளே நுழைந்தவன் உரிமையாளன் ஆகிவிட்டான். அத்தோடு விடவில்லை.

அகம் என்ற சொல்லுக்கு இன்னும் ஒரு பொருள் இருக்கிறது என்றுதானே தொடங்கினேன். அகங்காரம், ஆணவம், அகந்தை என்பதுதான் அந்த இன்னொரு பொருள். முதலில் நம்முடைய மனமாகிய அகத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, நம் மனதை ஆட்டிப்படைக்கும் அகங்காரமாகிய அகத்தை வேரறுக்கிறான் அருணாசலன். பின்னர், தான் குடியிருந்த வீடாகிய மனதையே இல்லாமல் செய்கிறான்.

‘மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்’ என்றுதானே கவிஞர் கூறினார்!

அகத்தில் நுழைந்து அகத்தை அறுத்த அருணாசலன் இவற்றைச் செய்வது எதற்காக என்றால் பேரின்ப வீடாகிய அகத்தை நமக்குத் தருவதற்காகத்தான். இதில் நாம் எப்படி அவனுடன் ஒத்துழைக்கலாம் என்பதையும் வரும் நாட்களில் பார்க்கலாம். பகவான் மற்றும் பிற மகான்களின் வாழ்க்கை நமக்குக் காட்டும் ஒளியிலே இதைப் பார்க்கலாம். நாமும் ஆன்மீகம் என்னும் ராஜபாட்டையில் நடைபோட முயலலாம்.   நன்றி மதுரபதி

No comments: