பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு
பீகாரில் ரயில் மோதியதில் 30 பேர் பலி
பிரித்தானிய அரச குடும்ப வாரிசின் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்
சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?
மீண்டும் பதவியேற்றார் முகாபே!
==================================================================
பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்து: 24 உடல்கள் மீட்பு
18/08/2013 பிலிப்பைன்சில், பயணிகள் கப்பலுடன் சரக்கு கப்பல் மோதியதில் பலியான 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
காணமல் போன 240க்கும் மேற்பட்டோரை, தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பிலிப்பைன்சின் சிபு நகரை ஒட்டிய துறைமுகம் அருகே 870 பேருடன் சென்ற
பயணிகள் கப்பல் மீது நேற்று முன் தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று
மோதியது.
இதில் பயணிகள் கப்பலுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. கப்பலில் பெரிய துளை
ஏற்பட்டதால் கடல் நீர் உள்ளே சென்றதால் கப்பல் மூழ்கத் தொடங்கியது.
இதுபற்றிய தகவல் அறிந்த பிலிப்பைன்ஸ் கடற்படை மற்றும் விமானப் படை
வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூழ்கும் கப்பலில் இருந்த
பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் முயற்சியால் 570 பேர் மீட்கப்பட்டனர். எனினும், பயங்கர
விபத்து ஏற்பட்டதால் கப்பலில் பயணம் செய்தவர்களில் 240க்கும் மேற்பட்டோரை
காணவில்லை.
இவர்கள் அனைவரும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மீட்புப் படையினர், கடலிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் விபத்தில் உயிரிழந்த, 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்களில் 100க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பீகாரில் ரயில் மோதியதில் 30 பேர் பலி
19/08/2013 இந்திய, பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற
யாத்ரீகர்கள் மீது கடுகதி ரயில் மோதியதில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக
அதிகரித்துள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக யாத்ரீகர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பீகாரின் தாமரா ரயில் நிலையத்தில் சாஹர்சா மாவட்டத்தில் உள்ள
கோயிலுக்குச் செல்வதற்காக உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து யாத்ரீகர்கள்
குழுவினர் இறங்கியுள்ளனர்.
பின்னர் மற்றொரு ரயிலுக்காக தண்டவாளம் அருகேயே சிலர் காத்திருந்தனர். மேலும் சிலர் தண்டவாளத்தைக் கடக்கவும் முயற்சித்துள்ளனர்.
அப்போது சாஹர்சாவிலிருந்து பாட்னா நோக்கி நோக்கி சென்ற ராஜ் ராணி கடுகதி
ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மற்றும் தண்டவாளத்தைக் கடக்க
முயன்றோர் மீது அதிவேகத்தில் மோதியது.
இதில் பலரது உடல் துண்டு துண்டாக சிதறியது. பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில காவல்துறை
அதிகாரி எஸ்.கே. பரத்வாஜ், ரயில்வே தண்டவாளத்தை சிலர் கடக்க முயன்றதால்
இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ராஜ் ராணி ரயிலுக்கு சிலர் தீ வைத்துள்ளனர்.
அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில்
தொய்வு ஏற்பட்டுள்ளது. 20 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும்
உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை என்றார்.
தற்போது இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இச்சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரயில்வே நிர்வாகம்
தலா ரூ10 லட்சம் வழங்க வேண்டும்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு
வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு
பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி
பிரித்தானிய அரச குடும்ப வாரிசின் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்
20/08/2013 பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கத்தரீனும் தமது குழந்தை
ஜோர்ஜுடன் காட்சியளிக்கும் முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி
புகைப்படங்களை கத்தரீனின் தந்தையான மைக்கேல் மிடில்டன் பேர்க்ஷியரிலுள்ள
அவர்களது குடும்ப இல்லத்திலுள்ள தோட்டத்தில் வைத்து எடுத்துள்ளார்.
குழந்தையான இளவரசர் ஜோர்ஜ் தனது தாயாரான கத்தரீனின் கைகளில் தன்னை மறந்து உறங்குவதை அந்தப் புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
அந்தப் புகைப்படங்களில் லுபோ மற்றும் வில்லி ஆகிய நாய்களும் காட்சியளிக்கின்றன.
மேற்படி புகைப்படங்கள் சாதாரண புகைப்படக்கருவி ஒன்றால் எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய கென்ஸிங்டன் மாளிகை தெரிவித்தது. நன்றி வீரகேசரி
சிரியாவில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்; 1000பேர் வரை பலி?
22/08/2013 சிரியாவின் டமஸ்கஸ் நகரின் புறநகர் பகுதியில் அந்நாட்டுப் படையினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயுடா பிராந்தியத்தில் புறநகர் பகுதியில் இரசாயன வெடிகுண்டுகளை கொண்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தாம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது எதுவித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டு என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு புறநகரப் பகுதிகளிலான சமல்கா, அர்பீன், என்டர்மா ஆகிய பிராந்தியங்களில் உக்கிர ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிரியாவின் தாக்குதல் நடவடிக்கைகளின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய நாடுகள் குழுவொன்று சிரியாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் கான் அல் –- அஸ்ஸல் பிராந்தியத்தில் 26 பேர் பலியாகுவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல் உட்பட 3 இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததா என்பதைக் கண்டறியவே மேற்படி ஐக்கிய நாடுகள் குழு சிரியாவுக்கு விஜயம் செய்திருந்தது.
இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் காட்சிகள் யூரியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் படங்கள் பலவும் வெளியாகியுள்ளன.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிந்திய தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுவது ஐக்கிய நாடுகள் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விசாரணை ஆணையகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதை திசை திருப்பும் முயற்சி என சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கப் படையினரும் கிளர்ச்சியாளர்களும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment