காவியமாகும் கல்லறைகள் முருகபூபதி





  எந்தவொரு    உயிரினத்துக்கும்   கருவறை   இருக்கிறது.   ஆனால்  எல்லா  உயிரினங்களுமே     மரணித்தவுடன்    கல்லறைகளுக்குச்செல்வதில்லை.    பெரும்பாலான    நிலத்திலும்  நீரிலும் வாழும்    ஜீவராசிகள்    ஆறறிவு   படைத்த    மனிதர்களினால்    கொல்லப்பட்டதும்  உணவாகி    வயிற்றறைக்குச்சென்று     செமிபாடாகிவிடுகின்றன.
இந்த    மனிதர்களுக்கு     மாத்திரம்    கல்லறைகள்    இருப்பதாக    நாம்   கருதமுடியாது.  அவுஸ்திரேலியா    உட்பட   பல  மேலைநாடுகளில்    தமது    செல்லப்பிராணிகள்  மரணித்தவுடன்    அவற்றை  அடக்கம்    செய்து   கல்லறை   அமைக்கின்ற  நாகரீகம் பரவியுள்ளது.    இந்துசமயத்தவர்கள்;    இறந்தால்     தகனக்கிரியை  செய்து  அஸ்தியை  எங்காவது    புனித    கங்கைகளில்   அல்லது    கடலில்  கரைத்துவிடுவார்கள்.    ஆனால்  எல்லா    இந்துக்களும்  அப்படி   அல்ல.  கல்லறைகளுக்குள்    அடக்கமானவர்களும்  இருக்கிறார்கள்.


  கத்தோலிக்கர்களும்     இஸ்லாமியரும்    பூதவுடலை    அடக்கம்செய்துவிடுகிறார்கள். கத்தோலிக்கர்களின்    பூதவுடல்  அடக்கம்    செய்யப்பட்ட  இடத்தில்    நினைவு   சமாதி  அமைப்பார்கள்.    மறைந்தவர்களின்    பிறந்த   நாள்,    மறைவுநாட்களில்    மயானம்   சென்று சமாதியில்    மலர்களை    வைத்து    அஞ்சலி     செலுத்துவார்கள்.
அரசியல்    தலைவர்கள்,    கலைஞர்கள்,    படைப்பாளிகள்    மற்றும்   மறைந்தவர்களின்  நினைவுக்கல்லறைகளை     பார்த்திருக்கிறேன்.    ஈழப்போராட்டம்    தொடங்கியதும்  மாவீரர்  துயிலும்    இல்லங்களையும்    தரிசித்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில்    சென்னை    மெரீனா    கடற்கரையில்    மீளாத்துயிலிருக்கும்  முன்னாள்  தமிழக முதல்வர்கள்    அண்ணாத்துரை,    எம்.ஜி.ஆர்.    ஆகியோரின்    கல்லறைகளை    பார்த்திருக்கும்   எனக்கு,   தஞ்சாவூரில்    அடக்கமாகிவிட்ட  எமது  எழுத்தாளர்    டானியலின்  கல்லறையைத்தான்    தரிசிக்க   சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.     அதுபோன்று    இங்கிலாந்தில் கார்ல்மாக்ஸின்   கல்லறையை   பார்க்க    சந்தர்ப்பம்    கிடைக்காதபோதிலும்    கியூபாவில் சாந்தாகிளாரா    என்னுமிடத்தில்    அமைந்துள்ள    ஏர்ணஸ்ட்    சேகுவேராவினது  கல்லறையை  தரிசித்தேன்.
மாஸ்கோ    செஞ்சதுக்கத்தில்    துளசிவாசம்   கமழும்  மண்டபத்தில்  நீண்ட   நெடுங்காலமாக  நிரந்தர   துயில்கொள்ளும்    மேதை    லெனின்    பொன்னுடலையும்    தரிசித்திருக்கின்றேன். அவுஸ்திரேலியாவில்    தஸ்மானிய    மாநிலத்தில்  போர்ட் ஆதர்    என்னுமிடத்தில்  அமைந்துள்ள அவுஸ்திரேலியா  அபோர்ஜனிஸ்    இனத்தைச்சேர்ந்த    முதலாவது  இலக்கியப்படைப்பாளி  ஹென்றி  லோசனின்    கல்லறையையும்     பார்த்திருக்கிறேன்.
அவுஸ்திரேலியாவில்    வதியும்    கவிஞர்    அம்பி  அவர்கள்தான்    இலங்கையின்  தமிழ் மருத்துவ   முன்னோடி    டொக்டர்    சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்    அவர்களின்  வாழ்வையும் பணிகளையும்    பல    ஆண்டுகளுக்கு  முன்னர்     தமிழ்மக்களுக்கு  அறிமுகப்படுத்தியவர். 1848 இல்  மானிப்பாயில்    மருத்துவ   சிகிச்சை  நிலையம்  ஒன்றை  அமைத்த   இந்தப்பாதிரியாரைப்பற்றி    தமிழிலும்    ஆங்கிலத்திலும்    எழுதிய   அம்பி, அத்துடன்  நில்லாமல்    அமெரிக்காவில்    மசாசூசெட்    மாநிலத்தில்    வூஸ்டர்  என்ற   கிராமத்திலிருக்கும்    கிறீனின்   கல்லறையையும்  சென்று  பார்த்துவிட்டு  வந்து  தனது அனுபவங்களை  பதிவுசெய்தார.;    கிறீனின்    அந்தக்கல்லறையில்    ஆநனiஉயட   நுஎயபெநடளைவ   வழ வாந   வுயஅடைள    என்று    பொறிக்கப்பட்டிருக்கிறது.
சரி,  இனி   சென்னை   மெரீனா  கடற்கரைக்கு  வருகின்றேன்.   ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள்    அமைந்துள்ள  இந்த   இடத்தில்  ஆயிரக்கணக்கில்  மக்கள் திரளுகிறார்கள்.    இந்த    ஆண்டு  தொடக்கத்தில்  அங்கே  சென்று    ஜனசமுத்திரத்துக்குள் நானும்    குடும்பத்தினரும்  திக்குமுக்காடிப்போனோம்.
  1990 இல்  எனது  தாயாரையும்    குடும்பத்தினரையும்    அழைத்துச்சென்றபொழுது    நான் கண்ட    காட்சி    வியப்பில்  ஆழ்த்தியது.    ஒரு  கிராமப்புறப்     பெண்,            தனது  குழந்தையை    எம்.ஜி.ஆரின்     கல்லறை    மீது    வைத்து, “ ஐயா…சாமி…என் பிள்ளையை  ஆசிர்வாதம்   பண்ணுங்க    தலைவரே…”    என்றாள். 
அங்கு    கடமையிலிருந்த    ஒரு  பொலிஸ்காரரிடம்    எனது    வியப்பை  பகிர்ந்துகொண்டபொழுது,   “ இதென்ன சார்  அதிசயம்.    தமிழ்நாட்டில்  பல  கிராமங்களில்  கிழவிகள்,     எம்.ஜி.ஆர்    தற்போது  இல்லை   என்ற    உண்மையையும்  ஏற்கத்தயாராக இல்லை”   என்று     சொல்லி  என்னை    மேலும்   வியப்பிற்கு  ஆளாக்கினார்.
எம்.ஜி.ஆர்    ஏன்    மண்ணுக்குள்  அடக்கமானார்    என்பதற்கும்  பல  கதைகள் சொல்லப்படுகின்றன.    அவர்   திராவிட    அரசியல்  பாரம்பரியத்தில்  வந்தமையால் அண்ணாத்துரையைப்போன்றே    அடக்கமானதாகவும்     சொல்லப்படுகிறது.   அதேசமயம்  அவர் தகனம்  செய்யப்பட்டிருந்தால்  எத்தனைபேர்  அந்தச்   சிதையில்  பாய்ந்து    தீக்குளித்திருப்பார்களோ?     என்ற  அச்சமும்  இருந்ததாம்.   ஏன்…. இன்றைய  தமிழக முதல்வரும்  எம்.ஜி.ஆரின்    அரசியல்   வாரிசுமான     செல்வி  ஜெயலலிதா கூட உடன்கட்டை  ஏறவிருந்ததாக    வெளிவந்த    செய்தியும்  மறைவதற்கு    பலகாலம்  எடுத்தது.
கல்லறைகள்,   அதனுள் உறங்குபவர்களின்    உறவினர்களுக்கும்  நண்பர்களுக்கும்  காவியம்தான்.
இச்சந்தர்ப்பத்தில்  நான்  அறிந்த  செய்தியொன்றும்  என்னை வியப்பில்  ஆழ்த்தியிருக்கிறது.
ஐரோப்பிய  நாடொன்றில்  அகதியாக   புகலிடம்    பெற்ற  எங்கள்  ஈழத்து தமிழ் இளைஞர்களுக்கு,    அரசின்    உதவிப்பணம்   செலவுக்கும்  ஊருக்கு  அனுப்புவதற்கும்  போதவில்லை    என்ற  காரணத்தினால்,   அவர்கள்  வருமானத்துக்காக  புதிய    உத்தியொன்றை கையாண்டார்களாம்.
தங்கவைக்கப்பட்டுள்ள  அகதி முகாமுக்கு    சமீபமாக  இருக்கும்   மயானங்களுக்குச்சென்று, சமீபத்தில்  மறைந்து   கல்லறைகளுக்குள்  அடக்கமானவர்களின்    சமாதிகளை  பார்வையிட்டு  அவர்களின்   பிறந்த   திகதி    மற்றும்    மறைந்த    திகதிகளை   ஒரு   டயறியில்  குறித்துக்கொண்டு    வந்துவிடுவார்களாம்.   குறிப்பிட்ட    முக்கியமான  நாட்களில் மறைந்தவர்களின்  நெருங்கிய உறவினர்கள்  அங்கே வருவதற்கு முன்பே  சென்று  கல்லறை அமைந்துள்ள  இடத்தில்  வளர்ந்துள்ள புல், புதர்களை  வெட்டி  சுத்தப்படுத்தி அழகுபடுத்துவார்களாம்.  உறவினர்கள்  அஞ்சலி  செலுத்தவரும்பொழுது  குறிப்பிட்ட  சுத்தம்செய்யும்  வேலையை  தாமே  செய்ததாகச்சொல்லி  அவர்கள் தரும் பணத்தை நன்றியுடன்  பெற்றுச்சென்றார்களாம்.
 இந்தப்புண்ணியத்தை  இலங்கையில்  செய்யமுடியாமல்  தடுத்துவிட்டார்கள்  ஆட்சியாளர்கள். இனவிடுதலைப்போரில்  வித்தானவர்களின் துயிலும்  இல்லங்கள் அழிக்கப்பட்டது  கொடுமையிலும்  கொடுமை. கல்லறைகள் என்ன  பாவம்  செய்தன.
ஒரு சிங்களத்திரைப்படத்தின் கதையையும்   சொல்லிவிடுகின்றேன்.
இந்தப்  போரில் கொல்லப்பட்ட இராணுவவீரனின் சடலம் சீலிடப்பட்ட சவப்பெட்டியில் எடுத்துவரப்பட்டிருக்கிறது  என  நம்பிக்கொண்டு, குடும்பத்தினர் அதனை  திறந்து  பார்க்காமலேயே  அடக்கம்  செய்கின்றனர். படிப்பறிவற்ற  பாமரனான  அந்த வீரனின் தந்தையான  கிராமவாசிக்கோ,  சவப்பெட்டியிலிருப்பது  தனது மகன்  அல்ல என்ற உள்ளுணர்வு. ஏனென்றால்  படையிலிருந்த  மகனின்  கடிதம்  சமீபத்தில்தான்  தந்தைக்கு  கிடைத்திருக்கிறது. ஒரு நாள் விடியுமுன்பே  மண்வெட்டியுடன்  புதைகுழிநோக்கிச்செல்லும்  தந்தை,  நிலத்தைக் கிண்டி  சவப்பெட்டியை  எடுத்து  திறந்து  பார்க்கிறார்.  உள்ளே  அவருக்கு  பேரதிசயமும்  பேராச்சரியமும்  காத்திருக்கிறது. மகனின்  சடலத்துக்குப்பதிலாக  இரண்டு  வாழைமரக்குற்றிகள்  அதனுள்ளே கிடத்தப்பட்டிருந்தன.
பிரஸன்னவிதானகேயின் ‘புறஹந்த களுவர’  திரைப்படத்தைத்தான்  இங்கே  குறிப்பிட்டேன்.இந்தப்படத்திற்கு  முன்னைய  ஆட்சியாளர்களினால் சிறிதுகாலம்  தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஜோ அபேவிக்கிரம என்ற  பிரபல சிங்கள திரைப்படக்கலைஞர் தந்தையாக  அற்புதமாக  நடித்திருந்தார்.  அவர் அந்தப்படத்தில்  பேசும் வசனங்கள் ஒரு சிலவே.
இலங்கையில் பிரபல  சிங்கள திரைப்பட நடிகை ருக்மணிதேவி. எங்கள்  நீர்கொழும்பு  ஊரைச்சேர்ந்தவர். 1978 ஆம்  ஆண்டு நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் ஜா-எல  என்ற  இடத்தில்  நடந்த  வாகனவிபத்தில்  கொல்லப்பட்டார்.  இந்த விபத்தை நான்  வேலைக்குச்சென்றுகொண்டிருக்கும்பொழுது பார்த்தேன்.
அவரது  பூதவுடல்  நீர்கொழும்பு  மயானத்தில்  அடக்கம் செய்யப்பட்டது. அவர்  அணிந்திருந்த  விலையுயர்ந்த சாரியையும் விலையுயர்ந்த  சவப்பெட்டியையும்  இரவோடு  இரவாக  தோண்டி களவாடி  எடுத்துச்செல்ல  சில கயவர்கள்  முயன்றபொழுது  மயானக்காவலர்களினால் கையும்மெய்யுமாகப்பிடிக்கப்பட்டு  பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தச்சம்பவம் 1978 அக்டோபர்  மாதத்தில்  நடந்தது  எனக்கு  நல்ல  நினைவு.  நீண்ட  காலத்திற்குப்பின்னர்  நீர்கொழும்பில் ஒரு மரணச்சடங்கில்  கலந்துகொண்டபொழுது அந்த  மயானத்துக்குச்சென்று ருக்மணிதேவியின்  கல்லறையை  பார்த்தேன். அந்தக்கல்லறை  சரியான  பராமரிப்பின்றி  சிதிலமாகியிருந்தது.  மயானத்தை  பராமரிக்கும் காவலர்களிடம்  விசாரித்தேன். அவர்கள்  என்னை  அங்கிருந்த  ஒரு  கட்டிடத்திற்கு  அழைத்துச்சென்றார்கள். அதனைத்திறந்து  அவர்கள் காண்பித்தவற்றை பார்த்து  வியப்புற்றேன்.
அங்கே ருக்மணிதேவியின் முகத்துடன்  ஒரு வெள்ளைச்சிலை, அவர் நடித்த  அனைத்து திரைப்படங்களின் பட்டியல் பதிந்த சீமெந்துப்பலகை, மற்றும்  அலங்கார  தூண்கள், வளைவுகள்.  அவை அனைத்தும்  தூசுபடிந்து அலங்கோலமாக  காட்சி  அளித்தன.
“ஏன்…இப்படிக்கிடக்கின்றன?” எனக்கேட்டேன்.  ‘எல்லாம் குடும்ப  அரசியல்தான்’ என்றார்கள். மேலும்  விபரித்தார்கள்.
நீர்கொழும்பு மாநகரசபையின்  ஆளுகைக்குள்  அமைந்துள்ள  பூங்காவின்  அருகில், ருக்மணிதேவிக்காக  ஒரு நினைவு இல்லம்  அமைந்துள்ளது.   பிரேமதாஸா பிரதமராக பதவியிலிருந்த  காலப்பகுதியில்  டவர் பவுண்டேஷன்  மூலமாக ருக்மணிதேவிக்காக  கட்டப்பட்ட இல்லம். அதனை அவருக்கு பிரதமர் சம்பிரதாயபூர்வமாக  ஒப்படைக்கவிருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக ருக்மணிதேவி விபத்தில்  கொல்லப்பட்டதும்,  அந்த இல்லத்தை அடைவதற்கு ருக்மணிதேவியின் குடும்பத்தினரும் உறவினர்களும் போட்டியிட்டனர்.
‘எவருக்குமே இல்லை’  என மறுத்துவிட்ட பிரேமதாஸா,  அதனை அன்றைய ஜனாதிபதி  ஜே.ஆர். மூலம்  திறந்துவைத்து  டவர்பவுண்டேஷனின்  பொறுப்பில் விட்டுவிட்டார். அந்தக்கோபம்தான்  இங்கு அந்த நடிகையின்  கல்லறையின்  இன்றைய கோலம்.
உறவினர்களுக்கோ,  கல்லறையில்  பாசம்  இல்லை. காசில்தான்  பாசம்  இருந்திருக்கிறது. இத்தனைக்கும்  தனக்கென ஒரு வீட்டை  சொந்தமாக  வாங்கிக்கொள்ளாமல்  இரவு பகலாக ஓய்வின்றி நடித்து உழைத்து உறவினர்களுக்கு  சோறுபோட்டவர்தான் ருக்மணிதேவி.  அவரது  கல்லறையின்  கதை இப்படி  இருக்கிறது  என்றால்,  எங்கள்  டானியலின் தஞ்சை கல்லறைபற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
அவரை அங்கு அடக்கம்செய்யும்பொழுது அருகிலிருந்தவர்கள்  எமது  நண்பர்கள் செ. கணேசலிங்கன் மற்றும் பிரான்ஸில் வதியும் இளங்கோவன்.
கடந்த ஆண்டு  அங்குசென்ற நண்பர் இளங்கோவன்  பேரதிர்ச்சியடைந்துள்ளார்.  குறிப்பிட்ட  இடத்தில்  டானியலின்  கல்லறையை  காணவில்லையாம்.   புதர்கள் மண்டியநிலையில்  அந்த மயானம் காட்சி அளித்திருக்கிறது. இளங்கோவனின் பதிவை  இங்கு  சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 - 03 - 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய - அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது.

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது.

கடந்த 11 - 05 - 2012 காலை தோழர் பசு. கௌதமன் மற்றுமொரு தோழருடன் டானியல் கல்லறையைப் பார்க்கப் போனேன். அடையாளம் காணமுடியாதபடி முட்புதர்களால் மூடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தைக் காணவில்லை.
அது மறைந்த மாயம் என்ன..? அது பொருத்தப்பட்ட இடம் சிறிது சிமெந்து பூசி மறைக்கப்பட்டிருந்தது.

புகழ்பெற்ற படைப்பாளியும் சமூக விடுதலைப் போராளியுமான டானியல் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் கல்லறைகள் அமைந்த இடத்தை இப்படியா பராமரிப்பது...? தஞ்சை நகரசபை கண் திறக்குமா..?
இது குறித்து டானியலின் உற்ற தோழரான பேராசிரியர் அ. மார்க்ஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது...!
ஒரு சந்தர்ப்பத்தில்  மல்லிகையில்,  ஜீவா  ஒரு  கேள்வி – பதில் பகுதியில்,  “என்றைக்காவது  ஒருநாள்  டானியலின்  கல்லறையை  பெயர்த்துக்கொண்டு  இலங்கைக்கு  கொண்டுவரவேண்டும்”-  என்று ஒரு குழந்தையுள்ளத்தோடு குறிப்பிட்டதும்  தற்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.
ஒவ்வொரு  கல்லறைகளுக்கும்  பின்னாலும் எந்தவொரு விடுதலைப்போரிலும் உயர்த்தியாகம்  செய்தவர்களின் துயிலும்  இல்லங்களுக்குப் பின்னாலும் கதைகள்  இருக்கின்றன.

எந்தவொரு  பூதவுடலுக்கும்  மரியாதை  தரப்படுகிறது.  பொலிஸார்,  படையினரும்  தமது  தொப்பியை  கழற்றி  தலைவணங்குவார்கள்.  இது உலகப்பொது  நாகரீகப்பண்பு. எனவே  கல்லறைகளும்  மரியாதைக்குரியவை.  அவற்றுக்கு  காவிய   மரபு   இருக்கிறது.

                                 ---0----

No comments: