திருக்கோவையார் பொருள் விளக்கம் - சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம்

.

 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன. உள்ளத்தை உருக்கும் பக்திப் பனுவலான திருவாசகம் பலரும் படித்து விளங்கக் கூடியது.
திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்;ளது. பாடல்கள் எளிதில் பொருள் விளங்க முடியாதனவாக உள்ளன.
தமிழில் கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, விருத்தப்பா முதலிய வகைகளாக வளர்ந்து அந்தாதி, சிலேடை, சிந்து, கோவை முதலியனவாக விரிந்து பரந்துள்ளன. கவிதை வடிவம் தமிழ் மொழியில் வளரந்தளவிற்கு பிற மொழிகளில் வளரவில்லை எனலாம். தமிழ்க் கவிதை வளர்ச்சியில் பின்வந்த சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது கோவை. பல நிகழ்ச்சிகளைக் காட்டும் பல்வேறு பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கோக்கப்பட்டதால் கோவை எனப்படுகிறது. 
மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகப்பாடல்களை இறைவனே தனது திருக்கையால் எழுதினாரென்றும், அவற்றை எழுதியபின், பாவை பாடிய வாயால் கோவை பாடும்படி இறைவன் வேண்ட, அவர் திருக்கோவையாரையும் பாடியதாகவும் கூறுவர். திருக்கோவையார் சிற்றம்பலம் என்னும் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.
திருவெம்பாவையில் வரும் அன்பர்கள் சிவன் புகழ் பாடுபவர்கள். சிவனிடமும் சிவனடியார்களிடமும் அன்பு கொண்டவர்கள்@ “உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், “எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க, என்றெல்லாம் பாடுகிறார்கள். திருக்கோவையாரில் காணும் அன்பர்களும் சிவனிடம் பக்தி பூண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்

திருக்கோவையார்ப் பாடல்கள் தரும் செய்திகளில் தில்லையும் தில்லைச் சிவனும் இடம்பெறுவதைக் காணலாம். ‘ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்றுஎன்று தொடங்கும் பாடல் ஒரு உதாரணம். இதில் தலைவியின் கண்ணழகில் உள்ளம் பறிகொடுத்த தலைவன், ஈசனிடம் தான் வைத்த அன்புபோல் அது அகன்றுள்ளது, தில்லையின் ஒளிபோன்று மிளிர்கின்றது, என்று பலவாறு  வியக்கின்றான்.
நானூறு பாடல்கள் கொண்ட அகத்துறை இலக்கியம் திருக்கோவையார். அதில் வரும் தலைவனும் தலைவியும் வௌ;வேறு இடங்களில் பிறந்து, ஒன்று கூடிக் காதலித்து மணஞ் செய்கிறார்கள். இது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஒருவரை ஒருவர் காணுதல், காணும் சூழல், உள்ளம் கலத்தல், தோழன் தோழி உறவு, தலைவனுடன் தலைவி செல்லுதல் எனப் பல நிகழ்ச்சிகள் கதைபோற் சொல்லப்படுகின்றன. உள்ளத்து உணர்வுகளும் உளவியல் சார்ந்த செய்திகளும் தரப்படுகின்றன.
பாட்டுடைத் தலைவனாக தில்லைச் சிவன் காட்டப்படுகிறான். உலகியலுடன் மெய்மொருள் இயல்பையும் இணைத்து அருளிச்செய்யப்பட்ட உயர் தமிழ் இலக்கியமான திருக்கோவையாரில் சைவசித்தாந்தக் கருத்துக்கள் விரவியுள்ளன.
சங்கநூல் போல் காணும் திருக்கோவையாரைப் படித்துத் தெளிதல் எளிதன்று. அதற்கு கவிதை அனுபவமும் பயிற்சியும் தேவை. இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்புஎன்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது:
‘மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்கநூற்களுள் ஒன்று அன்று. எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கேயுண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூல்களில் பெரும் பயிற்சி உடையார்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்’
தமிழ்க் கவிதைகளில் கற்பனை வளமும் ஓசை இனிமையும் மிகுந்திருப்பது இயல்பு. குற்றால அருவியின் திரை வானளாவ எழுந்து கதிரவனின் தேரில் முட்டுகிறது என்ற ஒரு சுவை மிகுந்த கற்பனையைகுற்றாலக் குறவஞ்சிஎன்ற நூலில் காணலாம்.
‘தேனருவி திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுக்கும்.   
இத்தகைய கற்பனையும் வர்ணனையும் கொண்ட பல பாடல்களைத் தேவாரத் திருமுறைகளும் தருகின்றன. அடர்ந்த சோலையைக் காட்டவந்த ஞானசம்பந்தப் பெருமான்வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல், என்று குறிப்பிடுகிறார். இவை போன்று, கற்பனை வளம் மிகுந்து இருப்பவை திருக்கோவையார்ப் பாடல்கள். கீழ்வரும் பாடல் ஒரு உதாரணம்.
    மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் தில்லைமல்லல்
    கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணிகு றிப்பறியேன்.
    பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளெனைப் புல்லிக் கொண்டே
    பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைங்கிளியே.
தலைமகளின் எண்ணக் குறிப்புப்பற்றி கேட்ட தலைமகனுக்கு, தோழி சொல்வதாக அமைந்தது இப்பாடல். முதல் இரண்டு அடிகளில் தலைவி எங்கு சென்றாள் என்ற குறிப்புத் தனக்குத் தெரியாது எனச் சொல்கிறாள். அவள்;, சிவந்த இதழும் கரிய கண்ணும் உடையவள் என்பதைசெவ்வாய்க் கருங்கண்ணிஎன்ற தொடர் உணர்த்துகிறது. இத்தொடருக்கு முன்னுள்ள சொற்களெல்லாம் அடைமொழிகளாக அமைந்துள்ளன. ‘மானின் பார்வை(யை) ஆளுகின்ற மெல்லிய நோக்கை உடைய உமாதேவியைப் பங்கெடுத்த சிவபிரானின் வளம் மிக்க தில்லையில் வளர்ந்த கோவைப் பழம் ஆளும் சிவந்த வாயிதழ் கொண்டஎன்ற அடைமொழிகளைச் சேர்த்து, ‘கருங்கண்ணிஅவள் எனத் தலைவி வர்ணிக்கப்படுகிறாள். இத்தகையவள்இன்று தான் விரும்பி வைத்திருந்த பொருட்களை எனக்குத் தந்தாள்@ இதுதான் எனக்குத் தெரியும; என்று கூறுகிறாள். ‘இன்று அவள் இன்பமாக இருந்தாள்@ உன்னுடன் ஓடிப்போதற்குப் போலும்என்ற குறிப்பை இங்கே காணமுடிகிறது.  
இங்ஙனம் குறிப்பால் உணர்த்தும் பாடல்கள் பலவற்றைக் திருக்கோவையாரில் காணலாம். முதற்பாடல்திருவளர் தாமரைஎன்று தொடங்குகிறது. தலைமகளைத் தலைமகன் கண்டு வியப்புறும் காட்சியை நூலாசிரியர் காட்டுகிறார். தாமரை, நெய்தல், குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய பூக்களாற் தொடுக்கப்பட்ட அழகிய தெய்வ மாலை ஒன்று இளம்பெண்ணாக உருப்பெற்று, அன்ன நடைபயின்று, மன்மதனின் வெற்றிக் கொடிபோல் ஒளிர்கின்றதே என வியப்படைகிறான்.
 திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ
 மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
 துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே.
இப்பாடலிலும் பல செய்திகள் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன. தாமரை மருத நிலத்து மலர். காவி; நெய்தல் நிலத்து மலர். குமிழ் முல்லை நிலத்து மலர். கோங்கு பாலை நிலத்து மலர். காந்தள் குறிஞ்சி நிலத்து மலர். இம்மலர்களைச் சொன்னதால் தமிழகத்தின் ஐவகை நிலங்களும் ஒருமைப்பாடும் குறிக்கப்படுகின்றன. திருவளர், சீர்வளர் என்ற அடைமொழிகளால் தலைவியின் வனப்பும் சிறப்பும் உணர்தப்படுகின்றன.
குமிழாகிய முல்லை மலர்ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ்என்று குறிக்கப்படுகிறுது. திருமணத்தின்முன் நிகழும் தலைவன் தலைவியின் காதல் களவுக் காதல் எனப்படும். அதனைக் குறிப்பது முல்லைப்பூ. இப்பாடலில் தலைவன் தலைவியைக் கண்டு வியப்படைவது அவர்களின் களவுக்காதலின் தொடக்க நிலையாகும். இதனை உணர்த்த முல்லைப்பூவைக் காட்டும் நூலாசிரியர், அதனை ஈசனின் தில்லைப்பதியுடன் இணைப்பது சிந்தனைக்கு விருந்தாகும்.
தமிழுக்கு உயர்தனி இடம் கொடுப்பதைச் சமய குரவர் பாடல்களில் காணலாம். ‘இன்தமிழ், ‘செந்தமிழ், ‘சம்பந்தன தமிழ்என்றெல்லாம் ஞானசம்பந்தர் தமிழைப் போற்றுகிறார். தன்னைத்தமிழ்ஞானசம்பந்தன்என்றும் அழைக்கிறார். நாவுக்கரசர்தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்என்று நவில்கிறார். சுந்தரர்தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்என்று பாடுகிறார். சம்பந்தரரைப் பற்றிக் கூறும்போது, ‘நற்றழிழ் வல்ல ஞானசம்பந்தன், ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
மணிவாசகரும் தனது திருக்கோவையாரில்கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்என்று பாடித் தமிழைப் போற்றுவதைக் காணலாம். சங்கம் வைத்து , ஆய்வு செய்து, தமிழ் வளர்த்த இடம் கூடல் எனப்படும் மதுரை. நீண்ட நாட்களின் பின், மெலிந்த உடம்புடன், தன்னைத் தேடி வந்த தலைவனிடம் தோழன் கூறுவதாக அமைந்த பாடலில் இத்தொடர் வருகின்றது.
   சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
  உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்
  துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
    இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.
இப்பாடலின் பொருள், “காவலாக அமைந்த அதிக நீரையுடைய தில்லைச் சிற்றம்பலத்திலும் எனது சிந்தையிலும் உறையும் ஈசனின் உயர்ந்த மதிலையுடைய மதுரையில் ஆய்ந்த இனிய தமிழின் துறைகளுள் நுழைந்திருந்தாயா? அல்லது ஏழிசையின் சூழலில் புகுந்திருந்தாயா? தலைவனே, உனது மலைபோன்ற தோள்கள் மெலிந்திட எங்கே போயிருந்தாய்?”, என்பதாகும்.
சிற்றம்பலம் என்பது ஞானவெளி. ‘சித், ‘அம்பலம்என்னும் இரு சொற்கள் சேர்ந்தது  சிற்றம்பலம். ‘சித், ‘அம்பரம்என்ற சொற்கள் சேர்ந்தது சிதம்பரம். சித் என்றால் ஞானம். அம்பலம் என்பதும் அம்பரம் என்பதும் வெளி. எனவே, சிற்றம்பலம், சிதம்பரம் என்பவை ஞான வெளியைக் குறிப்பன. இந்த ஞான வெளி தில்லைச் சிதம்பரத்திலும் உண்டு@ ஞானிகளின் சிந்தையிலும் உண்டு. இப்பரவெளியில் சிவனின் திருநடனம் நடைபெறுகிறது. தேவர்களும் முனிவர்களும் பிறரும் காண அவன் ஆடும் பொது மன்றமாக தில்லை இருப்பதால் அதுபொதுஎன்றும்மன்றுஎன்றும் அழைக்கப்படுகிறது. தாயுமானவர், ‘சைவசமயமே உண்மைச்சமயம்@ சமயங் கடந்த பழமையான பரம்பொருளை உணர்த்தும் மன்றுள் வெளியில் அவனின் திருநடனத்தைக் காணக் கருதாமல், பொய்யான பிற சமயநெறிகளில் புகவேண்டாம், என்று அறிவுறுத்துகிறார்.
‘சைவ சமய மேசமயம் சமயா தீதப் பழம்பொருளைக்
                கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்
                பொய்வந் துழலும் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும்
                தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் செகத்தீரே.
தில்லையைப் போற்றும் திருக்கோவையாரில் சிவனின் அடி தேடிய திருமால் குறித்த புதிய செய்தியொன்று, ‘புரங்கடந்தான்என்று தொடங்கும் பாடலில் தரப்படுகிறது. நிலத்தைப் பிளந்து சென்றும் இறைவன் திருவடியைக் காணாத நிலையில், ‘அப்பனே எனக்கு அருள் புரிகஎன்று திருமால் இரப்ப, சிவனும் இரங்கித் தனது ஈரடிகளில் ஒன்றைக் காட்டினான்@ ஆனால் திருமாலோஎனக்கு மற்றையதைதும் காட்டுகஎன்று வேண்டித் தில்லையம்பல வாசலில் வரங்கிடந்தான், என்பது இச்செய்தி. ‘ஒன்று காட்ட, மற்று ஆங்கதும் காட்டிடென்று வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலம் மாயவனேஎன்பது தொடர்புடைய பாடல்வரி. சிதம்பரம் வாசலில் இன்று காணும் திருமாலின் கோயிலைக் குறிப்பதாக இது அமைகிறது.  
சைவ சித்தாந்தக் கருத்துக்களை முரண்பாடுகள் திரிபுகள் இல்லாமல் உள்ளபடி தருபவை திருமுறைகள். தத்துவம் என்றில்லாமல் பக்திநெறி அனுபவமாக அவை தரப்படுகின்றன. சிவன் சக்தி உறவுமுறை பலவாறாகத் திருமுறைகளில் காணப்படுகின்றன. மனோன்மணி ஆகிய சக்திஅரனுக்கு தாயும் மகளும் தாரமும் ஆமேஎன்று திருமந்திரம் கூறுகின்றது. சிவனுக்கும் உமைக்கும் உள்ள உறவைஎம்பெருமான் இமவான் மகட்கு தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்என்று திருவாசகத்தின் திருப்பொற்சுண்ணம்; விளக்குகிறது. திருக்கோவையாரும் இதுபோன்ற கருத்தைத் தருகின்றது.
தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாம் ….’
திருக்கோவையாரிலும் பிற திருமுறைகளிலும் காணும் இத்தகைய தொடர்களின் பொருளை விளங்குவதற்கு சைவ சித்தாந்த அறிவு இன்றியமையாதது. மேற் குறிப்பிட்ட தொடரின் பொருள், ‘வெண்மையான நீறணிந்த பெரிய தோள்களையுடைய சிவன், தனது ஒரு பாகத்திலுள்ள சக்திக்கு தந்தையாக உள்ளான், மகனாகவும் உள்ளான், என்பதாகும். அன்பே வடிவான சிவபெருமான் உயிர்களுக்கு உதவும் பொருட்டு, தன் நிலையிலிருந்து கீழே இறங்கி, வௌ;வேறு வடிவங்கள் எடுக்கிறான். சிவனிலிருந்து தோன்றிய வடிவம் சக்தி. இதனால் அவன் சக்திக்குத் தந்தை ஆகிறான். சக்தியின்பின் தோன்றுவது சக்தி வடிவமான சதாசிவன். இதனால் அவன் சக்திக்கு மகனாகிறான்.
சிவன் சக்தியின் இந்த உறவு முறையை சைவ சித்தாந்த நூலாகிய சிவஞான சித்தியார் தெளிவாக விளக்குகிறது. ‘சிவன் சக்தியைப் பெற்றும் சக்தி சிவனைப் பெற்றும,; இருவரும் சேர்ந்து உலகு, உயிர் (உயிர் சேர்ந்த உடம்பு) ஆகிய அனைத்தையும் தோற்றுவித்தும், சிவனோ சக்தியோ மாறுதல் அடைவதில்லை. அவன் பிரமசாரியாகவும் அவள் கன்னியாகவும் இருக்கின்றனர். இது ஞானிகளுக்குத்தான் தெரியும், என்று கூறுகிறது.
‘சிவம் சக்தி தன்னை ஈன்றும் சக்திதான் சிவத்தை ஈன்றும்
உவந்திரு வரும் புணர்ந்திங் குலகுயிர் எல்லாம் ஈன்றும்
பவன்பிர மசாரி யாகும் பான்மொழி கன்னி யாகும்
தவம்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியு மன்றே.
அனுபவம் என்று சொல்லும்போது மூன்று பொருட்கள் வருகின்றன. அனுபவிப்பவன் (ஞாதுறு), அனுபவிக்கப்படும் பொருள் (ஞேயம்), அனுபவம் (ஞாயம்) என்பவை இவை. இவை பற்றிய அறிவுதிரிபுடி ஞானம்எனப்படும்.  ஆழ்ந்து அனுபவிக்கும் நிலையில் இந்த ஞானம் வெளிப்படுவதில்லை. ‘நான் அனுபவிக்கிறேன்@ இதனை அனுபவிக்கிறேன்@ இது எனது அனுபவம், என்று நாம் உணர்வதில்லை. அனுபவிக்கும் பொருளோடு ஒன்றாகி விடுகிறோம். ஆயினும் அதனோடு உடனிருந்து அனுபவிக்கிறோம். எனினும் எந்த நிலையிலும் நாம் அப்பொருளின் வேறாய் இருக்கிறோம். எமக்கும் அப்பொருளுக்கும் உள்ள உறவு ஒன்றாய் உடனாய் வேறாய் இருப்பது.
ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள உறவும் இத்தகையதென சைவசித்தாந்தம் கூறுகிறது. ஒன்றாய் உடனாய் வேறாய் உள்ள இந்த உறவையே அத்துவித (அத்வைத) உறவெனச் சித்தாந்தம் விளக்குகிறது. இந்த உறவை உணர்த்துவதாக பின்வரும் திருக்கோவையார்ப் பாடல் உள்ளது.
  ‘சொற்பால் அமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
   நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
   பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
   கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே.
தலைமகளைக் கூடிப்புணர்ந்த இன்ப அனுபவத்தைத் தலைமகன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதன் பொருள், ‘புலியூர்ப் புனிதனான தில்லைச் சிவனின் பதியில், கல்பரவிய மலைப்பரப்பில், நாம் புணர்ந்த களவுச் சூழலிலே, அவள் அமுது, நான் சுவை என்னும் அத்துவிதக் கலப்பு வினைத் தெய்வம் தந்தது. நான் இவள் என்னும்படி ஒன்றென நின்ற அழகை என்னைத் தவிர வேறுயார் அறியவல்லார்?’, என்பதாகும்.
வினைத் தெய்வம் - வினையைச் (வினைப்பலனைச்) சேர்க்கும் தெய்வம். பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. பால் - வினை@ சேரவேண்டிய நியதி. பொற்புஅழகு@ களவகத்தேகளவுக் காதலிலே.
இரு வேறு பொருட்கள் கலப்பினால் ஒன்றாகவும் தன்மையால் இரண்டாகவும் இருத்தல் சைவசித்தாந்தம் கண்ட அத்துவித நிலை. சிற்றின்ப நுகர்ச்சியில்நான் இவளாம் பகுதிப் பொற்புஎனக் கூறி மணிவாசகப் பெருந்தகை இதனை இனிது விளக்குகிறார்.
உலகியலுடன் இறையியலையும் இணைக்கும் திருக்கோவையார் சிறந்த செந்தமிழ் இலக்கியமாகத் திகழ்கிறது. சங்க நூல்போல் உள்ள இதனைப் படித்துத் தெளிதற்கு தமிழ்க் கவிதைப் பயிற்சியும் அனுபவமும் பயன்படும். மாணிக்கவாசக சுவாமிகளின் இணையற்ற தமிழ்ப் புலமைக்கும் ஆழ்ந்த சிவபக்திக்கும் சான்று பகர்வதாக இந்நூல் விளங்குகிறது.
‘பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயையென்று உந்தீபற’. – திருவுந்தியா
………………………………………………………………………………………………………………………………………………………………………………….
[சிட்னி நகரில் உலக சைவப்பேரவை, அவுஸ்திரேலியா கிளை நடாத்தும்    திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியில் ஆற்றிய விளக்கவுரை]

No comments: