சிறுவர் இலக்கியமும் சிறுகதை இலக்கியமும்

.
முருகபூபதி

 சிறுவர் இலக்கியம் மேனாட்டு மொழிகளில் வளர்ச்சிபெற்ற அளவுக்கு தமிழில் வளரவில்லை. அல்லது வளர்க்கப்படவில்லை. முன்னொரு காலத்தில் எமது தாயகத்தில் பாட்டிமார் தமது பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்லும் மரபு இருந்தது. ஆனால் இப்போது பாட்டிமாரும் பேரப்பிள்ளைகளும் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
 இன்றும் நாம் முன்னர் சிறுவயதில் படித்த அல்லது கேட்ட பாட்டிமார் சொல்லித்தந்த கதைகளை நினைவில் வைத்து போற்றுகின்றோம். எமது குழந்தைகளுக்கும் அவற்றை திருப்பிச்சொல்ல முயற்சிக்கின்றோம்.
 ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தற்காலத்திய வீடியோ கேம் எனப்படும் கணினி தொழில் நுட்பமும் அவர்களை எம்மிடமிருந்து அந்நியப்படுத்திக்கொண்டிருக்கின்றன. புகலிட நாடுகளில் வளரும் குழந்தைகளுடன் இந்த வீடியோ கேமும் நாளொரு வண்ணமும் பொழுதொரு கோலமுமாக வளர்ந்து எமது குழந்தைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.


 சில வருடங்களுக்கு முன்னர் எமது பெண் உறவினர் ஒருவர் ஜேர்மனியிலிருந்து விடுமுறைக்காக தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் எங்களிடம் வந்து சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். பகல் பொழுதில் எனது பிள்ளைகளுடன் விளையாடுவார்கள். இரவானதும் படுக்கைக்குச்சென்று தமது தாயின் வருகைக்காக காத்திருப்பார்கள்.
 ஏன் தெரியுமா?
 அந்தத்தாயார் ஜெர்மனியிலிருந்து தனது குழந்தைகளுக்காக எடுத்துவந்த ஒரு புத்தகத்துடன் அவர்களுக்கு அருகிலிருந்து அதிலிருந்து ஒரு கதையை அபிநயத்துடன் வாசிப்பார். அதனைக்கேட்டு ரசித்துவிட்டு குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இதனை   Bed Time Stories  என்று அழைக்கின்றார்கள்.
 எனக்கு சின்னஞ்சிறுவயதில் எனது பாட்டி சொல்லித்தந்த கதைகளையே பின்னர் நான் எழுத்தாளனாகியதும் ‘பாட்டி சொன்ன கதைகள்’ என்ற தலைப்பில் எனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் கலந்து எழுதினேன். பிரான்ஸில் வெளியான ‘தமிழன்’ என்ற இதழில் தொடராக வெளியானது. பின்னர் குறிப்பிட்ட கதைகள் தனித்தொகுதியாகி நூலுருப்பெற்று தமிழ் நாட்டில் வெளியானது.
 இந்நூலை தமிழக நூலக அபிவிருத்தி சபை, சிறுவர் இலக்கிய வரிசையில் தேர்வு செய்து சுமார் 1500 ஆரம்ப பாடசாலைகளுக்கு விநியோகித்தது.
 அதில் சில கதைகளை எனது மகன் இங்கு 4 வயதில் வந்தபோது அவன் உறங்கச்செல்லும் வேளையில் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். பின்னர் அவன் தனது ஆரம்பவகுப்பிற்கு பாடசாலை சென்றபோது தனது வகுப்பில் தரப்பட்ட ஒரு நூல் எழுதும் பயிற்சியில் குறிப்பிட்ட பாட்டி சொன்ன கதைகளை ஆங்கிலத்தில் எழுதி அவற்றுக்கு படங்களும் வரைந்து புள்ளிகள் பெற்றான்.
 குழந்தை இலக்கியம் ஒருவகையில் மரதன் ஓட்டம் போன்றது. எமது முன்னோர்களினால் சொல்லப்பட்டதை நாம் உள்வாங்கி கிரகித்து மனதிலிருத்தி எமது சந்ததியிடம் பகிர்வது. இது தொடர் சங்கிலியாக வளர்வது.
 புகலிட வாழ்வில் தாய்க்கு ஒரு நேரம் வேலை, தந்தைக்கு பிறிதொரு நேரம் வேலை. இருவருமே ஒரே நேரத்தில் வேலைக்குச்சென்று வீடு திரும்பினாலும் தமது பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்க முடியாமல் இயந்திரமாகிவிடும் நடைமுறை வாழ்வு.
 வாராந்த விடுமுறை நாட்களில் பல்வேறு குடும்ப மற்றும் சமூக நிகழ்வுகள். இவற்றுள் அரங்கேற்றம், விழாக்கள், ஒன்றுகூடல்கள், விருந்துகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளடக்கம்.
 இதுவே தொடர்கதையாகிவிடும்போது குழந்தைகளுக்கு Bed Time Stories   சொல்லிக்கொடுக்க அவர்களுக்கு எங்கே நேரம்.
 எனவே இதுபற்றி எம்மவர்கள் சற்று நேரம் ஒதுக்கி சிந்திக்கவேண்டும். குழந்தை இலக்கியம் எமது குழந்தைகளை நற்பிரஜைகளாக்கும். இங்கு வாழும் எழுத்தாளர்கள் இதுபற்றியும் யோசிக்கவேண்டும்.

சிறுகதை இலக்கியம்

 சிறுகதை இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக எமது ஈழத்து விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம்.
சிறுகதை எழுத்தாளர்கள் தமது படைப்பு தொடர்பாக எவரேனும், வாசகர் கடிதமாவது எழுதமாட்டார்களா என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டால் அதனைப்பற்றி குறைந்தபட்சம் இதழ்களில் சிறிய அறிமுகக்குறிப்பாவது பதிவாகுமா என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஈழத்தமிழ்ச்சிறுகதைகள் பற்றிய கணிப்பு குறித்து எனது கருத்தை இந்தப்பின்னணியிலிருந்துதான் சொல்லமுடிகிறது. ஈழத்தைச்சேர்ந்த பல படைப்பாளிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்னர் அவர்களின் படைப்புகள் ஈழத்து வாசகர்களுக்கு புதிய களங்களை அறிமுகப்படுத்துகின்றன.
புலம்பெயர்ந்த என்போன்ற வாசகனுக்கு இன்றைய ஈழத்தமிழ்ச்சிறுகதைகள் எத்தைகைய வாசிப்பு அனுபவத்தை தருகின்றன என்பது சற்று சுவாரஸ்யமானதுதான்.
ஈழப்போராட்டம் வழங்கிய போர்காலச்சிறுகதைகள், இடம்பெயர் மக்களின் அகதி, அவல வாழ்வு பற்றிய சிறுகதைகள், இவற்றினூடாக கலைத்துவமாகவோ அல்லது பிரசாரமாகவோ  சாதி , ஏற்றதாழ்வு, வர்க்கப்பிரச்சினைகளை பூடகமாக உணர்த்தும் சிறுகதைகள் புகலிடத்தில் வாழும்  ஈழத்தவருக்கு புதிய களத்தை அறிமுகப்படுத்தலாம்.
ஆனால் குறிப்பிட்ட புதிய களம் எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது என்பதை தீவிரமான வாசகனால்தான் உள்வாங்கிக்கொள்ள முடியும்.
சிறந்த சிறுகதை எது? என்பது  வாசகரின் ருசிபேதத்தில் தங்கியிருக்கிறது. ஒருவருக்கு பிடித்தமானது மற்றுமொருவருக்கு பிடித்தமில்லாமல் அல்லது எழுதப்பட்ட முறையினை புரிந்துகொள்ள முடியாமல்; போகலாம்.
தற்காலத்தில் ஈழத்தில் சிறந்த சிறுகதைகள் எழுதியிருப்பவர்கள் யார்? என்ற பட்டியலை ‘பட்டியல் விமர்சனம்’ எழுதுபவர்களினால்தான் வெளியிடமுடியும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவரும் ஒருவரது புதிய சிறுகதையை விட புதிதாக எழுதவந்த இளம்படைப்பாளி ஒருவரின் சிறுகதை மிகச்சிறந்ததாக அமைந்திருப்பதையும் நாம் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அவதானித்திருக்கின்றோம்.
இலங்கையில் நீண்டகாலமாக சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து அறிவிக்கும் தமிழ்க்கதைஞர் வட்டம் (தகவம்) விதந்துபோற்றுதலுக்குரிய பணியினைச்செய்துவருகிறது. இந்த அமைப்பின் தெரிவுகள் சிறுகதைப்படைப்பாளிகளை மேலும் செம்மையுறுவதற்கும் வழிவகுக்கும் என கருத இடமுண்டு.
 ஒரு சில மூத்த படைப்பாளிகளைத்தவிர ஏனையோர் பெரும்பாலும் இன்று சிறுகதை எழுதுவதையே நிறுத்திவிட்டனர்.
வாசகர்கள் படைப்பாளிகளிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். அரைத்த மாவையே அரைக்கும் படைப்புகளை அவர்கள் விரும்புவதில்லை.
களத்திலறங்கி யதார்த்தமான சிறுகதைகளை படைப்பவர்களும் குறிப்பிட்ட களம்பற்றிய கேள்விஞானத்தில் சிறுகதைகளை தயாரிப்பவர்களும் ஈழத்து தமிழ்ச்சிறுகதைத் துறையில் இருக்கிறார்கள்.
 கரு, பாத்திர வார்ப்பு, படைப்புமொழி நடை, வாசகரின் சிந்தனையில் ஊடுருவும் ஆற்றல் என்பவற்றால் ஒரு சிறுகதை தரமாக அமையலாம். இலங்கையில் வருடாந்தம் சுமார் ஐநூறு தமிழ்ச்சிறுகதைகள் வெளியாகின்றன. தேசிய இதழ்களின் ஞாயிறு பதிப்புகள் மற்றும் இலக்கியச்சிற்றிதழ்களில் பிரசுரமாகும் சிறுகதைகள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கம். அவை அனைத்தையும் வாசிக்கும் சந்தர்ப்பம் வெளிநாட்டில் வாழும் என்போன்ற வாசகருக்கு இல்லை. இணையத்தில் ஓரளவு வாசிக்க முடிந்தாலும் அனைத்தையும் இணையத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு மனதில் பதிந்திருக்கும் சில ஈழத்தமிழ்ச்சிறுகதைளை வாசிக்கும் அபூர்வமான தருணங்கள் மனநிறைவைத்தந்துள்ளன.

                       --0--

No comments: