மாலை பொழுதின் மயக்கத்திலே |
மழை,
காபி ஷாப், பின்னணியில் இளையராஜாவின் இனிமையான பாடல், குறைவான
கதாபாத்திரங்கள், பின்புலமாக அவர்களின் உணர்ச்சிகள், மழையின் சத்தத்தோடு
இணைந்திருக்கிற இசை, எங்கேயும் உறுத்தாத தொழில்நுட்பங்களோடு ஒரு நல்ல
சினிமா.
|
இரண்டு மணி நேரத்திற்குள் நடக்கிற
நிகழ்வுகளை உரையாடல்கள் மூலம் இரண்டு மணி நேர சினிமாவாக்கிய தைரியத்திற்கே
இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.
தன் முதல் திரைப்படத்தை இயக்க இருக்கும் அஜய், அதில் சின்ன சறுக்கலை
சந்திக்கிறான். இதிலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள காபி ஷாப்
வருகிறான்.
அதே காபி ஷாப்பில் மணவாழ்க்கையில் முரண்பட்ட தம்பதிகளான சதீஷ் - ரம்யாவும் இருக்கிறார்கள்.
இருவரின் முரண்பாடும் வளர்ந்து மண முறிவு செய்து கொள்ளலாம் என்று ரம்யா
முடிவெடுக்கிறார். சதீஷ் தன் மனக்குமுறல்களை எல்லாம் அவனுக்கு
சினேகமாயிருக்கும் காபி ஷாப் மேனேஜரிடம் கொட்டுகிறான். நிதானமாகவும்,
தீர்க்கமாகவும் முடிவெடுக்கும் அவரின் அறிவுரையில் ரம்யாவுடன் ஒத்துப்போக
சம்மதிக்கிறான்.
இதற்கிடையில் காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் அஜய்யின் எதிரே வந்து
அமர்கிறார் ஜியா. பார்த்தவுடன் வீழ்த்திவிடுகிற அழகு. மெல்ல மெல்ல விழும்
மழை இருவரையும் சினேகமாக்குகிறது. அது அஜய்-க்குள் காதலாக மாறுகிறது.
அஜய் ஜியாவிடம் தன் காதலை சொல்கிறான். காதலில் தனக்கு நம்பிக்கையில்லை
என்று சொல்லும் ஜியா, தான் மேல் படிப்புக்காக நாளை அவுஸ்திரேலியா செல்ல
இருப்பதைச் சொல்லி பிரிகிறாள்.
அஜய் மழையில் நனைந்தபடி காபி ஷாப்பின் வெளியே வந்து நிற்க, கடந்த இரண்டு
மணி நேர அஜய்யின் நினைவுகள் ஜியாவுக்குள்ளும் காதலை உண்டாக்குகிறது.
சின்னப் பிரிவுக்கு பின், ஜியா திரும்பி வருகிறாள். மழையில் நனைந்து
கொண்டிருக்கும் அஜய்யிடம் தன் காதலை சொல்கிறாள். முடிவு ஒரு அழகான கவிதையாக
முற்று பெறுகிறது.
கதாநாயகன் அஜய்யாக ஆரி. உணர்வுகளுக்கும் வசனங்களுக்கும் அதிக வேலை
என்பதால் இயல்பாக நடித்திருக்கிறார். லேசான சிரிப்போடு, அழகான கண்களோடு
எட்டிப் பார்க்கும் கதாநாயகி ஜியா அழகான புதுவரவு.
நடுத்தர வர்க்க தம்பதி சதிஷ்- ரம்யாவாக, பாலாஜி- தேஜஸ்பினி. பொருத்தமான
பாத்திர தேர்வு. பாலாஜி, பஞ்சு சுப்புவிடம் தன் மனவலியை ஒரு கதையோடு
ஒப்பிட்டு புலம்புவது நல்ல நடிப்பு. பஞ்சு சுப்பு படத்தில் அவரது
குணநலன்களுக்காகவே மனதில் நிற்கிறார். யதார்த்தமான வடிவமைப்பு அவரது
கதாபாத்திரம்.
கதையோடு ஒட்டி நிற்கும் சதீஷ், சிவாஜி, கருணா ஆகியோரின் நகைச்சுவை
இயல்பை மீறாமல் படமாக்கியது மனதில் நிற்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம்
இசையும், ஒளிப்பதிவும். இசையமைப்பாளர் அச்சுவின் இசையில் பாடல்கள்
அனைத்தும் நம்மை உணர்வோடு ஒன்ற வைத்திருக்கிறது. பின்னணி இசையில் எங்கேயும்
அளவை மீறவில்லை. ‘என்னுயிரே’ பாடல் மனதை வருடும் அருமையான மெலடி.
ஒளிப்பதிவு
கோபி அமர்நாத். முழுக்க முழுக்க ஒரு காபி ஷாப்புக்குள்ளே கதை நகர்வதால்
அதற்குள்ளாகவே அழகாக படம் பிடித்திருக்கிறார். ‘ஏன் இந்த தீடீர் மாற்றம்’
பாடல் படம் பிடித்த விதம் அருமை. எடிட்டர் தியாகராஜன் மெதுவான
கதையோட்டத்திற்கு ஏற்ப கட் செய்திருக்கிறார்.
‘லைஃப்பே நம்மள சீரியஸா எடுத்துக்கல. நாம ஏன் லைஃப்பை சீரியஸா
எடுத்துக்கணும்’. ‘கல்விதான் கடைசி வரை கூட வரும்’ என்பது மாதிரியான
தோழமையான வசனங்களும், குறும்பான வசனங்களும் படம் முழுக்க வந்து படத்தை
முழுவதுமாக பளிச்சிட வைக்கிறது.
படத்தை இயக்கியிருக்கும் நாராயண நாகேந்திர ராவ் தமிழ் சினிமாவில் புதிய
அலையை ஏற்படுத்த முயற்சித்ததற்காகவே நல்ல சினிமாவுக்கான நம்பிக்கை
தருகிறார்.
படத்தின் பலவீனம் மிக மெதுவாக நகரும் காட்சிகள்தான். உரையாடலை வைத்து
நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பொறுமை தேவை. ஆரோக்கியமான மாற்று
சினிமாவை முன் வைத்திருப்பவர் இன்னும் கவனத்தோடு செயல்பட்டிருக்கலாம்.
மற்றபடி மாலை பொழுதின் மயக்கத்திலே அதன் இயல்பான உணர்வுகளுக்காகவே ரசிக்கலாம்.
நடிகர்: ஆரி.நடிகை: சுபா. இயக்குனர்: நாராயண் நாகேந்திர ராவ். இசை: அச்சு. ஒளிப்பதிவு: கோபி அமர்நாத். நன்றி விடுப்பு |
தமிழ் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment