கம்பன் விழா 2012 – ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

 .

படங்கள்: ப. இராஜேந்திரன்   மற்றும் கே. இலட்சுமணசர்மா


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் சிட்னியில் தம் முதலாவது கம்பன் விழாவினை இனிதே 21.07.2012 அன்று நிறைவேற்றியிருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இவ்விலக்கிய விழா, புகழ்பூத்த தென்னிந்தியப் பேச்சாளர்களின் தனியுரைகள், திறமைமிகு இளைஞர்களின் சுழலும் சொற்போர், தமிழ்ப் பேராளர்களுக்கான விருது வழங்கல், மற்றும் சிறப்புப் பட்டி மண்டபம் என அமைக்கப்பட்டிருந்தது. வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்கள், தாம் விழாவை மிகவும் இரசித்ததாக மனதாரப் பாராட்டியிருந்தனர். இலக்கியத் தாகத்தோடிருந்த தமிழ் ஆர்வலர்கள், தமக்குத் தரமான நிகழ்வைச் சிறப்பாக அரங்கேற்றியதற்காக, தம் சந்தோஷத்தையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.


காலை நிகழ்வுகள் சரியாக 9:01மணிக்கு, சிட்னி முருகன் ஆலய வளாகத்திலுள்ள தமிழ்க் கல்வி கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது. தில்லைராஜன் தம்பதியர் மங்கலமாய் விளக்கேற்ற, கம்பன் கழகத்தைச் சார்ந்த செல்வன் கிருஷ்ணா சர்மா மங்கல ஆராத்தியெடுக்க, செல்வன் பரத் மோகன் இறை பக்தியோடு கடவுள் வாழ்த்தை இனிமையாக பாடினார். கம்பன் குடும்பத்தைச் சார்ந்த பேராசிரியர். திருமதி ஞானா குலேந்திரன் அவர்கள், கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பெருமைகளை எடுத்துக்கூறி விழாவின் தொடக்கவுரையை செவ்வனே நிகழ்த்தியிருந்தார். விழாவின் முதலாவது இலக்கிய நிகழ்வாக இடம்பெற்ற தனியுரையில், 'மற்றையது ஒன்றும் மற...” என்ற தலைப்பில் பேராசிரியர். திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் கைகேயி என்ற உன்னதப் பாத்திரப் படைப்பின் மூலம் எவ்வாறு கம்பன் பெண்ணியல்புகளைத் திறம்பட விளக்கியிருக்கின்றான் என சிறப்பாக உரையாற்றியிருந்தார்.

தொடர்ந்து, சுழலும் சொற்போர் என்ற இளையோர் அரங்கு சிறப்பாக அரங்கேறியிருந்தது. இளைஞர்களை ஆற்றுப்படுத்தி, இந்நிகழ்விற்குத் தலைமையேற்ற ‘இலக்கியச்சுடர்’ த. இராமலிங்கம் அவர்கள், “இன்றைய இளைஞர்கள் கம்பனிடம் பெறவேண்டியவற்றுள் முதன்மையானது: தொண்டே! காதலே! தியாகமே! சகோதரத்துவமே! ஒழுக்கமே!” என்ற தலைப்பை தன் முன்னுரையில் சிறப்பாக விளக்கி, இளைய பேச்சாளர்களை இடையிடையே கேள்விகள் கேட்டு ஊக்கப்படுத்தி, மிகவும் சுவாரசியமாக நடாத்தியிருந்தார்.
தொண்டே! என்ற தலைப்பில் திரு. கேதார சர்மா இலட்சுமணசர்மாவும், காதலே! என்ற தலைப்பில் செல்வன் கிருஷ்ணா சர்மாவும், தியாகமே! என்ற தலைப்பில் திரு. ஜெயகுமாரன் சந்திரசேகரமும், சகோதரத்துவமே! என்ற தலைப்பில் செல்வி மைத்திரேஜி சங்கரதாசனும், ஒழுக்கமே! என்ற தலைப்பில் திருமதி விஜயலக்ஷ்மி பாலுவும் நிறைவாகப் பேசியிருந்தனர். ‘இலக்கியச்சுடர்’ ஐயாவின் இரத்தினச் சுருக்கமாகவமைந்த நிறைவுரை அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தியது. புலம்பெயர்ந்து வாழும் இவ்விளைஞர்களின் இலக்கிய ஆளுமையையும் ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டியிருந்தார் ‘தமிழருவி’ மணியன் அவர்கள். மென்மேலும் இளைஞர்களை இலக்கியத்தில் ஆழ்த்த கம்பன் கழகம் எடுக்கவிருக்கும் பணிகளுக்கு வாழ்த்தும்; தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து 'குறிகளால் காட்டிட முயலும் முயற்சி...” என்ற தலைப்பில் 'தமிழருவி” மணியன் அவர்கள் ஆற்றிய தனியுரையில், கம்பனின் கடவுள் வாழ்த்துக்களிலிருக்கும் நயங்களை வியப்புற உரைத்ததோடு மட்டுமல்லாமல் அவனது காப்பியம் எந்தவொரு சமயத்தையும் சார்ந்ததாக அமையாமல் தமிழர்களனைவருக்கும் பொதுவாகப் படைக்கப்பட்டிருப்பதையும் புரிய வைத்தார். தமிழருடைய வாழ்வியல் விழுமியங்களுக்கேற்ப, தமிழன் பெருமைப்படும் வகை இலக்கிய இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகுவதற்கு ஒரு காப்பியத்தைத் தந்த வள்ளலைப் பற்றிய அவரது பேச்சு, தமிழ் அருவியாய்; இடையறாது ஓடியதென்பதும் சிறப்பே. இனிதே மதியம் 12:02மணிக்கு காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றது. தமிழார்வலருக்கு மதிய உணவும் வழங்கி சிறப்பித்திருந்தனர் கம்பன் கழகத்தினர்.


மாலை நிகழ்வுகள் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை மண்டபம் நிறைந்த தமிழ் இரசிகர்களோடு 5.50மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. மங்கல விளக்கேற்றலை நாகேந்திரன் தம்பதியர் நிகழ்த்த, மங்கல ஆராத்தியை சிவஸ்ரீ இந்திரன் குருக்கள் எடுக்க, கடவுள் வாழ்த்தை இனிமையாக செல்வி சத்தியதர்மினி ஞானாகரன் இசைத்திருந்தார். நிகழ்வின் தொடக்கவுரையை பிரம்மஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் அவர்கள் சிறப்பாக ஆற்றியிருந்தார்.
அடுத்து இடம்பெற்ற விருது வழங்கும் அரங்கில் முதலில் சான்றோர்க்கான கௌரவம் அரங்கேறியது. எம் தாய் மொழிக்காகவும், தமிழினத்திற்காகவும் சேவையாற்றிய - பெருமை சேர்ப்பித்த, பெரியோர்க்கான விருதுகள் வழங்கப்பட்டது. இசைத்துறைக்காக ‘கானாம்ருத வாரிதி’ எஸ். பரம் தில்லைராஜாவும், தமிழ் இலக்கியத்துறைக்காக எழுத்தாளர் திரு. எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் பேராசிரியர். பொன். பூலோகசிங்கம் அவர்களும், தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய பணிக்காக மருத்துவ கலாநிதி பொன். சத்தியநாதன் அவர்களும் சான்றோர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வருடத்திற்கான கம்பன் கழகத்தின் உயர் விருதான ‘மாருதி’ விருதினை தமிழ் சமுதாய மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக தன்னலமற்ற சேவையாற்றிவரும் இருதய மருத்துவ நிபுணர் வை. மனோமோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விருது வழங்கும் நிகழ்வுகள் பலரும் மெச்சும் வகையில், பண்டைய தமிழர் பாரம்பரியத்தோடு மங்கல வாத்திய இசையோடு கோலாகலமாக நிறைவேறியிருந்ததாக, தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த தமிழறிஞர்கள் உட்பட பலரும் பாராட்டியிருந்தனர்.

 மாலை நிகழ்வின் இரண்டாம் பாகத்தில் சிறப்புப் பட்டி மண்டபம் அரங்கேறியது.  சிறப்பாக நடுவத்துவம் ஏற்றிருந்தார், ‘தமிழருவி’ மணியன் ஐயா அவர்கள், யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது: கைகேயியிடமே, இலக்குவனிடமே, கும்பகர்ணனிடமே! - என அணிகளை, முறையே பேராசிரியர். பர்வீன் சுல்தானா, இலக்கியச்சுடர் த. இராமலிங்கம், திரு.திருநந்தகுமார், தலைமை தாங்க, திரு. ஜெ.ஜெய்ராம், திரு. பூ.ஞானாகரன், மற்றும் திரு. க.குமாரதாசன் அணிசார்ந்து வாதாடியிருந்தனர். மகிழ்ச்சியடைந்தும், உணர்ச்சி வசப்பட்டும், புழுகாங்கிதம் கொண்டும், கம்பன் தந்த தீந்தமிழை மாந்தனர் மக்கள். மணியனய்யாவின் பட்டி மண்டப முடிவுரை சிறப்பாயமைந்து, கைகேயியே யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்பட்ட பாத்திரமாய், உரைத்திருந்தார்.
நேரம் சற்றே தாமதமாகியிருப்பினும் இரசிகர்கள் மண்டபத்தை விட்டு அகலாவண்ணம் இலக்கியத்தை இரசித்தனர். ஈற்றில் கம்பன் வாழ்த்தோடு விழா 10:50மணியளவில் சுபமாகியது.





























1 comment:

யசோதா.பத்மநாதன் said...

இயல் கலையின் இயல்பையும் இலக்கியத்தின் சுவையையும் விழா என்ற சொல் குறித்து நிற்கும் கொண்டாட்டத்தையும் இன்னதென்று புரிய வைத்த இலவச நிகழ்ச்சி அது.

இதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய உழைப்புக்கும் களைப்புக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

கம்பன் கழகம் தனக்கென வைத்திருக்கின்ற விழாப் பண்பாட்டில் எனக்குச் சில தனிப்பட்ட விமர்சனங்கள் உண்டு. ஆனால் அது ஒரு பொருட்டல்ல.தாம் விரும்புகின்ற ஒன்றை நேர்த்தியாகவும் செம்மையாகவும் பாராட்டத்தக்க விதமாகவும் செய்து முடித்தார்கள்.

அந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிகுந்த பாராட்டுக்குரியதே!