உலகச் செய்திகள்

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகள்

ஈரானிடம் சிக்கிய அமெரிக்க அதி நவீன ஆளில்லா உளவுவிமானம்

இணையம் மூலம் ஈரானில் நுழைய அமெரிக்கா முயற்சி

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகள்

3/12/2011

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது.

இது 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கினைத் தாக்க வல்லது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவ் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நன்றி வீரகேசரி

ஈரானிடம் சிக்கிய அமெரிக்க அதி நவீன ஆளில்லா உளவுவிமானம்

5/12/2011

ஈரானிய வான்பரப்பில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட அவ்விமானம் பின்னர் ஈரானியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளை உளவுபார்க்கவே அமெரிக்கா இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமன்றி இஸ்ரேலும் இத்தகைய நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை தமது வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து அணுச் செறிவாக்கல் செயற்பாடுகளை உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் அறிவித்திருந்தது.

ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


இணையம் மூலம் ஈரானில் நுழைய அமெரிக்கா முயற்சி


7/12/2011

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றுமுழுதாக நின்று போயின.

இந்நிலையில் ஈரானிய மக்களுடன் தொடர்பு கொள்ளும் முகமாக அமெரிக்கா புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி 'ஒன்லைன் ஈரானிய தூதரகம்' ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதன் இணைய முகவரி http://iran.usembassy.gov/ என்பதாகும். இவ்விணையத்தளமானது ஆங்கிலம், மற்றும் பார்ஷி மொழிகளைக் கொண்டுள்ளது.

எனினும் ஈரான் இதற்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. தனது நாட்டினுள் நுழைந்து, சுமுக நிலையை சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள சதித்திட்டமே இதுவென ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும் ஈரானிய மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

அமெரிக்கா மற்றும் ஈரானுடனான இராஜதந்திர உறவுகள் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. இதன் போது தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது.

சுமார் 444 நாட்கள் தொடர்ந்த இம்முற்றுகையின் போது 52 அமெரிக்கர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனைப்போலவே அண்மையில் ஈரானில் அமைந்திருந்த பிரித்தானிய தூதரகமும் சூறையாடப்பட்டது.

இதனையடுத்து பிரித்தானியா தனது அனைத்து இராஜதந்திரிகளையும் மீளப்பெற்றுக்கொண்டது.

இதேவேளை இவ்வருட ஆரம்பத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், தனது திட்டங்களையும் செய்திகளையும் ஈரானியர்களுக்கு வழங்கும் முகமாக பார்ஷி மொழி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியது.

எது எவ்வாறாக இருப்பினும் அமெரிக்காவின் நோக்கம் தனது அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பதுதான் என்பதை ஈரான் நன்கு அறிந்து வைத்துள்ளது.

அதுபோல், ஈரானைப் பணியவைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றமையும் நாம் அனைவரும் அறிந்ததே.

தனது அணு உற்பத்தியை உளவு பார்த்தார்கள் என சந்தேகிக்கப்படும் பலரை ஈரான் கைது செய்துள்ளது.

இவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவாளிகள் எனவும் விசாரணைகளில் தெரியவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் அமெரிக்க அதி நவீன ஆளில்லா உளவு விமானத்தினை ஈரான் சுட்டு வீழ்த்தியதுடன் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி















No comments: