பாரதியின் பிறந்த நாளை தமிழ்முரசு நினைவு கூருகின்றதுSBKB1211
.
                                                                                                          செ.பாஸ்கரன்

11.12 2011 இன்று பாரதியின் பிறந்ததினம்.
11.12 1882 இல் பிறந்த இந்த மனிதன் இன்றளவும் நினைவு கூரப்படுகின்றான் என்றால் அவன் மகா கவியென்பதனால்தான்.  பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.  தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என்று எழுதியது மட்டுமல்ல போராட்டத்தில் கலந்து கொண்டு முன்னின்று போராடிய ஓரு போராளி.

"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
தான் சாதாரண மனிதனாக வாழ்து மடியும் ஒருவனல்ல என்று அறைந்து கூறும் உறுதிபடைத்தவன். காலனைக் கண்டும் கலங்காமல் காலனே வாடா உனைக் காலால் உதைப்பேனென சவால்விட்ட துணிவு பாரதிக்குத்தான் இருந்தது.


SB91111f2.jpg

ஒரு கவிஞன் கூறினான்

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
 அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனனேயடா”
அந்தளவிற்கு பாரதியின் பாடல்களில் இன்பம் இருந்தது போதை இருந்தது. போரின் அழைப்புக்கூட இலக்கிய நயமுடன் இருந்தது.

 பெண்அடிமையைப்பற்றி கூறும்போது

'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு'
என்றோர்முன்
பட்டங்கள் ஆளவும்
சட்டங்கள் செய்யவும் மட்டுமின்றி
எட்டுமறிவினில்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை
என்பதைச்
சத்தமாய் சொல்லி

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்றான்.

பிஜி தீவிலே துன்பத்தில் வாடிய தொழிலாளர்களுக்காகவும் உலகத் தொழிலாளர்களுக்காகவும் பாடிய இந்தியக் கவிஞன் என்றால் அது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பாஞ்சாலி சபதத்தை இலக்கிய நயத்தோடும் அழகான கவிநயத்தோடும் தமிழின் அழியாக் காவியமாக தந்தவன் பாரதி. இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம்.

இந்திய விடுதலையை எந்த அளவுக்கு பாரதி நேசித்தான் என்பதற்கு

‘இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’

 என்ற இந்தப்பாடலே உதாரணம்.
39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து அதற்குள் சாதனைபடைத்த மகாகவி
11 செப்டம்பர் 1921 இல் மக்கள் மனதில் நிலைத்து நின்றுகொண்டு மண்ணுலகை விட்டு நீங்கியவன்.

இன்று அவன் பிறந்த நாளை தமிழ்முரசு நினைவு கூருகின்றது

2 comments:

kirrukan said...

[quote]காலனைக் கண்டும் கலங்காமல் காலனே வாடா உனைக் காலால் உதைப்பேனென சவால்விட்ட துணிவு பாரதிக்குத்தான் இருந்தது.[quote]
ஆயிரத்திற்க்கு மேற்பட்ட எம்மவர்களும் அந்த துணிவு இருந்தது கவிஞரே...புலி..புளோட்..போராளிகளை சொல்லுகிறேன்

C.Paskaran said...

அதை மறுப்பதற்கு எவராலும் முடியாது. வீரமும் அஞ்சாமையும் நிறைந்தவர்கள்தான் அங்கு நின்றார்கள். விடுதலையை நேசித்தார்கள். மற்றவர்கள் ஓடிவந்துவிட்டு விடுதலையை வியாபாரம் செய்கின்றார்கள். இது பாரதியின் பிறந்ததின நினைவுப் பதிவு அவனைப்பற்றித்தான் குறிப்பிட முடியும் கிறுக்கரே.