இலங்கைச் செய்திகள்

தமிழ் வர்த்தகர் கடத்தல்: கொழும்பு கொச்சிக் கடையில் பதற்றம்

இருவர் வெள்ளை வேனில் கடத்தல்

தலைநகரில் மீண்டும் அரங்கேறும் கடத்தல் நாடகங்கள்!

யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்!

தமிழ் வர்த்தகர் கடத்தல்: கொழும்பு கொச்சிக் கடையில் பதற்றம்
லியோ நிரோஷ தர்ஷன்/ 5/12/2011

கொழும்பு - கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தவர்களால் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


நன்றி வீரகேசரி

இருவர் வெள்ளை வேனில் கடத்தல்
5/12/2011

வரக்காபொல பகுதியில் நேவிருவன் என அழைக்கப்படும் ருவன் சந்திமால் டெப் என்பவரும் அவருடைய நண்பரான தம்மிக்கவும் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் நேவி ருவனின் மனைவி முறைப்பாடு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி

தலைநகரில் மீண்டும் அரங்கேறும் கடத்தல் நாடகங்கள்!
7/12/2011
வெள்ளை வேன் கும்பல்களால் இளைஞர் யுவதிகள் கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் அவலங்கள் நாட்டில் மீண்டும் தாண்டவமாடத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கொழும்பு, மன்னார், திருகோணமலை, புத்தளம் யாழ்ப்பாணம் போன்ற நகரங்களிலேயே கடத்தல் நாடகம் நாளாந்தம் அரங்கேறி வருகின்றது.

சிறிது காலம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கின்றன. அதுவும் கடந்த சில வாரங்களாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுவதை பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறியக் கிடக்கின்றன.

இவ்வாறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சிவில் உடையில் வரும் ஆயுததாரிகளே என்று நேரில் கண்டவர்கள் வாயிலாக உறுதியதாக அறியப்படுகின்றது.

இத்தகைய ஆட்கடத்தல்கள் யாரால், ஏன், எதற்காக நடத்தப்படுகின்றன? இது புரியாத புதிராகவே இருக்கின்றது.

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கடத்தல் நடத்தப்படுகின்றதா? அல்லது வேறேதேனும் அரசியல் மற்றும் பொதுவான, தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா?

கடந்த ஒரு மாதத்தில் நால்வர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. பத்திரிகைகளிலும் கடத்தல் சம்பவம் குறித்தே அடிக்கடி செய்திகள் வெளிவருகின்றன.

இவ்வாறு கடத்தப்படும், காணாமல்போகும் சிலர் சடலங்களாக மீட்கப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

கணவனைப் பிரிந்து மனைவி, மனைவியரைப் பிரிந்து கணவன்மார் தந்தை-தாயைப் பிரிந்து பிள்ளைகள், பிள்ளைகளைப் பிரிந்து பெற்றோர் என்று அவலப்படுவோரின் எண்ணிக்கையும் தினந்தினம் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

இவைபற்றி யாரிடம் சென்று முறையிடுவது? யாருக்குத்தான் இது தொடர்பில் அக்கறை இருக்கின்றது? இதனிடையே அண்மையில் கொலன்னாவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட ஒருவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் விடுவிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இது எப்படி?

மக்கள் சக்திதான், மேற்படி நபரை மீட்டது என்று கூறுவதிலும் தவறில்லை. ஆம், இந்நபர் கடத்தப்பட்டதும் சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் பொங்கி எழுந்தனர். ஆர்ப்பாட்டம், போராட்டம் என அவர்கள் துணிச்சலுடன் மேற்கொண்ட நடவடிக்கை ஓரிரு நாட்களிலேயே அவரை மீட்டுத் தந்தது.

மக்கள் சக்தியை மீறிய சக்திதான் எது...?

இதே போன்ற சம்பவம் கடந்த திங்கட்கிழமை, கொழும்பு மாநகரின் கொச்சிக்கடைப் பிரதேசத்தில் நிகழ்ந்தது. பட்டப்பகல் வேளை, சிவில் உடை அணிந்த ஆயுததாரிகளால் அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டார்.

அப்பிரதேச மக்கள் வெகுண்டெழுந்தனர். டயர்கள் எரிக்கப்பட்டன, வீதிப் போராட்டத்தில் மக்கள் இறங்கினர்.

மக்கள் சக்திக்கு எத்தகைய வலிமை உள்ளதென்பதை ஆட்சிப்பீடத்தில் உள்ளோர் என்றும் மறந்துவிடலாகாது.

உலகளாவிய ரீதியிலும் இதற்குச் சான்றுகள் பல உள்ளன.

அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களிடம் சென்று முறையிட்டாலும் கூட ஒரு நாள்... இரண்டு நாள்... ஒரு வாரம் சுறுசுறுப்பாக இதுகுறித்த தேடுதல் நடவடிக்கைகள் நடக்கின்றன... அதன் பிறகு...? கேள்விக் குறிதான்.

காணாமல் போன, கடத்தப்பட்டோரின் உறவினர்களும் கூட என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களும் நடையாய் நடக்க வேண்டுமா? வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டுமா? சம்பந்தப்பட்ட தலைவருக்கே மகஜர் அனுப்ப வேண்டுமா? - இப்படி எல்லா நடவடிக்கைகளையும் மனம் சளைக்காமல் அவர்கள் எடுத்துவிட்டார்கள் - இன்றும் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கின்றது.

அப்படியானால் காணாமல் போன, கடத்தப்பட்ட உறவுகளை நாம் அடியோடு மறந்துவிடத்தான் வேண்டுமா?

மக்கள் மத்தியில் எழும் இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்குமா...? எப்போது...?
நன்றி வீரகேசரி



யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்!


10/12/2011

மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழில் இன்று நடைபெறும் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த மக்கள் இன்று காலை பஸ் நிலையத்தின் முன்பாகக் கூடினர். அவ்வேளையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் சமுகமளிக்காத காரணத்தினால் பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுக்குச் செவிமடுக்காத பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கு வருகை தந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துமாறு அவரிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரணி நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
'ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை'

இன்று காலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பஸ் நிலையத்துக்கு அருகில் காத்திருந்தனர். அங்கு ஜீப்பில் வந்த பொலிஸார் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை எச்சரித்ததுடன், படங்களைக் கெமராவிலிருந்து அழிக்குமாறும் கூறிச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
நன்றி வீரகேசரி








No comments: